Read in : English
ஓர் உயரமான மெலிந்த மனிதர் விலா எலும்புகள் தெரிய படுக்கையில் கிடக்கிறார்; அவரது இடது கால் லேசாக மடிந்து வலது கால் நோக்கிக் கிடக்கிறது. அந்த முதியவரைச் சுற்றி சமணச் செவிலியர்கள் கைகளில் மயிலிறகுச் சாமரங்கள் ஏந்திய வண்ணம் பிரார்த்தனை செய்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசிக்கு அருகே உள்ள விசாகாச்சார்யா தபோ நிலையத்தில் ஜே ஸ்ரீபாலனின் உயிர் மெல்ல ஒழுகிக் கொண்டிருக்கிறது; சல்லேகனை (சாந்தாரா அல்லது சாமடி மரணம்) என்னும் சமண மதப் பழக்கத்தின்படி உண்ணாநோன்பிருந்து உயிர்விடும் ஒருமுறை அது. ஏப்ரல் 3 ஆம் தேதியிலிருந்து அவர் மரணத்தை நோக்கி அவர் மௌனமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
திகம்பரர் பிரிவைச் சேர்ந்த தீவிரமான சமணரான ஸ்ரீபாலன் ஏப்ரல் 14ஆம் தேதியிலிருந்து உணவு சாப்பிடுவதையும் தண்ணீர் அருந்துவதையும் நிறுத்திக்கொண்டார். உணவையும், பின்பு நீரையும் துறப்பது ஒரு சமணருக்கு மரபு வழி மரணத்தின் இறுதி நிலையை அடைவதற்கு உதவும்.
திகம்பரர் பிரிவைச் சேர்ந்த தீவிரமான சமணரான ஸ்ரீபாலன் ஏப்ரல் 14ஆம் தேதியிலிருந்து உணவு சாப்பிடுவதையும் தண்ணீர் அருந்துவதையும் நிறுத்திக்கொண்டார். உணவையும், பின்பு நீரையும் துறப்பது ஒரு சமணருக்கு மரபு வழி மரணத்தின் இறுதி நிலையை அடைவதற்கு உதவும். இன்று ஏழாவது நாள்; அதனால் அவர் எந்நேரமும் ’சமாதி மரணம்’ அடையலாம் என்று சமண பண்டிதர்கள் நினைக்கிறார்கள்.
தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்கியல் ஆணையருக்குத் தனிச் செயலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஸ்ரீபாலனுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரநமூர் சொந்த கிராமம். “பணி ஓய்வு பெற்றபின்பு, சமண மதத்தின் முக்கிய கொள்கைகளின் படியே வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஜீவபந்து டி. எஸ். ஸ்ரீபால் என்னும் சமண சமூகச் சேவையாளரின் தீவிர அணுக்கத் தொண்டர் அவர். 91 வயது ஆனவுடன் துறவி வாழ்க்கை வாழ்வதற்கான நேரம் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார். விசாகாச்சார்யா தபோநிலையத்திற்குச் சென்று அவர் சல்லேகனை உறுதிமொழி எடுத்துக்கொண்டார்,” என்கிறார் சென்னையில் வசிக்கும் சமண பண்டிதர் கே. அஜிததாஸ். ஸ்ரீபாலனின் பெயர் ஸ்வத்மசக்காரா திகம்பர் சமணமுனி என்று மாற்றப்பட்டது. சல்லேகனை உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் சமணர்களுக்கான ஒரு நெறிமுறை அது. “முதலில் அவர் உணவு அருந்துவதை நிறுத்திக்கொண்டார். பின்பு ஏப்ரல் 14ஆம் தேதி முதல் தண்ணீரையும் அருந்துவதைத் துறந்தார். இதுதான் அவருடைய இறுதிக்கட்டம். மன ரீதியான, உடல் ரீதியான வீடு பேற்றிற்கான பயணம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது,” என்கிறார் அஜிததாஸ்.
சல்லேகனை என்பது சமணத்தில் மிகவும் மரியாதைக்குரிய ஒரு வழக்கம். பொருள்சார்ந்த வாழ்க்கையைத் துறந்தபின்பு அகிம்சை உலகத்திற்கு தனிமனிதனை அழைத்துச் செல்லும் ஒரு புனிதமான நோன்பு அது என்று அந்த இனத்து மக்கள் நம்புகிறார்கள். “சல்லேகனை ஒரு கருவி; உலக வாழ்க்கைக் கடலைத் தாண்டி பெயர்ந்து செல்ல அது உதவுகிறது,” என்கிறார்கள் பண்டிதர்களான ஜெயந்திலால் ஜெயினும், பிரியதர்ஷன் ஜெயினும். “உடல் ஒரு படகு; ஆன்மா படகோட்டி; உலக இருப்பு ஒரு கடல். ஞானிகள் இந்தக் கடலை ஆன்மீக உள்ளிருப்பு என்னும் ஆகப்பெரிய புனிதப் பயிற்சியின் வழியாக கடந்து செல்கிறார்கள். இந்தப் பயிற்சிதான் சல்லேகனை. மனிதவாழ்வின் நோக்கமே ஆன்ம விடுதலை; இந்த இறுதியான, ஆனந்தமயமான நிலையை அடைவதற்கு உதவும் மிகப்பெரிய கருவிதான் சல்லேகனை,” என்று “சல்லேகனையின் சாரம்: மரணிக்கும்போது ஜீவித்திருத்தல்,” என்ற நூலில் அவர்கள் எழுதுகிறார்கள்.
குறைந்தது 48 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 12 ஆண்டுகளுக்கு இந்தச் சல்லேகனை உறுதிமொழி எடுத்துக்கொள்வது தமிழ் திகம்பர பாரம்பரிய வழக்கம். இந்தக் காலகட்டத்தில் உலகைத் துறக்கும் செயல்முறையை எப்போது ஆரம்பிப்பது என்பதை உறுதிமொழி எடுத்தவர்கள் தீர்மானிக்கிறார்கள். உணவையும், நீரையும் துறந்தபின்பு ‘சமாதி மரணம்’ நிகழ்வதற்கு 30 முதல 35 நாட்கள் ஆகலாம்.
சமணத்தில் திகம்பரர், ஸ்வேதம்பரர் என்ற இரு பெரும் பிரிவுகள் உள்ளன. தமிழ் சமணர்கள் திகம்பரப் பிரிவைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழ் சமணர்கள் மொத்தம் சுமார் 26 ஆயிரம் பேர் இருப்பார்கள்.
சல்லேகனை என்பது ஓர் உச்சக்கட்ட தவம்; அது கர்மங்களைத் தீர்த்து வைக்கிறது என்கிறார்கள் ஜெயந்திலால் ஜெயினும், பிரியதர்ஷன் ஜெயினும். ”சல்லேகனையின் போது ஒருவர் மனம் சமச்சீர்வடைகிறது; உள்ளுக்குள் எல்லாம் அழிந்துபோகிறது; துறவு மனம் ஏற்படுகிறது; உள்ளார்ந்த ஆய்வு நிகழ்கிறது; சுயக்கட்டுப்பாடு, ஆழ்நிலைத் தியானம், பற்றற்ற தன்மை ஆகியவை உருவாகின்றன. உடல், உணவு, மருந்து, சமூகம் என்று எல்லாப் பொருள்சார்ந்த வாழ்க்கையினையும் துறப்பது மூலம் ஓர் அதீதமான அகவிழிப்பு உண்டாகிறது. சலேகனை வெறும் ஆத்மார்த்த வடிவம் மட்டுமல்ல; பொருளுணர்வையும் கர்மக் கட்டுத்தளைகள் எல்லாவற்றையும் வேரோடு கிள்ளியெறிவதற்கான மிகவும் சக்திவாய்ந்ததோர் ஆன்மிக உத்தி,” என்று அவர்கள் எழுதுகிறார்கள்.
ஜைனமதம் (ஜெயினிசம்) தமிழில் சமணம் என்றழைக்கப்படுகிறது; ஜைனர்கள் ‘சமணர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். சமணத்தில் திகம்பரர், ஸ்வேதம்பரர் என்ற இரு பெரும் பிரிவுகள் உள்ளன. தமிழ் சமணர்கள் திகம்பரப் பிரிவைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழ் சமணர்கள் மொத்தம் சுமார் 26 ஆயிரம் பேர் இருப்பார்கள்.
2017-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இதுவரை ஏழு ஆண் துறவிகள், ஆறு பெண் துறவிகள் உட்பட மொத்தம் குறைந்தது 18 சமணர்கள் சல்லேகனை மூலம் வீடுபேறு பெற்றிருக்கிறார்கள். மேலும் உயரும் இந்த எண்ணிக்கை இந்த மதத்தின் மீதான நம்பிக்கை திரும்பியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. “இந்த திகம்பரப் பிரிவைச் சேர்ந்த முதியவர்கள் பலர் சல்லேகனை உறுதிமொழி எடுக்க முன்வந்திருக்கிறார்கள். ஏனென்றால் உடலையும், ஆன்மாவையும் இந்தப் பொருள் சார்ந்த உலகத்திலிருந்து விடுவிக்க இதுதான் ஆகச்சிறந்ததோர் வழி என்று அவர்கள் நினைக்கிறார்கள். சமணர்கள் மேற்கொள்ளும் சல்லேகனைப் பழக்கத்தைத் தடைசெய்த ராஜஸ்தான் உயர்நீதி மன்றத்தின் ஆணையை உச்ச நீதிமன்றம் விலக்கியபின்பு சல்லேகனை நடைமுறை அதிகமாகியிருக்கிறது,” என்கிறார் அஜிததாஸ்.
Read in : English