Read in : English
சென்னையில் இருசக்கர வாகனங்களும் கார்களும் சாலைகளில் பேராழியாய் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த வாகனக் கூட்டங்களின் பார்க்கிங் கட்டணங்கள் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி செல்வம் கொழிக்கும் ஓர் உள்ளாட்சி அமைப்பாக மாறியிருக்க வேண்டும்; ஆனால், மாறவில்லை.
தற்போது பார்க்கிங் கட்டணங்களின் மூலம் கிடைக்கும் தினசரி வருமானம் ரூ.1.2 இலட்சம். முன்பு ரூ.80,000-ஆக இருந்தது. ‘பார்க்கிங் வெளிகள்’ மேம்படுத்தப்பட்டதால் வருமானம் அதிகரித்திருக்கிறது. பார்க்கிங் இடங்களின் எண்ணிக்கையை 88 ஆக அதிகரித்து, மொத்தம் 12,000 பார்க்கிங் வெளிகளை உருவாக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது.
2021 ஏப்ரல் மாத நிலவரப்படி, மாநிலத் தலைநகரில் மொத்தம் 9.99 இலட்சம் கார்களும், 49 இலட்சம் இருசக்கரவாகனங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது அதிகாரப்பூர்வமான தரவு. ஒட்டுமொத்த தமிழகத்தில், மோட்டார் வாகன எண்ணிக்கை 2001 ஆம் ஆண்டிலிருந்து பேரளவில் அதிகரித்திருக்கிறது.
2001இல் 11 இலட்சமாக இருந்த இருசக்கர வாகனங்கள் 2021இல் 1.69 கோடியாகவும், நான்கு இலட்சத்திலிருந்த கார்களின் எண்ணிக்கை சுமார் 29 இலட்சமாகவும் கூடியிருக்கிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாயும் அதிகரித்திருக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தன. ஆனால், மாநில அரசும், நகராட்சிகளும் இதைத் தவறவிட்டன.
2001இல் 11 இலட்சமாக இருந்த இருசக்கர வாகனங்கள் 2021இல் 1.69 கோடியாகவும், நான்கு இலட்சத்திலிருந்த கார்களின் எண்ணிக்கை சுமார் 29 இலட்சமாகவும் கூடியிருக்கிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாயும் ஏறக்கூடிய வாய்ப்புகள் இருந்தன. ஆனால், மாநில அரசும், நகராட்சிகளும் இதைத் தவறவிட்டன
நீதிமன்றத்தை அணுகிய திரைப்பட அரங்கு
வாகனங்களின் பார்க்கிங் வருவாய் எவ்வளவு முக்கியமானது என்பதை திரையரங்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கொன்று எடுத்துரைக்கிறது. ஆகஸ்டு 12 அன்று நீதிமன்றம் அந்தத் திரையரங்கிற்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது. திரையரங்குகளில் அரசு விதித்திருக்கும் பார்க்கிங் கட்டணங்களுக்கான அதிகபட்ச வரம்பை ரூ.20-லிருந்து உயர்த்த வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்.
இது மாநகராட்சி மற்றும் சிறப்புநிலை நகராட்சி எல்லைகளில் உள்ள அரங்குகளில் கார் பார்க்கிங் கட்டணம். ஏனென்றால் சென்னை சென்ட்ரல், பூக்கடை, தி.நகர், விமான நிலையம் ஆகிய இடங்களில் வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணங்கள் இதைவிட மிக அதிகம்.
திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணங்களை அரசு, தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குபடுத்தல் விதிகள், 1957இன் கீழ் ஒழுங்குபடுத்துகிறது. இப்போது வந்திருக்கும் நீதிமன்ற உத்தரவு இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும் (இதுவரை ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது).
சென்னை மாநகரத்திற்குள் மிக அதிகமான பார்க்கிங் கட்டணமாக ஒருமணிக்கு ரூ.60 என்று வசூல் செய்யப்படும் இடம் தி.நகர் ஸ்மார்ட் சிட்டி பெடஸ்ட்ரியன் பிளாசாதான். ஆனால், அந்தப் பகுதியின் சாலையோரங்கள் முழுவதும் கார்கள் நிறைந்து காணப்படுவதால் பாதசாரிகளுக்கான பிளாசா என்பது ஒரு நகைமுரண். அந்த பிளாசாவில் தானியங்கி பல படிநிலை பார்க்கிங் ஏற்பாட்டின் தலைவிதி என்ன ஆனது என்பது பற்றிப் பேச்சே இல்லை.
