Read in : English
அனைத்து துறைகளிலும் இணைய தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. இணையத் தொடர்பு இன்றி அன்றாட வாழ்வை நகர்த்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவம், விண்வெளி மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இணையவழி தகவல் தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்றுவருகிறது.
இந்த தொழில் நுட்பத்தை அமல்படுத்தும் போது பெரும் சவாலாக முன் நிற்பது, சைபர் கிரைம். இதை முறியடிக்க முக்கிய தேவை தொழில்நுட்ப அறிவுதான். சைபர் கிரைம் பாதிப்பிலிருந்து சாதாரண மக்களைப் பாதுகாக்க, பல்வேறு மென்பொருள்கள் உருவாக்கவேண்டிய அவசியம் உள்ளது.
இது சார்ந்த உலக அளவில் மாறிவரும் தொழில் நுட்பம், ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் பெறுவது முக்கியமானது. தகவல் தொழில்நுட்ப துறையில் பன்னாட்டளவில் உருவாகிவரும் வேலைவாய்ப்பு பற்றியும், அதற்கு தேவையான தொழில்நுட்ப அறிவை பெறுவது பற்றியும் தகவல்களை பறிமாறுவதும் இன்றியமையாத தேவையாக உள்ளது. உலகெங்கும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் தமிழ் மாணவர்கள், தங்கள் அரிய கண்டுபிடிப்புகளால் இது போன்ற தொழில்நுட்ப உலகில் பிரகாசித்து வருகின்றனர். முக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்து தொழில் துறையில் மிளிர்ந்துள்ளனர்.
இது போன்ற தொழில்நுட்பத் துறையில் உலகம் முழுதும் முன்னிலை வகிக்கும் தமிழரை இணைக்கும் வகையில், முயற்சி எடுத்து வருகிறது ஓர் அமைப்பு. இது உலக அளவில் தகவல் தொழில்நுட்பத்தில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு, ஆதாரம் மற்றும் உதிரித் தொழில் சார்ந்த தகவல்களை பகிரும் விதமாக கருத்தரங்கம் ஒன்றை சென்னையில் நடத்த உள்ளது. வரும் ஜூன் இரண்டாவது வாரம் இரண்டு நாட்கள் இது நடக்கிறது.
உலகம் முழுதும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் தமிழர்களை அடையாளம் கண்டு, அவர்களின் கண்டுபிடிப்பு, படைப்புகள் அறிமுகம் செய்யப்படும். உலக அளவில் உருவாகிவரும் வேலை மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் பற்றி, விழிப்புணர்வு ஊட்டும் வகையிலும் நிகழ்வுகள் அமையும்.
கருத்தரங்கத்தின் நோக்கமாக பின் வரும் கருத்துருக்கள் வகுக்கப்பட்டுள்ளன. உலகம் முழுதும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் தமிழர்களை அடையாளம் கண்டு, அவர்களின் கண்டுபிடிப்பு, படைப்புகள் அறிமுகம் செய்யப்படும். உலக அளவில் உருவாகிவரும் வேலை மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் பற்றி, விழிப்புணர்வு ஊட்டும் வகையிலும் நிகழ்வுகள் அமையும்.
அன்றாட வாழ்க்கைக்கு உதவும் மென்பொருட்களை உருவாக்குவது தொடர்பான, அடிப்படை அறிவு மற்றும் விவாதம் நடத்தப்பட உள்ளது. கருத்தரங்கில் பல நாட்டுத் தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கணினி தயாரிப்பு நிறுவனங்கள், மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகங்கள், இணையக் கல்வி கழகங்கள், அரசு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்வேறு மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்கள், கணினி உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனங்கள், மென்பொருள் பாதுகாப்பு மற்றும் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் என்ற தலைப்பில் காட்சி அரங்கம் ஒன்றும் அமைய உள்ளது. இணைய வழியில் தமிழ்மொழி பயன்பாட்டை மேம்படுத்தி, பல நாடுகளிலும் வாழும் தமிழர்களை இணைக்கும் விதமாக, இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
பெருகிவரும் வேலைவாய்ப்பு குறித்து, பல நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள், 10 அமர்வுகளில் உரையாற்ற உள்ளனர். தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் பள்ளிகளில் இறுதி வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் வழிகாட்டியாக இந்தக் கருத்தரங்கம் அமையும். உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், கருத்தரங்கில் பங்கேற்கலாம் என, உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவரும், பன்னாட்டு தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கருத்தரங்க (International tamil information technology research conference) நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு தலைவருமான செல்வகுமார் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தரங்கு தொடர்பாக தகவல் பெற, ititrc.com@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
Read in : English