Read in : English

Share the Article

வறுமைச் சூழ்நிலையால் பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டு விட்டு நான்கு ஆண்டுகள் குடும்ப வருமானத்துக்காக டீ கடை வேலை உள்ளிட்ட வேலைகளைச் செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளான விளிம்பு நிலை குடும்பத்தைச் சேர்ந்த மாணவர் பேச்சிமுத்து (28), தனது விடாமுயற்சியால் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படித்து பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்து படித்து டாக்டராகியுள்ளார்.

மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவராக இருந்த போதிலும்கூட, அவர் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுப்பிரிவின் கீழ் அவருக்கு இடம் கிடைத்தது.  பள்ளிப் படிப்பு முழுவதையும் தமிழ் வழியில் படித்த அவர், அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் எம். பேச்சிமுத்து. அவரது குடும்பம் வாடகை வீட்டில் வசித்து வருகிறது. அவரது அப்பா மாரியப்பன் இஸ்திரி போடும் வேலையைச் செய்து வருகிறார். அம்மா செல்வி வீட்டைக் கவனித்துக் கொள்வதுடன் இஸ்திரி போடும் வேலைகளிலும உதவி செய்வார். அவர்கள் இருவரும் தொடக்கப் பள்ளிப் படிப்பைக்கூட தாண்ட முடியவில்லை.

பிழைப்புக்காக அவரது  குடும்பம் கோவில்பட்டியிலிருந்து திருநெல்வேலிக்கு மாறியது. அங்கு என்ஜிஓ காலனியில் உள்ள அரசு உதவி பெறும் புனித வளனார் தொடக்கப் பள்ளி என்று அழைக்கப்படும் செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் முதல் வகுப்பில் பேச்சிமுத்து சேர்ந்தார். பள்ளியின் பெயர்தான் கான்வென்ட். ஆனால், அங்கு தமிழ் வழியில்தான் அனைத்து வகுப்புகளும் நடக்கும். அந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர், அருகில் இருந்த செயின்ட் சேவியர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தார். இந்தச் சூழ்நிலையில், 2006இல் அவரது குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி, ஊரை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவானது. அதனால், அவர் பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்போடு விட்டு விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

குடும்ப வருமானத்துக்காக அகர்பத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் நான் வேலைக்குச் சேர்ந்தேன். பின்னர் டீ கடையில் வேலை பார்த்தேன். பின்னர் பேக்கரியில் வேலைக்குப் போனேன். சாலை ஓரத்தில் ஆடைகளை விற்பவரிடம் வேலை பார்த்தேன்.  பிறகு மொபைல் ரீ சார்ஜ், சர்வீஸ் கடையில் வேலை பார்த்தேன். இப்படியே நான்கு ஆண்டுகள் பள்ளிப் படிப்பு இல்லாமல், குடும்ப வருமானத்துக்காக வேலை பார்ப்பதிலேயே காலம் கழிந்தது.

சோதனையான இந்தக் காலகட்டத்தைப் பற்றியும்,தனது விடா முயற்சியாலும் பலரது உதவியாலும் அதைத் தாண்டி வந்தது குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் பேச்சிமுத்து:

பொருளாதார நெருக்கடி சூழ்நிலையை அடுத்து, பெங்களூரில் இருந்த எனது அப்பாவின் தங்கை பேச்சியம்மாள், எங்களை அங்கு  அழைத்தார். அதைத் தொடர்ந்து, எங்களது குடும்பம் பெங்களுருக்கு குடிபெயர்ந்தது.

பட்டமளிப்பு விழாவில் பேச்சிமுத்து

பெங்களுரில் பள்ளியில் படிக்க கன்னட மொழி தேவை என்பதால் அங்குள்ள பள்ளியில் படிக்கச் சேர முடியவில்லை. அத்துடன், பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்கும் வசதி இல்லை. அதனால் ஆறாவது படித்த நானும் ஏழாவது படித்த எனது அண்ணனும் பள்ளிப் படிப்பை விட்டு விட்டோம்.

அப்பா அங்கும் இஸ்திரி போடும் வேலைதான் பார்த்தார். அதில்தான் குடும்பம் ஓட வேண்டும். குடும்ப வருமானத்துக்காக அகர்பத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் நான் வேலைக்குச் சேர்ந்தேன். பின்னர் டீ கடையில் வேலை பார்த்தேன். பின்னர் பேக்கரியில் வேலைக்குப் போனேன். சாலை ஓரத்தில் ஆடைகளை விற்பவரிடம் வேலை பார்த்தேன்.  பிறகு மொபைல் ரீ சார்ஜ், சர்வீஸ் கடையில் வேலை பார்த்தேன். இப்படியே நான்கு ஆண்டுகள் பள்ளிப் படிப்பு இல்லாமல், குடும்ப வருமானத்துக்காக வேலை பார்ப்பதிலேயே காலம் கழிந்தது.

இதற்கிடையில், எனது அண்ணன் மணிகண்டன் திருப்பூரில் உள்ள பனியன் பேக்டரியில் வேலை பார்த்து வந்தார். தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்புத் தேர்வை தனித்தேர்வராக வீட்டிலிருந்தே எழுதலாம் என்று யோசனை கூறிய அண்ணன், எனக்கு எட்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களை வாங்கி அனுப்பினார். அந்தப் புத்தகங்களை வைத்துக் கொண்டு, வீட்டிலேயே நானே படித்தேன். தேர்வையும் எழுதினேன். அந்தத் தேர்வில் 500க்கு 430 மதிப்பெண்கள் வாங்கினேன்.

எனது அம்மாவின் அக்கா சுப்புலட்சுமி திருச்செந்தூரில் டீச்சராக வேலை பார்த்து வந்தார். எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற என்னை அவரது வீட்டில் வைத்து படிக்க விரும்புவதாகக் கூறி, என்னை திருச்செந்தூருக்கு அழைத்து, நான் படிக்க உதவிக்கரம் நீட்டினார். இதையடுத்து, 2011இல் திருச்செந்தூரில் உள்ள செந்திலாண்டவர் அரசு ஆடவர் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பில் தமிழ் மீடியத்தில் சேர்ந்தேன். பெரியம்மா வீட்டில் தங்கி இருந்து பள்ளிக்குப் போய் வந்தேன்.

குழந்தை மருத்துவத்தில் எம்டி படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக முதுநிலை நீட் தேர்வு எழுதி, முடிவுகளும் வந்துவிட்டன. கவுன்சலிங்கிற்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

எனது பள்ளிக்கு ஆசிரியர் பயிற்சிக்காக வந்த பாலசுப்பிரமணியன் சார், தனியே டியூஷன் மையம் நடத்தி வந்தார். அங்கு என்னிடம் கட்டணம் எதுவும் வாங்காமல் எனக்குப் பாடங்கள் நடத்துவார். பாடம் தொடர்பான சந்தேகங்களைப் போக்குவார். டெஸ்ட்டுகள் வைப்பார். பத்தாம் வகுப்புத் தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு எடுத்தேன். அத்தேர்வில் 500க்கு 480 மதிப்பெண்கள் பெற்று அந்த அரசுப் பள்ளியிலே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன்.

பத்தாம் வகுப்பு படித்த பிறகு படிப்பதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்திருந்த நேரத்தில், நாமக்கல்லில் உள்ள எஸ்.பி.கே. மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியிலிருந்து கொடுத்த விளம்பரத்தைப் பார்த்தேன். பத்தாம் வகுப்புத் தேர்வில் 480க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை இலவசமாகப் படிக்க வைப்பதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. அதற்கு நான் விண்ணப்பித்ததும், இலவசமாகப் படிக்க அனுமதி அளிப்பதாகக் கூறினார்கள்.

நான் மட்டும் பள்ளிக்கு நேரில் சென்றேன். அப்போது அந்தப் பள்ளியில் ரிசப்ஷனில் பணிபுரிந்த அனிதா அக்கா, எனக்கு கார்டியனாக கையெழுத்துப் போட்டு, அங்கு படித்த இரண்டு ஆண்டுகளும் அவர் எனக்கு ஊக்கமளித்து வந்தார். அங்கு, பிளஸ் ஒன் வகுப்பில் உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்தேன். அந்தப் பள்ளியிலும தமிழ் வழியில் ஒரு வகுப்பு இருந்ததால், நானும் தொடர்ந்து தமிழ் வழியில் படித்தேன்.

பேச்சிமுத்து தனது சக மருத்துவர்களுடன்

எப்படியாவது நல்ல மதிப்பெண் பெற்றுவிட்டால் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துவிடலாம் என்று எனது பெரியம்மா மகனான அண்ணன் ராமேஸ்வரன் கூறுவார். எனக்கும் அதுதான் விருப்பம். நான் பெங்களூரில் மொபைல் சர்வீஸ் செய்யும கடையில் வேலை பார்க்கும்போதும் விடுமுறைகளில் அங்கு வேலை பார்த்தபோதும், நான் டாக்டர் ஆக வேண்டும் என்பதை அங்கிருந்தவர்களிடம் சொல்வேன். மொபைல் சர்வீஸ் கடையில் வேலைபார்க்கும் இந்தப் பையனால் முடியுமா என்று அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். எனினும், டாக்டராக வேண்டும் என்பதில் நான்  உறுதியாக இருந்தேன். எனவே, பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால்தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் சேர முடியும் என்பதால் தீவிர கவனம் செலுத்திப் படித்தேன்.

2014ஆம் ஆண்டு நடந்த பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1167 மதிப்பெண்கள் பெற்றேன். உயிரியலில் 200க்கு 200. கணிதத்திலும் இயற்பியலிலும் தலா 199, வேதியியலில் 198. அந்தப் பள்ளியில் மூன்றாவது ரேங்க். எம்பிபிஎஸ் படிப்புக்கான எனது கட் ஆஃப் மதிப்பெணக்ள் 199.25. எனக்கு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்தது. இந்த சூழ்நிலையில் எம்பிபிஎஸ் படிப்பை படிப்பதற்கு அகரம் பவுண்டேஷன் உதவி கிடைத்தது. அதனால் படிப்பை எந்தத் தடங்கலும் இல்லாமல் தொடர முடிந்தது.

பள்ளியிலிருந்து தமிழ் வழியில் படித்ததால், மருத்துவக் கல்லூரியில் ஆங்கில வழியில் படிக்க நேர்ந்தபோது தொடக்கத்தில் பிரச்சினைகள் இருந்தன. அதையெல்லாம் தாண்டி நன்கு படித்து 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தேன்.

இதற்கிடையில், எனது குடும்பம் கோவில்பட்டி திரும்பியது. எனது அப்பா அயன் பண்ணும் கடை வைத்திருக்கிறார். எட்டாம் வகுப்புத் தேர்வையும பத்தாம் வகுப்புத் தேர்வையும் தனித்தேர்வராக எழுதிய எனது அண்ணன், தற்போது டீச்சர் டிரெயினிங் முடித்து விட்டு, நெட் சென்டரில் வேலைப்பார்த்து வருகிறார். கொரோனா சூழ்நிலையில், வீட்டிலிருந்தபடியே முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்குத் தயாரானேன். குழந்தை மருத்துவத்தில் எம்டி படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக முதுநிலை நீட் தேர்வு எழுதி, முடிவுகளும் வந்துவிட்டன. கவுன்சலிங்கிற்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

முதுநிலை மருத்துவப் படிப்புக்காகக் காத்திருக்கும் இந்தக் காலத்தில் மருத்துவராக பணி செய்யலாம் என்று நினைத்தேன். ஒன்றிரண்டு மாதங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறேன். மருத்துவப் பணியில் சேருதற்கான யுபிஎஸ்சி நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். அதற்கான நேர்காணலிலும் தேர்வு பெற்றுவிட்டால், மத்திய அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்துவிடும். குழந்தை மருத்துவத்தில் எம்டி படிக்க இடம் கிடைத்துவிட்டால் அதில் சேர்ந்து விடுவேன். அந்தப் படிப்பைப் படிக்க பணம் ஒரு பிரச்சினையாக இருக்காது. ஸ்டைபண்ட் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் டாக்டர் பேச்சிமுத்து. விடாமுயற்சி, வெற்றி நிச்சயம்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles