Read in : English

அம்பேத்கர் மோடி ஒப்பீட்டில் சூடு பட்ட இளையராஜாவின் காயம் உலர்வதற்குள் மோடி விவகாரத்தில் போய் சூடு பட்டுக்கொண்டார் இயக்குநர் கே. பாக்யராஜ். 25 படங்களுக்கும் மேல் இயக்கியவர் 75 படங்கள் வரை நடித்தவர்; திரைக்கதை மன்னன் என்ற பெயர் எடுத்தவர் கமலாலயத்தில் கால் வைத்த நேரம் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார். பழனிபாபா இவரைப் பற்றிப் பேசியதை எல்லாம் எடுத்து சமூக வலைத்தளங்களில் உலவ விட்டுவருகிறார்கள். மீம்ஸ்களில் கிழித்துத் தொங்கவிடுகிறார்கள். இந்த அளவு எதிர்வினை வந்த உடனேயே சுதாரித்து விட்டார் பாக்யராஜ். தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பெரிய சேதாரத்திலிருந்து தப்பித்திருக்கிறார். இந்த நேரத்தில் பாக்யராஜின் திரையுலக, அரசியல் பயணத்தைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.

பாக்யராஜுக்கு சினிமா கைகொடுத்த அளவுக்கு அரசியல் எப்போதுமே கைகொடுத்ததில்லை. இயக்குநராக நல்ல வெற்றியைக் கொடுத்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும் இவருக்குமான நெருக்கம் இவரை எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசாக்கியது. அப்போதும் கலையுலக வாரிசு என்றுதான் எம்.ஜி.ஆர். கூறினார். எம்.ஜி.ஆருக்கு பாக்யராஜின் பலம் தெரிந்திருக்கிறது என்று தான் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டியதிருக்கிறது. கலையுலக வாரிசு என்று அறிவித்த எம்.ஜி.ஆர் நடித்துப் பாதியில் கைவிடப்பட்ட படமான அண்ணா என் தெய்வம் என்னும் படத்தை அவசர போலீஸ் 100 என்ற தலைப்பில் உருவாக்கினார். அந்தப் படத்தைப் பெரிய வெற்றிப் படம் என்றோ பாக்யராஜின் முத்திரைப் படமென்றோ சொல்லிவிட முடியாது. அவரது எம்.ஜி.ஆர். ஆசையைத் தணித்துக்கொண்ட படம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கே. பாக்யராஜின் திரைக்கதையில் நாயகர்கள் முட்டாள்தனத்துடன் புத்திசாலித்தனமும் கொண்டவர்களாக இருந்தார்கள். அந்த வேடங்களில் எல்லாம் அவரே நடித்திருந்தார். ஆகவே, மக்களின், குறிப்பாகப் பெண்களின் விருப்பத்துக்குரிய நடிகராகவும் அவர் இருந்தார்.

பொதுவாக, கே. பாக்யராஜின் திரைக்கதையில் நாயகர்கள் முட்டாள்தனத்துடன் புத்திசாலித்தனமும் கொண்டவர்களாக இருந்தார்கள். அந்த வேடங்களில் எல்லாம் அவரே நடித்திருந்தார். ஆகவே, மக்களின், குறிப்பாகப் பெண்களின் விருப்பத்துக்குரிய நடிகராகவும் அவர் இருந்தார். பெரிதாக எல்லை மீறாத அவரது இரட்டை அர்த்தப் பேச்சுக்குப் பெரிய ரசிகர் கூட்டமிருந்தது. அவரைச் சிறந்த கதாநாயக நடிகர் என்று சொல்லவே முடியாது. அவரது நடனம் இப்போதும் பலரால் கேலிசெய்யப்படுவதைக் காண முடியும்.

ஆனாலும் வெற்றிகரமான நாயக நடிகராகப் பல வெற்றிகளைக் கொடுத்தவர். காதல், மண வாழ்க்கை தொடர்பான விஷயங்களை எடுத்துக்கொண்டு அதில் பாலியல் ரசம் சொட்டும் முருங்கைக்காய் சமாச்சாரங்களைக் கலந்து சிரிக்கவைக்கும் வகையில் ஒரு திரைக்கதையை உருவாக்கிப் படம் பார்ப்பவரை அட எனச் சொல்லவைத்துவிடுவதுதான் பாக்யராஜின் வெற்றிச் சூத்திரம். ஏராளமான ஹாலிவுட் படங்களைப் பார்த்து அவற்றின் பாதிப்பில் பல படங்களை உருவாக்கினார். ஆனால், எதுவுமே அப்பட்டமான காப்பி என்று சொல்லிவிட முடியாது. படம் பார்த்த பாதிப்பில் நம்மூருக்குத் தகுந்தாற்போல் கதை, திரைக்கதை உருவாக்கி அதை அசல் படமாக்கித் தந்தார். கதை விவாதம் வழியே ஒரு வெற்றிகரமான திரைப்படத்தை உருவாக்கும் ரகசியம் அறிந்தவராக பாக்யராஜ் இருந்தார்.

பாரதிராஜாவின் சீடராகத் திரைத்துறையில் நுழைந்தவர் பாக்யராஜ். 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராகவும் துணை நடிகராகவும் பணியாற்றியிருப்பார். பாரதிராஜாவின் நிபுணத்துவம் இயக்கத்தில் என்றால் பாக்யராஜின் தனித் திறன் திரைக்கதையில்தான். பாக்யராஜின் திரைக்கதைத் திறன்தான் அவரை இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஒருவராக்கி வைத்திருந்தது. அவர் இயக்கிய முதல் படம் 1979இல் வெளியான சுவரில்லாத சித்திரங்கள். கிட்டத்தட்ட 1995வரை அவரது காலகட்டம். 1995இல் வெளியான ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரிக்குப் பிறகு அவரது இயக்கத்தில் வந்தவை எல்லாம் சும்மா ஒப்புக்கு வந்தனவே தவிர ஒரு படம்கூடத் தேறாது. அந்தக் காலகட்டத்தில் தப்பித்த படம் என சொக்கத்தங்கத்தைத் தான் சொல்ல இயலும். மேலும் அப்போது அவர் நடிப்புக்குத் தாவிவிட்டார்.

அவர் இயக்கிய படங்களில் அவரது பெயரைச் சொல்லும் படங்கள், மௌனகீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், சுந்தர காண்டம், ராசுக்குட்டி, வீட்ல விஷேசங்க ஆகியவை தாம். இயக்காவிட்டாலும் டைரக்ஷன் மேற்பார்வை என டைட்டில் போட்டு வேலைசெய்த படம் இது நம்ம ஆளு. அதில் ஒரு பார்ப்பனப் பெண்ணுக்கும் நாவிதப் பையனுக்குமான காதல் தான் படத்தின் மையம். ஒருவேளை படம் எதுவும் சிக்கலைச் சந்தித்தால் எப்படிச் சமாளிப்பது என்று யோசித்துதான் பாலகுமாரனை இயக்குநராகப் போட்டிருந்தார். அப்படியெல்லாம் சமோஜிதமாகச் செயல்பட்டவர் தான் இப்போது பாஜக தலைமை அலுவலகத்துக்குப் போய் ஏடாகூடமாகப் பேசி வம்பை விலைகொடுத்து வாங்கியிருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசாக பாக்யராஜை ஏற்றுக்கொண்ட தமிழக மக்கள் அவரது அரசியலைக் கிஞ்சித்தும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை.

ஏற்கெனவே பாக்யராஜிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து பாம்குரோவ் ஹோட்டலுக்குச் சில நாள்கள் போய்வந்ததைப் பற்றி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா நூலில் எழுதியிருப்பார் என ஞாபகம். பின்னர் அவர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராகப் புன்னகை மன்னன் படத்தில் பணியாற்றினார். அவரால் இயக்குநராக வெற்றியடைய முடியவில்லை. ஆனால், வசனகர்த்தாவாகத் திரையில் வெற்றியைச் சம்பாதித்தார். எழுத்தாளரான பாலகுமாரன் இயக்க ஆசைப்பட்டது போல், இயக்குநரான பாக்யராஜ் எழுத்தில் கொண்ட ஆசையில் பாக்யா என ஒரு வார இதழைத் தொடங்கி நடத்துகிறார். இதில் பாக்யராஜின் பதில்கள் பெயர் பெற்றவை.

இயக்கம் போக அவரை அந்தஸ்துக்குரிய ஆசனத்தில் அமர்த்திய படம் அவரது திரைக்கதையில் வந்த ஒரு கைதியின் டைரி. இதை இந்தியில் ஆக்ரி ரஸ்தா என அமிதாப்பை வைத்து உருவாக்கி வெற்றிபெற்றார். தமிழில் வெளியான வெற்றிப் படங்களை இந்திக்குக் கொண்டுசெல்லும் பாணியைத் தொடங்கிவைத்தவர் என இவரைச் சொல்லலாம். மற்றபடி, பாக்யராஜ் 1995ஆம் ஆண்டிலேயே இயக்குநராக சரியத் தொடங்கிவிட்டார். அவரது ஆதிக்கம் காலாவதியாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ஆனால், இவ்வளவு காலம் தாக்குப் பிடித்தார் என்றால் அதற்குக் காரணம் தொடக்க காலத்தில் அவர் அடைந்த வெற்றி. அந்த வெற்றியைக் கொண்டு நடிகராக வாய்ப்புக் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்து காலத்தை ஓட்டினார். மணிவண்ணன் போல் தவிர்க்க இயலாத நடிகராகவெல்லாம் பாக்யராஜ் இருந்ததில்லை. ஏதோ ஒரு குணச்சித்திர வேடம். அதற்கு அறியப்பட்டவராக இருந்தது அவருக்கு அனுகூலமாக இருந்தது. சினிமாவும் இல்லாதபோது, டிவியில் பணியாற்றிக்கூட வாழ்வை நடத்திவந்தார். இதுதான் அவரது சினிமா பயணம்.

அரசியல் பயணமோ எம்.ஜி.ஆர். காலத்துக்குப் பிறகுதான் தொடங்கியது. எம்.ஜி.ஆர். மறைந்த இடைவெளியைப் பயன்படுத்தி எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற ஒரு கட்சியை 1989இல் தொடங்கி நடத்தினார். எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசாக பாக்யராஜை ஏற்றுக்கொண்ட தமிழக மக்கள் அவரது அரசியலைக் கிஞ்சித்தும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. பின்னர் கட்சியைக் கலைத்துவிட்டார். ஜெ.ஜெயலலிதா காலத்தில் அதிமுகவுக்குப் போனார். அங்கேயும் அவர் பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. 2006ஆம் ஆண்டில் திமுகவில் சேர்ந்து, அந்தக் கட்சிக்காகப் பிரச்சாரத்துக்குப் போனார். அங்கேயும் தொடர்ந்து இருக்கவில்லை. திமுகவிலிருந்தும் வெளியேறினார். பின்னர் திரையுலகில் இயக்குநர் சங்கம் அது இதுவெனக் காலம் கடத்திவந்தார்.

தனது மகள் சரண்யா பாக்யராஜ் நடிக்க பாரிஜாதம் என ஒரு படம் எடுத்தார். மகன் சாந்தனு நடிப்பில் வேட்டிய மடிச்சு கட்டும், சித்து +2 ஆகிய படங்களையும் இயக்கினார். எல்லாமே பட்டியலில் இருக்கிறதே ஒழிய யாருடைய நினைவிலும் இல்லை. அவர் கடைசியாக இயக்கிய படம் சித்து +2தான். அதற்குப் பிறகு ஒரு படத்தையும் இயக்கவில்லை. அந்தப் படம் வெளியானது 2010இல்.

இந்த நிலையில்தான் பாஜகவிடம் வந்து சிக்கியிருக்கிறார் பாக்யராஜ். சினிமாவில் சம்பாதித்த பெயரைப் புதிய இந்தியா 2020 என்ற புத்தக வெளியீட்டில் தொலைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். பாக்யராஜைப் போன்ற திரைத் துறையில் பெயரைச் சம்பாதித்த ஆளுமைகள் இனிப் புதிதாக எந்தப் பெயரையும் சம்பாதிக்க இயலாது. ஏதாவது கோமாளித்தனத்தைச் செய்து பழைய பெயரைக் கெடுத்துக்கொள்ளாமல் இருந்தாலே போதும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival