Read in : English

ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் சமண மதம் மிகவும் பிரபலம். அதற்கு மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கவனிக்கப்படாமல் கிடக்கும் சமணச் சின்னங்களே சாட்சி. 2018இல் இரண்டு சமண அறிஞர்கள் மாநிலத்தில் உள்ள 128 சமணக் கோயில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் பற்றி வழிகாட்டிப்புத்தகம் ஒன்றை வெளியிட்டனர். கே. அஜிததாஸ், ராஜேந்திர பிரசாத் என்ற அந்த இரண்டு அறிஞர்கள் வெளியிட்ட “தமிழ்நாடு திகம்பர் சமணக் கோயில் சுற்றுலா வழிகாட்டி” என்ற புத்தகத்தில் சமணக் கோயில்கள் பற்றிய விவரங்களும் அங்கே எப்படிச் செல்வது என்பது பற்றிய வழிகாட்டுதல்களும் இருக்கின்றன. அந்த ஸ்தலங்கள் பற்றிய சுயபிரக்ஞை சமணர்களுக்கு இல்லை என்பதுதான் அந்த அறிஞர்ளை இந்தப் புத்தகம் எழுதத் தூண்டியது.

தமிழ்நாட்டில் 130-க்குமேல் சமண நினைவுச்சின்னங்களும் கோயில்களும் உண்டு. ஆனால் அவற்றில் 80 சதவீதம் கவனிப்பின்றியும் சூறையாடப்பட்டும் சிதிலமடைந்தது அழிவுநிலையிலும் இருக்கின்றன. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கவனிப்பில் இருக்கும் சமண ஸ்தலங்களில் சுற்றுலாப்பயணிகளுக்கு ஓரளவு வசதிகள் உண்டு. ஆனால் தமிழ்நாடு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பவை உளபட மற்ற ஸ்தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது.

புத்த ஸ்தலங்களிலும் இதே நிலைமைதான். சோழ மண்டலத்தில் பூம்புகாரிலும், நாகப்பட்டினத்திலும் புத்தவிகார்கள் இருந்ததாக தஞ்சாவூரில் இருக்கும் புத்தமத அறிஞர் பி.ஜம்புலிங்கம் கூறுகிறார். நாகப்பட்டினத்து வெண்கலப் புத்தசிலைகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயிலிலும், தாராசுரத்தில் ஐராவதேஸ்வரர் கோயிலிலும், திருவிடைமருதூரில் மஹாலிங்கசுவாமி கோயிலிலும் புத்த சிற்பங்கள் காணப்படுகின்றன. கும்பகோணத்தில் கும்பபேஸ்வரர் கோயில் கல்வெட்டு ஒன்று, 16-ஆம் நூற்றாண்டுவரை ஒரு புத்த கோயில் இருந்ததாகச் சொல்கிறது என்று கூறுகிறார் ஜம்புலிங்கம். இன்று புத்த கோயில்கள் பெருஞ்சேரியிலும் (மயிலாடுதுறை), புத்தமங்கலத்திலும் (நாகபட்டினம்) காணப்படுகின்றன. இன்றும்கூட சில கோயில்களில் புத்தர் சிலை வழிபாடுகள் உள்ளன. இதெல்லாம் ஏராளமானவர்களுக்குத் தெரிவதில்லை. காரணம் பிரக்ஞையின்மை.

பெருஞ்சேரியில் புத்தர் சிலை

இதற்கிடையில், “தமிழ்நாட்டில் பல்வேறு புகழ்பெற்ற சமண, புத்த ஸ்தலங்கள் உள்ளன. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், கரூர், மதுரை போன்ற மாவட்டங்களில் இருக்கும் இந்த ஸ்தலங்களில் தனியார் கூட்டுறவோடு உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா வசதிகள் உருவாக்கப்படும்.” என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.

அமைச்சர் தந்திருக்கும் வாக்குறுதி , இத்துறையில் உள்ள அறிஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் இந்த வாக்குறுதி எப்படி நிறைவேற்றப்படும் என்பதுதான் அவர்களின் கவலை.

கழுகுமலை சிற்பங்கள்

ஏற்கனவே தன்கட்டுப்பாட்டில் இருக்கும் சமண நினைவுச் சின்னங்களைப் பேணிக்காக்க அரசு போராடிக் கொண்டிருக்கும்போது, தனியாரோடு சேர்ந்து அது எப்படி உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா வசதிகளை உருவாக்கப் போகிறது என்று அவர்கள் கேட்கிறார்கள். “திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அது எப்படி நிறைவேறப்போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலையில் இருப்பது போன்ற சமண ஸ்தலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. பிரதானமான இந்த சமண ஸ்தலத்தில் தீர்த்தங்கரர்களின் சிற்பங்களின் அருகே கீழிருக்கும் ஆதிகாலக் குகை இப்போது வௌவால்களின் வீடாகச் சீரழிந்துவிட்டது. இருக்கும் ஸ்தலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவற்றைப் பேணிக்காப்பதுதான் நல்லது,” என்றார் அஜிததாஸ்.

கழுகுமலையில் தாமரைப்பீடத்தில் அமர்ந்திருக்கும் நூற்றுக்கு மேற்பட்ட தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் மூன்று வரிசைகளில் இருக்கின்றன. அவற்றை தமிழ்நாடு தொல்லியல்துறை பேணிக்காக்கிறது. ஆனால் அந்த ஸ்தலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் தகவல் பலகைகளோ ஏடுகளோ அங்கே இல்லை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் கிராமத்தில் உள்ள சமணர் கோவில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூரில் இருக்கும் திருமலை கிராமத்தில் உள்ள சமணப் பள்ளியும் கோயிலும் குகையும் ஒரு காலத்தில் பிரபலமான ஒரு சமண ஸ்தலம். இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை அந்தக் குன்றிலிருக்கும் குகைக் கோயிலையும், மற்ற கோயில்களையும் பேணிக்காக்கிறது. அங்கே 16.5 அடி உயரத்தில் சமணமதத்தின் 22-ஆவது தீர்த்தங்கரரான நேமிநாதனின் பாறைச்சிற்பம் உள்ளது. தமிழ்நாட்டிலே மிக உயரமான இந்த சமண சிற்பம். கிபி ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பல தடவை பழுதுபார்க்கப்பட்டுச் சீர்படுத்தப்பட்ட அந்த ஸ்தலத்தில் தகவல் ஏடுகளோ அல்லது வழிகாட்டியோ இல்லை. அங்கே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இருக்கும் ஒரே தகவல் மையம் மெலிந்துபோன வயதான ஒரு காவல்காரர் மட்டுமே.

தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட்டிருக்கும் சமண ஸ்தலங்கள் ஏராளமாக இருக்கின்றன. அரசால் செய்ய முடியாததை 2014-இல் சில சமண அறிஞர்களும், செயற்பாட்டாளர்களும் செய்தனர். தமிழ்நாட்டில் தொலைதூரக் கிராமங்களில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சமணர் சிலைகளையும், நினைவுச்சின்னங்களையும் மீட்டெடுக்கும்விதமாக அவர்கள் ஒவ்வொரு மாதமும் அஹிம்ஸா நடை ஊர்வலம் மேற்கொண்டார்கள். சமண ஸ்தலங்களின் சரித்திர, கலாச்சார முக்கியத்துவத்தைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியதால் அந்த நடை ஊர்வலம் பிரபலமானது. ”தமிழ்நாட்டில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சமணஸ்தலங்களுக்கு விஜயம் செய்யும் நடை ஊர்வலத்தை நாங்கள் இன்னும் மேற்கொள்கிறோம். இடையில் கொரோனா தொற்றுப்பரவல் தடையாக இருந்தது. ஆனாலும் நாங்கள் இப்போது அதை மீண்டும் ஆரம்பித்திருக்கிறோம். கவனிப்பாரற்றுக் கிடக்கும் சமண ஸ்தலங்களை மீட்டெடுக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நடை ஊர்வலம் உதவியிருக்கிறது,” என்றார் அவர்.