மேலும் படிக்க: தெரு வியாபாரம்: சென்னையில் மீண்டும் ஒரு பரமபத ஆட்டம்
அங்கே பார்க்கிங் வருமானம் சேதாரமாகிக்கொண்டிருக்கிறது. ஏனென்றால், கறாரான கண்காணிப்பு அங்கே இல்லை. பார்க்கிங் ஏரியாவைத் தாண்டி பனகல் பூங்காவிற்கு அருகே சில வாகனங்கள் சட்டவிரோதமாக பார்க்கிங் செய்யப்படுகின்றன. பாதசாரிகளின் பாதைகளிலும் இணைப்புச் சாலைகளிலும் இருசக்கரவாகனங்கள் இறைந்து கிடக்கின்றன. உணவகங்கள் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக பாதசாரிகளுக்கான இடங்களை ஒதுக்கித் தந்திருக்கின்றன. இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.15 என்று விதிக்கப்பட்டிருக்கும் கட்டணத்தை எல்லோரும் கட்டுவதில்லை. பேருந்துகளுக்கான சாலையின் பெரும்பகுதியை பிளாசாவின் இருபக்கங்களிலும் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் ஆக்ரமித்துக்கொள்கின்றன.
சென்னை மாநகரத்திற்குள் மிக அதிகமான பார்க்கிங் கட்டணம் ஒருமணிக்கு ரூ.60 என்று வசூல் செய்யப்படும் இடம் தி.நகர் ஸ்மார்ட் சிட்டி பெடஸ்ட்ரியன் பிளாசாதான். ஆனால், அந்தப் பகுதியின் சாலையோரங்கள் முழுவதும் கார்கள் நிறைந்து காணப்படுவதால் பாதசாரிகளுக்கான பிளாசா என்பது ஒரு நகைமுரண்
கட்டண பார்க்கிங் பற்றிய மனப்பான்மை
பெருமளவு நடுத்தர வகுப்பினர் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களும், ஏராளமான நகர்ப்புறவாசிகள் ஓட்டும் கார்களும் அதிகாரப்பூர்வமான வாகன எண்ணிக்கை புள்ளிவிவரங்களில் பிரதிபலிக்கின்றன. தோராயமாக, மொத்த கார்களின் எண்ணிக்கையில் ஐந்து சதவீதம் மட்டும் (50,000 கார்கள்) ஒருநாளைக்கு ஒருதடவை என்ற விகிதத்தில், திரையரங்குகளில் வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணம் போன்ற தொகையைச் செலுத்தினால், சென்னை மாநகராட்சியின் கஜானாவில் தினமும் ரூ.10 இலட்சம் சேர்ந்துவிடும். மொத்தமுள்ள 49 இலட்சம் இருசக்கர வாகனங்களில் பத்து இலட்சம் வண்டிகள் தலா ரூ.10 பார்க்கிங் கட்டணம் செலுத்தினால் தினமும் ஒருகோடி ரூபாய் வருவாய் கிடைத்துவிடும்.
தெருக்களில் பார்க்கிங் செய்வதற்கான கட்டணங்கள் இயல்பாகவே அதிகம்தான். ஏனென்றால், ஆயிரக்கணக்கான கார்கள் தெருக்களில் 24 மணி நேரமும் பார்க்கிங் செய்யப்படும்போது மக்களின் எளிதான நடமாட்டத்திற்கு அவை தடையாக இருக்கின்றன. சர்ச்சையில்லாத இடங்களை ஒதுக்கி, பொருத்தமான கட்டணங்களை வசூலித்து இந்தப் பார்க்கிங் ஏற்பாட்டை ஒழுங்குபடுத்துவது மிக எளிதான வேலை.
பார்க்கிங்கிற்கு நிலம் அவசியம். அதனால் தி. நகரில் சதுர அடிக்கு ரூ.20,000-லிருந்து ஏறிப்போகும் விலைகளில் பிரதானமான நிலங்களைப் பல நகை மற்றும் துணிக்கடைகள் வாங்கிப் போட்டு அவற்றைத் தங்களின் வாடிக்கையாளர்களின் பார்க்கிங் தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றன.
பார்க்கிங் போன்ற வருவாய் வரும் வழிகளை மேம்படுத்தினால், முன்னேறிய நாடுகளின் தரத்துடன் பொதுப்போக்குவரத்து மற்றும் நடைபாதை ஆகியவற்றை வளர்த்தெடுக்கத் துடிக்கும் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்குத் தேவையான நிதிகள் கிட்டும். பொதுப்போக்குவரத்தைப் பற்றி, குறிப்பாகப் பேருந்துகள் பற்றி, சமூகநல மனப்பான்மையுடன் அவர் அடிக்கடி பேசுகிறார். பெண்களுக்காகத் திமுக அரசு கொண்டுவந்திருக்கும் இலவசப் பேருந்துப் பயணம் பெரிதான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வருவாய் அதிகரித்தால் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான பாதசாரி வசதிகளை வணிகப் பகுதிகளில் உருவாக்க முடியும்.
சென்னையிலும் தமிழகத்தின் மற்ற பெரிய மாநகரங்களிலும் பார்க்கிங் அமைப்புகள் கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கின்றன. ஒரு அரசாங்கம் மாஃபியாக்களைத் தெருக்களில் வாடகை வசூலிக்கும் மையங்களாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது. பின்னால் வரும் அரசு தெருக்களில் கட்டணப் பார்க்கிங்கை முற்றிலும் ஒழித்துவிடுகிறது
தற்போது இருக்கும் பார்க்கிங் இடங்களை அரசு பட்டியலிடலாம். அதனால் ஒரு வணிகரீதியிலான திட்டமாகத் தனியார் பார்க்கிங்கை வளர்த்தெடுக்கலாம்.
செயல்படுத்த வேண்டிய தொழில்நுட்பங்கள்
நகர்ப்புறங்களின் ஒழுங்கற்ற சூழலுக்குள் ஓர் ஒழுங்கைக் கொண்டுவருவது ஒவ்வொரு இந்திய மாநகரத்தின் இலக்காக இருக்கிறது. தெருக்களையும், நடைபாதைகளையும் மீட்டெடுப்பதில் பார்க்கிங் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. பன்னாட்டு பார்க்கிங் நிபுணர் பால் பார்ட்டர் இந்தியாவின் பிரச்சினைகளை ஆய்வு செய்து தீர்வுகள் சொல்லியிருக்கிறார் (https://www.reinventingparking.org/).
இந்தப் பிரச்சினையைப் புதிதாக அணுகும் மாநகரங்களுக்கு மின்னணு தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவக்கூடும். ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டமைப்புகளும், பல்வேறு கட்டணத் தேர்வுகள் கொண்ட ஸ்மார்ட் மீட்டரிங்கும் மிகக் கவர்ச்சியானவை. பார்க்கிங் விதிகளை நடைமுறைப்படுத்தும் பணியில் நிறையப் பேரை ஈடுபடுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம்.
மேலும் படிக்க: போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மேம்பாலங்கள் அவசியத் தேவையா?
இந்தியாவின் சூழலில் நேரடியான தொடர்பு இல்லாமல் அத்தியாவசியமாக்கப்பட்ட கட்டணங்களை வசூலிக்கும் அமைப்பை உருவாக்கினால் வருவாய் வரும் வழியைத் தடுக்கும் தடைகளும், வருவாய் சேதாரமும் நீங்கிவிடும். கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் ‘ஃபாஸ்டாக் சிப்’பை உள்ளூர் பார்க்கிங் அமைப்புகளுடன் இணைத்தால் குறிப்பிட்ட பகுதியில் கார் நுழையும்போது ஓட்டுநர்களின் கணக்கிலிருந்து அனிச்சையாகக் கட்டணம் வசூலிக்கலாம். சுங்கச்சாவடிகளில் இந்த ஃபாஸ்டாக் அமைப்பை நீக்குவது என்று ஒன்றிய அரசு பேசிக்கொண்டிருக்கிறது.
அதனால் ஃபாஸ்டாக் அமைப்பை நகர்ப்புறங்களில் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்தப் பயன்படுத்தலாம். நிலத்தின் மதிப்பிற்கேற்ப பார்க்கிங் கட்டணத்தை அதிகரிக்கலாம் என்று ஏற்கெனவே தேசிய நகர்ப்புறப் போக்குவரத்துக் கொள்கை சொல்கிறது. அதனால் பொதுப்போக்குவரத்தை வளர்த்தெடுக்க முடியும்.
சென்னையிலும் தமிழகத்தின் மற்ற பெரிய மாநகரங்களிலும் பார்க்கிங் அமைப்புகள் கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கின்றன. ஒரு அரசாங்கம் மாஃபியாக்களை தெருக்களில் வாடகை வசூலிக்கும் மையங்களாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது. பின்னால் வரும் அரசு தெருக்களில் கட்டண பார்க்கிங்கை முற்றிலும் ஒழித்துவிடுகிறது.
ஆனால், அரசு வருவாயைத் தாமதமின்றி அதிகரிப்பதற்கான வழியாகப் பார்க்கிங் கட்டமைப்பை மேலும் பலமாக்குவதற்கான வாய்ப்பு திரு. பழனிவேல் தியாகராஜனுக்குக் கிடைத்திருக்கிறது.
Read in : English