Read in : English
புதுச்சேரியில் உள்ள விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அடுத்து என்ன படிக்கலாம் என்ற வழிகாட்டும் நிகழ்ச்சியை புதுச்சேரி சண்டே மார்க்கெட் சாலையோர வியாபாரிகள் தங்களது சொந்த செலவில் நடத்தி அந்தப் பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
சண்டே மார்க்கெட் சாலையோர வியாபாரிகள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக சாதாரண நிலையில் இருப்பவர்கள். பலர் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள். ஆனாலும், அடுத்த தலைமுறையாவது, தங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல, தங்களைச் சுற்றியுள்ள சாமானிய ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளும் நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆர்வம் கொண்டவர்கள். அதன் வெளிப்பாடுதான் விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் சண்டே மார்க்கெட் வியாபாரிகள் நடத்திய வழிகாட்டுதல் நிகழ்ச்சி.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விளிம்புநிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் +2 மாணவ, மாணவிகள் சிகரத்தை நோக்கிச் செல்ல என்ன படிக்கலாம்? என்ற தலைப்பில் வழிகாட்டும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (2.07.2022) நடைபெற்றது.
சண்டே மார்க்கெட் சாலையோர வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், வாரத்தில் ஒரு நாள் தங்களது வாழ்வாதாரத்துக்கான சாலையோரக் கடைகளை விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.
பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற விளிம்பு நிலைக் குடும்பங்களைச் சேர்ந்த 63 மாணவிகளின் வீடுகளைத் தேடிச் சென்று அந்த மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கினோம்
சாலையோர வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள், சலவைத் தொழிலாளர்கள் போன்ற விளிம்பு நிலைக் குடும்பங்களைச் சேர்ந்த பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கச் செயலாளர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி அறிமுக உரை நிகழ்த்தினார். என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது குறித்து மாணவ, மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பத்திரிகையாளர் பொன். தனசேகரன் விளக்கம் அளித்தார். இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரிப் பகுதிச் செயலாளர் பிரவீன், இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி கிளைத் தலைவி டி.ஜி. முனியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி பிரதேச சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் கீழ் செயல்படும் சண்டே மார்க்கெட் வியாபாரிகள் சங்க கிளையின் தலைவர் டி. சுரேஷ், துணைத் தலைவர் ஆர். அன்பழகன், செயலாளர் எச். ராமசாமி, துணைச் செயலாளர்கள் மீராபாய், கார்த்திகேயன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். துணைத் தலைவர் ரவி, பொருளாளர் ஸ்டெல்லா ஆகியோர் மற்ற நிர்வாகிகளுடன் இணைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் துணைநின்றனர்.
மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததன் நோக்கத்தை டி. சுரேஷ் விளக்கினார்.
“புதுச்சேரியில் மகாத்மா காந்தி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சந்தை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் அந்தத் தெருவில் பல நிரந்தரக் கடைகள் இருந்தாலும்கூட, பல கடைகள் மூடப்பட்டிருக்கும். சில கடைகள் திறந்திருந்தாலும் சாலையோரங்களில் கடைகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் காலை 6 மணியிலிருந்து இரவு 12 மணி சாலையோரங்களில் தற்காலிகமாக அமைக்கப்படும் கடைகளில் துணி மணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பழைய பொருட்கள்.
மேலும் படிக்க:
தமிழ் வழியில் படித்து பிரிட்டனில் பேங்கர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளரான கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்!
இப்படி அனைத்துப் பொருட்களும் மக்கள் வாங்கும் விலையில் கிடைக்கும். எனவே, அன்றைய தினம் இந்த சாலையில் பல்வேறு பொருட்களை வாங்க மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அலை மோதும்.
சண்டே மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தில் 500க்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்தான் சாலையோரத்தில் கடைபோட வேண்டும். பலர் மற்ற நாட்களில் வேறு ஊர்களில் திருவிழா நடந்தால் அங்கு கடைபோடுவார்கள்.
அல்லது வேறு வேலைக்குப் போய்விடுவார்கள். இங்கு சாலையோரக் கடைகள் போடும் பெண்கள் வீட்டு வேலைக்கோ அல்லது வேறு வேலைகளைச் செய்ய வோ போய்விடுவார்கள். அப்போதுதான் மாதம் முழுவதும் குடும்பத்தை ஓட்ட முடியும்.
இந்த நிகழ்ச்சிக்கு வரும் மாணவ, மாணவிகள் படித்து விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக பாரதி புத்தக நிலையத்திலிருந்து ரூ.200 விலையுள்ள மாணவர்களின் எதிர்காலப் படிப்புகளுக்கு வழிகாட்டும் புதியன விரும்பு என்ற நூலை இலவசமாக வழங்கியுள்ளோம்
கொரோனா காலத்தில். 130 சாலையோர வியாபாரிகள் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வீதம் 2 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வழங்கினோம். ஆனால், கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டிலே இருந்து படித்து இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளைப் பாராட்ட ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.
பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற விளிம்பு நிலைக் குடும்பங்களைச் சேர்ந்த 63 மாணவிகளின் வீடுகளைத் தேடிச் சென்று அந்த மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கினோம்.
அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த மாணவ, மாணவிகள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு வரும் மாணவ, மாணவிகள் படித்து விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக பாரதி புத்தக நிலையத்திலிருந்து ரூ.200 விலையுள்ள மாணவர்களின் எதிர்காலப் படிப்புகளுக்கு வழிகாட்டும் புதியன விரும்பு என்ற நூலை இலவசமாக வழங்கியுள்ளோம். இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான செலவு அனைத்தையும் எங்களது சங்க உறுப்பினர்களின் பங்களிப்பில்தான் செய்துள்ளோம்” என்றார் சுரேஷ்.
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ? – பாரதியார்
Read in : English