Read in : English
சென்னை காய்கனி மொத்த விற்பனை சந்தை வளாகம் கோயம்பேட்டில், 295 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தை வளாகம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.இந்த வளாகத்தில் 1,000 மொத்த விற்பனை கடைகள், 2,000 சில்லறை விற்பனைக் கடைகள் என 3,100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பல லட்சம் பேர் இவற்றை பயன்படுத்துகின்றனர். தினமும் பல நுாறு சரக்கு லாரிகள் வந்து செல்கின்றன. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் விளையும் பொருட்கள், இந்தச் சந்தை வளாகத்தில் விற்கப்படுன்றன. குவியும் காய்கறிகள் மற்றும் பழங்களை மொத்த வியாபாரிகள் வாங்குகின்றனர். அவற்றை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், ராணிப்பேட்டை மாவட்ட சில்லறை வியாபாரிகளுக்கு விற்கின்றனர்.
சந்தை வளாகத்தை பராமரிக்கும் சென்னை பெருநகர மநகராட்சி குழுமம் முக்கிய காய்கறி மற்றும் பழங்களின் மொத்த விலைப் பட்டியலை அன்றாடம் அறிவிக்கிறது. இந்தப் பட்டியலில் குறிப்பிட்ட விலை அடிப்படையில்தான், அன்றாடம் காய்கறிகள் விற்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், பட்டியல் பொதுவான கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்கின்றனர் அதிகாரிகள்.
கோயம்பேடு சந்தை வளாகத்தில் காய்கறிகளை வாங்கும், சில்லறை வியாபாரிகள் அன்றாடம் ஒரு விலையை நிர்ணயித்து விற்கின்றனர். அதில் போக்குவரத்து செலவு, சுமை செலவு, உள்ளூர் வியாபாரி லாபம், கடை வாடகை செலவு எல்லாம் அடங்கும்.
சென்னை நகரில் இந்த முறையில்தான் காய்கறி விற்பனை நடந்து வந்தது. தி.நகரில் இயங்கும் காய்கறி மொத்த அங்காடியும், சென்னை நகரின் ஒரு பகுதி காய்கறி தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த அங்காடிக்கு, சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் விளையும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இந்த இரண்டு சந்தையிலிருந்துதான், சென்னை நகர் முழுவதும், சிறிய வளாகங்கள், காய்கறிக் கடைகள், மத்திய தர வர்க்கத்தினர் புழங்கும் பழமுதிர் சோலைகள் மற்றும் ஓட்டல்களுக்கு காய்கறி விநியோகம் நடந்து வந்தது. ஓரளவு அந்த நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்பட்டாலும் காய்கறி சில்லறை வியாபாரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள், இப்படி நேரடியாகவே நகருக்குள் விற்பனைக்கு வரத்துவங்கின.
கெரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டால், சென்னை நகரில் காய்கறி விநியோகத் தடத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. கோயம்பேடு மற்றும் தி.நகர் மொத்த வியாபார சந்தையிலிருந்து துவங்கிய ஓட்டம் மெதுவாக தகர்ந்து வருகிறது. காய்கறி உற்பத்தியாளர்களே, வாகனங்களில் ஏற்றி வந்து, நகரில் குறிப்பிட்ட பகுதிகளில் முகாம் போட்டு விற்க ஆரம்பித்தனர். இந்த நடைமுறை இப்போது தீவிரம் அடைந்து வருகிறது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள், இப்படி நேரடியாகவே நகருக்குள் விற்பனைக்கு வரத்துவங்கின. குறிப்பாக, சீசனில் விளையும், தர்பூசணி, பலா, நெல்லி போன்றவற்றை மொத்தமாக வாகனங்களில் ஏற்றி நேரடியாக விற்க ஆரம்பித்தனர்.
அதாவது காய்கறி ஏற்றிய வாகனங்களில் சிறிய ஒலி பெருக்கியை பொருத்தி, அதில் பதிவு செய்யப்பட்ட காய்கறி அல்லது பழங்களின் விலை விவரத்தை விளம்பரப்படுத்தியபடி, தெருத்தெருவாக சுற்றி அலைகின்றனர். பழங்காலத்தில் பொருட்களைக் கூவி விற்கும் நடைமுறையை சற்று மேம்படுத்தி பயன்படுத்துகின்றனர். இதுபோல், பல்லாயிரம் வாகனங்கள் சென்னை நகர தெருக்களில் வலம் வருகின்றன. உணவுப் பொருட்களை நேரடியாக விற்கின்றன.
இந்த நடைமுறை சென்னை நகர் முழுதும் பரவியுள்ளது. சில வாகனங்களில், காய்கறியை விற்க வசதியாக, நவீன தராசு பொருத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது எடை போட்டு விற்கும் நடைமுறையில் உள்ள சிரமத்தால் பலர் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி, ஒரு கிலோ, அரை கிலோ அளவில் காய்கறியை பொட்டலங்களாகக் கட்டி வந்து விற்கின்றனர். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் இவ்வாறு விற்கின்றனர். வாடிக்கையாளர் கேட்கும் காய்கறியை, தாமதமின்றி கொடுத்துவிட்டு, அடுத்த விற்பனைக்கு போய்விட இது நடைமுறை உதவுகிறது. இதில், பெருமளவு பிளாஸ்டிக் குப்பை குவிகிறது. இந்த மொபைல் வாகன கடைகளுடன், தற்காலிகமாக சாலையோர வாகனகக் கடைகளும் உருவாகி வருகின்றன.
வாகனங்களில் பொருட்களை கொண்டு வந்து, தெருவில் நிறுத்தி விற்பது சென்னை நகரம் முழுதும் பரவலாகிவருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த தெரு ஓரங்களில் வாகனக் காய்கறி வியாபாரம் தீவிரமாகியுள்ளது. விலை மிகவும் மலிவாக இருப்பதால், பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

(Photo Credit: Koyambedu- Balu Velachery-Flickr)
மலைக்காய்கறிகளான பிராக்கோலி, பீன்ஸ், காரட் மற்றும் காளான் போன்றவை கடைகளில் கிலோ 100 ரூபாய்க்கு குறைவான விலையில் விற்றதே இல்லை. கடந்த பல ஆண்டுகளாக இந்த விலைதான் நிலவி வந்தது. நடுத்தர வருமானமுள்ளோர் வீடுகளில் இந்த வகை காய்கறிகள் மிக அரிதாகவே நடமாடுவது வழக்கம். தற்போது, தெரு ஓர வாகனக்கடைகளில் இந்த வகை காய்கறிகள் மிக மலிவாக விற்கப்படுகின்றன.
மக்கள் நடமாட்டம் மிகுந்த தெரு ஓரங்களில் வாகனக் காய்கறி வியாபாரம் தீவிரமாகியுள்ளது. விலை மிகவும் மலிவாக இருப்பதால், பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.
தற்போது, பிராக்கொலி, பீன்ஸ், காரட் மற்றும் பெரும்பாலான காய்கறிகள் கிலோ, 15 ரூபாய் முதல் கிடைக்கின்றன. மாலையானால், இது, 10 ரூபாய்க்கு இறங்கிவிடுகிறது. முற்பகலில் இந்த வகை கடைகள் துவங்கும். எல்லா வகை காய்கறிகளும் ஒரே சீரான விலையில் விற்கப்படும். பிற்பகலுக்கு பின், சரக்கு இருப்புக்கு ஏற்ப விலையில் மாற்றம் ஏற்படும். காய்கறித் தேவைக்கு, பழமுதிர் நிலையங்களையே நாடிக்கொண்டிருந்த மத்தியதர வர்க்க குடும்பங்கள், இந்த வகை சாலையோர வாகனக் கடைகளை மொய்க்கத் துவங்கியுள்ளனர். மலைக் காய்கறிகள், சமையலறையில் தினமும் நடமாடுகிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியோர் சமையல் கூடங்களில்கூட இந்த வகை காய்கறிகள் புழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த மாற்றம் குறித்து, பழமுதிர் நிலைய உரிமையாளர் ஒருவர் கூறுகையில்.
‘வாகனங்களில் காய்கறிகளை ஏற்றி வந்து தெரு ஓரங்களில் நிறுத்தி விற்பது அதிகரித்து வருகிறது. இது தற்காலிகமான வியாபார உத்தி தான் என்றாலும், குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தும். நிலையான கடைகளை நடத்திவரும் எங்களைப் போன்றோருக்கு பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். விவசாயிகளே நேரடியாக பொருட்களை கொண்டுவந்துள்ளதாக, தற்காலிக வாகன வியாபாரிகள் கூறுவர். அது உண்மை அல்ல. கோயம்பேடு மொத்த சந்தையில் அடிமாட்டு விலைக்கு காய்கறிகளை வாங்கி, இதுபோல் விற்கின்றனர்.
இதனால், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது போன்ற செயல்களில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது போன்ற நடைமுறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றார். காய்கறி வியாபாரத்தில் ஏற்பட்டுவரும் நடைமுறை மாற்றம், சென்னை நகர இயக்கத்தில் புதிய கதவுகளை திறந்துள்ளது.
Read in : English