Read in : English

தமிழ்நாட்டில் பொதுப்பேருந்தில் பயணம் செய்வதற்குப் பெண்களுக்குக் கட்டணமில்லை. இதன்மூலம், சமூகரீதியான பயனர்களுக்கு இலவசப் பொதுப்போக்குவரத்துப் பயண வசதியை ஏற்படுத்திய உலக நாடுகளின் மாநகரப் பட்டியலில் தமிழ்நாடும் சேர்ந்துகொண்டு பெருமையடைந்திருக்கிறது. வளரும் பொருளாதார நாட்டில் இளம்பயணிகளில் பெரும்பாலோர் இருசக்கர வாகனங்களுக்கு மாறியதால், பேருந்துப் பயணம் குறைந்துவிட்ட சூழ்நிலையில், சென்னையிலும் தமிழ்நாட்டின் பிறபகுதிகளிலும் பெண்கள் பேரளவில் பேருந்துகளில் பயணிக்கும் போக்கு அதிகரித்துவிட்டது. இதற்கு ஏராளமான சம்பவங்கள் சான்றாக இருக்கின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை ஒரு புரட்சி என்கிறார்.

2021 முதல் இப்படிப் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 132 கோடி என்றும், சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) உட்பட எல்லா மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் அளிக்கப்பட்ட மானியத்தொகை ரூ. 1,600 கோடி என்றும் போக்குவரத்து அமைச்சர் எஸ். சிவசங்கர் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இந்த மானியத்தொகையை அப்படியே எடுத்துக் கொள்ளலாம். ஆனால், பயனர்களின் எண்ணிக்கை என்பதைக் கட்டணமில்லாப் பேருந்துகளில் மேற்கொண்ட சவாரிகளின் எண்ணிக்கை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். சென்னையில் இயங்கும் 3,300 பேருந்துகளில் 1,600 பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்வதற்குக் கட்டணமில்லை.

‘பிங்க்’ நிறத்தில் ஓடும் இந்தப் பேருந்துகளில் பல மிகப் பழையவை; உடையும் நிலையில் இருப்பவை; படியேறி உள்ளேவரச் சிரமப்படும் வயதான பெண்களுக்கு உகந்தவை அல்ல.

திமுக அரசின் இந்தச் சமூகநலத் திட்டம் கல்வி நிலையங்களுக்கும், பணியிடங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் மற்றும் பல சமூக நோக்கங்களுக்காகவும் பயணிக்கும் பெண்களுக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறது என்பது உண்மை. தனிப்பட்ட போக்குவரத்து வசதிகளைக் கொண்டவர்களில் குறைந்தபட்சம் சிலராவது பொதுப்போக்குவரத்திற்கு மாறுவதற்குக் கட்டணமில்லாப் போக்குவரத்துத் திட்டம் உதவுகிறது என்பதை உலகநாடுகளில் நிலவும் போக்குகள் உணர்த்துகின்றன. குறிப்பாக, சைக்கிள் பயணிகளும், பாதசாரிகளும் இவ்வாறு மாறியிருக்கிறார்கள்.

சென்னையிலும் தமிழ்நாட்டின் பிறபகுதிகளிலும் பெண்கள் பேரளவில் பேருந்துகளில் பயணிக்கும் போக்கு அதிகரித்துவிட்டது என்பதற்கான சம்பவ சாட்சியங்கள் ஏராளமாக இருக்கின்றன

உச்ச நீதிமன்றமும், பிரதமர் நரேந்திர மோடியும் ‘இலவசங்க’ளின் அவசியத்தைப் பற்றியவொரு விவாதத்தைக் கிளப்பிவிட்ட சூழ்நிலையில், பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துச் சவாரி மற்றும் பிற நலத்திட்டங்களின் ஆக்கப்பூர்வமான சமூகப் பலன்களை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தமிழக அரசு ஆட்பட்டிருக்கிறது.

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், கடந்த அஇஅதிமுக ஆட்சியில் பணிசெய்யும் பெண்களுக்கு ரூ25,000 மானியத்தில் வழங்கப்பட்ட இருசக்கர வாகனத் திட்டம் ‘பொதுப்போக்குவரத்துக்கு’ எதிரான ஒரு வீண்திட்டம் என்று கடுமையாக விமர்சித்தார். அந்தத் திட்டத்தை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முன்னிலையில் 2018இல் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார் என்பது ஒரு நகைமுரண்.

துல்லியமான தரவுகள் இல்லை
கட்டணமில்லாப் பயணத்திட்டத்தின்கீழ் பெண்கள் ஏராளமானோர் பயனடைகிறார்கள். வாஸ்தவம்தான். என்றாலும், பேருந்துச் சவாரிகள் பற்றிய துல்லியமான தரவுகளைச் சென்னை எம்டிசி உட்பட அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களும் கொடுப்பது சாத்தியமில்லை. எத்தனை பெண்களுக்கு இலவச டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டன என்று மட்டுமே அவற்றிற்குத் தெரியும்.

கட்டணமில்லாத பேருந்துத் திட்டம் தடையில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. காரணம் பேருந்துகளில் ஏறும் பெண்களுக்கு இலவச சவாரி என்பதால் டிக்கெட் கொடுப்பது, சில்லறை கொடுப்பது என்று சம்பிரதயமான சிரமங்கள் எவையுமில்லை. பெண்கள் எவ்வளவு தூரம் பயணிக்கிறார்கள், எங்கே ஏறுகிறார்கள், எங்கே இறங்குகிறார்கள் என்ற விவரங்கள் பதியப்படுவதில்லை. இதனால் வழக்கமான பொறுமையின்மை, நேரவிரயம் ஆகிய விஷயங்களுக்கு இடமில்லை. மேலும், கட்டணமில்லாமல் பயணிக்கும் பெண்கள் பேருந்துகளைப் பயன்படுத்தும் முறை, ஏறியிறங்கும் இடங்கள், குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் தேவை ஆகியவற்றைப் பற்றியதான வரைபடத் தரவுகள் தயாரிக்கப்படுவதில்லை.

இயந்திரம் வழங்கும் டிக்கெட்டைப் பயன்படுத்தினால், அதுவும் சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டையோடு அதை இணைத்தால் மேலே சொல்லப்பட்ட தரவுகளைத் தயாரிப்பதற்குப் போக்குவரத்துக் கழகத்திற்கு அது பெரிதும் உதவும். மேலும், கட்டணத்தில் எவ்வளவு மானியம் இருக்கிறது என்பதைப் பற்றி ஒரு தீர்க்கமான முடிவுக்கும் வரமுடியும். குறிப்பிட்ட பெண்மணி ஒருவர் பேருந்தில் ஏறும்போது இந்த அட்டையை விரலால் தட்டும்போது அவரது பயணம் பதிவுசெய்யப்படும். ஆனால், அவரது அந்தரங்க விவரங்கள் தவிர்க்கப்பட்டு, அவரது பயணம் பற்றிய தகவல் மட்டுமே பதியப்படும்.

வெறும் காகிதத் தரவு அணுகுமுறை என்னும் தோராயமான முறையாகும் இது. பயணம் செய்யும் கால அளவு, நிகழ்வுமுறை ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் மட்டுமே இதில் கிடைக்கும். தற்போதைய ‘பெண்கள் இலவசச் சீட்டு’ கட்டமைப்பில் ஒரு பெண் பயணி குறிப்பிட்ட ஒரு பேருந்தில் செய்யும் ஒற்றைப் பயணம் மட்டுமே பதிவுசெய்யப்படுகிறது; அதே பெண்பயணி அதே பாதையில் வெவ்வேறு பேருந்துகளில் பலதடவை பயணம் செய்யலாம். அந்தப் பெண்மணிக்கு எல்லாப் பயணங்களும் இலவசம்தாமே?

பேருந்துப் பயணங்கள் பற்றிய துல்லியமான தரவுகளைச் சென்னை எம்டிசி உட்பட  அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களும் கொடுப்பது சாத்தியமில்லை. எத்தனை பெண்களுக்கு இலவச டிக்கெட் கொடுக்கப்பட்டன என்பது மட்டுமே அவற்றிற்குத் தெரியும்

வரிவசூலித்தல், சரக்குகள் மற்றும் சேவைகள் நுகர்வு ஆகிய அளவீடுகளில் அளக்கப்படும் பொருளாதார நிலையின் பின்னணியில் வைத்து, மாநகர் முழுவதுக்குமான, குறிப்பிட்ட வணிக மாவட்டங்களுக்கான பேருந்து சவாரிகள் பற்றிய தரவுகளைத் திரட்டிப் பகுப்பாய்வு செய்வது நல்லது. அப்படிச் செய்தால், கட்டணமில்லாப் பொதுப்போக்குவரத்து பன்முக விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதைப் பற்றிய ஒரு குறிப்பு கிடைக்கலாம். ‘இலவசங்கள்’ எல்லாம் வீண் என்ற விமர்சனத்தை எதிர்கொள்ள இது உதவும். பாதசாரிமயமாக்கல் என்பது சரக்குகள், சேவைகள் நுகர்வின்மீது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

மேலும் படிக்க:

இனி எம்டிசி பஸ் நேரத்தை உங்கள் போன் சொல்லும்

சென்னை மக்களை ஈர்க்கும் வகையில் பஸ் போக்குவரத்து மீண்டு வருவதற்கு தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?

தங்கள் வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் முன்பாக ஆயிரக்கணக்கானவர்கள் வாகனங்களை நிறுத்துகிறார்கள். இப்படி இலவசமாக வாகனங்களைத் தெருக்களில் விடுவதால் ஏற்படும் நெருக்கடி மற்றும் காற்றுமாசு ரீதியாகவும், விபத்துகளின் மூலம் ஏற்படுத்தும் உயிரிழப்பு, உடல்பாதிப்புரீதியாகவும் கார்களுக்கும் இருசக்கர வாகனங்களுக்கும் கொடுக்கப்படும் பொருளாதார மானியங்களைக் கணக்கெடுப்பதும் அவசியம்.

நவீனமாக்கல்
ஜெர்மன் வளர்ச்சி வங்கி முகமையின் நிதி, ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தின் நிதி, அரசு நிதி ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேருந்துகளை மேம்படுத்தி, மின்பேருந்துகளை அறிமுகப்படுத்தி, சிறந்த பயணியர் தகவல் கட்டமைப்பை உருவாக்கி, பேருந்து நிறுத்துமிடங்களை நவீனப்படுத்தி எம்டிசியை ஒட்டுமொத்தமாக நவீனப்படுத்தும் செயற்பாடுகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. ஆரோக்கியமான இந்த மேம்பாட்டு மாற்றம், புத்திசாலித்தனமான ஒரு போக்குவரத்து அமைப்பைக் கட்டமைத்துப் பயணத் தரவுகளைத் துல்லியமாகச் சேகரிப்பதற்குத் தமிழக அரசிற்கு நல்லதொரு வாய்ப்பினை நல்கியிருக்கிறது.

அண்மையில் திமுக அரசு இரண்டு மாற்றங்களை அறிவித்திருக்கிறது. முதல் மாற்றம் பேருந்துப் போக்குவரத்தை மொத்தச் செலவு ஒப்பந்த அமைப்பிற்குக் கொடுப்பது தொடர்பானது. அதன்படி தனியார் அமைப்புகள் முதலீட்டையும், இயக்க வளங்களையும் இந்தத் துறைக்குள் கொண்டுவரும். இரண்டாவது அரசு தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளைத் திருத்தி அமைத்த மாற்றம். இதன்படி, பெண் பயணிகளைப் பார்த்து எங்கே போகிறீர்கள் என்று பேருந்து ஊழியர்கள் கேள்வி கேட்பது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், புகார்செய்ய விரும்பும் பயணிக்குப் புகார் ஏட்டை நடத்துநர் தரவேண்டும் என்பதும் விதியாக்கப்பட்டுள்ளது.

இலவச சவாரி தொடர்பாகப் பெண் பயணிகளுக்கும் பேருந்து ஊழியர்களுக்கும் இடையே தகராறு உண்டாகிறது என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பாஸ் என்றாலே பேருந்து நடத்துநர்களுக்கு எட்டிக்காய்தான். ஏனென்றால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சம்பள ஊக்கத்தொகையே அவர்கள் திரட்டும் கட்டணச் சேகரிப்பைப் பொறுத்துதான் அமையும். அதை இந்த பாஸ்கள் கெடுத்துவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இப்போது பெண்களுக்குக் கட்டணமில்லை என்கிறபோது நடத்துநர்களின் பாரபட்ச உணர்வு அதிகரிக்கலாம்.

தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பழசாகிவிட்ட ‘பிங்க்’ பேருந்துகள், கூட்டம் நிறைந்த பேருந்துகள் ஓடிய 1980-களின் ஞாபகங்களைக் கிளறுகின்றன. ஏனென்றால், பிங்க் பேருந்துகள் தற்போது தட்டுப்பாடாகிவிட்டன

பேருந்துகளின் தட்டுப்பாட்டைத் தீர்க்க வேண்டும்
பேருந்துகளின் கடுமையான தட்டுப்பாட்டைத் தீர்த்துவிட்டால் தமிழ்நாட்டுப் போக்குவரத்துத் துறையால் மற்ற மாநிலங்களைவிட மேலும் தொழில்நுட்ப நேர்த்தியுடன் இயங்க முடியும்.

பொருளாதார வளர்ச்சியின் தொடக்கக் காலமான 1980கள் முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பேருந்துகள் காலாவதியான வடிவத்தில் இருந்தன; கூட்டம் கூட்டமாய் நிரம்பி வழிந்தன. அப்போது தவணைமுறையில் இருசக்கர வாகனங்கள் கிடைத்தன; அதனால் பெண்கள் உட்படப் பெரும்பாலான பயணிகள் பொதுப் போக்குவரத்திலிருந்து விலகிச் சென்றனர். சென்னையில் ஆயிரக்கணக்கான பயணிகள் கட்டுப்பாடில்லாத ஷேர் ஆட்டோக்களுக்கு மாறினர்.

இப்போது பெண்களுக்குப் பேருந்தில் கட்டணமில்லை. அதனால் பெண்களின் இடம்விட்டு இடம்நகரும் முறைகள் மாறிவிட்டன. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பழசாகிவிட்ட ‘பிங்க்’ பேருந்துகள், கூட்டம் நிறைந்த பேருந்துகள் ஓடிய 1980-களின் ஞாபகங்களைக் கிளறுகின்றன. ஏனென்றால், ‘பிங்க்’ பேருந்துகள் தற்போது தட்டுப்பாடாகிவிட்டன. பேருந்துகள் தட்டுப்பாடாகிவிட்டால், எல்லோரும் தங்களது சொந்த வாகனத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகிவிடும். அப்படி நிகழ்ந்தால், இலவசப் பயணத்தின் நன்மைகள் ஒன்றுமில்லாமலாகிவிடும் ஆபத்து உள்ளது.

சென்னையில் பதிவுசெய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை 2008-09இல் 1.40 லட்சமாக இருந்து 2018-19இல் 1.93 இலட்சமாக உயர்ந்தது. பின்பு கோவிட் தாக்கிய 2020இல் 1.26 இலட்சமாகச் சரிந்தது என்று அரசுத் தரவுகள் அறிவிக்கின்றன. பெட்ரோல் விலை உயர்வும், போக்குவரத்து நெரிசலும் பொதுப் பேருந்தை மக்களுக்கான விருப்பத் தேர்வாக மாற்றியுள்ளன.

பேருந்துக் கட்டமைப்புகளிலும், நகர்ப்புற ரயில் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட துணைப் போக்குவரத்திலும் போதுமான முதலீடுசெய்து அந்த வசதிகளை மேம்படுத்தும்போது, மக்களை பெட்ரோல் செலவு, அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி, காற்று மாசு, பாதுகாப்பின்மை போன்றவற்றிலிருந்து விடுவிக்க இயலும்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணத்திற்கு பெருத்த வரவேற்பு இருக்கிறது. ஆனால், இதைப் பயனர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் பேருந்துகளில் எங்கே ஏறுகிறார்கள், எங்கே இறங்குகிறார்கள், இந்தத் திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பொருளாதாரப் பலன்கள் என்னென்ன ஆகியவற்றைப் பற்றிய தரவுகள் கொள்கை வகுப்பாளர்களுக்குக் கிடைத்தால் இந்தத் திட்டம் மேலும் வளர்ச்சியுறும். பிற பயனர்களையும் அது சென்றடையும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival