Read in : English
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏ. ஜெகதீசன் என்னும் கட்டடப் பொறியாளர் சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடு ஒன்றைக் கட்ட விரும்பினார். அப்போது அவர் அந்த வீட்டின் கட்டுமான விஷயத்தில் இரண்டு நிபந்தனைகளைக் கடைப்பிடிக்கத் தீர்மானித்தார். வழக்கமாக வீடு கட்ட சுட்ட செங்கற்களைத் தான் பயன்படுத்துவார்கள். ஜெகதீசன் சுடாத செங்கல் பயன்படுத்தப்பட வேண்டும் என்று முடிவுசெய்தார்; அடுத்ததாக, கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றுக்காக மரங்களை வெட்டக்கூடாது என்று நினைத்தார். இரண்டுமே சவாலான அம்சங்கள்தாம்.
ஜெகதீசன் ஜன்னல்களுக்கும் கதவுகளுக்கும் ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தார். பெரம்பலூரில் தன் வீட்டுக்கு அருகே ஒரு விறகுக் கடையில் ஏற்கெனவே இடிக்கப்பட்டிருந்த ஒரு வீட்டின் மரக்கதவுகளையும், ஜன்னல்களையும் வாங்கிக்கொண்டார். அவற்றை மெருகேற்றிப் பளபளப்பாக்கிப் பயன்படுத்திக்கொண்டார். அதேபோல் சரியான களிமண்ணைக் கண்டுபிடித்தார். ஆனால், அதைச் சுடாத செங்கலாக மாற்றுவதற்குப் பொறுமையும், கடுமையான உடலுழைப்பும் தேவைப்பட்டன.
கான்கிரீட்டையும் மிகவும் குறைவாகவே பயன்படுத்த வேண்டும் என்பதும் அவரது எண்ணம். ஜெகதீசன் பாண்டிச்சேரி ஆரோவில் எர்த் இன்ஸ்டிடியூட்டில் வளைவுகள், கவிந்தமாடம், குவிமாடம் தொடர்பான இரண்டு குறும்பருவப் படிப்புகளைப் படித்தவர். உள்ளூர் கட்டடக்கலைப்படி தன் சொந்த ஊரில் தன் வீட்டைக் கட்ட வேண்டும் என்பதில் அவர் பிடிமானமாக இருந்தார். அதனால் அவர் தன்னுடைய ஊரான, பெரம்பலூரிலிருந்து 14 கிமீ தூரம் தொலைவிலிருந்த அன்னமங்கலம் கிராமத்தைச் சுற்றி இயற்கையான கட்டடப் பொருட்களைத் தேடியலைந்தார்.
சிறுவயதில் மண்வீடுகளையும் களிமண் செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளையும் அவர் பார்த்திருக்கிறார். அவை அவரது நினைவில் தங்கியிருந்தன. ஆனால், இன்று எங்கெங்கிலும் கான்கிரீட் வீடுகள் வந்துவிட்டன. அவருக்கோ களிமண் செங்கல் கொண்டு அதுவும் சுடாத செங்கல் கொண்டு வீடுகட்ட வேண்டும் என்பதே ஆசை. ஆகவே, சில சிரமங்களை அவர் தாங்க வேண்டியதிருந்தது.
பிரிட்டனில் பிறந்து இந்தியக் கட்டடக்கலைக்குப் பங்களித்த லாரி பேக்கர் விலைகுறைந்த, பசுமை வீடுகளைக் கட்டியெழுப்புவதில் பேர்பெற்றவர். அவரது பாணியிலேயே சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்த முறையில் வீடுகட்ட வேண்டும் என்பதான் ஜெகதீசனின் திட்டம்
“களிமண் செங்கற்களை உருவாக்குவது சவாலான விசயம். களிமண் எளிதாகக் கிடைத்தது. ஆனால், பெரம்பலூரிலிருந்து நான் வரவழைத்திருந்த கட்டத் தொழிலாளர்களுக்குப் பாரம்பரிய முறையில் களிமண் செங்கல்கள் தயாரிப்பதில் பழக்கமில்லை. கான்கிரீட் வீடுகட்டுவதில் அவர்கள் வல்லவர்கள். ஆகவே, செங்கல் தயாரிக்க அவர்கள் அதிகநேரம் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள்கூடவே நானும் அதிக நேரம் செலவழிக்க வேண்டியதாயிற்று” என்றார் ஜெகதீசன்.
களிமண் செங்கற்களை அவர் சூளையில் இட்டு சுடவில்லை. ஏன்? “செங்கல் சூளையில் செங்கலைச் சுடுவதற்கு நிறைய விறகுகள் தேவைப்படும். நிறைய மரங்களை வெட்ட வேண்டிவரும். மரம் வெட்டப்படுவதை நான் விரும்பவில்லை. ஆகவே, சுடாத செங்கலே போதுமென நினைத்தேன். மேலும், சுட்ட செங்கலை விட சுடாத களிமண் செங்கல் மிகவும் பலம் வாய்ந்தது” என்றார் ஜெகதீசன்.
மேலும் படிக்க:
அன்று கட்டட வேலை செய்த குழந்தைத் தொழிலாளி, இன்று கட்டுமான நிறுவன எம்.டி.!
தமிழரின் பாரம்பரியக் கோவில் கட்டடக்கலையில் கட்டப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள்
பிரிட்டனில் பிறந்து இந்தியக் கட்டடக்கலைக்குப் பங்களித்த லாரி பேக்கர் விலைகுறைந்த, பசுமை வீடுகளைக் கட்டியெழுப்புவதில் பேர்பெற்றவர். அவரது பாணியிலேயே சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்த முறையில் வீடுகட்ட வேண்டும் என்பதானே ஜெகதீசனின் திட்டம். அதற்காகவே அவர் முயன்றார். என்ன ஒன்று, உரிய அனுபவம் வாய்க்கப்பெற்றிராத தொழிலாளிகளால் அவருக்குச் செலவு கொஞ்சம் அதிகமாயிற்று.
களிமண் செங்கல் கொண்டு எழுப்பப்பட்ட குவிமாடங்களும், வளைவான கூரையும் அவர் கட்டிய வீட்டின் சிறப்பு அம்சங்கள். அந்த முறையைக் கையாண்டதால்தான் அவரால் கான்கிரீட்டைத் தவிர்க்க முடிந்தது. ”என் வீட்டின் கூரைக்குச் சாந்துக் கலவையுடன் சுடாத களிமண் செங்கல்களைத்தான் பயன்படுத்தினேன். சரியான ஏற்றம் கொண்ட வளைவு முறையைக் கையாண்டேன். பார்ப்பதற்குப் பாரம்பரிய மெட்ராஸ் மொட்டைமாடிக் கூரை போல இது தெரிந்தாலும், மர உத்தரங்களை நான் பயன்படுத்தவில்லை” என்றார் அவர்.
உள்ளூர் கட்டடக் கலைப்படி தன் சொந்த ஊரில் தன் வீட்டைக் கட்ட வேண்டும் என்பதில் ஜெகதீசன் பிடிமானமாக இருந்தார். அதனால் அவர் தன்னுடைய ஊரான, பெரம்பலூரிலிருந்து 14 கிமீ தூரம் தொலைவிலிருந்த அன்னமங்கலம் கிராமத்தைச் சுற்றி இயற்கையான கட்டடப் பொருட்களைத் தேடியலைந்தார்
களிமண் செங்கல்களாலும், சாந்துக் கலவையாலும் உருவான வளைவுகளும், குவிமாடங்களும் அவரது வீட்டுக்குப் புதுப்பொலிவையும் தோற்றத்தையும் தந்துள்ளன. ஆனால், அவரது வீட்டைப் பார்க்கும் பலரும், “இப்படிக் கட்டிய வளைவுகளும் குவிமாடமும் பாரம் தாங்குமா? பலம் கொண்டவையா? என்று என்னிடம் கேட்டார்கள். அவர்கள் இதை நம்பவில்லை. ஆனால் இதன் நோக்கத்தைப் பற்றி அவர்களிடம் நான் பொறுமையாக விளக்கினேன். நான் கட்டிய பெரிய வளைவுமீது ஏறி உட்கார்ந்து காண்பித்தேன், அவர்களுக்கு அப்போதுதான் நம்பிக்கைவந்தது ” என்றார் 31 வயது கட்டிடப் பொறியியலாளர் ஜெகதீசன்.
1,200 சதுர அடி பரப்பளவு கொண்ட களிமண் செங்கல் வீட்டைக் கட்டியதன்மூலம், கட்டுமானத் தளத்தைச் சுற்றிலும் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு ஒரு கட்டிடத்தைக் கட்ட முடியும் என்பதை ஜெகதீசன் நிரூபித்திருக்கிறார். ஒரு விறகுக் கடையிலிருந்து சேகரித்த மரக்கட்டைகளைக் கொண்டு படிக்கட்டுகளை உருவாக்கியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்புதான் ஜெகதீசன் புது வீட்டுக்குக் குடிபோயிருக்கிறார். ’தாய்மண் வீடு’ என்பது அதன் பெயர். அதைப் போன்ற சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்த வீடுகளைக் கட்ட யார் விரும்பினாலும் அவர்களுக்கு உதவ அவர் தயாராக இருக்கிறார்
களிமண் செங்கல்களால் உருவாக்கப்பட்ட மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பில் 20,000 லிட்டர் மழைநீரைச் சேமித்து வைக்கமுடியும். ஆனாலும், தவிர்க்க முடியாமல் சில இடங்களில் கான்கிரீட் பயன்படுத்தியிருக்கிறார். அது தொடர்பாகக் கேட்டபோது, சில தூண்களுக்கும், இணைப்புகளுக்கும் கான்கிரீட் 30 சதவீத அளவில் கான்கிரீட்டைப் பயன்படுத்தியதாகச் சொல்கிறார். ஜெகதீசன். கிரில்களுக்கும், ஃபிரேம்களுக்கும், பழைய சைக்கிள்களின் சக்கரப்பற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில் அந்த வீட்டைக் கட்டிமுடிக்க ஜெகதீசனுக்கு ரூ. 19 இலட்சம் செலவானது. பட்ஜெட்டைவிடச் சற்று அதிகம்தான் செலவு என்றார் அவர். திறமையும் அனுபவமும் கொண்ட கட்டடத் தொழிலாளிகள் கிடைத்திருந்தால், செலவு இந்த அளவுக்கு ஏறியிருந்திருக்காது என்றும் சொல்கிறார். சில மாதங்களுக்கு முன்புதான் ஜெகதீசன் புது வீட்டுக்குக் குடிபோயிருக்கிறார். ’தாய்மண் வீடு’ என்பது அதன் பெயர். இப்படி உள்ளூர் கட்டிடக்கலையின்படி கட்டப்பட்ட வீடு என்பதாலேயே ஏராளமானபேர் வீட்டைப் பார்க்க வருகிறார்கள். அதை எப்படிக் கட்டினேன் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள். சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்த வீடுகளைக் கட்ட யார் விரும்பினாலும் அவர்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன்” என்று மகிழ்ச்சியுடம் கூறினார் ஜெகதீசன்.
அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் காட்டப்படும் பசுமை வீடுகள் எதிர்காலத்தில் எண்ணிக்கையில் அதிகரிக்கும்போது, சுற்றுச்சூழலும் பேணிப் பாதுகாக்கப்படும்; சுகமான வீடுகளுக்கும் பஞ்சமிராது.
Read in : English