Read in : English

தெரு வியாபாரம் சம்பந்தமாக சென்னை சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு நீண்டகாலப் போரில் புதியதோர் அத்தியாயம் உருவாகியிருக்கிறது இப்போது.  நீதிமன்றத்திற்கு எதிரே என்எஸ்சி போஸ் சாலையில் இன்னும் தொடர்ந்து தெரு வியாபாரம் நடக்கிறது. இந்தப் பிரச்சினையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  சம்பந்தமாக பணிஓய்வு பெற்றவர்கள் உட்பட பணியிலிருக்கும் மூத்த ஐஏஎஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகளை நேரில் வந்து ஆஜராகும்படி சென்னை உயர்நீதி மன்றம் ஆணையிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில், ஏன் இந்தியாவின் பல பகுதிகளிலும் கூட, தினம்தினம் அரங்கேறும் நகர்ப்புற நெருக்கடியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குறியீடாக என்எஸ்சி போஸ் சாலை மாறிவிட்டது. ஆனால் மாநிலத்திலும் ஒன்றியத்திலும் தொடர்ந்து ஆண்ட அரசுகள் இந்தப் பிரச்சினைக்குக் கண்டுபிடித்த தீர்வுகளைச் சட்டங்களாக்கியும் அவற்றை அமல்படுத்துவதைத் தவிர்த்தே வந்திருக்கின்றன.

என்எஸ்சி போஸ் சாலையில் தெரு வியாபாரம் செய்யக்கூடாது (நோ ஹாக்கிங் ஜோன்) என்று 1995-ல் வெளிவந்த உச்சநீதிமன்ற ஆணை உட்பட பல்வேறு நீதிமன்ற உத்தரவுகள் தெளிவாகச் சொல்லியிருந்த போதிலும், அவை நடைமுறையில் செயல்படுத்தப்படவே இல்லை. இது சம்பந்தமாக தங்கள் கோபத்தைத் தெரிவித்திருக்கிறார்கள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியும், நீதிபதி பரத சக்ரவர்த்தியும். ஜூன் 23 அன்று பெஞ்ச் மீண்டுமோர் ஆணையிடவிருக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் விசாரிக்கவிருக்கிறது. அதற்குள் நீதிமன்றத் தீர்ப்புகளை நடைமுறைப் படுத்திவிட்டால், அதிகாரிகள் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.

கட்டுப்பாடு இல்லாமல் கூவிக்கூவி தொழில் செய்த தெரு வியாபாரிகளால் மாநகரத்தின் இந்தப் பழைய பகுதி ஒருகாலத்தில் கூச்சலும், குழப்பமும் சதா சர்வகாலம் ஓங்கி ஒலித்த மையமாக இருந்தது. போதாதற்கு கார்களும் இருசக்கர வாகனங்களும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருந்தன. அந்த ஏரியாவின் புழங்குவெளி பூஜ்யமானது. இனி என்எஸ்சி போஸ் சாலையின் விதி வேறுமாதிரியாகலாம். தெரு வியாபாரிகள் (ஜீவாதாரப் பாதுகாப்பு மற்றும் தெருவியாபாரக் கட்டுப்பாடு) சட்டம், 2014-ன் ஷரத்துகளைப் பயன்படுத்தி பெருநகரச் சென்னை மாநகராட்சி இந்தத் தெரு வியாபாரப் பிரச்சினையை புதிதாக அணுக முடியும்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில், ஏன் இந்தியாவின் பல பகுதிகளிலும் கூட, தினம்தினம் அரங்கேறும் நகர்ப்புற நெருக்கடியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குறியீடாக என்எஸ்சி போஸ் சாலை மாறிவிட்டது.    

இதுவரை அரசுகள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்காமல் இருப்பதற்குச் சட்டத்தின் ஷரத்துகளை ஒன்றுமில்லாமல் ஆக்கி காலந்தாழ்த்திவிட்டன.

தெரு வியாபாரச் சட்டத்தை நிறைவேற்றத் தேவைப்படுவது நகர தெரு வியாபார ஆணையத்தையும், நகர தெரு வியாபாரக் குழுக்களையும் உருவாக்குவதுதான். சென்னை விசயத்தில், இது சம்பந்தமான முயற்சி அரைகுறைப் பிரசவமாகிவிட்டது. நகர தெரு வியாபாரக் குழுக்களை சட்டத்தின்படி உருவாக்கவில்லை என்றுகூறி அந்தக் குழுக்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்று உயர்நீதிமன்றம் அறிவித்துவிட்டது. அந்தக் குழுக்களுக்குத் தலைவராக சென்னை மாநகர ஆணையரை நியமிக்காமல் வெறும் செயற்பொறியாளரை நியமித்திருந்தது அரசு.

மேலும் படிக்க:
சென்னையில் பாதசாரிகள் சாலை விபத்துக்கு ஆளாகமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? 

இனி எம்டிசி பஸ் நேரத்தை உங்கள் போன் சொல்லும்

பிரச்சினையான இடைவெளிகள்
தெரு வியாபாரச் சட்டம் தெரு வியாபாரிகளுக்கு நிறைய பாதுகாப்பு அளிக்கிறது. வியாபாரிகளின் கணக்கெடுப்பு, குறிப்பிட்ட இடங்களில் வியாபாரம் செய்வதற்கான வாய்ப்பு, விதிமீறல் அபராதங்களுக்கான முறையான நடவடிக்கைகள், பறிக்கப்பட்ட பொருட்களைத் திருப்பிக் கொடுத்தல், தேர்தல் மூலம் வியாபாரிகள் நகர தெருவியாபாரக் குழுக்களில் இடம்பெறுதல், காவல் துறையின் மீதும், மற்ற அதிகாரிகள் மீதும் கட்டுப்பாடுகள், குறைதீர்க்கும் கட்டமைப்பு ஆகிய அம்சங்கள் அந்தச் சட்டத்தில் இருக்கின்றன.

ஆனால் அந்தச் சட்டத்தை அமல்படுத்த அரசுகளுக்கு ஆர்வம் பெரிதாக இல்லை. அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் பற்றி, ஜகதாம்பிகா பால் தலைமையிலான நகர்ப்புற வளர்ச்சி பாராளுமன்ற நிலைக்குழு 2021-ல் தந்த ஓர் அறிக்கையில் இது வெட்டவெளிச்சமானது.

அந்தக் குழு அறிக்கையில் சொல்லப்பட்ட விசயங்கள் பின்வருமாறு:

  • நகர தெரு வியாபாரக் குழுக்கள் பலமாநிலங்களில் உருவாகவில்லை. அதனால் தெரு வியாபாரிகள் அடிக்கடி வெளியேற்றப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
  • சட்டத்தின்படி உருவான திட்டத்தின்படி, மொத்தம் 4,315 நகரங்களில் 1,341 நகரங்கள் மட்டுமே திட்டங்கள் தீட்டியிருக்கின்றன.
  • அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட மாநிலங்களில் தகுதியுள்ள எல்லா வியாபாரிகளுக்கும் அவை கிடைக்கவில்லை.
  • அதிதிறன் மாநகரங்கள் திட்டங்களோடு தெருவியாபாரம் ஒன்றிணைக்கப்படவில்லை; நகர தெரு வியாபாரக் குழுக்களோடு ஆலோசனைகள் நடைபெறுவதில்லை.

மோட்டார் வாகனங்கள் தாறுமாறும் ஓடும் மாநகரங்களிலும், நகரங்களிலும் கட்டற்ற ஒரு சூழல் நிலவுகிறது. மோட்டார் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும், தெருவியாபாரிகளும் அதீதமானவொரு போக்குவரத்துச் சுழியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, தனிமனித வழக்குகளில் நீதிமன்றங்கள் தலையிட்டு விதிகளை உருவாக்குகின்றன.

மொத்தத்தில் இந்தப் பிரச்சினை பரமபத விளையாட்டுதான். அவ்வப்போது ஏணியில் ஏறி உருவாகும் நல்ல பலன்கள் பாம்பு தீண்டி சர்ரென்று இறங்கி ஆட்டம் ஆரம்பித்த அடிமட்டத்து இடத்திற்கே திரும்பிவிடுகிறது.

தெரு வியாபாரிகள் பொதுவெளியில் நிரந்தரமானதோர் இடத்தை உரிமை கோரமுடியாது என்று 2022 ஜனவரியில் டில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு தெருவியாபாரி பொதுவெளியில் குறிப்பிட்டதோர் இடத்தில் உரிமையுடன் சின்ன கடையைக் கட்டி தன் பொருட்களை அங்கேயே பரப்பிக்கொள்ளலாம் என்பது இந்தியாவில் எழுதப்படாத ஒரு விதி. முன்னேறிய நாடுகளில் இப்படியில்லை. இந்தப் போக்கு சென்னையில் சில இடங்களிலும் காணப்படுகிறது. நடைமேடைகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தெரு வியாபாரிகள், சட்டப்பூர்வமான வரையறைகள் இல்லாததால், ஒரு ‘வாடகை’ கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இது உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும், காவல் மற்றும் குடிமை அதிகாரிகளுக்கும் நன்மை செய்யக்கூடிய ஓர் அமைப்பு. குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருக்கும் இடங்களுக்கான தேவை அதிகமாகும்போது, குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தெருவியாபாரிகளுக்கு அந்த இடங்கள் ஒதுக்கப்படலாம் என்று சட்டம் சொல்கிறது.

நடைமேடைகளையும், பக்கவாட்டு நடைபாதைகளையும் தெருவியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெருவியாபாரத்திற்கு விளக்கம்தரும் சட்டம் சொல்கிறது. ஆனால் நுணுக்கமான ஒரு தரத்தை உருவாக்கும் விதத்தில் எவ்வளவு நடைபாதை வெளியைத் தெருவியாபாரிகள் பயன்படுத்தலாம் என்று சட்டம் தெளிவாகச் சொல்லவில்லை. அதனால் சட்டம் பல்வேறு விளக்கங்களுக்கு ஆளாகிறது. தெருவியாபாரிகள் செய்யும் தொழிலைப் பொறுத்து அவர்கள் நடமாடும் வியாபாரிகள் என்றும், நிலையான வியாபாரிகள் என்றும் பிரிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் வியாபாரம் செய்யும் இடத்தின்  அளவு எவ்வளவு என்று வரையறுக்கப்படவும் இல்லை; அளக்கப்படவும் இல்லை.

டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு எதிர்க்கப்பட்டது. ஆனாலும் உச்ச நீதிமன்றம்கூட வேறுமாதிரியான நிலைபாட்டை எடுக்கவில்லை. நீதியரசர்கள் எம். ஆர். ஷா, பி.வி. நாகரத்னா அடங்கிய பெஞ்சு தெருவியாபாரிக்குப் தொழிலுக்கான பொதுவெளி உரிமை இல்லை என்றே தீர்ப்பு சொன்னது.

“தெரு வியாபாரக் கொள்கைப்படி ஒரு தெரு வியாபாரி சந்தையில் மட்டுமே தொழில் செய்ய அனுமதிக்கப்படுகிறார். அந்தக் கொள்கைக்குப் புறமாக அவர் செயல்பட முடியாது. வழக்குத் தொடுத்தவர் ஒரு தெருவியாபாரி. திடீரென்று ஓரிடத்தில் பொருட்களை விற்கத் தொடங்கிய அவர் தன்பொருட்களை அந்த இடத்தில் பரப்பி வைத்துக்கொள்ளும் உரிமையை நாடுகிறார். ஆனால் அவருக்கு அந்த உரிமை இல்லை,” என்று பெஞ்ச் தீர்ப்பளித்தது.

மாறுபாட்டைத் தீர்த்தல்
பொதுவெளி சம்பந்தமான இன்னொரு சட்டம் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016. மாற்றுத் திறனாளிகளின் நடமாட்டங்களுக்கான சாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அந்தச் சட்டம் சொல்கிறது. அதாவது அவர்களுக்கான பாதுகாப்பும் சுத்தமும் நிறைந்த நடைமேடை வெளி. மாற்றுத்திறனாளிகளைப் பிரதிநிதிகளாகக் கொண்ட நகர தெரு வியாபாரக் குழுதான் ஒன்றுக்கு ஒன்று முரண்படும் இரண்டு தேவைகளை ஒன்றிணைத்துத் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும்.

ஒருபக்கம் பாதசாரிகள்; மறுபக்கம் தெருவியாபாரிகள். இவர்களுக்கு இடையிலான இந்த மாறுபாடு, திட்டமிடப்படாமல் எல்லா இடங்களிலும்  அனுமதிக்கப்பட்ட  மோட்டார் வாகனங்களின் ஆக்ரமிப்பால் விளைந்தது என்று ஷக்திமான் கோஷ் இந்த எழுத்தாளரிடம் சென்னையில் சொன்னார். தெருவியாபாரிகள் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அவர். மோட்டார் வாகனங்கள் பாதசாரிகளின் நடைமேடைகளில் ஏறி அவர்களுக்கான இடத்தையும் பறித்துக் கொள்கின்றன. இது சென்னையிலும், மற்ற மாநகரங்களிலும் சர்வசாதாரணமாக நிகழும் ஒரு நிகழ்வுதான். ஊடகங்கள் ’சாலைகளை அகலப்படுத்தி’ எளிதான போக்குவரத்திற்கு வசதிசெய்ய வேண்டும் என்று கூறுகின்றன. மோட்டார் வாகனங்கள் இல்லாமல் சாலையைப் பயன்படுத்துபவர்களின் நலனுக்கு இது உகந்ததல்ல என்று யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.

  தெரு வியாபாரச் சட்டம் இயற்றப்பட்டு ஐந்தாண்டு கழித்து, பாம்பே உயர்நீதிமன்றம் தெருவியாபாரிகளின் கோரிக்கைகளைக் கேட்டு கடுப்பானது. “பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் தெருக்களை யாரும் பயன்படுத்த முடியாது; ஆக்ரமிக்கவும் முடியாது,” என்|று நீதிமன்றம் தீர்ப்பில் சொன்னது.

தெரு வியாபாரச் சட்டம் இயற்றப்பட்டு ஐந்தாண்டு கழித்து, பாம்பே உயர்நீதிமன்றம் தெருவியாபாரிகளின் கோரிக்கைகளைக் கேட்டு கடுப்பானது. “பொதுவெளித் தெருவில் கூவி வியாபாரம் செய்வதற்கான முழு உரிமையை, நிபந்தனையற்ற உரிமையை, கட்டுப்பாடற்ற உரிமையை எந்தச் சட்டமும் அல்லது எந்த நீதிமன்றத் தீர்ப்பும் அங்கீகரித்ததாகக் கொள்ள முடியாது. பொதுவெளித் தெருக்கள் வாகனங்களின் மற்றும் பாதசாரிகளின் நடமாட்டங்களுக்கு மட்டுமே அமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான் அவை பொதுவெளித் தெருக்கள். பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் தெருக்களை யாரும் பயன்படுத்த முடியாது; ஆக்ரமிக்கவும் முடியாது,” என்|று நீதிமன்றம் தீர்ப்பில் சொன்னது.

தெருக்களில் குழந்தைகள் அடங்கிய பாதசாரிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஆகியோரை வஞ்சிக்காதவாறு, வியாபாரம் செய்யும் இடங்களைத் தேர்ந்தெடுத்து தெரு வியாபாரிகளுக்கு நன்மை செய்யும் பணியில் தமிழகம் உட்பட எல்லா அரசுகளும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு. தெருக்களில் கார்களுக்கும் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும். மாறாக, குறிப்பிட இடங்களில் கட்டண நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்தலாம். சந்தைப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்தும் மைதானங்களை அடையாளம் காண்பதும், நடைமேடைகளை விரிவாக்கம் செய்வதும் தவிர்க்க முடியாததாக இருக்கலாம்.

என்எஸ்சி போஸ் சாலை ‘போக முடியாத மண்டலமாக’ இருக்கலாம். ஆனால் பாதசாரிகள் அங்கே செல்லக்கூடிய முழுவசதியை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தெருவியாபாரிகள் சிலருக்கு மட்டும் சிலமணி நேரங்களுக்கு மட்டும் வியாபாரம் செய்ய அனுமதிக்கலாம். நிரந்தர கட்டுமானங்களை அங்கே அவர்கள் செய்யக்கூடாது. இந்த மாற்றுத் திட்டத்தை நீதிமன்றம் யோசிக்கலாம். இந்த மாடலை தி.நகர், மைலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய ஏரியாக்களுக்கும், சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் கொண்டுவரலாம். சொல்லப்போனால், மக்களின் சிறிய பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வது தெருவியாபாரிகள் மட்டுமே. நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு அவர்களும் தங்களின் பங்களிப்பைச் செய்கிறார்கள்.

மொத்தத்தில் இந்தப் பிரச்சினை பரமபத விளையாட்டுதான். அவ்வப்போது ஏணியில் ஏறி உருவாகும் நல்ல பலன்கள் பாம்பு தீண்டி சர்ரென்று இறங்கி ஆட்டம் ஆரம்பித்த அடிமட்டத்து இடத்திற்கே திரும்பிவிடுகிறது. கொஞ்ச காலம் சென்றவுடன், மீண்டும் ஆரம்பமாகும் ஆட்டம்!

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival