Read in : English

தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்த பெயராக இருப்பது ‘தமிழ் ராக்கர்ஸ்’. திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்க இயலாத பொருளாதாரச் சூழலில் வாழ்பவர்களுக்கு, சோம்பல் மற்றும் இதர காரணங்களால் அங்கு செல்லத் தயங்குகிறவர்களுக்கு, திரும்பத் திரும்ப ஒரு திரைப்படத்தைக் காணப் பணம் செலவழிக்க மனம் இல்லாதவர்களுக்கு ஒரு வழியாகத் திகழ்ந்து வருகின்றன இது போன்ற தளங்கள்.

யார் இவற்றின் பின்னால் இருப்பது? எதற்காக இவர்கள் தமிழ்த் திரைப்படங்களைத் திருட்டுத்தனமாகப் படம்பிடித்து முதல் நாளன்றே மக்களுக்குப் பந்தி வைக்கின்றனர்? இதனால் இவர்களுக்கு என்ன வருமானம் என்பது உட்படப் பல கேள்விகள் நம் முன் இருக்கின்றன.

உலகம் முழுக்க நடைபெறும் இந்த ‘பைரஸி’யின் மூலமாக, சுமார் 50 பில்லியன் டாலர் வருமான இழப்பைச் சந்திக்கின்றன அது தொடர்பான நிறுவனங்கள். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 230 பில்லியன் முறை பைரஸி வீடியோக்கள் பார்க்கப்படுவதாகச் சொல்கிறது டேட்டாப்ரோட் (DataProt) எனும் ஆய்வு. அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்து இந்தியா இவ்வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

ஆண்டு முழுக்கச் சுமார் 9.6 பில்லியன் பேர் இவ்வாறு ‘திருட்டு’ வீடியோ உள்ளடக்கத்தைப் பார்த்து ரசிக்கின்றனர். ஒவ்வொரு கண்டத்திலும், நாட்டிலும் இதற்கென்று தனி ‘மாபியா’க்கள் இப்பரப்பை ஆட்டிப் படைக்கின்றன. அந்த வரிசையில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் தன் சாம்ராஜ்யத்தைத் ‘தமிழ் ராக்கர்ஸ்’ விரிவுபடுத்தி வந்திருக்கிறது.

ஏவிஎம் நிறுவனத் தயாரிப்பில் ’ஈரம்’ அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சோனிலிவ் தளத்தில் வெளியாகியிருக்கும் ’தமிழ் ராக்கர்ஸ்’ வெப்சீரிஸ் இந்த விஷயங்களை எல்லாம் பேசியிருக்கிறதா? இது தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தந்திருக்கிறதா?

ஆண்டு முழுக்கச் சுமார் 9.6 பில்லியன் பேர் இவ்வாறு ‘திருட்டு’ வீடியோ உள்ளடக்கத்தைப் பார்த்து ரசிக்கின்றனர். ஒவ்வொரு கண்டத்திலும், நாட்டிலும் இதற்கென்று தனி ‘மாபியா’க்கள் இப்பரப்பை ஆட்டிப் படைக்கின்றன. அந்த வரிசையில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் தன் சாம்ராஜ்யத்தைத் ‘தமிழ் ராக்கர்ஸ்’ விரிவுபடுத்தி வந்திருக்கிறது

தமிழ்ராக்கர்ஸ் உருவான விதம்!
இளைய தலைமுறையினர் மத்தியில் தங்களுக்கென்று தனி ரசிகர் வட்டத்தைக் கொண்டிருக்கின்றனர் குளோபல் ஸ்டார் அஜய் குமார், அதிரடி ஸ்டார் ஆதித்யா. ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் இவ்விரு ரசிகர்கள் இடையே ‘கலாய்ப்பதில்’ போட்டி நடக்கிறது. அஜய் குமாரின் புதிய படம் அதிகாலையில் திரையரங்குகளில் வெளியாகும் முன்னரே ‘தமிழ் ராக்கர்ஸ்’ தளத்தில் வெளியாகிறது. இதனால், படம் பெரும் தோல்வியை அடைய அந்தத் தயாரிப்பாளர் தற்கொலை செய்துகொள்கிறார்.

இந்த நிலையில், தீபாவளியன்று வெளியாகவிருக்கிற ஆதித்யாவின் ‘கருடா’ படத்தை முந்தைய நாளே வெளியிடப் போவதாக மிரட்டல் விடுக்கின்றனர் தமிழ் ராக்கர்ஸ் குழுவினர். இது தயாரிப்பாளர் ஆதியின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. அவ்வாறு நடைபெறவிடாமல் தடுப்பதற்காக, போலீஸின் உதவியை நாடுகிறார் மதி. இதன் தொடர்ச்சியாக, ருத்ரா தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுத் தமிழ் ராக்கர்ஸைத் தேடும் பணிகள் தொடங்குகின்றன.

போலீசாரின் கைவசம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் மட்டுமே இருக்கிறது (அது எங்கிருந்து கிடைத்தது என்ற விளக்கம் தெளிவாகச் சொல்லப்படவில்லை). அதிலிருக்கும் நால்வரும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை பர்மா பஜாரில் திருட்டு டிவிடி விற்றவர்கள். இன்று அவர்கள் எங்கிருக்கின்றனர்? கருடா படத்தைத் திருட்டுத்தனமாக வெளியிட அவர்கள் எத்தகைய முயற்சிகளை மேற்கொள்கின்றனர்? ருத்ராவின் தனிப்படை அவற்றை முறியடித்ததா என்ற கேள்விகளுக்கான பதில்கள் 8 அத்தியாயங்களில் நமக்குக் காணக் கிடைக்கின்றன.

மேலும் படிக்க:

குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள்: முகமூடிகளைக் கழற்றும் சுழல்!

விஜய் சேதுபதி நடித்த மாமனிதன்: கொண்டாடச் செய்யும் இளையராஜா இசை!

ஏசிபி ருத்ராவாக நடித்திருக்கும் அருண் விஜய், ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படைப்புக்கேற்ப முறுக்குடன் வந்து நிற்கிறார். வழக்கம்போல நன்றாக நடித்திருக்கிறார். ஆனால், அவருக்கான ஜோடியாகக் காட்டப்படும் ஐஸ்வர்யா மேனனுக்கோ, உடன் பணிபுரிபவராக வரும் வாணி போஜனுக்கோ அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லை. முன்னவருக்கு காதலைப் பொழியும் பணி என்றால், பின்னவருக்கு ‘ஆமாம் சார்’ என்று சொல்லும் வேலை. அவ்வளவுதான் வித்தியாசம்!

அருண் விஜய் கூடவே திரிகிற வினோத் சாகர், இரண்டொரு இடங்களில் ‘ஆபாச’ நகைச்சுவையைத் தர முயன்றிருக்கிறார். நமக்குத்தான் சிரிப்பு வரவில்லை. வில்லனாக வரும் தருண் குமார், சரத் ரவி உள்ளிட்டோர் பயமுறுத்தும் அளவுக்கு நடித்திருக்கின்றனர். இதுதவிர படத்தயாரிப்பாளர் மதியாக அழகம்பெருமாள், அவரது டிரைவராக மாரிமுத்து, ஆதித்யாவின் தந்தையாக குமார் நடராஜன், சைபர்கிரைம் அதிகாரியாக வினோதினி தந்திருக்கும் பங்களிப்பு நம் மனதில் படிகிறது.

பி.ராஜசேகரின் ஒளிப்பதிவும் சாபு ஜோசப்பின் படத்தொகுப்பும் காட்சிகளில் நிரம்பியிருக்கும் பரபரப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவியிருக்கிறது. விகாஸ் படிசாவின் பின்னணி இசை காட்சிகளின் தன்மையை மெருகூட்டப் பயன்பட்டிருக்கிறது. இவை தவிர தயாரிப்பு வடிவமைப்பு, ஒலித் தொகுப்பு, நிறமூட்டல் உட்பட ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துக் கோக்கப்பட்டிருப்பது அருமை.

தமிழ் ராக்கர்ஸ் இயக்குனர் அறிவழகன் (Photo credit: Sony Liv Twitter handle)

என்னதான் இவர்களது பங்களிப்பு அபாரமானதாக இருந்தாலும், அதற்கேற்ப ‘சூப்பர்‘ என்ற வார்த்தை நம் வாயில் இருந்து வெளிவருவதில்லை. காரணம், மையக்கதையில் இருக்கும் தெளிவின்மை. திரைக்கதை வசனம் எழுதிய மனோஜ்குமார் கலைவாணன் மற்றும் ராஜேஷ் மஞ்சுநாத் ஆகியோர், வெறுமனே சிடி / விசிடி வியாபாரிகள் சிலர் ஒன்றுசேர்ந்து ‘தமிழ் ராக்கர்’ஸை உருவாக்கியதாகச் சொல்லியிருக்கின்றனர். அதற்கும் முன்பே தமிழ் திரைப்படங்களைத் திருட்டுத்தனமாக வெளியிட்டது யார் என்ற கேள்விக்கு இருவரும் பதில் சொல்லவே இல்லை.

வெறுமனே சில விளம்பரங்களால், பார்வையாளர்கள் செலவழிக்கும் தரவுக்கான தொகையால் தமிழ் ராக்கர்ஸ் வருவாய் ஈட்டுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது பற்றிய தெளிவான விவரங்கள் சொல்லப்படாததால், அதனைப் பயன்படுத்துவோரிடம் குற்றவுணர்வை உருவாக்கத் தவறியிருக்கிறது.

