Read in : English
குழந்தைப் பருவத்தில் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்ற விளையாட்டுகள். எனவேதான், விளையாட்டின் மூலம் கல்வி, கற்றலில் இனிமை வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
பல்வேறு விளையாட்டுகளை விளையாட உதவும் விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளின் மன அழுத்ததைக் குறைக்க உதவும் என்கிறார் கடந்த 35 ஆண்டுகளாக கோவையில் பொம்மைகள், விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்து வரும் சாகுல் ஹமீது.
“குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விளையாட்டு பொருட்களும் பொம்மைகளும் வயதிற்கேற்ப நாங்கள் விற்பனை செய்து வருகின்றோம். குறிப்பாக கூற வேண்டுமென்றால் குழந்தைகளுக்கு அதிகம் பிடிப்பது வண்ணமயமான விளையாட்டுப் பொருட்களை கலர் கலராக இருக்கக்கூடிய எந்த விளையாட்டுப் பொருட்களும் குழந்தைகளை கவருகின்றன. அந்த வரிசையில் முதலிடத்தை பிடிப்பது தற்போது சந்தையில் அதிகம் விற்பனையாகின்றன பாப் பிட் என்கின்ற விளையாட்டு பொருள்.
அதற்கு அடுத்ததாக ஸ்லைன் என்கின்ற விளையாட்டு பொருள். இவை இரண்டும் குழந்தைகளுடைய மன அழுத்தத்தை போக்குவது என்ற அடிப்படையின் காரணமாக அதிக அளவில் விற்பனையாகின்றன. குழந்தைகள் தங்களை மறந்து விளையாடும்போது அவர்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்
“டெடி பேர், பில்டிங் மெட்டீரியல் டாக்டர் கீட், கிச்சன் கிட் போன்ற விளையாட்டு பொருட்கள் அதிகம் விற்பனையாகின்றன. தற்போது பள்ளிகள் திறந்துள்ளதால் அதிகளவில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை எங்களிடம் இருந்து வாங்கி செல்கின்றனர். இதில் குறிப்பாக popit விளையாட்டு பொருளும் அடங்கும். தனியார் பள்ளிகள் மட்டுமல்லாமல் அரசுப் பள்ளிகளுக்கும் நாங்கள் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்கின்றோம்” என்கிறார் அவர்.
குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.
குழந்தை பிறந்த பின்பு மன அழுத்தம் என்பது பல்வேறு வகைகளாக பிரிக்கப்படுகின்றன குழந்தையின் வளர்ச்சியைப் பொருத்தும் வயதைப் பொருத்தும் அமைகின்றன என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
“எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். பெண் குழந்தைக்கு துணிமணிகள் விளையாட்டுப் பொருட்கள் தின்பண்டங்கள் என அதிகமாக வாங்கி கொடுக்கும் பொழுது என்னுடைய மூத்த மகன் மிகவும் சோர்வடைந்து காணப்படுகிறான். திடீரென எங்களிடத்தில் கோபத்துடன் கத்துவதும் எதற்கு அழுகிறான் என்பது கூட தெரியாமல் தொடர்ந்து அழுது கொண்டிருப்பது பெற்றோராகிய எங்களுக்கும் மன உளைச்சல் அதிகளவில் ஏற்படுகிறது.
ஆனால் எங்களால் அவனுடைய மன நிலையை மாற்றுவதற்கு முயற்சி செய்தாலும் பல நேரங்களில் அதில் முழுமையான வெற்றி கிடைப்பதில்லை” என்கிறார் தனது குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு வந்துள்ள லதா.
மேலும் படிக்க:
இவரும் ஆசிரியர்தான்: ஐ.ஐ.டி. பட்டதாரியின் அறிவியல் கல்வி சேவை
“எனக்கு நீண்ட நாட்கள் கழித்து திருமணம் நடைபெற்றது. மிகவும் தாமதமாக திருமணம் நடைபெற்று பின்பு குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையை மிகவும் செல்லமாக வளர்கிறோம். ஒரே பெண் குழந்தை என்பதால் குழந்தை கேட்கின்ற பொருட்களை ஒன்றுக்கு இரண்டு மடங்காக வாங்கி கொடுக்கின்றம். ஆனால் சில சமயங்களில் எங்களுடைய வருமானம் பத்தாத காரணத்தினால் குழந்தை கேட்கின்ற பொருட்களை வாங்கி தராத பொழுது குழந்தை மிகவும் கவலையுடனும யாருடனும் பேசாமல் எவ்விதமான உணவும் உண்ணாமல் பிடிவாதம் பிடிப்பதால் நாங்களும் கடிந்து கொள்கிறோம்.
இதுபோன்ற சமயங்களில் குழந்தைக்கு அதிகமாக செல்லம் கொடுத்து விட்டோம் என்ற மன உளைச்சல் ஏற்படுகிறது அதேபோன்று குழந்தையும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகிறது என்பது மருத்துவர்கள் மற்றும் அருகில் உள்ளவர்கள் கூறுவதால் எங்களுக்கும் சற்று பயம் ஏற்பட்டு விடுகிறது. ஆனாலும் பெற்றோராகிய நாங்கள் குழந்தையை சமாதானப்படுத்த விளையாட்டுப் பொருட்களை வாங்கி தருவதற்காகவே வந்துள்ளோம்” என்று மற்றொரு குழந்தையின் தாய் ஆரோக்கியமேரி கூறினார்.
“குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள். மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்” என்கிறார் மனநல மருத்துவர் தேவி.
விளையாட்டுப் பொருட்களைவிட விளையாட்டுகள் முக்கியம். அது குழு விளையாட்டாக இருந்தால் இன்னமும் நல்லது. அப்போதுதான் குழந்தைகள் உற்சாகமாக மகிழ்ச்சியுடன் படிப்பார்கள்.
“இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள். தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக, தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது.
புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை ஆகும். தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்” என்கிறார் அவர்.
கொரோனா தொற்று காலத்தில் பள்ளிகூடமும் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி கிடந்த குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வகுப்புகள், நேரடி வகுப்புகளைப் போல உற்சாகம் அளிப்பதாக இல்லை. இந்த’ கால கட்டத்தில் குழந்தைகளுக்கு சக குழந்தைகளுடன் சேர்ந்து வெளியில் விளையாட முடியாமல் போனதால் ஏற்பட்ட சலிப்பு காரணமாக, இந்தக் காலகட்டத்தில் வீட்டிலேயே வைத்து விளையாடக்கூடிய பொருட்கள் பிரபலமடைந்தன. அதனால், வீட்டில் உள்ளவர்களின் மொபைல் போனை வைத்து விளையாடுவதில் பெரும்பாலான குழந்தைகள் ஆர்வம்காட்டின. தற்போது சந்தையில் விற்கப்படுகின்ற விளையாட்டுப் பொருட்களை குழந்தைகள் விளையாடினால் மட்டும் அவர்களது மன அழுத்தம் குறைகிறதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. விளையாட்டுப்பொருட்களை விட விளையாட்டுகள் முக்கியம். அது குழு விளையாட்டாக இருந்தால் இன்னமும் நல்லது.
ஓடி விளையாடு பாப்பா என்று பாரதி சொல்லியதைப் போல, குழந்தைகளுக்கு படிப்புடன் விளையாட்டும் முக்கியம். அப்போதுதான் குழந்தைகள் உற்சாகமாக மகிழ்ச்சியுடன் படிப்பார்கள். அதை நோக்கியே நமது முன்பருவ, தொடக்கப் பள்ளிக் கல்வி முறை பயணம் செல்கிறது. அந்த திசையில் செல்ல வேண்டியது அவசியம். விளையாட்டை விளையாட்டாக நினைத்து விடாதீர்கள்.
Read in : English