தமிழ்ச் சமண தன்னார்வலர்கள் குழுக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குழுவும் பல்வேறு இடங்களில் காணப்படும் தீர்த்தங்கரர்கள் சிலைகளைப் பேணிக்காக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து, குறிப்பாக காஞ்சிபுரத்திலிருந்து, 30-க்கும் மேற்பட்ட சமண தீர்த்தங்கரர்கள் சிலைகளை சமண முனிவர் ஜீவகுமார் மீட்டெடுத்திருக்கிறார். சிதிலமடைந்து சிதைந்துபோயிருக்கும் தீர்த்தங்கரர் சிற்பங்கள் மரத்துப்போன சமூகத்தின் புறக்கணிப்பைச் சொல்கின்றன. “அரசாங்கமோ அல்லது இந்திய தொல்பொருள் ஆய்வோ கவனிப்பாரற்றுக் கிடக்கும் சமண நினைவுச்சின்னங்களை இன்னும் கவனிக்க ஆரம்பிக்கவில்லை. பலதடவை கோரிக்கைகள் வைத்தபோதும், யாரும் முன்வரவில்லை. அகழ்வாராய்ச்சிக்கு மட்டுமே மாநில அரசு முக்கியத்துவம் தருகிறது,” என்றார் ஜீவகுமார். “நாங்கள் மீட்டுத்த ஒவ்வொரு தீர்த்தங்கரர் சிலைக்கும் ஓர் உறைவிடம் கட்டி வாராவாரம் பூஜை நடத்துகிறோம். உள்ளூர் மக்களுக்கு இப்போது அதன் முக்கியத்துவம் புரிகிறது,” என்று அவர் மேலும் சொன்னார்.

தஞ்சை மாவட்டம் பேரண்டக்கோட்டையில் சிதிலமடைந்த புத்தர் சிலை அருகே ஆய்வாளர் பி. ஜம்புலிங்கம்

சோழமண்டலத்தின் பல்வேறு இடங்களுக்கு ஜீவகுமார் சென்றிருக்கிறார். ஆதிகால புத்தர் சிற்பங்கள் அவரது களஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டன. 70க்கும் மேலான இடங்களில் புத்தர் சிலைகளின் எச்சங்கள் காணப்பட்டன. இவற்றில் சுமார் 60 இடங்களில் கிரானைட் சிலைகள் அறியப்பட்டன. சில புத்தர் சிலைகளில் தலையில்லை. சில இடங்களில் புத்தர் தலைமட்டுமே தெரிந்தன. முந்தைய பயணத்தின்போது பார்த்து ஆவணப்படுத்திய சில சிற்பங்கள், அந்த ஸ்தலங்களுக்கு அவர் மீண்டும் சென்றபோது காணாமல் போயிருந்தன.

எங்கேயெல்லாம் புத்தர் சிற்பம் காணப்படுகிறதோ அங்கேயெல்லாம் புத்தவிகார் அல்லது கோயில் இருந்திருக்க வேண்டும். “இவை சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேலானவை என்பதால், எங்கே புத்தர்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதோ அங்கே அவற்றைப் பாதுகாத்துப் பேணவேண்டும். அதற்கு மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். கூரையோடு கூடிய உயர்பீடம் ஒன்றை உருவாக்கி அதில் சிலையை வைக்கவேண்டும். சிலையைப் பற்றிய குறிப்பு அருகிலேயே வைக்கப்பட வேண்டும். அந்த ஸ்தலத்தைத் தொல்லியல் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும். ஸ்தலத்தை எளிதாக அணுகமுடிகிற விதத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகள் செய்துதர வேண்டும்,” என்றார் ஜம்புலிங்கம்.

பல இடங்களில் தலையற்ற புத்தர் சிலைகளும், சில இடங்களில் வெறும் உடல்பாகங்கள் கொண்ட சிலைகளும் காணப்படுகின்றன. “நான் பதிவுசெய்த பல சிற்பங்கள் இன்று காணப்படவில்லை. இனி எதிர்காலத்தில் அப்படி நிகழாவண்ணம் அரசாங்கம் பார்த்துக்கொள்ள வேண்டும். புத்த சமய நினைவு எச்சங்கள் காணப்படும் இடங்களை எல்லாம் ஒன்றிணைத்து புத்தமத சுற்றிடம் ஒன்றை உருவாக்க வேண்டும். அது எதிர்கால சந்ததிகளுக்கு புத்த சமய வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும், சரித்திர எச்சங்களைப் பாதுகாக்கவும் உதவும்,” என்று முடித்தார் அவர்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival