Read in : English
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கே.நந்தகுமார் இருந்தபோது சிறப்பாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்டது எலைட் பள்ளி. தற்போது அது அரசு மாதிரிப் பள்ளி. அதில் படித்த விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த மீனவர் மகனான மாணவர் சுர்ஜித் (23) மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டராகியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த சுர்ஜித், விளிம்புநிலைக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் தற்போது ராமேஸ்வரத்தில் வசிக்கிறது. ஓட்டு வீட்டில்தான் அவர்களது வாழ்க்கை. அவரது அப்பா முனியசாமி கடலில் மீன்பிடிக்கும் தொழிலைச் செய்பவர். அதிலிருந்து அவருக்குக் கிடைக்கும் வருமானத்திலிருந்துதான் அவரது குடும்பம் ஓட வேண்டும். அம்மா சரஸ்வதி வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்கிறார். இருவரும் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர்கள். இருந்தாலும்கூட, தங்களது குழந்தைகளை எப்படியாவது படிக்க வைத்து முன்னேற்றிவிட வேண்டும் என்பதில் அவர்கள் இருவரும் அக்கறைகொண்டிருந்தனர். சுர்ஜித்தின் அக்கா ஜெயந்தி எம்எஸ்சி பயோ கெமிஸ்ட்ரி படித்துள்ளார். மற்றொரு அக்கா ஜெயசாந்தி எம்ஸ்சி கணிதம் படித்துவிட்டு பிஎட் முடித்திருக்கிறார்.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சுர்ஜித், அரசுப் பள்ளியில் படித்து டாக்டரான தனது வாழ்க்கைக் கதையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்:
மேலும் படிக்க: அன்று பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டுவிட்டு, டீ கடையில் குழந்தைத் தொழிலாளியாக வேலைபார்த்த மாணவர், இன்று டாக்டர்!
ராமேஸ்வரம் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தேன். வீட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குப் பேருந்தில் சென்று வர வேண்டும். வீட்டில் பெரிய வசதிகள் இல்லை. அப்பா கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் வேலையைச் செய்து வந்தார். நான் எட்டாவது படிக்கும்போது, கடலில் மீன்பிடிக்கச் சென்ற அப்பாவை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றுவிட்டனர். பிறகு 3 மாதம் கழித்துதான் அவர் நாடு திரும்பினார். அந்த மூன்று மாத காலம் எங்களது குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது. அதன் பிறகு, அவர் மீன்பிடிக்கக் கடலுக்குப் போகவில்லை. வீட்டுக்குப் பக்கத்தில் சிறிய மளிகைக் கடையை வைத்தார். அதை வைத்துத்தான் குடும்பம் நடக்க வேண்டியதிருந்தது. நானும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் கடையைப் பார்த்துக் கொள்வேன். என்னையும் அக்கா இருவரையும் எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்று எனது அப்பாவும் அம்மாவும் பாடுபட்டனர்.
எலைட் ஸ்கூலில் படித்தபோதுதான் டாக்டராகலாம் என்று எனக்கு தன்னம்பிக்கையூட்டினார்கள். அரசு எலைட் ஸ்கூலில் படித்திருக்கவில்லை என்றால் நான் டாக்டராகி இருப்பேனா என்பது சந்தேகம்தான்.
நாங்கள் இரவில் 10 மணி, 11 மணி வரை படிப்போம்; காலையில் 5 மணிக்கு எழுந்து படிப்போம். பள்ளியில் நாங்கள் மூன்று பேரும் நன்றாகப் படிப்போம். 2014 ஆண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 500க்கு 468 மதிப்பெண்கள் பெற்றேன். பள்ளியில் இரண்டாம் ரேங்க் எடுத்தேன். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த நந்தகுமார் முயற்சியில் சிறந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட எலைட் பள்ளியில் சேர்ந்து அங்கேயே தங்கிப் படிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அங்கு சென்று படிக்க வீட்டிலும் சம்மதித்தார்கள்.
உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களைக் கொண்ட பிரிவை எடுத்துப் படித்தேன். கணித ஆசிரியர் நவநீதகிருஷ்ணன், விலங்கியல் பாட ஆசிரியர் ஆறுமுகம், இயற்பியல் ஆசிரியர் சரவணன், வேதியியல் ஆசிரியர் பிரபாகரன் உள்பட அனைத்து ஆசிரியர்களும் எங்கள் மீது அக்கறை காட்டினார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நந்தகுமார் சார், எங்களை நேரில் சந்தித்துப் பேசித் தன்னம்பிக்கையூட்டுவார்.
வார்டன்களாக இருந்த ஏகாம்பரமும் சரவணனும் ஒருங்கிணைப்பாளராக இருந்த நவநீதகிருஷ்ணனும் விடுதியில் தங்கி இருந்தபோது எங்களைச் சந்தித்துப் பேசி எங்களுக்கு ஊக்கமளித்தார்கள். பத்தாம் வகுப்பு வரை டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது இல்லை. எலைட் ஸ்கூலில் படிக்கும்போதுதான் டாக்டராகலாம் என்று எனக்கு தன்னம்பிக்கையூட்டினார்கள். அரசு எலைட் ஸ்கூலில் படித்திருக்கவில்லை என்றால் நான் டாக்டராகி இருப்பேனா என்பது சந்தேகம்தான்.
மேலும் படிக்க: தமிழகத்தில் கல்வி சான்றிதழ்கள் பெற முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்கள்!
2016ஆம் ஆண்டில் பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1136 மதிப்பெண்கள் எடுத்தேன். கணிதப் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்தேன். உயிரியல் பாடத்தில் 198 மதிப்பெண்களும் வேதியியல் பாடத்தில் 196 மதிப்பெண்களும் இயற்பியல் பாடத்தில் 191 மதிப்பெண்களும் பெற்றேன். எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கான கட் ஆப் மதிப்பெண்கள் 195.75. எனக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு இடம் கிடைத்தது.
மருத்துவக் கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைக்கப் பணத்துக்கு என்ன செய்வது என்று எனது குடும்பம் திகைத்து நின்றது. அந்த வேளையில், நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் காந்தி உதவினார். அப்புறம், நான்காம் ஆண்டுவரை அரசு உதவித் தொகை கிடைத்ததால் கல்லூரியில் தொடர்ந்து படிப்பில் பிரச்சினை இருக்கவில்லை. ஐந்தாம் ஆண்டில் மருத்துவப் பயிற்சிக் காலத்தில் உதவித்தொகை கிடைத்தது.
சர்ஜரியில் முதுநிலைப் படிப்பைப் படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக, முதுநிலை நீட் தேர்வுக்குத் தயாராகி வருகிறேன்.
பள்ளியில் தமிழ் வழியில் படித்ததால் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததும், அங்கு ஆசிரியர்கள் ஆங்கில வழியில் பாடம் நடத்தியது எனக்குப் புரியவில்லை. தமிழ் வழியில் படித்து கல்லூரியில் சேர்ந்த மாணவர்களிடம், பாடம் புரியவில்லை என்றால் கேளுங்கள் என்று ஆசிரியர்கள் அக்கறையுடன் கேட்பார்கள். எங்களது சந்தேகங்களைப் போக்குவார்கள். சக மாணவர்களும், பாடங்களை எங்களுக்கு விளக்கிச் சொல்வார்கள். படிப்படியாக பிக்அப் செய்து விட்டேன். கல்லூரியில் படிக்கும் போது ஊக்கமளித்த பேராசிரியர்களில் ஒருவர் பிசியாலஜி பேராசிரியர் எத்தியாஸ். இந்த ஆண்டு மே மாதத்தில் எம்பிபிஎஸ் படிப்பைப் படித்து முடித்துவிட்டேன்.
சென்னை, திருச்சி, பெரம்பலூரில் உள்ள அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களுக்கு நேரில் சென்று தன்னம்பிக்கையூட்டும் பணிகளைச் செய்து வருகிறேன். தற்போது மதுரையில் தனியார் மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிகிறேன். அரசு மருத்துவமனையில் டாக்டராக சேருவதற்கு அறிவிப்பு வந்ததும் அதற்கான தேர்வை எழுத வேண்டும். சர்ஜரியில் முதுநிலைப் படிப்பைப் படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக, முதுநிலை நீட் தேர்வுக்குத் தயாராகி வருகிறேன் என்கிறார் டாக்டர் சுர்ஜித்.
Read in : English