Read in : English
பல்லாண்டுத் தடைகள் பல கடந்து இறுதியாக, சோழர் பெருமைபேசும் பொன்னியின் செல்வன் (பாகம் 1) மணிரத்தினத்தின் இயக்கத்தில் திரைக்கு வந்துவிட்டது. கடந்த தலைமுறைத் தமிழர்களோடு வேலோடும் வாளோடும் நடந்து வீரத்தமிழ் சொல்லாடிய சோழக் கதாபாத்திரங்கள் புத்தாயிர மின்னணுயுகத்தில் புத்துயிர் பெற்றுத் திரையில் உலாவருகின்றன. சுந்தர சோழர், வல்லவராயன் என்ற வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், கந்தமாறன், இரு பழுவேட்டரையர்கள் போன்ற வரலாற்று உண்மைகளும், புனைவுகளும் கூடிய ஆளுமைகள் கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சியான் விக்ரம், பார்த்திபன், சரத்குமார், ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற திரைக்கலைஞர்களாக நிறம்மாறி கரம்வீசி வசனம்பேசி வசீகரிக்கிறார்கள். பிரம்மாண்டமான இந்தத் திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் எகிறிப் போய்விட்டன. அதற்குப் பலகாரணங்கள் உண்டு.
முதலில், கல்கி (ராமசாமி கிருஷ்ணமூர்த்தி – 1899-1954) என்னும் சாகாவரம் பெற்ற சரித்திரப் புதினப் படைப்பாளியின் கைவண்ணத்தில், ‘கல்கி’ இதழில் தொடராக எழுதப்பட்டு (அக்டோபர் 29,1950 – மே 16, 1954) இலட்சோபலட்ச வாசகர்களின் இதயங்களில் இடம்பெற்ற கதை பொன்னியின் செல்வன். கல்கியைத் தமிழ்நாட்டின் சர் வால்டர் ஸ்காட் (’இவான்ஹோ’ புதினம் எழுதியவர்) என்பார்கள். இந்தத் தொடர்கதைக்காகவே ‘கல்கி’ பிரதிகள் அமோகமான விற்பனையை எட்டின (71,366 பிரதிகள்). எழுத்தறிவு இன்று இருப்பது போல அவ்வளவு பெரிதாக இல்லாத 1950-களில் இதுவோர் அருஞ்சாதனைதான்.
சொல்லப்போனால் தமிழில் ஏராளமான சோழச் சரித்திரப் புனைவுகள் உண்டு; சாண்டில்யனின் ‘கடற்புறா’, மு. மேத்தாவின் ‘மகுட நிலா,’ பாலகுமாரனின் ‘உடையார்’ ஆகியவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால், அவற்றால் பொன்னியின் செல்வனின் அருகில்கூட செல்ல முடியவில்லை.
சுமார் நான்கு ஆண்டுகளாக ஐந்து பாகங்களாக எழுதப்பட்டு கல்கியின் மரணத்திற்குப் பின் 1955இல் நூல்வடிவம் பெற்ற பொன்னியின் செல்வன் அனைத்துத் தரப்பினரையும் ஆகர்ஷித்தது போல அன்றைய காலகட்டத்தில் சூப்பர் ஸ்டாராக உயர்வதற்குப் பகீரதப் பிரயத்தனங்கள் செய்துகொண்டிருந்த எம்.ஜி.ஆரையும் கவர்ந்ததில் வியப்பில்லை.
எம்ஜிஆர் கல்கியின் மகன் ராஜேந்திரனிடம் ரூ.10,000 கொடுத்து பொன்னியின் செல்வன் உரிமையை வாங்கித் தனது சொந்தக் குழுவினரை வைத்து அதைத் திரைக்கதையாக்கும் முயற்சியில் இறங்கினார். இது சம்பந்தமான பிரமாதமான அறிவிப்புகள் ஊடகங்களில் அதிரடியாக வெளிவந்து ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் கிளப்பின. ஆனால், எம்ஜிஆரின் கனவு நிறைவேறவில்லை
1850-வாக்கில் ‘மேன் இன் தி அயர்ன் மாஸ்க்’ (இரும்பு முகமூடி மனிதன்) என்ற தலைப்பில் அலெக்ஸாண்டர் டுமாஸ் எழுதிய ஃபிரெஞ்சு புதினத்தைத் தமிழில் ‘உத்தமபுத்திரன்’ என்று திரைப்படமாக்கி 1940இல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் வெளியிட்டது. அதில் தமிழ் சினிமாவில் முதன்முதலாக இரட்டை வேடம் ஏற்று நடித்தார் அன்றைய சூப்பர்ஸ்டார் பியூ சின்னப்பா. மர்மங்களும் புதிர்களும் கொண்ட அந்த அதிரிபுதிரித் திரைப்படத்தை 1958இல் மீண்டும் எடுக்க விரும்பினார் எம்ஜிஆர். நாடோடி மன்னன் வெற்றியைப் போல மாபெரும் வெற்றியை உத்தம புத்திரன் நிச்சயம் கொடுக்கும் என்று ஆசையோடும் நம்பிக்கையோடும் காத்திருந்த அவருக்குப் பேரிடியாக வந்தது, அவருக்கு இணையாக வளர்ந்துகொண்டிருந்த சிவாஜிகணேசனின் கைக்கு அந்தப் படம் சென்றுவிட்டது என்ற செய்தி.
அதனால் பொன்னியின் செல்வன் புதினம் பக்கம் தன்பார்வைத் திருப்பிய எம்ஜிஆர், கல்கியின் மகன் ராஜேந்திரனிடம் ரூ.10,000 கொடுத்து உரிமையை வாங்கித் தனது சொந்தக் குழுவினரை வைத்து அதைத் திரைக்கதையாக்கும் முயற்சியில் இறங்கினார். இது தொடர்பான பிரமாதமான அறிவிப்புகள் ஊடகங்களில் அதிரடியாக வெளிவந்து ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் கிளப்பின. (ஒரு கட்டத்தில் இயக்குநர் மகேந்திரன் கூட எம்ஜிஆருக்காக பொன்னியின் செல்வன் திரைக்கதையை எழுதியதாகக் தகவல் உண்டு). ஆனால், எம்ஜிஆரின் கனவு நிறைவேறவில்லை. கதையின் பிரதான நாயகன் அருள்மொழிவர்மனாக (பிற்காலத்து முதலாம் ராஜராஜ சோழன்) நடிக்க ஆசைப்பட்ட எம்ஜிஆர், மக்கள் மனதை நிஜத்தில் கொள்ளையடித்து வலம்வந்த வந்தியத்தேவனாகவும் நடிக்க விரும்பித் திரைப்படத்தில் இரட்டை வேடம் கட்ட முனைந்தார். ஆனால், கதைப்படி அதில் ஒரு சிக்கல் எழுந்தது. வந்தியத்தேவன் அருள்மொழி வர்மனின் தமக்கை குந்தவையின் காதலனாகவும், இறுதியில் கணவனாகவும், வருவதால். எம்ஜிஆர் ஒருவரே குந்தவைக்குத் தம்பியாகவும், காதலனாகவும் ஒரே நேரத்தில் நடிக்க வேண்டிவரும். மக்கள் ஒத்துக் கொள்வார்களா இந்த விபரீத உறவை? முடிவில் படம் கிடப்பில் போடப்பட்டது.
மேலும் படிக்க: பொன்னியின் செல்வன்: ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் ரசிகரை ஈர்க்கவில்லையா?
பல்வேறு காலகட்டங்களில் இதைத் திரைப்படமாக்கும் முயற்சிகளும் நடந்தன; நாடகங்கள் பல நடத்தப்பட்டன. 1980-களில் வந்தியத்தேவன் பாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார் என்ற கேள்விக்குக் காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா ‘ரஜினிகாந்த்’ என்று பதில் சொன்னதாகவும் தகவல் உண்டு.
கமல்ஹாசனும் பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்க விரும்பினார்; அவரையும் வந்தியத்தேவன் கவர்ந்திருந்தான். சிவாஜிகணேசன் ஒருதடவை கமல்ஹாசன் அருள்மொழிவர்மனாகவும், ரஜினி வந்தியத்தேவனாகவும் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதாக மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் இசைவெளியீட்டு விழாவில் கமலே சொல்லியிருக்கிறார்.
கல்கியின் புதினத்தில் கட்டமைக்கப்பட்ட சோழ சாம்ராஜ்யத்தில் பரிச்சயமான அறுபது வயதுக்கு மேற்பட்ட சினிமா ரசிகர்களுக்கு, அரை நூற்றாண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான சோழ சாம்ராஜ்யத் திரைப்படம் எப்படி தோற்றுப்போனது என்பது ஞாபகம் இருக்கும்.
அரை நூற்றாண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட சிவாஜி படம் ராஜ ராஜ சோழன் பிரம்மாண்டத்தை மீறி வணிகரீதியாகத் தோற்றுப்போனது
சிவாஜி நடித்து 1973 மார்ச் 31 அன்று வெளியான ‘ராஜராஜ சோழன்’ தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம்; ஏற்கெனவே தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல் ஆகிய கலாச்சாரச் சின்னங்களை உருவாக்கி ஒரு செவ்வியல் அந்தஸ்து பெற்றிருந்த இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இயக்கிய படம். கம்பீரமும் காந்தர்வமும் கொண்ட சிவாஜி என்னும் ஆகச்சிறந்த கலைஞன் கதாநாயகனாக நடிக்கும் ஒரு சோழகாலத்துப் படம். அதனால் எதிர்பார்ப்புகள் வானை முட்டின என்பதில் ஆச்சரியமில்லை. திரைப்படப் பெட்டிகள் அம்பாரி யானைகளில் ஏற்றப்பட்டு அரங்கங்களுக்குச் சென்றன; திருச்சியில் சிறப்பான ஒரு ஹெலிகாப்டரிலிருந்து நிஜமான பூமழையைப் பொழிய வைத்தார்கள் தீவிர சிவாஜி ரசிகர்கள்.
நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருந்து அரசியல் சர்ச்சையில் மாட்டிக்கொண்ட எம்ஜிஆரின் பிளாக்பஸ்டர் உலகம் சுற்றும் வாலிபனுக்காகக் காத்திருந்த தீவிர எம்ஜியார் ரசிகர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது ராஜராஜ சோழனின் உற்சவத் திரைப்பட வெளியீடு. ஆனால், கர்ணனின் கம்பீரத்தையும், வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரதீரத்தையும், திருவிளையாடலின் பன்முகக் கலைவிருந்தையும் எதிர்பார்த்து ராஜராஜ சோழனைப் பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ராஜராஜ சோழன் என்னும் சக்ரவர்த்தியின் காலகட்டமும் அவரது ஆளுமையும் சரியாகப் படமாக்கப்படவில்லை என்னும் குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.
அரு. ராமனாதன் எழுதி டிகேஎஸ் சகோதரர்கள் நாடகமாக நடத்தி வெற்றி பெற்றிருந்த ராஜராஜ சோழன் அன்றைய ஆனந்து திரையரங்க உரிமையாளர் ஜி. உமாநாத்தின் (அக்னி நட்சத்திரத்தில் வில்லனாக நடித்தவர்) தயாரிப்பில் திரைப்படமானது. ஆனால், சோழ சாம்ராஜ்ய மர்மங்களும் சதிகளும் அரசியல் நுண்மைகளும் இல்லாமல், நம்பியார் என்ற கொடூரமான வில்லன் வெறும் தந்திர ஒற்றனாக மதிப்புக் குறைக்கப்பட்டு, தந்தை-மகள் விரிசலாகவே மட்டுமே தோன்றித் திரைப்படம் வலுவிழந்தது (குடும்பச் சிக்கல்களைக் காட்டுவதற்கு பார் மகளே பார், படித்தால் மட்டும் போதுமா பாசமலர் போதுமே; ஏன் சரித்திரப் பின்னணி?).
மேலும் படிக்க: ஜெயமோகனுக்குச் சிறப்புச் சேர்க்குமா பொன்னியின் செல்வன்?
சோழக் கதையின் நாயகனாக வந்த சிவாஜி படத்திற்கே இந்த துர்நிலை!
இதே விதிதான் ஜெமினி கணேசனின் படத்திற்கும் நிகழ்ந்தது. பொன்னியின் செல்வனுக்கு 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொ. ஆ.. 7ஆவது நூற்றாண்டில் ஆட்சி செய்த சோழமன்னன் பார்த்திபனின் கனவை கல்கி 1942இல் எழுதியிருந்தார்.
ஜுபிலி ஃபிலிம்ஸ் உரிமையாளர் வி. கோவிந்தராஜ் தயாரித்து, டி. யோகானந்த் இயக்கி, எழுத்தாளர் விந்தன் கல்கியின் கதைக்குத் திரைக்கதையும் வசனமும் எழுதி 1960இல் வெளியான பார்த்திபன் கனவு தேசிய விருது பெற்றும் மக்கள் ஆதரவைப் பெறாமல் வணிகரீதியாகத் தோற்றுப் போனது. இவ்வளவுக்கும் ஜெமினி கணேசன், வைஜெயந்திமாலா ஜோடி இருந்தது; மேலும் எஸ்.வி. ரங்காராவ், எஸ்.வி. சுப்பையா, ஜாவர் சீத்தாரமன், டி.எஸ். பாலையா, எஸ். ஏ. அசோகன், பி.சரோஜாதேவி ஆகிய புகழ்பெற்ற கலைஞர்கள் நடித்திருந்தார்கள்.
இந்தத் திரைப்படமும் நீண்டகாலமாகவே தயாரிப்பில் இருந்தது. படம் ஆரம்பித்த காலகட்டத்தில் மிகச்சிறிய ரோலில் நடித்தபோது சரோஜாதேவி பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கவில்லை. ஆனால், ஒருவழியாக பல்வேறு தடைகளைத் தாண்டி மிகப்பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட பார்த்திபன் கனவு திரைக்கு வந்த 1960-ஆம் ஆண்டில், சரோஜாதேவி, ஏற்கெனவே வேறுசில படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்து பெற்றிருந்தார். அதனால் தங்களின் அபிமான நடிகையான சரோஜாதேவிக்கு முக்கியமான பாத்திரம் தரப்படாததால் ரசிகர்கள் ஏமாந்துபோனார்கள்.
மேலும், படத்தின் தலைப்பில் உள்ள பார்த்திபன் கதாநாயகன் ஜெமினி கணேசன் அல்ல. அவரது தந்தைதான் பார்த்திபன். “என்னடா, பார்த்திபன் யாருன்னு பார்த்தா, ஜெமினி இல்ல. அது அசோகனாம், அதுவும் கொஞ்ச நேரம்தான் வர்றாரு,” என்று அந்தக் காலத்து ரசிகர்கள் அங்கலாயித்ததை ஒரு முதியவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
பல்லவ ஆட்சியிலிருந்து சோழ நாட்டின் விடுதலைக்குப் போராடும் விக்ரமன்தான் ஜெமினி. பல சரித்திர, புராண படங்களில் நடித்திருந்தாலும், ‘கல்யாணப்பரிசு’ போன்ற படங்கள் தந்த காதல்மன்னன் என்ற ’சாக்லேட் பாய்’ படிமம் ஜெமினியைத் தனிநாயகனாக பார்த்திபன் கனவை நிறைவேற்றும் பிரம்மாண்டமான வீரனாக மிரட்ட விடாமல் தடுத்தது. (ஒரு கற்பனையான ஒப்பீடு: நடிகர் அப்பாஸ் வந்தியத்தேவனாக நடித்திருந்தால் எப்படியிருக்கும்?)
கல்கியின் அசல் கதையில் பார்த்திமன் மகனுக்கு உதவி செய்யும் முனிவர் ஒருவர் அவ்வப்போது வருவார். அச்சில் தொடராக வாசித்த வாசகர்கள் அந்த முனிவர் யாரென்பதை அறிந்துகொள்ள வாராவாரம் வந்த கல்கியைத் தொடர்ந்து ஆர்வத்துடன் வாசித்தார்கள். அப்படித் திறமையாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது அந்தத் திகில்மர்மம். ஆனால், திரைப்படத்தில் விக்ரமனாக வேடம்பூண்ட ஜெமினி யாரை எதிர்த்துப் போராடினாரோ, அந்தப் பகைவர்தான் (நரசிம்ம பல்லவராக நடித்த ரங்காராவ்) அந்த முனிவர் என்பது படத்தின் ஆரம்பப் பகுதிகளிலே வெகு சுலபமாக ரசிகர்களுக்குப் புரிந்துவிட்டது. எதிரியே உதவியதால் கதாநாயகனின் போராட்டக் குணத்திற்குப் பெரிதாக வேலையில்லாமல் போயிற்று.
ஆனாலும் வேதாவின் இசையும், கண்ணதாசனின் பாடல்களும் இந்தப் படத்திற்குப் பலம்தான். “பழகும் தமிழே, பார்த்திபன் மகளே”, ‘இதய வானின் உதய நிலவே’ போன்ற பாடல்கள் காலத்தை வென்ற பாடல்கள்தாம்.
பார்த்திபன் கனவைப் பற்றித் திரைப்பட விமர்சகர் தியோடர் பாஸ்கரன் சொன்னது அதன் தோல்வியைச் சரியாகக் கணித்திருக்கிறது: “இந்தப் படக்குழுவினர் படத்தின் களமாகக் காட்டப்படும் மகாபுலிபுரத்திற்கு ஒருதடவைகூடச் சென்றதில்லை. அடிப்படை ஆராய்ச்சியைக் கூட அவர்கள் செய்யவில்லை.”
பல்லவ ஆட்சியிலிருந்து சோழ நாட்டின் விடுதலைக்குப் போராடும் விக்ரமனாக நடித்த ஜெமினி கணேசனை, ‘கல்யாணப்பரிசு’ போன்ற படங்கள் தந்த காதல்மன்னன் என்ற ’சாக்லேட் பாய்’ படிமம் தனிநாயகனாக பார்த்திபன் கனவை நிறைவேற்றும் பிரமாண்டமான வீரனாக மிரட்ட விடாமல் தடுத்தது
இப்போதையை பொன்னியின் செல்வன் சம்பந்தமாகக்கூட இதுமாதிரி சில சிக்கல்கள் இருக்கின்றன.
இதில் நடிக்கும் கலைஞர்கள் ஒரு தடவையாவது கல்கியின் புதினத்தை வாசித்திருக்கிறார்களா? அல்லது இயக்குநர் சொல்கிறபடி நடித்துக் கொடுத்துவிட்டுப் போனால் போதும் என்று அவர்கள் நினைத்தார்களா? அல்லது தஞ்சாவூர் பெரிய கோயிலுக்காகவாவது அவர்கள் சென்றிருக்கிறார்களா – சோழ சாம்ராஜ்யத்து உணர்வுகளை உள்வாங்க?
ஆனால், சுகாசினி ஒரு படவிளம்பர நிகழ்வில் சொன்னதுபோல, தஞ்சாவூரில் இல்லாமல், ஆந்திராவில், தெலங்கானாவில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது என்பது உண்மை என்றால், இது தமிழர்களின் படமில்லாமல், ’தெலுங்கர்களின் படமாக’ மாறிவிடாதா? இது ’பான்-இந்தியா’ படம் என்று யாரோ சொல்வது காதில் விழுகிறது.
மற்றொரு விசயம்; பொன்னியின் செல்வனாக நடிப்பது ஜெயம் ரவி; ஆனால் வந்தியத்தேவனாக வரும் கார்த்தி (ட்ரயிலரில் காட்டப்படுவது போல) அவரை மீறி நடிப்பிலும் முக்கியத்துவத்திலும் ஜெயித்துவிட்டால், படம் பொன்னியின் செல்வனாக மிளிராது; வந்தியத்தேவனாகவே மடைமாறிவிடும்.
Read in : English