Read in : English
தேனீர்க்கடை உரையாடல்கள் இலட்சோபலட்ச மக்களுக்குத் தெரிந்தால் எப்படியிருக்கும்? யாரோ ஒருவர் தன் நண்பரிடம் வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட மக்களைத் தாக்கிப் பேசுவது பொதுவெளியில் ஒலிபரப்பாகி ஆவணமானால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட தேனீர்க்கடை உரையாடலைப் போன்றதுதான் தன் எழுத்துக்கள் அல்லது சமூக வலைத்தளப் பேச்சுக்கள் என்று சவுக்கு சங்கர் சொல்கிறார்.
இரண்டு நண்பர்கள் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ளும்போது, அவர்கள் போலீஸைப் பற்றி, நீதிபதிகளைப் பற்றி, அதிகாரிகளைப் பற்றி, அரசியல்வாதிகளைப் பற்றி, பிராமணர்களைப் பற்றி, மலையாளிகளைப் பற்றி வட இந்தியர்களைப் பற்றி, செட்டியார்களைப் பற்றி சகட்டுமேனிக்குப் பேசுவது சகஜமானது. அவர்கள் எல்லோரையும் ஊழல்வாதிகள், பிரயோஜனமற்றவர்கள், மோசமானவர்கள், சாதீயத்தன்மை கொண்டவர்கள் தீங்கானவர்கள் என்றெல்லாம் ஒரே போடாய்ப் போட்டுப் பேசுவார்கள். ஆனால் அவை ஆவணப்படுத்தப்பட்டு பொதுநுகர்வுக்குப் போவதில்லை.
அந்தரங்க உரையாடல்களிலும் தனிப்பட்ட கிசுகிசுக்களிலும் அந்த மாதிரியான மொழி பொதுவானதுதான். யாரோ ஒருவருக்கு யாரோ ஒருவர்மீது அல்லது ஒரு கும்பல்மீது கோபம் இருக்கலாம்; அவர் எல்லோரையும் பொத்தாம் பொதுவாய்த் திட்டவும் தயாராக இருப்பார் என்பதைத்தான் இது காட்டுகிறது.
தனது நோக்கங்கள் தூய்மையானவை; திருத்துதலும் சீர்ப்படுத்துதலும்தான் அந்த நோக்கங்கள்; அதனால் தனது தேனீர்க்கடை உரையாடல்களை, அவை எவ்வளவு மோசமாகத் தென்பட்டாலும், தடை செய்யக்கூடாது; நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சங்கர் சொல்கிறார். அதே மாதிரிதான் நீதிமன்றக் கிசுகிசுப்புக்களும், வக்கீல் லாக்கர் அறைப் புரணிகளும்; ஆனால் அவற்றையெல்லாம் எந்த வக்கீலும் அம்பலப்படுத்துவதில்லை, நீதிமன்றத்திலும் பொதுவெளியிலும்.
ஒருவேளை பத்திரிக்கையாளராய் சங்கர் எழுத முற்பட்டால் வலைப்பூவில் அல்லது யூடியூப்பில் சொல்வதைப் போல அங்கே அவர் எழுத மாட்டார். அவர் புத்திசாலி; பிரக்ஞை உடையவர்; அங்கே அவர் விதிகளைக் கடைப்பிடிப்பார்
தான் சொல்வதை ஏதாவது ஒரு பத்திரிக்கையில் சங்கர் எழுத நினைத்தால், அதற்குச் சாட்சிகள் கேட்கப்படும்; ஒட்டுமொத்தமாய்ப் பேசுவதைவிட குறிப்பாகப் பேசுங்கள் என்று அறிவுறுத்தப்படுவார்; ஒவ்வொரு நீதிபதியும் ஊழல்வாதி என்று அவருக்கு எப்படித் தெரியும் என்ற கேள்வி எழும்; அவருடைய செய்திகளுக்கு ஆதிமூலங்கள் என்ன என்று அவரைக் கேட்பார்கள். ஆனால் சமூக வலைத்தளங்களுக்குத்தான் இந்த அறம்சார் விதிகளும் நியதிகளும் கிடையாதே!
ஒருவேளை பத்திரிக்கையாளராய் சங்கர் எழுத முற்பட்டால் வலைப்பூவில் அல்லது யூடியூப்பில் சொல்வதைப் போல அங்கே அவர் எழுத மாட்டார். அவர் புத்திசாலி; பிரக்ஞை உடையவர்; அங்கே அந்த விதிகளைக் கடைப்பிடிப்பார்.
தான் என்ன செய்கிறோம் என்று அவருக்குத் தெரியும்; தான் அதை வேண்டுமென்றேதான் செய்கிறோம் என்றும் அவருக்குத் தெரியும். ஜூலை 21-ஆம் தேதி இன்மதியில் டி.என்.கோபாலன் எழுதிய கூர்மதிக் கட்டுரை இப்படிச் சொல்கிறது: “நான் அவரைச் சரியாக புரிந்து வைத்திருக்கிறேன் என்றால், சங்கர் மன்னிப்புக் கேட்கமாட்டார் என்றுதான் சொல்வேன். நீதிமன்றத்திடம் மோதுவார். சில வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு அவரை சிறையிலடைப்பதைத் தவிர நீதிபதிக்கு வேறுவழி இருக்காது. எப்படியோ அவர் சர்ச்சைப் புகழ்நாயகனாக, நமக்குரிய ஜூலியன் அசான்ஜேவாக மாறிவிடுவார்.”
சவுக்கு சங்கருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் கருத்தியல் நம்பிக்கையோடு சம்பந்தப்பட்டது. திமுக அரசைத் தாக்கிப் பேசியதற்காக கைதுசெய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸை விடுதலை செய்த அந்த நீதிபதி, பாரதமாதாவின் மண் மக்களுக்குச் சொரி, சிரங்கு தருகிறது என்று கருத்துச் சொன்ன பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்குச் சிறைதண்டனை வழங்கினார்; இந்த இரண்டு தீர்ப்புகளிலும் பாரபட்சம் இருப்பதாகச் சங்கர் கூறினார்.
வழக்கு தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது; ஆனால் சங்கர் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை. அதனால் நீதிமன்றத்தைப் பற்றி சங்கர் சொல்லியிருந்த மற்ற கருத்துக்களை நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பி. புகழேந்தி அடங்கிய நீதிமன்ற அமர்வு சுட்டிக்காட்டத் தலைப்பட்டது. சங்கர் மன்னிப்புக் கேட்கவில்லை என்பதால் நீதிபதிகள் எரிச்சலடைந்தனர். சங்கர் எழுதியதும், பேசியதும் இலட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்ததால் நீதிமன்றத்திற்கு அவதூறு ஏற்பட்டுவிட்டது என்று நீதிபதிகள் வாதம் செய்தனர்.
நீதித்துறையில் வர்க்கப் பாரபட்சம் இருக்கிறது என்று முன்பு சொன்ன கேரளாவின் முன்னாள் முதல்வரும், கம்யூனிஸ்ட் தலைவருமான ஈ.எம்.எஸ். நம்பூதிபாடுவிற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவதூறு வழக்கை நீதிபதிகள் மேற்கோளாகக் காட்டினர்
நீதித்துறையில் வர்க்கப் பாரபட்சம் இருக்கிறது என்று முன்பு சொன்ன கேரளாவின் முன்னாள் முதல்வரும், கம்யூனிஸ்ட் தலைவருமான ஈ.எம்.எஸ். நம்பூதிபாடுவிற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவதூறு வழக்கை நீதிபதிகள் மேற்கோளாகக் காட்டினர். தொப்பை உடைய பணக்காரன் மற்றும் ஏழை ஒருவன் நீதிமன்றத்தை அணுகினால், நீதிமன்றம் பணக்காரனுக்குத்தான் சாதகமாகச் செயல்படும் என்று அவர் கருத்து சொல்லியிருந்தார்.
நம்பூதிரிபாடு மக்களிடையே செல்வாக்குடைய ஒரு தலைவர்; அதனால் அவரது வார்த்தைகள் மக்கள்மீது தாக்கம் எற்படுத்தி நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சரித்துவிடும் என்று நீதிமன்றம் கருதியது.
மதுரை நீதிபதிகள் சங்கருக்குப் பாடம் கற்பிக்க விரும்பினார்கள். அவர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவருக்குத் தண்டனை கொடுக்க விரும்பினார்கள். ஆனால் சிறையிலிருந்து திரும்பிய பின்பும், எப்போதும் போல நீதிமன்றத்திற்கு எதிராக தான் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கப் போவதாக சங்கர் சங்கல்பம் எடுத்திருக்கிறார். அதனால் இந்தப் போராட்டம் தொடரும் சாத்தியம் அதிகமாகவே இருக்கிறது.
ஆனால் நீதிமன்றம் முதலில் போட்ட அவதூறு வழக்கை விட்டுவிட்டு சங்கர் மீது வேறுபல குற்றச்சாட்டுக்களை அடுக்கி வைத்திருக்கிறது. இந்தச் சூழலில் இது சவுக்கு சங்கருக்கும், நீதிபதி சுவாமிநாதனுக்கும் இடையிலான ஒரு யுத்தம் அல்ல. சமூகத்திலும் நடைமுறை அணுகுமுறையிலும் இருக்கும் போக்குகளின் பிரதிநிதிகள்தான் இருவரும்.
நீதிபதி சுவாமிநாதன் ஓர் உயர்மட்ட நீதிபதி; அநேகமாக கடின உழைப்பாளி; வாங்கும் சம்பளத்திற்குத் தான் கடுமையாக உழைக்கிறோம் என்பதைக் காட்ட தான் தீர்த்துவைத்த பல வழக்குகளைக் காட்ட விழைகிறார் அவர். ஆனால் அரசு சம்பளம் வாங்கிக் கொண்டு பல்வேறு கட்டமைப்புகள்மீது சேற்றை அள்ளி வீசுகிறார் சவுக்கு சங்கர் என்று நீதிபதி கூறினா. சங்கரைப் பொறுத்தவரை, இந்துத்வா சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கும் நீதிபதிகளுக்கு ஓர் உதாரணம் நீதிபதி சுவாமிநாதன்.
தன்னுடைய விமர்சனங்களில் இருக்கும் சில கருபொருட்களை ஏற்கனவே மற்றவர்கள் விலாவாரியாகப் பேசியிருக்கிறார்கள் என்று சங்கர் சொல்வதில் உண்மை இருக்கிறது. ஆனால் மற்றவர்கள் அ…. தனிமனிதத் தாக்குதல்கள் அவர்களிடம் இல்லை. சவுக்கு சங்கரிடம் என்னதான் குறைகள் இருந்தாலும், பலர் அவரை நம்புகிறார்கள்; சிலர்தான் அவரை ‘பிளாக்மெயிலர்’ என்கிறார்கள்.
அவர் ஒன்றும் தனியான வனாந்திர விலங்கல்ல. அவருக்கு பெரிய இடத்துத் தொடர்புகளுடன் ஆதரவாளர்கள் பலர் இருக்கிறார்கள்.
நீதிமன்றம் சொன்னதைப் போல, சங்கர் நிச்சயமாக இலட்சுமணன் கோட்டைத் தாண்டிவிட்டார். ஒட்டுமொத்த நீதித்துறையின் நேர்மையை மட்டுமல்ல தனிப்பட்ட நீதிபதிகளையும் பெயர்ச்சொல்லி அவர் தாக்கிப் பேசியிருக்கிறார்.
விமர்சனத்திற்கும் தாக்குதலுக்கும் ஆளான ஜனநாயகத்தின் ஆகப்பெரிய தூண்களில் கடைசி தூண் அநேகமாக நீதித்துறையாகத்தான் இருக்கும். மற்றத் தூண்களை ஒப்பிடும்போது நீதித்துறையின் நம்பகத்தன்மை சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால் சங்கர் அதைக் கெடுக்கக் கிளம்பிவிட்டார். நியாயமாகப் பார்த்தால், எல்லோர்மீதும் பாரபட்சம் பார்க்காமல் நெருப்பை அள்ளிக் கொட்டுகிறார் சங்கர்.
திராவிடச் சிந்தனை கொண்டவர்தான் அவர். ஆனாலும் அவரது தாக்குதலுக்கு கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாருமே தப்பவில்லை.
உயர்நிலை நீதித்துறையை மையநீரோடை ஊடகங்களும் கண்காணிக்கின்றன; விமர்சிக்கின்றன. உதாரணமாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசிற்குச் சார்பான பாரபட்சம் இருப்பதாக சில ஊடகங்கள் சொல்லியிருக்கின்றன. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 விசயத்தில், மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டதைச் சுட்டிக்காட்டி, அரசுக்குச் சாதகமாக நீதிமன்றம் செயல்பட்டது என்றும், தனது கடமையை அது செய்யவில்லை என்று, சில ஊடகங்கள் கூறின.
தமிழ்நாட்டில் நீதித்துறையின் மீது முதல் கல்லை எறிந்திருக்கிறார் சங்கர். மற்றவர்கள் அவரைத் தொடர்ந்தால், நீதித்துறையிலும் பெருங்குடைச்சல் ஏற்படுவதை நாம் பார்க்கலாம்.
எல்லோர்மீது பாரபட்சம் பார்க்காமல் நெருப்பை அள்ளிக் கொட்டுகிறார் சங்கர். திராவிடச் சிந்தனை கொண்டவர்தான் அவர். ஆனாலும் அவரது தாக்குதலுக்கு கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாருமே தப்பவில்லை
நீதிமன்றத் தீர்ப்புகளின் தன்மையை ஆய்வு செய்வதோடு விமர்சனம் நின்றுவிடப் போவதில்லை; குறைந்தபட்சம் சமூக வலைத்தளங்களில். அரசியல் கிசுகிசுப்புக்கள் சமூக வலைத்தளங்களில் தினசரி விசயமாகி விட்டதைப் போல, நீதித்துறைக் கிசுகிசுப்புகளும், நீதிபதிகளின் உள்நோக்கங்கள், குணாம்சம், பாரபட்ச உணர்வுகள் ஆகியவற்றை அலசுகின்ற ஆராய்ச்சிகளும் ஓர் அன்றாட வழக்கமாகிவிடும். உயர் நீதிமன்றக் கிசுகிசு பொதுவெளிச் சொல்லாடலாய் மாறிவிடவும் கூடும்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் திறந்தவெளிப் பருவம்தான். இங்கே புனிதம் என்று எதுவுமில்லை; புனிதன் என்று எவரும் இல்லை. இன்று மகாத்மா காந்தியே இருந்தால்கூட, சமூக வலைத்தளத்தில் மற்றவர்களைப் போல அவரும் அதிகமாகவே விமர்சன உஷ்ணத்தைச் சந்தித்திருப்பார். மக்களை மட்டந்தட்டுவதிலும், தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், அழுக்குகளைத் தோண்டி எடுப்பதிலும், மற்றவர்கள் பெயரைக் கெடுப்பதிலும் ட்ரோல்கள் நிபுணத்துவம் உடையவை.
உரையாடல்களுக்கு, பாரபட்சங்களுக்கு, சார்பு நிலைப்பாடுகளுக்கும் கூட சமூக வலைத்தளம் ஒரு தாயகம். ஆனால் அங்கே பல்வேறு சார்பு நிலைப்பாடுகள் இருப்பதால், உண்மையை நீண்டகாலம் மூடிவைக்காமல் இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
Read in : English