Read in : English
சூரியபிரகாஷ் ஆர் என்னும் கர்நாடக இசைக்கலைஞர் 2021-ல் முதல் தேசிய ஊரடங்கு அமலுக்கு வந்து நீண்டநாள் கழித்து ஒருநாள் சென்னை செம்மஞ்சேரியில் தன் இல்லத்தருகே இருந்த ஒரு பூங்காவிலிருந்து குயிலொன்று இசையோடு அழைப்பதைக் கேட்டார். மீண்டும் மீண்டும் அழைத்த குயில் குரல் பழைய ஞாபகங்களை அவருக்குள் தோண்டித் தோண்டிக் கிளறியது. தமிழ் மகாகவி சுப்ரமணிய பாரதி (1882-1921) இயற்றிய கவிதையான ‘குயில்பாட்டு’ ஞாபகங்கள் அவை. அந்தச் சந்தப்பாட்டுக்குச் சொந்தமாய் இசையமைக்க எண்ணினார் சூரியபிரகாஷ். அறிஞரும் நண்பருமான அருள் அவ்வை நடராஜனின் உதவியோடு, ‘குயில்பாட்டு’ என்னும் குன்றாதப் பேரழகுக் குறுங்காவியத்தின் 744 வரிகளையும் 120 ராக மாலையில் தொடுத்தும் தொகுத்தும் பாடினார் சூரியபிரகாஷ். அந்த 120 ராகங்களில் அவருடைய சொந்த ராகங்களான குயில் குறிஞ்சியும், சூர்யவசந்தாவும் அடங்கும். பதினைந்து தாளங்களில் அவர் பாடிய அந்த இசைப்பாடல்கள், கீர்த்தனம், விருத்தம், நாட்டுப்புற வகைகளான கண்ணி, காவடிச் சிந்து, தொகையறா மற்றும் புதிய ‘லயவிருத்தம்’ ஆகிய வடிவங்களில் வண்ணமும் வன்னமும் பெற்றன.
’சூரியபிரகாஷ்’ என்றழைக்கப்படும் யூடியூப் சானலில் 22 எபிசோடுகளாக ‘குயில்பாட்டுப் பாடுவோம்’ என்ற நிகழ்வு ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு எபிசோடிலும், இசைக்கலைஞர் சூரியபிரகாஷ் பாடி முடித்ததும், பாடப்பட்ட பாடல்களின் இசையழகும் உணர்வழகும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் எடுத்துரைக்கப் படுகின்றன. தமிழக அரசின் மொழிபெயர்பு இயக்குநரான அருள் அவ்வை நடராஜன் ஆங்கில மொழிபெயர்ப்பை வழங்குகிறார். இந்தச் சாதனைக்காக சூரியபிரகாஷ் ‘பாரதி மாமணி’ என்று பட்டத்துடன் கெளரவிக்கப்பட்டார்.
பாரதியின் கவிதைகள் மீது தனக்கு எப்போதுமே ஒரு பிரியம் உண்டு என்றார் சூரியபிரகாஷ். அவர் வளரவளர அந்தப் பாடல்கள் அவர் செய்த கச்சேரிகளில் எதிரொலிக்க ஆரம்பித்தன.
’சூரியபிரகாஷ்’ என்றழைக்கப்படும் யூடியூப் சானலில் 22 எபிசோடுகளாக ‘குயில்பாட்டுப் பாடுவோம்’ என்ற நிகழ்வு ஒளிபரப்பாகிறது.
“ஏராளமான தமிழ் பாடல்களையும், விருத்தங்களையும் (பக்திப் பாடல்கள்) கச்சேரிகளில் பாடுவதில் எனக்கோர் அலாதி சுகம். பள்ளிப்பருவத்தில் நான் பாரதி பாடல்கள் வாசிக்க ஆரம்பித்தேன். அவரது கவிதைகள் என்மீது ஏற்படுத்திய தாக்கத்தால், ஒவ்வொரு கச்சேரியிலும் குறைந்தது பாரதியின் ஒரு பாடலையாவது நான் பாடினேன். அது எனது உள்ளார்ந்த சுயத்திற்கும் அந்த மகாகவிக்கும் இடையிலான ஓர் இணையில்லாத பந்தம். அதுதான என்னை அவரது குயில் பாட்டைப் பாடவைத்தது,” என்றார் அவர்.
மேலும் அவர் சொன்னார்: “பாரதியின் பாடல்களை மட்டுமே வைத்து முழுக்கச்சேரிகளும் நடத்தியிருக்கிறேன். மேலும் சில வித்தியாசமான கருப்பொருட்களையும் கையாண்டியிருக்கிறேன். உதாரணமாக, (பாபநாசன்) சிவனும் பாரதியும், பாரதியின் தேசப்பக்திப் பாடல்கள் என்ற தலைப்புகளில் பாடியிருக்கிறேன். பாரதியின் பல்வேறு பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறேன். மேலும் அவரது பாடல்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை ராகம் தாளம் பல்லவி என்று பாடியுள்ளேன்.”
பாரதி தான்வாழ்ந்த காலத்தைத் தாண்டி யோசித்தவர். அதனால்தான் அவரது கவிதைகள் ‘எப்போதுமே’ நிகழ்கால வசீகரத்தைக் கொண்டிருக்கின்றன என்று சொல்லும் சூரியபிரகாஷ், “பாரதியின் கண்ணன் பாட்டும், தேசபக்திப் பாடல்களும் பிரபலமானவை. ஆனால் அவர் அவற்றையெல்லாம் தாண்டியவர். ஓர் இலக்கில்லாமல் அங்குமிங்கும் அசைந்து திரிகின்ற அவரது வசனகவிதைக்குள் ஆழ்ந்திருக்கிறேன். அவரது கனவின் மொழிபெயர்ப்பான ‘குயில் பாட்டின்’ மெதுவான, மென்மையான கனவுநடையில் சொக்கிப் போயிருக்கிறேன். எதிர்பாராத முடிவைக் கொண்டது அந்த நீண்ட கவிதை. அவரை வெறுமனே தேசிய கவி என்ற அடையாளத்திற்குள் அடைத்துவிடக் கூடாது,” என்றார் சூரியபிரகாஷ்.
அறிஞரும் நண்பருமான அருள் அவ்வை நடராஜனின் உதவியோடு, ‘குயில்பாட்டு’ என்னும் பாரதியின் குன்றாத பேரழகுக் குறுங்காவியத்தின் 744 வரிகளையும் 120 ராக மாலையில் தொடுத்தும் தொகுத்தும் பாடியிருக்கிறார் சூரியபிரகாஷ்.
எட்டையாபுரத்தில் 1882-ல் பிறந்த பாரதி பாண்டிச்சேரியில் ஒரு பத்தாண்டு வனவாசம் செய்த காலத்தில்தான் (1908-1918) அவரது ஒப்பற்ற புகழ்பெற்ற படைப்புகளான குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றை இயற்றினார்.
744 வரிகளுக்கும் இசையமைப்பது இசைக்கலைஞர் சூரியபிரகாஷ்க்கு பெருஞ்சவாலாக இருந்தது. ”இதில் முக்கிய அளவுகோல் பாட்டுக்கும் இசை பாவத்திற்கும் இடையே இருக்கும் பொருத்தம்தான். இதுதான் பெரும்பாலும் ராகங்களின் தேர்வையும், தேர்ந்தெடுக்கப்பட்ட ராகங்களின் சொற்களையும் தீர்மானிக்கிறது. சில பாடல்கள் விருத்தங்களாகப் பாடுவதற்குத் தகுதியாக இருந்ததையும், மற்றவை தாளகதிக்கு ஏற்ப இருந்ததையும் நான் புரிந்துகொண்டேன்,” என்றார் சூரியபிரகாஷ்.
தான் ஒரு புதிய வடிவத்தைக் கண்டுபிடித்ததாகச் சொல்லும் சூரியபிரகாஷ் அதை இப்படி விளக்கினார்: “அந்தப் புதிய வடிவப்படி, நான் ஒரு பாடலை அதன் யாப்பமைதி கெடாமல் பாடுவேன்,. ஆனால் சில இசையுணர்வுப் பகுதிகளை சுதந்திரமாக ஆலாபனை செய்வேன். அப்போதுதான் அவற்றின் உணர்வுகளுக்கு நியாயம் செய்ய முடியும். அந்தப் புதிய வடிவத்திற்கு ‘லய விருத்தம்’ என்று பெயரிட்டிருக்கிறேன்.”
சூரியபிரகாஷ் ஏழு வயதிலிருந்து கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டவர். அவரது முதல் குருநாதர் அவரது உறவினரான திருக்கொடிக்காவல் வி. ராஜமணி. கர்நாடக வாய்ப்பாட்டு விற்பன்னரான செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரின் சீடர்தான் இந்த ராஜாமணி.
பாரதியைப் பற்றி ஏராளமாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அவரது குயில்பாட்டு முழுவதும் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கங்களுடன் 22 எபிசோடுகளுடன் காணொலிக்காட்சி வடிவத்தில் கொண்டுவரப்பட்டிருப்பது இதுதான் முதல்தடவை.
“இளைய தலைமுறையினர் பாரதியை அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும். அதுதான் என் விருப்பம். அதற்கு காலமும் ஆற்றலும் அதிகமாகவே தேவைப்பட்டது. ஆனால் பாரதியைச் சரியாக ஆவணப்படுத்தி விட்டோம் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒவ்வொரு எபிசோடிலும் கவிதைகளுக்கு மொழிபெயர்ப்பும், விளக்கமும் சொன்ன அருள் அவர்களுக்கு நான் மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்,” என்று முடித்தார் சூரியபிரகாஷ்.
Read in : English