Read in : English
தமிழ்நாட்டில் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ் இருக்க வேண்டும். அத்துடன், அவரவர் வீட்டுக்கு அருகே உள்ள பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் உரிமையை வழங்கும் அருகமைப் பள்ளிக் கல்வி முறையையும் கொண்டுவர வேண்டும். இதுபோல முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து தமிழக அரசு நியமித்துள்ள மாநிலக் கல்விக் கொள்கை குறித்த நிபுணர் குழு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.
மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் பொதுவான ஒத்திசைவு பட்டியலில் கல்வி இருக்கிறது. எனவே, மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இருக்கிறது. இந்த நிலையில், மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி த. முருகேசன் தலைமையில் நியமித்துள்ள நிபுணர் குழு கவனத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பிரின்ஸ் கஜேந்திரபாபு நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:
பள்ளிக்கல்வி, உயர்கல்வி என்று பிரித்துப் பார்க்கக் கூடாது. பள்ளிப் படிப்பு என்பது உயர்கல்வி படிப்பதற்கான ஏணி. நிர்வாக வசதிக்காக தனித்தனி துறைகளாகப் பிரிந்திருந்தாலும்கூட இவை இரண்டையும் தனித்தனிப் பிரிவுகளாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இந்தப் பிரிவினைதான் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை ஒரு தகுதியாகக் கொண்டுவதற்குக் காரணமாகி விடுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
தற்போதுள்ள பத்தாண்டு பள்ளிப் படிப்பு, இரண்டு ஆண்டு மேல்நிலைப் பள்ளிப் படிப்பு, மூன்று ஆண்டு கல்லூரிப் படிப்பு என்ற முறையை மாற்றக்கூடாது.
குழந்தைகளின் 5 வயதுக்கு முன்பு முறைசார் கல்வியைக் கொண்டுவரக்கூடாது. 3 வயதுக்கு முன் உள்ள குழந்தைகளுக்கான முன்பருவக் கல்வியை முறைசாராக் கல்வியாகவே பார்க்க வேண்டும். தற்போதுள்ள பத்தாண்டு பள்ளிப் படிப்பு, இரண்டு ஆண்டு மேல்நிலைப் பள்ளிப் படிப்பு, மூன்று ஆண்டு கல்லூரிப் படிப்பு என்ற முறையை மாற்றக்கூடாது. அதன் பிறகு, தற்போதுள்ள இரண்டு ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்பு தொடரவேண்டும்.
பள்ளிகளில் பயிற்றுமொழியாக தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாகக் கொண்டு வர வேண்டும். தற்போதைய சூழலைக் கருத்தின் கொண்டு, ஆங்கிலத்தையும் ஒரு பாடமாகக் கற்றுத்தர வேண்டும். தமிழ்நாட்டில் பிறமொழியை தாய்மொழியாகக் கொண்டுள்ளவர்கள், அவர்களது தாய்மொழியில் கற்கச் செய்வதுடன் தமிழையும் கற்கச் செய்ய வேண்டும். மாணவர்களுக்குக் கூடுதல் மொழியைக் கற்றுத்தருவதால் பலன் ஏதுமில்லை. மாணவர்கள் எந்த மொழியைக் கற்பதை அவர்களது விருப்பத்துக்கு விட்டுவிட வேண்டும்.
பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை எந்த வடிவத்திலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சி என்ற பெயரில் தொழிற்பயிற்சியை மாணவர்களிடம் திணிக்கும் முயற்சியைக் கொண்டுவரக்கூடாது.
பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள், அந்தத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே கல்லூரிகளில் சேர்க்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு மூலம் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது. பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள், அந்தத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே கல்லூரிகளில் சேர்க்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
பொதுப் பள்ளிக் கல்விமுறையைக் கொண்டு வருவது என்பது முக்கியமானது. அத்துடன், அருகமைப் பள்ளி முறையைக் கொண்டுவதற்கான வழிமுறைகளையும் காண வேண்டியது அவசியம். அத்துடன் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமனம் அவசியம். இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு, குறிப்பாக தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதற்கான சூழ்நிலை ஏற்படும்.
மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களும் சமூக சிக்கல்களையும் வரலாற்றையும் தெரிந்துகொள்ளும் வகையில் சமூக அறிவியல் பாடத்தை அவர்களது பாடத்திட்டத்தில் சேர்த்துக் கற்றுத்தர வேண்டும்.
அரசுக் கல்லூரிகளில் சுயநிதிப் படிப்புகளைத் தொடங்கி நடத்தக்கூடாது. அரசுப் பள்ளிகளையும் அரசுக் கல்லூரிகளையும் வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து நடவடிக்கைகள் தேவை. நமது தேவைக்கு ஏற்ப புதிய அரசுக் கல்லூரிகளைத் தொடங்கி தரத்துடன் நடத்த வேண்டும். அரசுக் கல்லூரிகளுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒன்றிய அரசு உரிய நிதியை வழங்காவிட்டால்கூட, அரசுக் கல்வி நிறுவனங்களுக்குப் போதிய நிதியைத் திரட்ட தகுந்த நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதுடன் அதனைச் செயல்படுத்தற்கான நடவடிக்கைகளும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
Read in : English