Read in : English
“தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்நிலைக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ என்று தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ள நிலையில், மாநில அரசின் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி த. முருகேசன் தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டுக்கான புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் சமூக, பொருளாதார நிலைகளை ஆராய்ந்து, தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்த நிபுணர் குழுவின் தலைவராக இருந்தவர் நீதிபதி முருகேசன்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு நியமித்த நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் இடம் பெற்றிருந்த முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர்நேசன் இந்தக் குழுவிலும் இடம் பெற்றுள்ளார். மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கையையில் உள்ல பாதகமான் அம்சங்கள் குறித்து, ஆதாரப்பூர்வமான விவரங்களுடன் புத்தகம் ஒன்றையும் எழுதியவர் அவர்.
மேட் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட் கம்ப்யூட்டர் சயின்ஸ் முன்னாள் பேராசிரியர் ராமானுஜம், மாநிலத் திட்டக் குழு உறுப்பினர்கள் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம. சீனுவாசன், யுனிசெப் அமைப்பின் முன்னாள் எஜுக்கேஷன் ஸ்பெஷலிஸ்ட் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், உலக சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, பள்ளி முதல்வர் துளசிதாசன், பேராசிரியர் ச. மாடசாமி, நாகப்பட்டினம் கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.பாலு, அகரம் பவுண்டேஷனைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவானது தமிழ்நாட்டுக்கான புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய அறிவியல் நாளை பழைமை அடைவது திண்ணம். எனவே, மாணவர்கள் வருங்காலத்தின் அறிவியல் விடியலைக் காண்பதற்கேற்ப, கல்வி வளர்ச்சிக்கேற்ப புதிய பரிமாணங்களில் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது
“அறிவை விரிவு செய்; அறிவியல் புதுமை செய்!’’ என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அந்த வகையில், வருங்காலத் தலைமுறைகளின் அறிவை விரிவு செய்து வளர்த்திடவும்; அறிவியல் புதுமைகளைப் பூத்திடச் செய்திடவும்; இளந்தளிர்களின் உள்ளங்களில் புதிய புதிய சிந்தனைகளை விதைத்து வளர்த்திட வேண்டியதும் நமது இன்றியமையாத கடமை என்பதை உணர்ந்து, இதுவரை, நாட்டில் பல்வேறு கல்விக் கொள்கைகள் உருவாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றன. எனினும், இன்றைய அறிவியல் யுகம் நொடிதோறும் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒருசில ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட எண்ணமுடியாத சில புதுமைகள், இன்றைக்கு மலர்ந்து அறிவு மணம் பரப்புகின்றன. இன்றைய அறிவியல் நாளை பழைமை அடைவது திண்ணம். எனவே, மாணவர்கள் வருங்காலத்தின் அறிவியல் விடியலைக் காண்பதற்கேற்ப, கல்வி வளர்ச்சிக்கேற்ப புதிய பரிமாணங்களில் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது என்று இந்தக் குழுவின் அவசியம் பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சமூக, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிச் சாதிப்பதற்கான மிகவும் முக்கியமான சாதனம் கல்வி என்பதை உணர்ந்து, அதன் வளர்ச்சிக்காக, குறிப்பாக மாணவ மாணவியர்களுக்கு சலுகைகள் வழங்குவதிலும், உதவிகள் புரிவதிலும்; தமிழகத்தின் இளையசக்திகள் அனைத்தும் உயர்கல்வியை அடைந்தாக வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு முனைப்போடு செயல்பட்டு வருவதாக தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவான ஒத்திசைவுப் பட்டியலில் கல்வி இருக்கிறது. எனவே, கல்வித்துறையில் மாநில அரசுக்கும் பங்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதேசமயம், நீட் விலக்கு சட்ட முன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டாலும்கூட, அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படாமலும் தமிழக ஆளுநரிடம் கிடப்பில் போட்டப்பட்டுள்ளது.
ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடத்தப்படும் ஐஇஇ அட்வான்ஸ்ட் போன்ற சில நுழைவுத் தேர்வுகள், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்தப்படாமல், ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே குறித்து கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், நேஷனல் மெடிக்கல் கமிஷன், நேஷனல் டெஸ்டிட் ஏஜென்ஸி போன்ற மத்திய அரசு அமைப்புகள் மூலம் கல்வியில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்தி வருவதையும், அதன் தொடர்ச்சியாக, மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கை இருப்பதையும் சில கல்வியாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், மாநில அரசு உருவாக்க இருக்கும் கல்விக் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பொதுக் கல்வி முறை, அருகமைப் பள்ளிக் கல்வி முறை போன்றவை குறித்தும் பள்ளிக் கல்வியில் செயல்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்தும் மாநில அரசின் கல்விக் கொள்கையில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அத்துடன், உயர்கல்வியில் மாநில அரசின் உரிமையை நிலைநாட்டும் வகையில், மாநில மக்களின் நலனுக்கு ஏற்ற வகையில் மாநிலக் கல்விக் கொள்கை இருக்க வேண்டியது அவசியம்.
இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள கல்வியாளர்கள், மத்திய அரசின் புதியக் கல்வியில் உள்ள பல்வேறு குறைகளைத் தொடர்பாக சுட்டிக்காட்டி வருபவர்கள். அதுபோன்ற, குறைபாடுகளைக் களைந்து, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய கல்வியாக மாநில அரசின் கல்விக் கொள்கை இருக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.
Read in : English