Read in : English
தமிழ்நாட்டில் அன்றைய ஆளுநர் சென்னாரெட்டிக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கடும் மோதல் இருந்த காலகட்டத்தில், பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமிப்பதற்காக மசோதாவை 1994ஆம் ஆண்டில் தமிழக அரசு நிறைவேற்றியது.
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. பல்கலைக்கழகச் சட்டத்தின் மூலம்தான் வேந்தர் பதவியே ஆளுநருக்குக் கிடைக்கிறது. தேவைக்கேற்ப பல்கலைக்கழகச் சட்டத்தை மாற்றுவதில் தவறில்லை என்று அப்போது அதிமுக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அதற்கு ஆளுநர் சென்னாரெட்டி ஒப்புதல் அளிக்கவில்லை. 28 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் அதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் என்.டி.ராமராவ் முதல்வராக இருந்தபோது, மாநில முதல்வரை தெலுங்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றினார். அந்த மாற்றத்தை பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரிக்காத சூழ்நிலையில், முதல்வராகப் பொறுப்பேற்ற சென்னாரெட்டி அந்த சட்டத்தை ரத்து செய்து விட்டு ஆளுநரே வேந்தராக நீடிக்க வகை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் மசோதா உள்பட 11 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வைத்திருப்பதை அடுத்து, தமிழக அரசுக்கும் ஆளுருக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநில அரசின் உரிமையில் தலையிடும் வகையில் உதகமண்டலத்தில் ஆளுநர் மாளிகை சார்பில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்ற அதேநேரத்தில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான மசோதாவை திமுக அரசு தற்போது நிறைவேற்றியுள்ளது.
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் உள்ள சட்ட விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி திமுக அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அதிமுகவே கொண்டு வந்ததுபோன்ற மசோதாவை தற்போது திமுக அரசு கொண்டு வந்தபோது, அதை அதிமுக எதிர்த்துள்ளது. பாஜக எதிர்ப்பு எதிர்பார்த்ததுதான். அதேசமயம், பாமக இதற்கு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்டமசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரையில், “அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படக் கூடாது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வழிவகுக்கும்” எனக் குறிப்பிட்டது.
“இந்த மசோதாவை கொண்டு வந்ததற்கான காரணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கினார். “ஒன்றிய – மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய 2007 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரையில், “அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படக் கூடாது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வழிவகுக்கும்” எனக் குறிப்பிட்டது. மேலும், “துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் கொடுப்பது என்பது அதிகார மோதலுக்கு வித்திடும்” எனச் சுட்டிக் காட்டியுள்ளார். இதுகுறித்து இந்திய அரசால் மாநில அரசிடம் கருத்து கேட்கப்பட்டபோது தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்கள் ஆணையத்தின் அறிக்கையை எற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளன. பூ{ஞ்சி ஆணையப் பரிந்துரையை அதிமுகவே ஏற்கனவே செயல்படுத்தலாம் என கூறியிருந்தது எனவே இதில் அதிமுகவிற்கு மாற்றுக்கருத்து இருக்காது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் இதே நிலை இருப்பதையும் பாஜகவினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பூஞ்சி ஆணைய பரிந்துரை தொடர்பாக மாநில அரசின் கருத்து கேட்டு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கடிதம் வந்தது. அதனை ஏற்று துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என்று திமுக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆளுநர் தனக்கு பிரத்தியோகமாக உரிமை உள்ளது போல் செயல்பட்டு உயர்கல்வி பொறுப்பு அளிக்க வேண்டிய மாநில அரசை மதிக்காமல் செயல்படும் வரும் போக்கு தலைதூக்கியுள்ளது.
“தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக ஆளுநரும், இணை வேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரும் உள்ளனர். கொள்கை முடிவின்படி பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கக் கூடிய அதிகாரம் தமிழக அரசிற்கு இல்லாமல் இருப்பது உயர் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலந்து ஆலோசித்து ஆளுநர் துணைவேந்தரை நியமிப்பது மரபாக உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக வேந்தராக தனக்கு பிரத்தியோகமாக உரிமை உள்ளது போல் ஆளுநர் செயல்பட்டு, உயர்கல்வி பொறுப்பு அளிக்க வேண்டிய மாநில அரசை மதிக்காமல் செயல்படும் வரும் போக்கு தலைதூக்கியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியால் அதன்கீழ் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நீக்க முடியவில்லை என்பது ஒட்டுமொத்த பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்துகிறது.
இது மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக உள்ளது. மேலும் குஜராத், ஆந்திரா ,கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மாநில அரசு ஒப்புதலோடு பல்கலைக்கழக துணைவேந்தவர்கள் நியமிக்கப்படுகிறார்.பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் தமிழக அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிப்பது தொடர்பாக சட்டத்தில் திருத்தம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தராக மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படுகிறதுÕ என்றார் ஸ்டாலின்.
இந்த நிலையில், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யவதற்காக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையிலான மூவர் குழு பரிந்துரைத்த மூன்று பெயர்களை ஆளுநர் ரவி நிராகரித்து விட்டார். பதவிக்காலம் முடிந்துள்ள தற்போதைய துணைவேந்தர் சுதா சேஷய்யனின் பதவிக் காலத்தை இந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து ஆணை பிறப்பித்துள்ளார். அத்துடன், புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக புதிய தேர்வு குழு அமைக்கவும், அந்த குழுவின் மூலம் புதிய விண்ணப்பங்களை பெற்று துணைவேந்தரை தேர்வு செய்யும் நடவடிக்கைகளை விரைவில் தொடங்கவும் தமிழக அரசை, ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளது திமுக அரசை கோபப்படச் செய்துள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்க விலக்கு அளிக்கும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் தாமதப்படுத்தி வருவதை அடுத்து, திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்தன. மயிலாடுதுறைக்கு ஆளுநர் சென்றபோது அவருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதையடுத்து ஆளுநர் மாளிகையின் சார்பில் உதகமண்டலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட துணைவேந்தர் மாநாட்டை, மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக திமுக அரசு கருதியது. இந்த நிலையில், துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து எடுத்துக் கொள்ளும் வகையில் புதிய மசோதாவை தமிழக அரசி நிறைவேற்றியுள்ளது.
ஏற்கனவே ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் மீது அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதாவது, ஏற்கெனவே, தமிழக அரசு அனுப்பிய 11 மசோதாக்கள் அவரது ஒப்புதல் பெறுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தமிழக அரசு தற்போது இயற்றியுள்ள இந்த மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி என்ன செய்யப் போகிறார் என்பதையும் அவரது அடுத்த கட்ட நடவடிக்கையையும் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
பிறமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக நியமிக்கப்படுவதில்லை என்ற பொதுவான விதியை மீறி அதிமுக ஆட்சிக் காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டார். அப்போதே, அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயல்பாடு கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
Read in : English