Read in : English

Share the Article

சென்னை வெள்ளநீர் வடிகால் கட்டமைப்புப் பணிகளால் மாநகரத்தின் மாமூல் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆனால், இதைத் தவிர்க்க முடியும்; அல்லது மட்டுப்படுத்த முடியும். சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானத்தின் ஒரு முக்கிய அம்சம், உயர்த்தப்பட்ட மேலடுக்குப் பாதையில் காங்கிரீட் தூண்களையும் இடைவெளிக் கட்டுமானங்களையும் கட்டமைக்கும் வேகம்தான். ஏராளமான காங்கிரீட் வடிவமைப்பு வேலை பணித்தளத்திற்கு அப்பால் படுவேகமாக நடைபெறுகிறது.

சுரங்கம் தேவைப்படாத பாதைகளில் நடக்கும் இந்த விரைவுப் பணிகளால் போரூருக்கும் பூந்தமல்லிக்கும் இடையிலான தூரத்தில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் ரயில் சேவை கிடைக்க சாத்தியமுள்ளது. இதைப் போன்று சென்னை வெள்ளநீர் வடிகால் கட்டமைப்புப் பணிகள் விரைவாக நடைபெற்றால் என்ன? வடிகால்களைச் சில வாரங்களுக்குள் உருவாக்கி, தரையில் இறக்கி மூடி சாலையைப் பழைய போல் மாற்றிவிடுவது சாத்தியம்தான்.

ஆனால் தற்போதே இந்தப் பணிகளால் போக்குவரத்துக்குச் சிக்கல்களும் இடைஞ்சல்களும் ஏற்பட்டுள்ளன. புதிய குடியிருப்புப் பகுதிகளில் போக்குவரத்து அதிகரித்துவிட்டது; மக்கள்நெருக்கம் நிறைந்த இடங்களில் ஒரே புழுதிதான். மிகப் பெரிய வெள்ளநீர் வடிகால் கட்டமைப்புப் பணித் திட்டம் என்பது 2015, 2021 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த சென்னை வெள்ளத்தையும், சமீபத்தில் பெங்களூருவில் உருவான வெள்ளத்தையும் தவிர்ப்பதற்கான மிகச் சிறந்த வழிமுறையா என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வெள்ளநீர் வடிகால் குழியில் மழைநீர் நிரம்பியிருந்தால் பார்வைக்கு அது சமதளமாகவே தென்படும். இதனால் அது ஒரு மரணக்குழியாகிவிடும் ஆபத்து உள்ளது

மழைநீர் என்பது வெறும் பாரமா? அது ஓர் இயற்கைவளம் அல்லவா? அதை மாசுபட்ட கால்வாய்களிலும் கடலிலும் கொட்டித்தீர்க்க வேண்டுமா? அதைப் பழைய, புதிய நீர்த்தேக்கங்களில், குளங்களில், கோயில் தெப்பக்குளங்களில் பெரிய ஈரநிலங்களில் கலக்கும்படி செய்ய முடியாதா?

சென்னைப் பெருநகர மாநாட்சி வெள்ளநீர் வடிகால் கட்டமைப்புப் பணிகளை ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் தொடங்கியது. ரூ.4,070 கோடி செலவில் 1,033 கிமீ தூரம் செயல்படுத்தப்படும் பெரிய திட்டம் இது. இதை செப்டம்பர் 30-க்குள் முடிக்க வேண்டும் என்று பொறியியில் விதிகள் பிரகாரம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கெடு விதித்திருக்கிறார். ஆனால் பல பகுதிகளிலும் பணி முடிவதற்கான அறிகுறியே தெரியவில்லை.

மேலும் படிக்க: சென்னை வெள்ளம்: நமது மழை, வெள்ள நீர் வடிகால்களை மூடிவிட்டோமா?

இந்தக் காலக்கெடு சாத்தியமற்றது. ஒப்பந்தக்காரர்கள் சமச்சீர்வற்ற நடைமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். குறைந்த எண்ணிக்கையிலான வேலையாள்களையே பணிக்கு அமர்த்தியுள்ளார்கள். மண்டலம் மற்றும் கோட்ட அளவிலான அதிகாரிகளும் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதில்லை.

முடிக்கப்படாத வடிகால்களையும் அதைச் சுற்றி மண் குவிந்துகிடப்பதையும் சென்னையின் பல சாலைகளில் பார்க்கலாம். ஆகஸ்டில் நடந்தது போல அவற்றில் நீர் நிறைந்து ஒரே சகதியாகத் தான் கிடக்கிறது.

மாநகராட்சித் துணை ஆணையர் (பணிகள்) எம்.எஸ். பிரசாந்த், ஆகஸ்டில் பெய்த பருவம் தப்பிய மழையையே இந்தப் பணித் தாமதத்திற்குக் காரணமாகக் காட்டியிருக்கிறார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக, கிட்டத்தட்ட எல்லாப் பகுதிகளிலும் சதுப்புநிலங்களைத் ‘தேடிப்பிடித்து’க் கட்டடங்களைக் கட்டியதால் நகர்ப்புறங்களில் வழிந்தோடும் நீரைச் சேமிப்பதில் பின்னடைவு ஏற்பட்டது

நீர்த்தன்மைக்கு ஏற்ற வடிவம்
இப்போது சென்னை மாநகராட்சி பின்பற்றுவது மத்திய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் பொறியியல் நிறுவனம் வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிகளைத்தான். அந்த நெறிமுறைகள் மிகத் தெளிவான இலக்கை இப்படி விதித்திருக்கிறது: நகர்ப்புறப் பொதுக் கட்டமைப்புகள் நீரைக் கையாள்வதற்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட வேண்டும். குறுகிய காலத்தில் கனமழை பெய்தாலும் அதைச் சமாளிக்க அந்த வசதிகள் தயார்நிலையில் இருக்க வேண்டும். மழைநீர்ச் சேகரிப்புக் கட்டுமானங்கள் மூலம் மழைநீரைச் சேமிக்கும் நிலையில் அவை இருக்க வேண்டும்.

2019இல் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கிய குழுவின் உறுப்பினர் ஒருவர் சென்னை மாநகராட்சியின் வெள்ளநீர் வடிகால் கட்டமைப்புத் துறையின் செயல் பொறியாளராக இருக்கிறார்.

ஒன்றிய அரசின் வீட்டுத்துறை மற்றும் நகர்ப்புறங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகள், மிகப் பரந்த, அதிகச் செலவு பிடிக்கும் வெள்ளநீர் வடிகால் கட்டமைப்பைத் தவிர்ப்பதற்காகப் பின்வரும் சாத்திய அம்சங்களைப் பட்டியலிட்டிருக்கின்றன:

· கட்டுமானத் தளத்திற்குள் அல்லது அதைச் சுற்றிய இடத்தில் மூலஸ்தலத்தில் நீரைச் சேமித்தல் அல்லது அந்த ஸ்தலத்தில் நீரைக் கலக்கவிடுதல்

· ஓடும் நீரை அருகிலுள்ள குளத்தில் அல்லது நீர்த்தேக்கத்தில் சேமித்தல்

· வடிகால் கட்டமைப்பின் உள்ளேயோ, வெளியேயோ வெள்ளநீரைக் கலக்கவிடுதல்

· தாழ்வான பகுதிகளிலும் பூங்காக்களிலும் அல்லது தோட்டங்களிலும் நிலத்தடி நீரைப் புதுப்பிக்கும் வகையில் நீரைப் பரப்புதல்

· நீர்நிலைக்குள் அல்லது அணைக்கட்டில் நீரைக் கொண்டு சேர்த்தல்.

வெள்ளப் பிரச்சினையை ஆராய தமிழக அரசு கடந்த ஆண்டு நியமித்த திருப்புகழ் குழு மேலே சொல்லப்பட்ட கருத்துகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தனது பரிந்துரைகளை வழங்கியதா என்று தெரியவில்லை. அந்தக் குழுவின் அறிக்கை பொதுவெளியில் கிடைப்பதில்லை.

மழைநீரைச் சேமித்தல் மற்றும் நிலத்தடிக்குள் நீர் ஒழுகிப் போய்ச்சேர்தல் என்ற கருத்தாக்கத்தில் கட்டமைக்கப்பட்ட ஒன்றிய அரசு அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள், மழைநீர் மிகையாக ஓடி எண்ணெய் போன்ற மாசுப்பொருள்களால் மாசுபடுத்தப்பட்டுத் தேங்குவதையும் ஒழுகிப் போவதையும் தடுக்கும் பொருட்டு வெள்ள நீரை வடிகட்டும் முறைகளைச் சொல்லியிருக்கின்றன.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக, கிட்டத்தட்ட எல்லாப் பகுதிகளிலும் சதுப்புநிலங்களைத் ‘தேடிப்பிடித்து’க் கட்டடங்களைக் கட்டியதால் நகர்ப்புறங்களில் வழிந்தோடும் நீரைச் சேமிப்பதில் பின்னடைவு ஏற்பட்டது என்பதை இப்போது சென்னையில் எல்லோரும் புரிந்துகொண்டுவிட்டார்கள். வழிந்தோடும் மழைநீரைக் கோயில் தெப்பக்குளங்களில் கொண்டுசேர்க்கும் பணிகள் நடைபெறுகின்றன என்று 1991-96 காலகட்டத்தில் அஇஅதிமுக அரசு சொன்னது. ஆனால், அந்தத் திட்டம் பெரிதாக வெற்றி பெறவில்லை.

யூ வடிவிலான வடிகால் கட்டமைப்புகள் கொரியா போன்ற பல நாடுகளில் ஆலைத் தயாரிப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. (Source: YouTube)

2019ஆம் ஆண்டு வெளிவந்த ஒன்றிய அரசின் வழிகாட்டி ஏடு, நீர்த்தன்மைக்கு ஏற்றதான நகர்ப்புற வடிவமைப்பை மேற்கொள்ளும் பெங்களூரு, மெல்போர்ன் மற்றும் ஒட்டவா ஆகிய மாநகரங்களின் பட்டியலில் சென்னையும் இருக்கிறது என்று குறிப்பிட்டிருப்பது நகைமுரணே. நல்வாய்ப்பாக, சென்னையில் 2021ஆம் ஆண்டில் பெரிய அளவில் வெள்ள நீர் சாலைகளில் பாய்ந்தோடவில்லை.

மேலும் படிக்க: சென்னை வெள்ளம்: நிபுணர் குழு பரிந்துரைத்த வெளிப்படைத்தன்மை அரசின் செயற்பாட்டில் இருக்கிறதா?

2021இலிருந்து பெய்த கனமழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பது சென்னை சந்திக்கும் சிக்கல்களில் ஒன்று என்று மழைநீர்ச் சேகரிப்பு நிபுணர் சேகர் ராகவன் கூறுகிறார். சென்னையைப் பொறுத்தவரை, மாநகரத்தின் மையப்பகுதிகளில் ஈர நிலங்கள், குளங்கள் போன்ற பொதுநீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டிய தேவையும், புறநகர் ஏரிகளை ஆக்ரமிப்புகளிலிருந்து காப்பாற்ற வேண்டிய தேவையும், இழந்த நீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்கின்றன.

முன்பே தயாரிக்கப்பட்ட கான்கிரீட்
ஒப்பந்தக்காரர்களை நிதானமாகவும் மெத்தனமாகவும் வெள்ளவடிகால் கட்டுமான வேலையைச் செய்யவிட்டதால் தொழில்நுட்பரீதியாகப் பெருநகர சென்னை மாநகராட்சி பெரிய இழப்பைச் சந்தித்திருக்கிறது.

கோடம்பாக்கத்தில் சில ஒப்பந்தப் பணிகள் மார்ச்சிலிருந்து நவம்பர்வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றன. அதற்குள் மழைக்காலம் வந்துவிடும் என்றுகூட அவர்களுக்குத் தோன்றவில்லை.

கான்கிரீட் வடிகால் கட்டமைப்புகளை உருவாக்க ஆயத்த தயாரிப்பு ஆலை ஒன்றை நிறுவுவதைப் பற்றித் தமிழக அரசு தீர்க்கதரிசனத்துடன் யோசித்திருக்க வேண்டும். யூ வடிவிலான இந்த வடிகால் கட்டமைப்புகள் கொரியா போன்ற பல நாடுகளில் ஆலைத் தயாரிப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் பணியும் வேகமாக முடியும். நெருக்கடியான இடங்களில் ஏற்படும் போக்குவரத்துச் சிக்கல்களையும் தவிர்க்க முடியும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சில ஆய்வு யோசனைகளை வழங்கியிருக்கலாம்.

ஆனால், தற்போது அப்படியெல்லாம் செய்யமுடியாத நிலையில் பெருநகரச் சென்னை மாநகராட்சி இருக்கிறது. காரணம், ஏற்கெனவே சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுவிட்டன. ஆயத்த வடிகால் குழாய்களும் இல்லை. உதாரணமாக, கோடம்பாக்கத்தில் ரங்கராஜபுரம் மேம்பாலத்திற்கும், ஒரு மருத்துவமனைக்கும் இடையில் இருக்கும் குறுகிய வெளி இப்போது நீண்டதொரு திறந்தவெளிக் குழியாகக் காட்சியளிக்கிறது. திங்கள் இரவு நிலவரப்படி, அங்கே எந்தவொரு வேலையும் நடைபெறவில்லை. பல இடங்களில் இதுதான் நிலை.

வெள்ளநீர் வடிகால் கட்டமைப்புப் பணித் திட்டம் என்பது 2015, 2021 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த சென்னை வெள்ளத்தையும், சமீபத்தில் பெங்களூரவல் உருவான வெள்ளத்தையும் தவிர்ப்பதற்கான மிகச் சிறந்த வழிமுறையா என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

முதலமைச்சரும் களநிலவரமும்
2021 இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை நிவாரணப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார். 2022 செப்டம்பருக்குள் வெள்ளநீர் வடிகால் கட்டமைப்புப் பணிகள் முடிந்துவிடும் என்று அதிகாரிகள் அவருக்கு நம்பிக்கை கொடுத்தனர். ஆனால், அந்த வேலை முடிந்ததா என்பதைக் கள ஆய்வுதான் முதல்வருக்குச் சொல்ல வேண்டும். விருகம்பாக்கத்தில் முடிக்கப்படாத வடிகால் கட்டமைப்பில் துருத்திக் கொண்டிருக்கும் கம்பி ஒன்று குத்தி ஒருவர் காயம்பட்டது பற்றி அவர் கவலைப்பட்டிருக்க வேண்டும். வழக்கமான மெத்தனம் தொடர்ந்தால் இன்னும் பல விபத்துகள் ஏற்படக்கூடும். வெள்ளநீர் வடிகால் குழியில் மழைநீர் நிரம்பியிருந்தால் பார்வைக்கு அது சமதளமாகவே தென்படும்.

இதனால் அது ஒரு மரணக்குழியாகிவிடும் ஆபத்து உள்ளது. வெள்ளவடிகால் ஒப்பந்தக்காரர்களுக்கு நிறையவே கால அவகாசம் இருந்திருக்கிறது. ஆனால், அவர்கள் அதைச் சரியாகப் பயன்படுத்தத் தவறி விட்டார்கள்.

அவர்களில் நிறையப் பேர் குறைந்த எண்ணிக்கையில் பணியாள்களை வைத்துப் பணிகளை செய்துகொண்டிருக்கிறார்கள். அரசு கண்டுகொள்ளாது என்றும் அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போதாவது ஸ்டாலின் சாட்டையைச் சுழற்றுவது நல்லது!


Share the Article

Read in : English