ஏன் இப்படியொரு புனைவு?
அருண் விஜய், வாணி போஜன், வினோதினி, வினோத் சாகர் என்று இரண்டு ஆண், இரண்டு பெண் கொண்ட குழு மட்டுமே இப்படியொரு அபாயகரமான குழுவைப் பிடிக்கக் களமிறங்குகிறது. துப்பாக்கி தோட்டாக்கள் சரவெடியாக முகமருகே வெடிக்க, இவர்கள் மட்டும் எதிரணியினரை வீழ்த்தி முன்னேறுகின்றனர். அதிலும் ஆண்களான வினோத் சாகருக்கும் அருண் விஜய்க்கும் மட்டுமே முன்னுரிமை. பெண்கள் இருவரும் பாதுகாப்பாக (?!) தங்களது வாகனத்திற்குள் அமர்ந்து வேடிக்கை பார்க்கின்றனர்.

இறுக்கமான போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் வருவதால், அவருக்கென்று ஒரு சோகமான பிளாஷ்பேக் வேறு. சரியாக எட்டாவது எபிசோடில் அவர் மீது காதல் பார்வையை வீசுகிறார் நாயகிகளுள் ஒருவராக வரும் வாணி போஜன்.
இது போதாதென்று இன்னொரு பக்கம் தருண் குமார் தன் ஆட்களுடன் சூப்பர் கம்ப்யூட்டர்களை வைத்து ‘கேம்’ ஆடிக் கொண்டிருக்கிறார். ஆந்திரா போலீஸும் நக்சலைட்டுகளும் அவருக்கு இரு கரங்கள் போலச் செயல்படுவதாகச் சித்தரிப்பு வேறு. இந்த அதீதப் புனைவுதான் ‘தமிழ் ராக்கர்ஸ்’ தொடரின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது. திரைக்கதையில் இருக்கும் உண்மைக்கும் புனைவுக்குமான போராட்டம் பார்வையாளர்களின் கவனத்தைச் சிதறடிக்கிறது.

வெறுமனே ‘திரைப்படத் திருட்டு’ மட்டுமல்லாமல் ஆள் கடத்தல், போதைப்பொருள் விநியோகம், சைபர் குற்றங்கள், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி என்று பலவற்றில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ குழுவுக்குத் தொடர்பிருப்பதாக வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவை உண்மையா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்தவே இல்லை.

ஒருவேளை அடுத்த பாகத்தின் கதையை அதைக்கொண்டு நகர்த்தலாம் என்று முடிவு செய்திருக்கலாம். ஆனால், அதற்கு முதல் பாகம் முழுத்திருப்தியைத் தந்தாக வேண்டியது கட்டாயம்.

தொலைவிலிருக்கும் ஒரு திரையரங்கில் காட்சிகளையும் லோக்கல் திரையரங்கொன்றில் ஒலியையும் படம்பிடித்து இரண்டையும் இணைத்து வெளியிடுவதை ஒரு உத்தியாகக் காண்பிக்கின்றனர். படக்குழுவினர் தவிர்த்து வேறு எவரெல்லாம் இது போன்ற விஷயங்களில் பங்களிக்கின்றனர் என்ற விவரங்கள் திரைக்கதையில் சொல்லப்படவில்லை. தொடர்ந்து நீதிமன்றத் துணையோடு அவர்களது முயற்சிகள் முடக்கப்பட்டாலும், மீண்டும் அந்தத் தளம் எப்படி உயிர்த்தெழுந்தது? இப்போதும் அதன் ‘அண்ணன் தம்பி’ தளங்கள் தொடர்ந்து புத்துணர்வுடன் இயங்குவது எப்படி என்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை.

இவ்வாறு பல ‘இல்லை’கள் இதிலிருப்பதால், ‘இருக்கிறது’ என்று சொல்லக்கூடிய விஷயங்கள் மிகப் பலவீனமாகத் தோற்றமளிக்கின்றன. எட்டு அத்தியாயங்களையும் ஒரே மூச்சில் பார்க்க வைக்கும் அளவுக்குக் காட்சிகளில் நிரம்பியிருக்கிற பரபரப்பு அவற்றில் ஒன்று.

திரையரங்குகளுக்குச் சென்று பார்க்க முடியாத நிலையிலிருப்பவர்கள் இப்போதும் ஆபத்பாந்தவனாக ’தமிழ் ராக்கர்ஸ்’ போன்ற சில தளங்களைக் கருதுகின்றனர். தொலைநோக்குப் பார்வையில் அவற்றின் பின்னிருக்கும் ஆபத்து என்னவென்று சொல்லியிருந்தால் கூட அம்மக்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும்.

அப்படி எதுவுமே இல்லாத காரணத்தினால், தமிழ் திரையுலகைக் காக்க வந்த அழகான சோளக்கொல்லை பொம்மையாக மட்டுமே நிற்கிறது ‘தமிழ் ராக்கர்ஸ்’.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival