Read in : English
ஜி ஸ்கொயர்- ஜூனியர் விகடன்-கெவின் வழக்கு தமிழர்களுக்கு மிகவும் பிடித்த இடியாப்பச் சிக்கல் போல இருக்கிறது. விகடன் குழுமத்தோடு தனக்கு தொடர்புள்ளதாக உரிமை கொண்டாடிய கெவின் ஜி ஸ்கொயர் ரியால்டி நிறுவனத்திடம் பணம்பறிக்க முயன்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, அவர்மீது முதல்தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டு சுமார் ஆறுமணி நேரத்திற்குள் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அப்போதிருந்து ஊடகங்களில் இவ்வழக்கு பெரிய செய்தியாக உலாவந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கு வெகுவிரைவிலேயே பல்வேறு இழைகளாகக் கிளைபரப்பி, பல்வேறு நுண்மைகளுடன் பல்வேறு திசைகளில் பயணிக்க ஆரம்பித்து விட்டது.
இதில் உடனடியாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது ஜி ஸ்கொயர்தான். தமிழ்நாட்டில் கடந்த ஆறுமாதங்களாக ரியால்டி துறையில் அது தாரக மந்திரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஜி ஸ்கொயரின் மேல்தட்டு செயற்பாடுகள், விளம்பரங்கள், அதிக ஊடகக்கவனம் மற்றும் அது கையகப்படுத்திய நிலங்கள், கட்டுமானச் செயற்பாடுகள் எல்லாம் அந்த நிறுவனத்திற்குப் பின்னாலிருப்பது யார் என்பதைப் பற்றிய வதந்திகள் பலவற்றைக் கிசுகிசுப்புத் தோட்டத்தில் சிறகு முளைத்து பறக்க வைத்தன.
ஒரு கட்டுமானத் திட்டத்திற்குத் தேவைப்படும் வெவ்வேறு அரசுத்துறை அனுமதிகளைப் படுவேகமாகச் சந்தேகத்துக்குரிய முறையில் ஜி ஸ்கொயர் எப்படிப் பெறுகிறது என்பதைப் பற்றிய பல்வேறு வாட்ஸப் முன்னெடுப்புத் தகவல்கள் பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் மற்றும் பலர் மத்தியிலும் இறக்கைக் கட்டி பறக்கின்றன.
2-ஜி அலைக்கற்றை ஊழல் பணப்பரிவர்த்தனை தொடர்பாக சிபிஐ-யின் புலன்விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு பின்னர் தற்கொலை செய்துகொண்ட சாதிக் பாட்சாவிற்குத் தெரிந்தவர்தான் இந்தக் கெவின்.
ஜூனியர் விகடனில் ஜனவரியில் வெளிவந்த கட்டுரைதான் இந்த வழக்கின் ஆரம்பப்புள்ளி. சில மாதங்களிலே கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்குத் தொழில் செய்திருக்கும் ஜி ஸ்கொயர், தொழில் சம்பந்தமாக அதிகாரப்பூர்வமான அனுமதிகளைப் பெறுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் பெயரைப் பயன்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டியது ஜூனியர் விகடன் கட்டுரை. சபரீசன் ஜி ஸ்கொயர் நிறுவனத்தை ஆதரிப்பவர் என்று ஜி ஸ்கொயரே போட்டி நிறுவனங்களிடமும், அதிகாரிகளிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறது என்று மேலும் அந்தக் கட்டுரை விவரித்தது. ஆனால் ஜி ஸ்கொயருக்கும் சபரீசனுக்கும் இடையே நேரடியான அல்லது அதிகாரப்பூர்வமான தொடர்பு இருக்கிறதா என்பதைப் பற்றி ஜூனியர் விகடன் கட்டுரை ஒன்றும் சொல்லவே இல்லை.
பிளாக்கர்கள் சவுக்கு ஷங்கர் மற்றும் மாரிதாஸ் ஆகியோர் பணம்பறிப்பவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு முதல்தகவல் அறிக்கையில் அவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கெவினின் வழக்கறிஞரான சாரநாதனிடம் எடுத்த அதிரடியானதொரு பேட்டியின் மூலம் இந்த வழக்கை பல்வேறு அம்சங்களும் இழைகளும் பின்னிப் பிணைந்திருக்கும் (போர்கேயின் லாபிரின்ந்த் போல?) ஒரு சிக்கலான வழக்காக மடைமாற்றம் செய்ய விழைந்திருக்கிறார் ஷங்கர். 2-ஜி அலைக்கற்றை ஊழல் பணப்பரிவர்த்தனை தொடர்பாக சிபிஐ-யின் புலன்விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு பின்னர் தற்கொலை செய்துகொண்ட சாதிக் பாட்சாவிற்குத் தெரிந்தவர்தான் இந்த கெவின். கெவின் பாட்சாவின் குடும்பத்திற்கு உதவியதால் பல்வேறு வழக்குகளில் அவர் மாட்டிக் கொண்டார் என்று அந்த வழக்கறிஞர் சொன்னார். அவர்மீது போடப்பட்ட பொய்வழக்குகளில் இந்த விகடன் கேஸும் ஒன்று என்று சாரநாதன் குற்றஞ்சாட்டினார்.
புலன்விசாரணை மேலும் மேலும் வளர இன்னும் நிறைய சங்கதிகள் வெளிவரலாம். அப்போது உண்மை அல்லது உண்மையின் ஒருபகுதி தெரியவரலாம். ஆனால் ஏற்கனவே இந்த விகடன்–கெவின்-ஜி ஸ்கொயர் வழக்கு காவல்துறையில் மற்றும் ஊடகத்துறையில் இருக்கும் தொழிலறப் பிரச்சினையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளின் அடிக்கடி சொல்லப்படும் இலட்சியம் என்பது சமூகத்திற்குச் சேவை செய்வதுதான். அதிகபட்சமான தொழிலறம் தேவைப்படும் இலட்சியம் இது.
முதல்தகவல் அறிக்கை பதியப்பட்டு சிலமணி நேரத்திற்குள்ளே குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது மிகமிக அபூர்வமான ஒரு நிகழ்வு. அதிகாரம் கொண்டவர்கள் காவல்துறையைப் படுவேகமாகச் செயல்பட வைக்கமுடியும் என்பதைத்தான் இந்நிகழ்வு சூசகமாக உணர்த்துகிறது.
கெவின், விகடன் ஆசிரியர், நிருபர், இயக்குநர்கள் பி ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது மனைவி ராதிகா ஸ்ரீனிவாசன் ஆகியோர்க்கும் சவுக்கு ஷங்கர், மாரிதாஸ் ஆகியோர்க்கும் இடையே பணம்பறிப்பு சம்பந்தமாக ஒரு சதித்திட்டம் இருந்ததாக முதல்தகவல் அறிக்கை குற்றஞ்சாட்டியது. திராவிட சித்தாந்தவாதி ஷங்கரும், சங்கி மாரிதாஸும் இணைந்து வேலை செய்தார்கள் என்பதே வேடிக்கையாகத் தோன்றுகிறது. ஆனாலும் பல்வேறு ஆட்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளாத போதும் அல்லது அவர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றாவிட்டாலும், அவர்களுக்கிடையே அப்படிப்பட்ட ஒரு சதி இருக்க சட்டப்படி வாய்ப்பு உண்டு.
முதல்தகவல் அறிக்கையின் “தெரிந்த நபர்களின் விவரங்கள்’ என்ற பத்தியில் ஜூனியர் விகடன் ஆசிரியர், நிருபர் மற்றும் சவுக்கு ஷங்கர், மாரிதாஸ் ஆகியோர் விசேசமாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆனால் ஷங்கர், மாரிதாஸ் பெயர்கள் குறிப்பிடப்பட்டதைப் போல, விகடன் எடிட்டர் பெயரோ, நிருபர் பெயரோ குறிப்பிடப்படவில்லை. அவர்களின் பெயர்களை முதல்கட்ட விசாரணையிலே தெரிந்திருக்க முடியும். முதல்தகவல் அறிக்கையைப் பதிவு செய்யும்போது காவல்துறைக்குப் போதுமான கவனமும், பிரயத்தனமும் இருக்க வேண்டும். அவை இந்த வழக்கில் இல்லாதது போலத் தெரிகின்றது.
அந்தப் பத்தியில் மூன்றாவதாக விகடன் விசயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன; ஆனால் ஸ்ரீனிவாசனின் பெயரும் அவரது மனைவியின் பெயரும் இல்லை. ஒருவேளை யாருடைய பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் தாங்கள் கைதாவதைத் தடுக்க முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும், ஸ்ரீனிவாசனும் அவரது மனைவியும் அப்படி பெற்றுவிடக்கூடாது என்றும் திட்டமிடப்பட்டிருக்கலாம். ஆனால் ஸ்ரீனிவாசனும் அவரது மனைவியும் எந்த வேளையும் கைதாவதற்கான சாத்தியம் இருந்தது. அதனால் அவர்களுக்குள் அழுத்தமும் கைதுசம்பந்தமான அச்சம் உருவாகும் வாய்ப்பும் இருந்தன.
கருத்துரிமைக்கும் பேச்சுரிமைக்கும் விடப்பட்ட ஓர் அச்சுறுத்தல் இது என்று குற்றஞ்சாட்டிய பத்திரிகையாளர்கள் விகடனுக்கு ஆதரவாகக் களத்தில் குதித்தபின்னர், அரசு பல்டி அடித்தது விட்டது. ஸ்ரீனிவாசனும் அவர் மனைவி ராதிகாவும் இந்த வழக்கல் சம்பந்தப்படவில்லை என்றும், எனவே இவர்கள் பெயர்கள் FIR-இல் இருந்து நீக்கப்படுவதாக காவல் துறை அறிவித்தது. கெவினைக் கைதுசெய்து ரிமாண்டில் வைப்பது என்று FIR சட்ட செயல்பாட்டில் நுழைந்துவிட்டதால், அதிலிருந்து நீக்கப்பட்ட பகுதி தகுந்த விளக்கத்தோடு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதற்கிடையில் கெவினின் ஆள் ஒருவர் ஜி. ஸ்கொயர் அலுவலகத்திற்கு வந்ததாகவும், மிரட்டும் பாஷையில் பேசினார் என்றும் எஃப்ஐஆர் பதிவு செய்திருக்கும்போது, அந்த ஆளைப் பற்றிய விவரங்கள் தங்களிடம் இருப்பதாக காவல்துறை எந்த தகவலையும் ஏன் தரவில்லை என்று சவுக்கு ஷங்கர் நியாயமான ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்.
இந்த வழக்கைப் பதிவுசெய்த மைலாப்பூர் காவல் நிலையம் வெளியிட்டிருக்கும் பத்திரிகைச் செய்திக்குறிப்பு எஃப்ஐஆர் சுருக்கத்தைத் தந்துவிட்டு, இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று முடிக்கிறது. அனேகமாக காவலதிகாரிகள், மிரட்டிப் பணம்பறிக்கும் செயல்களைத்தான் இப்படிக் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் அதில் மறைந்திருக்கும் மறைமுகப் பொருள், அதிகாரத்தில் இருக்கும் மனிதர்களையும், அமைப்புகளையும் பற்றிய எதிர்மறையான ஊடகச் செய்திகள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்பதுதான். இது எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியது.
எஃப்ஐஆர் விசயத்தில் சொதப்பியதற்குப் பொறுப்பானவர் என்று கருதப்பட்ட உயர்காவல் அதிகாரி ஒருவரை மாற்றுவதாக அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் எஃப்ஐஆர் கோளாறை அந்த அதிகாரிதான் செய்தாரா என்று தெரியவில்லை. ஆனால் மூத்த அதிகாரி என்ற முறையில் அவருக்கு இதில் பொறுப்புண்டு என்று கருதப்பட்டிருக்கிறது.
அதிகாரம் கொண்டவர்கள் காவல்துறையைப் படுவேகமாகச் செயல்பட வைக்கமுடியும் என்பதைத்தான் இந்நிகழ்வு சூசகமாக உணர்த்துகிறது.
ஒரேயடியான பணியிட மாறுதல்களும், பின்பு நிகழ்ந்தவற்றிற்கு அதிகாரிகளைப் பொறுப்பாக்குவதும் காவல்துறையில் குலைநடுங்க வைக்கும் கிலியை ஏற்படுத்தலாம். அதனால் அவர்களின் தொழிலறமும் கெட்டுப் போய்விடலாம். அடுத்த தடவை கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றால்கூட அவர்கள் தயங்கக்கூடும்.
கெவின்மீது குவியும் வழக்குகள் அவர்மீது குண்டாஸ் சட்டம் பாயும் சாத்தியத்தை அதிகரிக்கின்றன. அந்த ஆணையை மாவட்ட ஆட்சியாளரோ அல்லது சென்னை காவல் ஆணையரோ பிறப்பிக்கலாம். எனினும் ஒரு நீதித்துறை அதிகாரி அதை மறுஆய்வுக்கு உட்படுத்தலாம். இறுதியில் ஆணை வழங்கப்பட்டால், கெவின் நீதிமன்ற விசாரணை இல்லாமல் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிவரலாம்.
எஃப்ஐஆர் மட்டும் தொழிலறத்தோடு பதிவு செய்யப்பட்டிருந்தால், காவல்துறை அதிகாரிகள் வழக்கின் அடிப்படை உண்மைகளைப் பரிசோதித்து நியாயமான முறையில் நடந்திருந்தால், சேவை செய்யும் அவர்களின் சமூகக்கடமை செவ்வனே நிறைவேறியிருக்கும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.
ஜி ஸ்கொயர் நிச்சயமாக செய்திகளில் அடிபடும் ஒரு நிறுவனம்தான். அதனால் பத்திரிகைகளின் விமர்சனப்பூர்வமான விசாரணைக்குள் அது வந்துதான் ஆகவேண்டும். ஆனால் பத்திரிகைப் புலனாய்வுக் கட்டுரைகளில் சரியான சான்றுகள் இருக்கவேண்டுமே ஒழிய, வெறும் களங்கம் கற்பிக்கும் ஹேஷ்யங்கள் இருக்கக்கூடாது. நம் சமூகத்தில் தொழில்கள் செயல்படும் நெறியின் இன்னொரு பக்கத்தில் இருப்பது ரியல் எஸ்டேட் துறை. சட்டப்பூர்வமான முக்கிய தொழில்கள் நடைமுறையில் அதிகாரிகளின் சிகப்பு நாடாவிலும், ஊழல்களிலும் மாட்டிக்கொண்டு திணறுகின்றன. ரியல் எஸ்டேட்டில் மோசமான வழிகளில் சம்பாதித்த பணம் பெருமளவில் கொட்டிக் கிடக்கிறது.
நீண்ட நாளைக்கு முன்பு என்ற சொல்ல முடியாத ஒரு காலகட்டத்தில், 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தின் போது திமுகவினர் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க ஜெயலலிதா தனி நீதிமன்றங்களை நிறுவினார். அந்த வழக்குகள் என்னவாயிற்று; அவை விசாரிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. 2001 தேர்தல் பரப்புரையில் ஜெயலலிதா பிரயோகித்த ஆயுதங்கள் ரியல் எஸ்டேட், மின்தடைகள், மற்றும் 2-ஜி அலைக்கற்றை ஊழல் ஆகியவை.
விகடன்–கெவின்-போலீஸ் விவகாரத்தில் திமுக அரசு நற்பெயரைத் தக்கவைப்பது போலச் செயற்படவில்லை. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விசயத்தில் சில கேள்விகள் இருந்தாலும், ஸ்டாலின் அரசு மக்களின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்திருக்கிறது. தனிப்பட்ட முறையில் ஸ்டாலினைப் பலர் விரும்புகிறார்கள். சொல்வதைச் செய்கிறார் என்றும் அவர் போற்றப்படுகிறார். அவரது அரசின்மீதான சமீபத்திய கருத்துக் கணிப்புகள் அவருக்குச் சாதமாக இருக்கின்றன. இப்போது செய்து கொண்டிருக்கும் நல்ல பணிகளை அவர் மேலும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வாக்காளர்கள் விரும்புகிறார்கள். ஆனால் பாரபட்சம் பார்ப்பவர் என்று அவர் தோற்றமளித்தால், மக்களின் நம்பிக்கையை அவர் இழந்துவிடக்கூடும்.
ஜூனியர் விகடன் இதழின் முதன்மை நிர்வாக ஆசிரியர் டி. கலைச்செல்வன் தி நியூஸ் மினிட் தமிழுக்கு அளித்த நேர்காணலில், தங்கள் கட்டுரையில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் பதிலைப் பெறுவதற்கு உண்மையிலேயே தாங்கள் முயன்றதாகச் சொல்லியிருக்கிறார். அதேசமயம் சபரீசன் பெயரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவருடைய பதிலையும் பெற்றிருக்க வேண்டியது அவசியம். ஜி ஸ்கொயருக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அவர் சொன்னாரா? போலீஸ் சொல்வது போல, நிர்வாக மட்டத்திலோ, தொழில்ரீதியாகவோ அல்லது ஆசிரியர்க்குழு மட்டத்திலோ, விகடன் கெவினோடு அதிகாரப்பூர்வமாகவோ அல்லது முறைசாரா வகையிலோ தொடர்பு கொண்டிருந்ததா? இன்மதி எழுப்பிய இந்தக் கேள்விகளுக்குக் கலைச்செல்வன் பதிலளிக்கவில்லை. தங்கள் கட்டுரை சம்பந்தமாக விகடன் சபரீசனை அணுகியதா என்ற கேள்விக்கும் கலைச்செல்வன் திலளிக்கவில்லை.
கெவின், விகடன் ஆசிரியர், ஒரு நிருபர், இயக்குநர்கள் பி ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது மனைவி ராதிகா ஸ்ரீனிவாசன் ஆகியோர்க்கும் சவுக்கு ஷங்கர், மாரிதாஸ் ஆகியோர்க்கும் இடையே பணம்பறிப்பு சம்பந்தமாக ஒரு சதித்திட்டம் இருந்ததாக முதல்தகவல் அறிக்கை குற்றஞ்சாட்டியது.
விகடன் ஏதோ குற்றம் செய்திருக்கிறது என்று நாங்கள் சொல்லவரவில்லை. ஆனால் ஊடகத்துறையில் இருக்கும் பொதுவான தொழிலறக் குறைபாடுகள் என்ற பிரச்சினையை இந்த வழக்கு எழுப்பியுள்ளது.
ஓர் ஊடக நிறுவனம் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும்போது, பத்திரிக்கைச் சுதந்திரத்தை அரசு அல்லது போலீஸ் நசுக்குகிறதோ என்ற தங்கள் அச்சத்தைப் பத்திரிகையாளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி உரக்கக் கூவுகிறார்கள். ஆனால் பலியாக்கப்படுவது தனிப்பட்ட செய்தியாளர்கள்தான். ஊடக முதலாளிகள் உடனடியாகவும் பொதுவெளியிலும் ஆதரிப்பது சகமுதலாளிகளைத்தானே தவிர, தனிப்பட்ட பத்திரிகையாளர்களை அல்ல.
மேலும், கெவின் வழக்கின் மறைபொருளால் பத்திரிகைத்துறை செயல்முறையையே கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது.
செய்தி ஊடகமே விளம்பரங்களில் ஜீவித்திருக்கும் ஒரு தொழில். அவ்வளவுதான். ஆனால் இதழியல் என்பது இயல்பில் விளம்பரத்திற்கு எதிரானது. கிடைக்கும் தரவுகளையும் செய்திகளையும் அலசி ஆராய்ந்து உண்மையை இதழியல் கொண்டுவர வேண்டும். விளம்பரத்தால் மட்டுமே பத்திரிகைகள் இயங்கினால் எல்லா விதமான அழுத்தங்களுக்கும் அந்தத் துறை வளைந்துகொடுக்க வேண்டியிருக்கும்.
உதாரணமாக, ரியல் எஸ்டேட் மற்றும் ஆபரணத் துறைகள் அச்சு ஊடகத்திற்கு ஆகப்பெரிய விளம்பரங்களைத் தருபவை. அதனால் குறிப்பாக இந்தத் துறைகளைப் பற்றி பத்திரிகைகள் வெளியிடும் செய்திகள் மீது அல்லது கட்டுரைகள் மீது அந்த விளம்பரங்கள் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். தமிழ்நாட்டில் மருத்துவமனைகளும் அரசும் பெரிய விளம்பரதாரர்கள். அதனால் ஊடகங்கள் மீது அவற்றிற்கு ஆகப்பெரும் செல்வாக்கு இருக்கிறது.
தனிப்பட்ட முறையில் பல பத்திரிகையாளர்கள் வாங்கும் சம்பளம் மிகவும் குறைவு. அதனால் அவர்கள் விளம்பர முகவர்களாகவும் இரட்டை வேசம் போட வேண்டியிருக்கிறது, குறிப்பாக மாவட்டங்களில். யாரைப் பற்றி செய்தி எழுதுகிறாரோ அந்த மனிதருக்கும், அவரை எதிர்கொள்ளும் சம்பந்தப்பட்ட நிருபருக்கும் (ஆணோ, பெண்ணோ) இடையே இருக்கும் அக்கணத்து சமன்பாட்டில் தாஜா பண்ணுதலும், அச்சுறுத்துலும் நுழைந்து விடுவது தவிர்க்க முடியாதது. தமிழ்நாட்டுப் பத்திரிகைத் துறையில் மிரட்டிப் பணம்பறிப்பது ஒன்றும் கேள்விப்படாத விசயம் அல்ல. செய்தியாளர்கள் சந்திப்புகள் பெரும்பாலும் தனிப்பட்ட நிருபர்களிடம் கடத்தப்படும் ரொக்கம் அடங்கிய கவர்களோடு முடிகின்றன. கரோனா முடிந்த காலத்தில் ரொக்கம் ’கூகுள் பே’யாக மாறியிருக்கலாம்.
சில நேரங்களில் குறிப்பிட்ட ஒரு தொழில் நலனுக்காக அல்லது அரசியல் நோக்கத்திற்காக ஓர் ஊடக நிறுவனத்திற்கு நிதியளிக்கப்படலாம். அதனாலேயே அந்த நிறுவனத்தின் இயக்கம் அந்தத் தொழில் நலனுக்கேற்றவாறோ அல்லது அரசியல் நோக்கத்திற்கு இணக்கமாகவோ கட்டுப்படுத்தப்படலாம். அப்போது அந்த ஊடக நிறுவனத்தின் சார்பு உள்ளங்கை நெல்லிக்கனி போல பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிடும்.
நுகர்வோர்கள் செய்திக்காகவும் செய்தி சம்பந்தமாகவும் பணம் கொடுப்பதில்லை. செய்தி இலவசமாக தரப்படுவதையே நுகர்வோர் எதிர்பார்க்கிறார். ஊடக ஊழியர்களின் சம்பளங்கள், ஊடக நிறுவனத்தின் தொழில் ஆரோக்கியம், முதலாளியின் வருவாய் மற்றும் இலாபம் ஆகியவை செய்தி நுகர்வோர்களிடமிருந்து வருபவை அல்ல. சொல்லப்போனால் செய்தி நுகர்வோர்கள் வெறும் விளம்பரங்களின் இலக்குகள் மட்டுமே. அதனால் செய்தி ஊடகங்கள் உண்மை, பாரபட்சமற்ற தன்மை ஆகியவற்றைப் பின்பற்றாத மற்ற ஆதாரங்களையே சார்ந்திருக்க வேண்டியிருக்கின்றன.
Read in : English