Read in : English
சென்னை நகரில் உள்ள பல இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால், அன்றாடம் அந்தப் பகுதி வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். வேளச்சேரி ராம்நகர் வடக்கு பகுதியில் நான்கு தெருக்களை இணைக்கும் சந்திப்பு சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. “கடந்த 6 மாதங்களாக இந்தச் சாலை இப்படிதான் குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. மழைப்பெய்தால் இங்கு தண்ணீர் நிற்கும். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை” என்கிறார் அப்பகுதியில் உள்ள காய்கறி கடைக்காரர்.
அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஜான் பேசுகையில், கடந்த ஆண்டு பெய்த மழையின்போது குண்டும், குழியுமான இப்பகுதியில் தண்ணீர் தேங்கியது. அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு குண்டும் குழியுமான பகுதிகளை மட்டும் சிமெண்ட் கலவை கொண்டு நிரப்பினர். ஆனால், அடுத்த ஒரே மாத்தில் அந்த சிமெண்ட் கலவையும் பெயர்ந்து மீண்டும் பழையபடி குண்டும் குழியுமானது” என்றார். ”சாலையோரம் ஏதோ குழாய் இணைப்புக்காக பள்ளம் தோண்டினர். நடு ரோட்டிலும் ஏதோ பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. வேலை முடிந்ததும் அதை முறையாக நிரப்பவில்லை. அவர்களின் அலட்சியத்தால் இப்பகுத் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது” என கூறி சென்றார் அப்பகுதியில் சைக்கிளில் சென்ற வசந்தி என்ற பெண்.
சென்னை நகரில் உள்ள பல இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால், அன்றாடம் அந்தப் பகுதி வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்
வேளச்சேரி ராம் நகருக்கு அடுத்ததாக இருந்த தெருவில் சாலைகள் பெயர்ந்ததால் ஏற்பட்ட குழியில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதே சாலையின் நடுவில் மெட்ரோ குடிநீர் குழாய் இணைப்பிற்கான குழி தோண்டப்பட்டு ஒருவர் வேலைப்பார்த்து கொண்டிருந்தார். பள்ளமும், குண்டும், குழியுமான சாலையில் இரு சக்கர வாகனங்களும், கார்களும் சிரமத்திற்கிடையே சென்றன. இது குறித்து அங்கிருந்த பெட்டிக்கடை முன்பு நின்றிருந்த வைத்தியநாதன் என்ற முதியவர் பேசியபோது, 5 மாதங்களாக அந்த சாலைச் சந்திப்பில் பள்ளம் ஏற்பட்டிருப்பதாகவும், அதில் கீழே விழுந்து ஒரு சிலருக்கு அடிப்பட்டதாகவும் தெரிவித்தார். அதே தெருவில் அந்த வார்டு கவுன்சிலர் இருக்கும் நிலையில் சாலையின் நிலை இப்படி இருப்பதாக வருத்ததுடன் கூறினார். அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளின் குழாய் இணைப்பிற்காகவும் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு சாலை சேதமடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
178வது வார்டில் உள்ள விஜயநகர் முதலாவது பிரதான தெருவுக்கு வரும் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அங்கிருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர். பிரதான சாலையில் இருந்து ஒன்றாவது தெருவுக்கு திருப்பும் சந்திப்பு சறுக்கலாக இருப்பதுடன், மேடு பள்ளத்துடன் காணப்பட்டது. அதேபோன்று முதலாவது தெருக்கு வாகனங்கள் திருப்பும் சாலையின் மத்தியில் கழிவுநீர் கால்வாயின் மேற்பகுதி மூடி சரியாக மூடப்படாமல் உள்ளது என்கிறார் அந்தப் பகுதி ஆட்டோ ஓட்டுநர் பன்னீர்செல்வம்,
”கடந்த 2 ஆண்டுகளாக விஜயநகர் இணைப்பு சாலை பள்ளமாக இருப்பதால் தினமும் இரண்டு பேராவது கீழே விழுந்து விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். லாரி, கார், போகும் போது இருசக்கர வாகனங்கள் நிலை தடுமாறி விபத்து ஏற்படுகின்றன. சாலையை சீரமைக்க பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டோம். இன்று காலைகூட ஒருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விட்டார். சாலையில் நடுவே கழிவுநீர் கால்வாயின் மூடி சரியாக பொருத்தாமல் உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் அதில் மோதி விபத்து ஏற்படுகிறது. யாருக்காவது அடிப்பட்டால் மாநகராட்சியில் இருந்து வந்து பார்த்து விட்டு மட்டும் செல்வார்கள். மற்றபடி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கும் ஒவ்வொரு முறை அவர்களிடம் முறையிட்டுக் கொண்டே இருக்கிறோம்” என வருத்தத்தை கூறினார்.
வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் சாலையே சரிவர இல்லாமல் கற்கள் பெயர்ந்து காணப்பட்டன. சாலையின் முன்பகுதியில் டீ கடை வைத்திருக்கும் பெண்ணிடம் பேசிய போது, “கடந்த 10 ஆண்டுகளாக இங்கு சாலை போட்டதே இல்லை. இப்பகுதி இப்படித்தான் சாலையில் கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்வதே சிரமமாக இருக்கும். மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து விபத்துக்கு ஆளாகிறார்கள். இனியாவது இங்கு சாலை போட்டால் நன்றாக இருக்கும்” என்றார்.
வெங்கடேஸ்வரா நகரில் இருந்து கிண்டி செல்லும் பிரதான சாலையின் ஓரம் குழாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூன்றடி ஆழத்தில், இரண்டடி அகலத்தில் உள்ளது. குழாய் பணி முடிந்தும் சாலையை சீரமைக்கவில்லை. இதனால் இந்த சாலையில் இரவில் வாகனத்தில் செல்வோர் விபத்துக்கு ஆளாக நேரிடுகிறது என்று டீக்கடைக்கு வந்த இளைஞர் கூறினார்.
கே.கே. நகர் அழகிரிசாமி சாலையை சாலையென்றே கூற முடியாத அளவுக்கு பழுதடைந்துள்ளது. சாலையின் நடுவே இருக்கும் குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டதால், சாலை இன்னமும் சீரமைக்கப் படாமல் உள்ளது. அதனால் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாதபடி உள்ளது.
கே.கே. நகர் அழகிரிசாமி சாலையை சாலையென்றே கூற முடியாத அளவுக்கு பழுதடைந்துள்ளது. சாலையின் நடுவே இருக்கும் குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டதால், சாலை இன்னமும் சீரமைக்கப் படாமல் உள்ளது. அதனால் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாதபடி உள்ளது. மற்றொரு பக்கம் சாலையின் திறந்த வெளியாக உள்ள கழிவுநீர் கால்வாயின் முகப்பு பகுதி விபத்தை ஏற்படுத்தி விடுவதாகவும், அதனால், வாகன ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில் அங்கு கற்களையும், துணிகளையும் வைத்துள்ளதாகவும் ஆட்டோ ஓட்டுநர் கூறினார். அங்கு வார்டு கவுன்சிலர் வசித்து வந்தாலும் சாலைக்கு நல்லக்காலம் வரவில்லை என்ற ஓட்டுநர், அடிக்கடி வந்து பார்வையிட்டு செல்லும் அதிகாரிகளால் கடந்த 5 மாதங்களாக எந்த முன்னேற்றமும் இல்லை என்றார்.
வளசரவாக்கத்தில் திரைப்பட நடிகர் நாசர் வீட்டிற்கு செல்லும் சாலை பழுதடைந்து நடப்பதற்குக்கூட தகுதியற்றதாக காணப்பட்டது. சாலையின் ஓரம் தையல் கடை வைத்திருக்கும் முதியவர், “நான் இங்கு வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இங்கு சாலை போட்டு நான் பார்த்ததில்லை. இப்பகுதியில் தார் சாலை இல்லாமல் கற்கள் பெயர்ந்தும், பள்ளமாக காணப்படுவதால் அடிக்கடி இரு சக்கர வாகனங்களில் வருவோர் கீழே விழுந்து கை, கால்களில் சிராய்ப்புகளுடன் செல்வார்கள். சினிமா பிரபலங்கள் இருக்கும் பகுதி இப்படி மோசமாக உள்ளது. அவர்களும் இதே வழியாக தான் கார்களில் செல்வார்கள். சாலை பழுது குறித்து இதுவரை யாரும் வாய்த்திறந்து கேட்டது கிடையாது. ஒரு அதிகாரியும் வந்து பார்த்ததும் இல்லை” என்றார்.
வளசவரவாக்கம் சௌத்ரி நகர் பிரதான சாலையில் நீண்ட தூரத்திற்கு குறிப்பிட்ட ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. அவ்வழியாக இரு சக்கர வாகனம் முதல் லாரி வரை அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. சாலையின் நடுவே குழாய் பதிப்பதற்காக நீண்ட தூரம் தோண்டி வைத்த பள்ளம், மழையால் ஏற்பட்ட குண்டும், குழிகள், சாலையின் முன்பகுதியில் மூடப்பட்டாமல் இருந்த கழிவுநீர் கால்வாய் குழாய் இந்தப் பிரதான சாலையை போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லாமல் ஆக்கியுள்ளது. சாலையின் நடுவே இருக்கும் பள்ளத்தால் அடிக்கடி வாகன ஓட்டிகள் தடுமாறி விழுவதாக அப்பகுதியில் ஆட்டோமொபைல் கடை வைத்திருக்கும் சேகர் தெரிவித்தார். அதே வழியாக கல்லூரி பேருந்துகள் செல்வதாகவும், ஒருசில நேரங்களில் பள்ளங்களில் வாகனங்கள் இறங்கி ஓட்டுநர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றார்.
கிண்டியின் கிழக்கு காமகோடி நகர் சாலையென்றே கூற முடியாத அளவுக்கு ஜல்லி, மண் பெயர்ந்து பழுதடைந்து காணப்பட்டது. ஆறு மாதத்திற்கு மேலாக சீரமைக்கப்படாத இந்த சாலையை சீரமைப்பதற்காக நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரியும் வரவில்லை என அப்பகுதியினர் கூறி சென்றனர். ஆழ்வார் திருநகர், வள்ளுவர் கோட்டம் வாட்டர் டேங்க் பகுதிகளிலும் சாலைகள் பழுதடைந்து காணப்பட்டன.
வட சென்னையின் சூளை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு பகுதிகளிலும் சாலைகளில் நிலை மோசமாகவே உள்ளது. ஆறு மாதங்கள் முதல் இரண்டாண்டுகள் வரை சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன என்பதே பெரும்பாலான மக்களின் குரலாக உள்ளது. இதேபோன்று, சென்னை நகரில் ஏராளமான சாலைகள் பழுதடைந்து காணப்படுகிறது. பழுதடைந்த சாலைகளைச் சீரமைப்பதில் புதிதாகத் தேர்ந்தெடுக்கபட்ட சென்னை மாநகராட்சி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. சாலை பராமரிப்பில் தீவிர கவனம் செலுத்துமா மாநகராட்சி?
Read in : English