Read in : English
மாண்டிசோரி கல்வி முறை, குழந்தைகளுக்குக் கற்றலில் இனிமையைத் தரும் கல்வி முறை. அமெரிக்காவில் வாழும் தமிழ்ப் பெண்ணான மோனிஷா, இந்தக் கல்வி முறையைப் பின்பற்றி வீட்டிலேயே தமிழ் வழியில் தனது குழந்தைக்குப் பாடங்களைக் கற்றுத்தருகிறார் மோனிஷா.
அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்கு தமிழ் வழியில் மாண்டிசோரி கற்றல் முறையை செய்து வருகிறார். தனது குழந்தைக்காகவே இரு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
தமிழகத்தின் நாகர்கோவிலை சேர்ந்தவர் மோனிஷா. 12ஆம் வகுப்பு வரை நாகர்கோவிலில் படித்த அவர், பொறியியல் படிபை சென்னையில் படித்து முடித்தார். குழந்தைகளின் இயல்புக்கு ஏற்ற கற்றல் முறையான மாண்டிசோரி கல்வி முறையை தனது உறவினர் மூலம் அறிந்து கொண்ட மோனிஷா, ஏ.எம்.ஐ. பயிற்சி நிலையத்தில் சேர்ந்து மாண்டிசோரி கல்வி முறை குறித்து படித்து தெரிந்து கொண்டார்.
இதையடுத்து, திருமணமாகி அமெரிக்காவுக்கு சென்ற மோனிஷா, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தார். தற்பொழுது தனது கணவருடன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 2 வயது பெண் குழந்தைக்கு தாயான மோனிஷா, தான் கற்ற மாண்டிசோரி கல்வி முறையை தனது குழந்தைக்கு அளிக்க விரும்பினார். அமெரிக்காவில் இருந்து கொண்டு தமிழ் வழியில் குழந்தைக்குப் பாடங்களைக் கற்றுத்தருவதற்கான அவரது முயற்சி அங்குள்ள இளம் தாய்மார்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக மாண்டிசோரி கல்விமுறையை தெரிந்து கொள்வோம். மாண்டிசோரி என்பது குழந்தைகளின் இயல்புக்கு ஏற்றவாறு பயிற்றுவிக்கப்படும் கல்வி முறை. இத்தாலியைச் சேர்ந்த மருத்துவரும், கல்வியாளருமான மரியா மாண்டிசோரி என்பவரால் இக்கல்வி முறை உருவாக்கப்பட்டது. குழந்தைகளின் இயல்பான உளவியல், உடல் மற்றும் சமூக வளர்ச்சியை அடிப்படையாக கொண்டே மாண்டிசோரி கல்வி முறையை மரியா மாண்டிசோரி உருவாக்கி அதை செயல்படுத்தியும் காட்டினார்.
24வயது வரை இயற்கையோடு கூடிய வாழ்க்கை முறையை ஒருவன் கற்றால் முழு மனிதனாக மாறிவிடுகிறான் என்கிறது மாண்டசோரி முறை. 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மாண்டிசோரி முறையில் பயிற்றுவிக்கத்தான் பெரும்பாலான கல்வி நிலையங்கள் உள்ளன. 24 வயது வரை பயிற்றுவிப்பதற்கு உலக அளவில் உள்ள கல்வி நிலையங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். உலகம் முழுவதும் சுமார் 2 லட்சம் பள்ளிக்கூடங்கள் மாண்டிசோரி கல்வி முறையை பின்பற்றுகின்றன.
மாண்டிசோரி கல்வி முறையில் வகுப்பறைகள் கிடையாது. இப்படி தான் எழுத வேண்டும், இப்படி தான் படிக்க வேண்டும் என்று குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவது இல்லை. அவர்களுக்கு தேர்வுகளும் இல்லை. நேரம் கணக்கிட்டு வகுப்புகள் எடுக்கப்படாது.
மழலையர் பள்ளி போல் மாண்டிசோரி பள்ளியும் அதிகக் கட்டணம் செலுத்திப் படிக்கக் கூடிய கல்வி நிலையம் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், இதெல்லாம் தேவையில்லை, வீட்டில் வைத்தே குழந்தைகளை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் வழிநடத்தலாம் என்று கூறிய மோனிஷா, தனது மாண்டிசோரி முறையில் தனது குழந்தைக்குக் கல்வி கற்றுத் தரும் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:
“மாண்டிசோரி கல்வி முறையில் வகுப்பறைகள் கிடையாது. இப்படி தான் எழுத வேண்டும், இப்படி தான் படிக்க வேண்டும் என்று குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவது இல்லை. அவர்களுக்கு தேர்வுகளும் இல்லை. நேரம் கணக்கிட்டு வகுப்புகள் எடுக்கப்படாது. 6 வயதுள்ள குழந்தைகள் கைகளால் எடுக்கும் அளவுக்கு இருக்கும் பொருட்களை வைத்து விடுவோம். அந்தப் பொருட்களில் குழந்தை எதை தேர்வு செய்கிறதோ அதற்கான வழிகாட்டுதல்களை தான் ஆசிரியர்கள் செய்வார்கள். இந்த முறையில் ஆசிரியர்கள் பயிற்றுவிப்பதை குழந்தைகள் கேட்பதில்லை. குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்றதை தான் ஆசிரியர்கள் வழி நடத்தி செல்வார்கள். இதனால் எதை தேர்வு செய்வது என்ற முடிவு எடுக்கும் திறனும், தன்னம்பிக்கையும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே 3 வயது குழந்தைக்கு பென்சில் கொடுப்பதற்கு பதிலாக அந்த சிறிய விரல்களுக்கு ஏற்ற ஆக்கப்பூர்வமான விளையாட்டு பொருட்கள் கொடுக்கப்படுகின்றன. அதைப் பயன்படுத்தி விளையாடும் போதோ அல்லது ஒன்றிற்கு தீர்வு காணும் போதோ குழந்தைகளின் அறிவாற்றல் வளர்வதுடன் உடலும் அடுத்தக் கட்டத்திற்கு வளர்ச்சி அடைகின்றன.
எனது 2 வயது மகளுக்கு வீட்டிலேயே மாண்டிசோரி முறையை சொல்லிக் கொடுக்கிறேன். அலுவலக நேரம் போக, வீட்டில் நான் சமைத்தால் எனது குழந்தையும் என்னுடன் சேர்ந்து சமையல் செய்ய உதவி புரிவாள். பெரும்பாலான பெற்றோர் வகுப்பறை கல்வி முறை பற்றித்தான் தெரியும். சமையல் அறையும், தோட்டங்களைப் பராமரிப்பதும், வீட்டின் சிறு, சிறு பணிகளும் குழந்தைகளுக்கான கற்றல் பயிற்சிகள் என்பதை அறிந்திருப்பதில்லை. அமெரிக்காவில் இருக்கும் எங்களுக்கு தமிழ்நாட்டை போல் இட்லி, தோசை, சப்பாத்தி எல்லாம் கிடைக்காது. இருந்தாலும் தமிழகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம், உணவு பழக்க வழக்கங்களை எனது குழந்தைக்கு கற்று கொடுத்து வருகிறேன். சமையலறையில் நான் சமைக்க சென்றால் எனது குழந்தையும் பங்கேற்பாள். மாவு எடுத்து கொடுப்பது, எந்த வடிவத்தில் தோசை இருக்கும், தமிழில் அதன் பெயர் என்ன? போன்றவற்றை எனது குழந்தைக்குச் சொல்லி கொடுக்கிறேன். அவளும் ஆர்வமாக ஒவ்வொன்றையும் கேட்பாள்.
தோட்டப் பராமரிப்புப் பணிக்காக சென்றால் அவளும் எங்களுடன் இணைந்து கொண்டு, அவளால் முடிந்ததை செய்வாள். தீபாவளிக்கு என்னென்ன பலகாரங்கள் செய்வது, அதன் பெயர்கள், ஏன் தீபாவளி வந்தது, பொங்கல் பண்டிகை, அதன் வரலாறு, பொங்கல் செய்யும் முறை என எனது குழந்தைக்கு கலாச்சாரத்தை கற்பித்து வருகிறோம். இதுவும் மாண்டிசோரி கற்றல் முறை தான். எனது மகள் தமிழ் பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் தமிழ் வழியில் மாண்டிசோரி கல்வி முறையை செயல்படுத்துகிறேன்.
அமெரிக்காவில் மழலையர்களுக்கான தமிழ் புத்தகம் தேடி கிடைக்காததால் நானே எனது குழந்தைக்காக இரு புத்தகங்களை எழுதி வெளிட்டுள்ளேன். “வாழை இலை விருந்து” என்ற புத்தகம் உணவு முறைகளையும், பொங்கலோ, பொங்கல் புத்தகம் கணிதத்தையும் கற்றுக் கொடுக்கிறது. இரு புத்தகங்கள் அமேசானிலும், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா பகுதிகளிலும் ஆன்லைனில் கிடைக்கின்றன. எனது புத்தகங்கள் பயனுள்ளதாக இருப்பதாக சில அம்மாக்கள் தெரிவித்த கருத்து மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. எனது குழந்தை மட்டுமில்லாமல் மற்ற குழந்தைகளும் இதனால் பயனடைந்து வருகின்றனர்.
எனது குழந்தைக்கு நான் கற்று கொடுப்பதை இன்ஸ்டகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்வதை பார்த்த பெற்றோர், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி, அவர்களது குழந்தைகளை கற்றலின் இனிமையுடன் வளர்க்கத் தொடங்கி இருக்கின்றனர்.
ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளை ஊக்குவிக்குவித்து அவர்களுக்கு துணையாக இருந்தாலே இந்த சமுதாயத்திற்கு நல்ல மனிதர்களை பெற்றோர் கொடுக்க முடியும் என்றார். இரண்டு வயதில் இருந்து குழந்தைகளின் ஒவ்வொரு அசைவும் முக்கியமானது என்பதால் ஒவ்வொரு குழந்தைக்கும் 6 வயது வரை மாண்டிசோரி கல்வி அளிக்கலாம். அதன்பிறகு, வழக்கமான கல்வியை அவர்கள் தொடரலாம். மழலை வயதில் மாண்டிசோரி கல்வி முறையில் கற்றால், வளரும் குழந்தை பொறுப்புடனும், பிறர் நலனில் அக்கறையும், தெளிவான முடிவும் எடுக்கும் வகையில் தன்னம்பிக்கை மனிதர்களாக வருவார்கள் என்றார் மோனிஷா.
(மோனிஷாவை தொடர்பு கொள்ள விரும்புவோர், tamilmontessori@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்)
Read in : English