Read in : English
தமிழ்நாட்டு மக்களுக்கு எப்போதும் நடிகரையும் பிடிக்கும்; தேர்தலையும் பிடிக்கும். எனில், நடிகர் சங்கத் தேர்தல் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? தென்னிந்திய நடிகர் சங்கம் தொடங்கப்பட்டு எழுபது ஆண்டுகள் ஆனபோதும், ஊடகங்களின் தாக்கம் அதிகமானதற்குப் பின்னரே அதன் தேர்தல் வெகுமக்களின் கவனத்தைப் பேரளவில் ஈர்த்துவருகிறது. 24 மணி நேரமும் செய்திகளைத் தரும் நிர்ப்பந்தமிக்க தொலைக்காட்சி ஊடகங்களுக்கு இப்படியான தேர்தல் நிகழ்வு மிகப் பெரிய வரப் பிரசாதம். தேர்தல் நாளில் நேரலை செய்வதில் தொலைக்காட்சிக்கும் திருப்தி, பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சி. உள்ளடக்கத்துக்காக தாகம்கொண்டலையும் ஊடகத்துக்கு இத்தகைய தேர்தல் மிகப் பெரிய புதையலே.
இப்போது தென்னிந்திய நடிகர் சங்கம் என அறியப்பட்டுள்ள இந்தச் சங்கத்தில்தான் நாடக நடிகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால், முதலில் நாடக நடிகர்களுக்காகத்தான் நடிகர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தோற்றுவித்தவர் நவாப் ராஜமாணிக்கம் குழுவைச் சேர்ந்த சோமசுந்தரம் என்று தகவல் கிடைக்கிறது. நடிகர்களுக்கான முறையான ஊதியம் பெற்றுத் தர வேண்டும் என்னும் நோக்கத்தில் நாடக நடிகர் சங்கத்தை இவர் உருவாக்கியிருக்கிறார். இதன் பரிணாம வளர்ச்சியாக 1952இல் தொடங்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் தலைவர் இயக்குநர் கே.சுப்பிரமணியன். என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., சிவாஜி, விஜய்காந்த் எனப் பலர் தலைவர் பொறுப்பிலிருந்துள்ளனர்.
அப்படியான இந்த நடிகர் சங்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறுவது வழக்கம் என்ற போதும், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்தான் வெகுமக்களின் கவனத்துக்கு வந்தது. காட்சி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் அந்தத் தேர்தல் தொடர்பான செய்திகள் பொதுத் தேர்தல் செய்திகளுக்குச் சவால் விடும் அளவுக்கு அமைந்திருந்தன. வாக்குப்பதிவு நாளன்றும் ஒரு திரைப்படம் போலவே நிகழ்வுகள் நடைபெற்றன. அப்போது நடிகர் சங்கத் தலைவராக நடிகர் சரத்குமாரும் செயலராக நடிகர் ராதாரவியும் இருந்தனர். அவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. ஆகவே, அவர்களை அப்புறப்படுத்திவிட்டுப் புதிய அணி பொறுப்பேற்க வேண்டும் என்னும் முனைப்புடன் பாண்டவர் அணி என்னும் பெயரில் தலைவர் பொறுப்புக்காக நடிகர் நாசரும் செயலருக்காக நடிகர் விஷாலும் பொருளாளராக நடிகர் கார்த்தியும் போட்டியிட்டனர். தேர்தல் பிரச்சாரங்களில் தனி மனிதத் தாக்குதல் பலமாக இருந்தது.
1952இல் தொடங்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் தலைவர் இயக்குநர் கே.சுப்பிரமணியன். என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., சிவாஜி, விஜய்காந்த் என பலர் தலைவர் பொறுப்பிலிருந்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. அந்தக் கட்சியின் ஆதரவு பெற்றவர் சரத்குமார். அப்போது பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்ட நடிகர் விஷாலும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் உதயநிதியும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள்; நண்பர்கள். மேலும் அப்போது, விஷாலுக்கு நடிகர் கமல் ஹாசனின் ஆதரவும் இருந்தது. நாசருக்கும் நடிகர் கமலுக்குமான நட்பும் சகலரும் அறிந்ததே. ஆகவே, நடிகர் சங்கத் தேர்தலில் நேரடியாக அரசியல் இல்லாவிட்டாலும் அதன் தேர்தல் விவகாரங்களில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மறைமுக உள்ளீடுகளை நிகழ்த்தியவண்ணமே இருந்தன. ஆட்சியில் இருக்கும் கட்சியின் ஆதர்வு பெற்றவர்கள் நடிகர் சங்கத்தைப் பிடிப்பாளர்களா எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெற்ற அணி நடிகர் சங்கத்தைக் கைப்பற்றுமா என்பதே பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.
தேர்தல் முடிவுகள் வெளியானபோது, சரத்குமார் தலைமையிலான அணி பெரிய தோல்வியைச் சந்தித்திருந்தது. நடிகர் சங்க நிர்வாகப் பொறுப்புக்கான அனைத்துப் பதவிகளையும் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியே கைப்பற்றியிருந்தது. நடிகர் சங்கக் கட்டிடப் பணியில் அதிகக் கவனம் செலுத்தப்படும் எனப் புதிதாகப் பதவியேற்ற பொறுப்பாளர்கள் கூறினர். முந்தைய நிர்வாகிகளால் போடப்பட்ட நடிகர் சங்கக் கட்டட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. கட்டடத்துக்கான நிதியை கலைநிகழ்ச்சிகள் மூலமாகவும், திரைப்படம் தயாரித்து அதில் கிடைக்கும் வருமானம் மூலமாகவும் திரட்டலாம் என முடிவுசெய்தனர். இந்த முயற்சியில் திரைப்படம் ஒன்றை ஐசரி கணேஷ் தயாரித்தார். அதில் விஷாலும் கார்த்தியும் நடிப்பதாக இருந்தது. ஆனால், இந்த முயற்சி சரியாக மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே, திரைப்படமும் உருவாக்கப்படவில்லை. ஐசரி கணேஷுக்கும் விஷால் தரப்புக்கும் விரிசலும் ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள். கலை நிகழ்ச்சி தொடர்பான விவகாரங்களாலும் விஷால் அணியிலிருந்து குட்டி பத்மினி போன்றோர் விலகிச் சென்றுவிட்டனர்.
இப்படிப் பாண்டவர் அணியிலிருந்து விலகிச் சென்றவர்கள் ஒரு புதிய அணியாகத் திரண்டனர். ஐசரி கணேஷ் ஆதரவுடன் அணி அமைக்கும் முயற்சி நடைபெற்றது. அதற்கு அப்போதைய ஆளுங்கட்சியின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. ஆகவே, கே.பாக்யராஜ் இந்த அணிக்கு வந்து சேர்ந்திருக்கிறார். இப்படியான சூழலில் 2015ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 அக்டோபரில் முடிவுக்கு வந்தது. அடுத்த தேர்தல் ஆறுமாத காலம் தள்ளிப்போடப்பட்டது. அதன்படி 2019ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று நடத்த தீர்மானிக்கப்பட்டு தேர்தலும் நடத்தப்பட்டது.
இந்தத் தேர்தலில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும் கே.பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் அணியும் தேர்தலில் போட்டியிட்டன. தலைவர் பதவிக்கு நாசரும் கே. பாக்யராஜும் போட்டியிட்டனர். பொதுச் செயலருக்கு விஷாலும் ஐசரி கணேஷும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் பிரசாந்தும் மோதினர். துணைத் தலைவர் பதவிக்குப் பாண்டவர் அணி சார்பாக கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோரும் சங்கரதாஸ் அணி சார்பில் குட்டி பத்மினி, ஏஎல் உதயா ஆகியோரும் போட்டியிட்டனர். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலைப் பொறுத்தவரை அதன் வெற்றியைத் தீர்மானிப்பதில் நாடக நடிகர்களே பெரும் பங்கு வகிக்கின்றனர். இவர்கள் அளிக்கும் தபால் வாக்குகள் வேட்பாளரை வெற்றிக்கோட்டருகே நகர்த்தும் வல்லமை பெற்றவை.
நீண்ட நாள்களாக நிறைவுறாமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கும் நடிகர் சங்கக் கட்டடம் இந்த முறையாவது கட்டி முடிக்கப்பட வேண்டும், நடிகர்களது உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே சாதாரண நடிகர்களது விருப்பமும் கோரிக்கையும்.
நாகரிக சமூகத்தில் ஜனநாயக முறையான தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது முகம் சுளிக்கவைப்பது; சட்டபூர்வ அனுமதிபெறாதது என்றபோதும், அந்த வழக்கம் நடைமுறையில் மிக இயல்பாக நடந்தேறுகிறது. நடிகர் சங்கத் தேர்தலும் இதற்கு விதிவிலக்கன்று என்கிறார்கள். பணம் தாராளமாகச் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இரு தரப்பினரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. இப்படி நடந்து முடிந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதற்காக பாக்யராஜ் தலைமையிலான அணி சார்பில் சட்டப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனால் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் தனியார் வங்கியில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டன.
நாசர் தலைமையிலான அணியும் சளைக்காமல் போராடி தேர்தல் முறையாக நடைபெற்றது என்று நிரூபித்து வாக்கு எண்ணிக்கைக்குச் சட்ட ஒப்புதலைப் பெற்றது. ஆகவே, இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் 2022 மார்ச் 20 ஞாயிறு அன்று எண்ணப்பட்டன. கடந்த முறை வென்ற நாசர் தலைமையிலான அணியே இம்முறையும் வெற்றியைப் பெற்றுள்ளது. நடிகர் நாசர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இயக்குநர் கே.பாக்யராஜைவிட 647 வாக்குகள் அதிகம் பெற்று தலைவராகியுள்ளார். இவருக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 1,701. பொதுச் செயலராகத் தேர்வாகியுள்ள விஷால் ஐசரி கணேஷைவிட 688 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். இவருக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 1,720. 1,827 வாக்குகளைப் பெற்றுப் பொருளாளராகியுள்ள கார்த்தி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகர் பிரசாந்தைவிட 908 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். துணைத்தலைவர்களாக கருணாஸும், பூச்சி முருகனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
நடிகர் சங்கக் கட்டடப் பணி மீண்டும் தொடங்கப்படும் என்று கூறியிருக்கிறார் பொதுச் செயலர் விஷால். நீண்ட நாள்களாக நிறைவுறாமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கும் நடிகர் சங்கக் கட்டடம் இந்த முறையாவது கட்டி முடிக்கப்பட வேண்டும், நடிகர்களது உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே சாதாரண நடிகர்களது விருப்பமும் கோரிக்கையும். பாண்டவர் அணி நியாயமாக நடந்து நடிகர்களின் கௌரவத்தைக் காப்பாற்றுமா என்பதைக் காலம் சொல்லும்.
Read in : English