Read in : English
திருநங்கைகள் என்றால் சமூகத்தால் ஒடுக்கப்பட்டுத் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் சென்னையில் 50 வயதைக் கடந்த திருநங்கை ஒருவர் உணவகம் திறந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
சென்னையின் தண்டையார் பேட்டை மணிகூண்டுப் பகுதியில் வசித்து வருபவர் மகாலட்சுமி. வயதான போதிலும் உழைத்து வாழ வேண்டும் என எண்ணிய அவர், சினேகிதி அமைப்பின் உதவியால் தண்டையார்பேட்டை பகுதியில் சினேகிதி திருநங்கை உணவகத்தைத் திறந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாவுக்கு 10 வயதிலேயே திருநங்கைக்கான உணர்வு ஏற்பட்டுள்ளது. மற்ற திருநங்கைகளைப் போல் பள்ளி, நண்பர்கள் எனச் சமூகத்தால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளான ராஜாவுக்குக் குடும்பத்திலும் எதிர்ப்புக் கிளம்பியது. பின்னர், திருநங்கை ஒருவரின் நட்பு கிடைக்கவும் அவருடன் வீட்டை விட்டு வெளியேறி, அறுவை சிகிச்சைமூலம், முழுவதும் திருநங்கையாக மாறியுள்ளார்.
பின்னர் மும்பை சென்ற ராஜா, ராதா என்ற பெயரில் மதுபான விடுதியில் நடனமாடி வந்தார். 21 வயதில் தமிழகம் திரும்பினார். மதுரையில் நாட்டுப்புறக் கலைக் குழு ஒன்றுடன் இணைந்து, திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்துள்ளார். அப்படி நடனமாடியபோது அவரது குடும்பத்தார் அடையாளம் கண்டு கொண்டனர். அடுத்த 2 ஆண்டுகளில் தாயின் உடல்நிலை மோசமானதால் மகாலட்சுமி, மீண்டும் ஆண்போல் வேட்டி, சட்டை அணிந்து சொந்த ஊருக்குச் சென்றார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாவுக்கு 10 வயதிலேயே திருநங்கைக்கான உணர்வு ஏற்பட்டுள்ளது. மற்ற திருநங்கைகளைப் போல் பள்ளி, நண்பர்கள் எனச் சமூகத்தால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளான ராஜாவுக்குக் குடும்பத்திலும் எதிர்ப்புக் கிளம்பியது
சில நாள்களில் தாய் மரணித்ததும், ஒரு மகனாக அவருக்கு இறுதி சடங்குகளைச் செய்த மகாலட்சுமி, அங்கிருந்து சென்னை புறப்பட்டார். தண்டையார்பேட்டை மணிக்கூண்டுப் பகுதிக்கு வந்த மகாலட்சுமி, வேட்டி, சட்டையில் இருந்ததால், அவரை ஆண் என வீட்டு உரிமையாளார் நினைத்துள்ளார். அதனால் வாடகைக்கு வீடு வழங்கியுள்ளார். அந்த வீட்டின் முன்பகுதியிலேயே காலை உணவு வழங்கும் சிறு கடையை மகாலட்சுமி வைத்துள்ளார்.
சில நாள்களில் மகாலட்சுமி திருநங்கை எனத் தெரிய வந்தும், அவரை ஒதுக்காமல் வீட்டு உரிமையாளர் ஆதரித்துள்ளார். தொடர்ந்து அதே இடத்தில் 17 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்துவரும் மகாலட்சுமிக்கு அப்பகுதியைச் சேர்ந்த திருநங்கைகளிடம் உறவு ஏற்பட்டுள்ளது. திருநங்கைகள் மட்டுமின்றி, மகாலட்சுமி வசிக்கும் வீட்டு உரிமையாளர் அவரைத் தங்களின் குடும்பத்தில் ஒருவராகவே பார்த்து வருகிறார்.
மேலும் படிக்க: மண்டை ஓட்டு மாலை அணிந்த அர்த்தநாரீஸ்வரர்
50 வயதைக் கடந்ததால் தனியாக உணவகம் வைக்க வேண்டும் என விரும்பிய மகாலட்சுமிக்குச் சினேகிதி அமைப்பு கைகொடுத்தது. அவர்களின் உதவியால் தண்டையார் பேட்டை மணிக்கூண்டு பகுதியில் மகாலட்சுமி சினேகிதி திருநங்கை என்ற உணவகத்தைத் திறந்துள்ளார். காலை, மதியம் என இருவேளைக்கு அசைவம் மற்றும் சைவ உணவுகள் வழங்கப்படுகின்றன. திருநங்கை எனப் பாரபட்சம் பார்க்காமல் மகாலட்சுமி உணவகத்தை மக்கள் தேடி வருகின்றனர்.
உணவகத்தில் மகாலட்சுமி சேலை அணிந்து இருப்பதில்லை. அன்று முதல் இன்றுவரை வேட்டி, சட்டையில் தான் உணவகத்தில் வலம் வருகிறார். வாழ்வில் சந்தித்த சில கசப்பான அனுபவங்கள் ஆண்கள் கூடும் இடத்தில் அவர் சேலையில் வருவதைத் தடுக்கிறது.
மகாலட்சுமியிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்தார் 31 வயதான த்ரிஷா. அவரும் ஒரு திருநங்கைதான். குப்பு என இயற்பெயர் கொண்ட த்ரிஷா திருநங்கையாக வாழச் சம்மதம் தெரிவித்த பெற்றோர், ஒரு வாக்குறுதி பெற்றனர். திருநங்கையாக மாறிய பிறகு தவறான நடவடிக்கைக்கோ, கடைகளுக்குச் சென்று பணம் வசூலிக்கும் பழக்கத்திற்கோ ஆளாகக் கூடாது என்றும், என்ன நடந்தாலும் உழைத்து வாழ வேண்டும் எனவும் வாக்குறுதி பெற்றனர். பெற்றோரின் எண்ணம் நியாயமானது தானே என அறிந்த த்ரிஷா, கடந்த 17 ஆண்டுகளாக பாரத் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.
அவரைத் திருநங்கை என அறிந்த நிறுவன அதிகாரிகள், ”வேலை தருகிறோம், ஆனால் சேலை அணிந்து பணிக்கு வரக் கூடாது, ஆண் உடையில் தான் பணிக்கு வரவேண்டும்” எனக் கூறியுள்ளனர். ஆகவே, த்ரிஷா ஆண் போல் உடை அணிந்து எண்ணெய் நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்று வருகிறார். ஆனாலும், அவர் திருநங்கையாகவே அனைவராலும் அறியப்படுகிறார். உடையில் மட்டுமே மாற்றம் தவிர, அவரின் எண்ணத்திலோ, மன உறுதியிலோ மாற்றமில்லை. வேலைக்குச் சென்றதும் 17 ஆண்டுகளாக குடும்பத்தைத் தனது தோளில் சுமக்கும் த்ரிஷா, சகோதரனுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார்.
த்ரிஷா, கடந்த 17 ஆண்டுகளாக பாரத் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். அவரைத் திருநங்கை என அறிந்த நிறுவன அதிகாரிகள், ”வேலை தருகிறோம், ஆனால் சேலை அணிந்து பணிக்கு வரக் கூடாது, ஆண் உடையில் தான் பணிக்கு வரவேண்டும்” எனக் கூறியுள்ளனர்
உழைத்து வாழத் திருநங்கைகள் விரும்பினாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள சமூகம் மறுப்பதாகக் கூறும் த்ரிஷா, ”மாற்றம் எங்களிடம் வந்துவிட்டது சமூகம் தான் எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும் படிக்க: போராட்டத்தின் முன்னணியில், தூத்துக்குடியில் திருநங்கைகள்
தற்பொழுது மெட்ரோ ரயில் நிலையங்கள், புறநகர் ரயில் நிலையங்கள், சென்னையின் அடையாளமான டைடல் பார்க் அருகே கட்டப்பட்ட மேம்பாலத்தின் சுவர்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், பள்ளிகள், குடியிருப்புகள் ஆகியவை பல வண்ணங்களில் கண்ணைக் கவரும் ஓவியங்களால் மிளிர்வது திருநங்கைகளின் கைவண்ணத்தால்தான். சேலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட திருநங்கை வர்ஷாவும், அவரது சக தோழிகளுமே சென்ட்ரல் மெட்ரோ முதல் தூத்துக்குடியில் நெய்தல் திருவிழா வரை ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டியுள்ளனர்.
திருநங்கைகளை மட்டும் வைத்து ஓவியம் தீட்டும் பணியைச் செய்து வரும் டிரான்ஸ்ஜெட்ண்டர் ஆர்ட் புராஜெக்ட் நிறுவனம் ஏராளமான திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது. இந்தியா முழுவதும் செயல்படும் இந்த நிறுவனத்தில் தமிழகத்தில் இருந்து வர்ஷாவும், அவரது தோழிகளும் இணைந்துள்ளனர். முதன் முதலாக ஆதரவற்ற குழந்தைகள் படிக்கும் பள்ளியை ஓவியங்களால் வண்ணம் தீட்டி அழகாக்கியுள்ளார் வர்ஷா.
மழலைகளின் சிரிப்பாலும், அவர்களின் கள்ளங்கபடமற்ற பேச்சாலும் ஈர்க்கப்பட்ட வர்ஷாவுக்கு இந்த வண்ணம் தீட்டும் வேலை மிகவும் பிடித்துப் போனது. பிறகு எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி, ஹவுசிங் போர்டு, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், இந்திராகாந்தி ரயில் நிலையம், மேம்பாலங்கள், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம், தூத்துக்குடி நெய்தல் திருவிழா என இவர்களின் பயணம் தொடர்ந்தது.
சேலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட திருநங்கை வர்ஷாவும், அவரது சக தோழிகளுமே சென்ட்ரல் மெட்ரோ முதல் தூத்துக்குடியில் நெய்தல் திருவிழா வரை ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டியுள்ளனர்
ஒரு முறை எம்பி கனிமொழியைச் சந்தித்த வர்ஷாவும் அவரது தோழிகளும் தங்களின் வேலை குறித்து எடுத்துரைத்ததுடன் வாய்ப்பு ஏற்படுத்தித் தரக் கோரிக்கை விடுத்தனர். அதைக் கவனத்தில் கொண்ட எம்பி கனிமொழி தனது தொகுதியான தூத்துக்குடியில் நடைபெற்ற நெய்தல் திருவிழாவில் குடியிருப்புகளுக்கு வண்ணம் தீட்டும் பணியை வர்ஷா குழுவுக்கு வழங்கியுள்ளார்.
மாதம் 10 நாள்கள் மட்டுமே வேலை கிடைப்பதாக கூறும் வர்ஷா, அரசு எங்களுக்கு வாய்ப்பளிக்க முன் வந்தால் நாங்களும் சமூகத்தில் பிறரின் ஏளனத்திற்கும், கேளிக்கைக்கும் ஆளாகாமல் கவுரமான வேலை பார்த்து வாழ்வோம் என்றார். இப்படி வேலை செய்து வரும் பணத்தில் குடும்பத்தைப் பாதுகாக்கும் வர்ஷா இரு தங்கைகளுக்குத் தனது செலவில் திருமணம் செய்து வைத்துள்ளார். திருநங்கை ஒருவரைத் தத்தெடுத்து மகளாக வளர்த்து, அவரை பேஷன் டிசைனிங் வரை படிக்க வைத்துள்ளார். தொடர்ந்து தன்னை நாடி வருவோருக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்.
நாங்களும் மற்றவர்களைப் போல் சாதாரணம் மனிதர்கள்தான். எங்களாலும் தகுதிக்கு ஏற்ற வேலை செய்து சுய மரியாதையுடன் வாழ முடியும். சமூகத்தில் கவுரமான அங்கீகாரத்தைப் பெற முடியும், எங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆறுதலாகவும், அவர்களின் வாழ்க்கைக்கு ஏணியாகவும் இருக்க முடியும் என்பதை மகாலட்சுமி, த்ரிஷா, வர்ஷா போன்ற பல திருநங்கைகள் நிரூபித்து வருகின்றனர். அவர்களைக் கவனிக்கச் சமூகம் தவறிவிடுகிறது. உழைத்து வாழும் திருநங்கைகளுக்கு அரசும், சமூகமும் ஆதரவு அளித்தால் அவர்களும் சாதனையாளர்களே..
Read in : English