Read in : English

Share the Article

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடிக்கு அருகே உள்ள சிறிய கிராமம் நரசிங்கக்கூட்டம். அந்த ஊரில் 50, 60 வீடுகள்தான் இருக்கும். அந்த கிராமத்திற்கு பஸ் வசதி கிடையாது. அருகில் உள்ள கடலாடிக்குச் செல்ல வேண்டுமானால் 1.5 கிலோ மீட்டர் நடந்துதான் போக வேண்டும். ஊரில் பொருட்களை வாங்க பெட்டி கடைதான் உள்ளது. மருத்துவமனையும் கிடையாது. இப்படிப்பட்ட கிராமத்தில் மண் சுவரால் கட்டப்பட்ட ஓட்டு வீடு. வீட்டில் கரண்ட் கிடையாது. டி.வி கிடையாது. பெரிய நகரங்களைப் போல ஒளிவீசும் விளக்குகள் இல்லாத அந்த ஊரில் வீட்டுக்கு வெளியே கயிற்று கட்டிலில் படுத்துக் கொண்டு, இரவு நேரத்தில் வானத்தைப் பார்த்தால் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவது தெரியும். பால்வீதி கூட கண்ணுக்குத் தெரியும். சிறுவயதிலிருந்தே இப்படிப் பார்த்து ரசித்த அனுபவம்தான் எம். சிவபெருமானுக்கு விண்வெளி ஆராய்ச்சி மீது தீராத ஆர்வம் ஏற்படச் செய்துவிட்டது.

மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த சிவபெருமான், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தாலும்கூட தனது விடாமுயற்சியால் சென்னை குரோம்பேட்டை எம்ஐடியில் பிஇ ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படித்து, பின்னர் கான்பூர் ஐஐடியில் எம்.டெக் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் படித்து விட்டு, தற்போது அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் பிஎச்டி படிக்கச் செல்கிறார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த கே. நந்தகுமார் ஐ.ஏ.எஸ். இருந்தபோது, சிறந்த அரசுப் பள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்காக ஏற்படுத்திய எலைட் ஸ்கூலில் பிளஸ் டூ படித்த மாணவர் இவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த கே. நந்தகுமார் ஐ.ஏ.எஸ். இருந்தபோதுசிறந்த அரசுப் பள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்காக ஏற்படுத்திய எலைட் ஸ்கூலில் பிளஸ் டூ படித்த மாணவர் இவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

நரசிங்கக்கூட்டம் கிராமத்தில் சாமானியக் குடும்பத்தில் பிறந்து, அரிசோனா பல்கலைக்கழகத்தில் படிக்க செல்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது வரை தனது வாழ்க்கைக் கதையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் சிவபெருமான்:

எனது சொந்த ஊர் நரசிங்கக்கூட்டம் கிராமம். அப்பா முனியசாமிக்கு உடல்நலம் சரியில்லை. அவரால் வேலை செய்ய முடியாது.  அம்மா பூபதி, சத்துணவுக் கூடத்தில் சமையல் செய்பவராக இருந்து ஓய்வு பெற்றவர். அம்மாவுக்கு ரூ.2 ஆயிரம் மாத சம்பளம். வீட்டில் மாடு இருந்ததால் அந்தப் பாலைத் தயிராக்கி விற்போம். இந்த வருமானத்தைக் கொண்டுதான் குடும்பம் நடக்க வேண்டும். எனக்கு ஓர் அண்ணன். ஓர் அக்கா. ஏழ்மையான சூழ்நிலையில்தான் குடும்பம் இருந்தது.

நரசிங்கக்கூட்டத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். 6வது வகுப்பிலிருந்து கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். எங்களது ஊரிலிருந்து அந்தப் பள்ளிக்கு 1.5 கிலோ மீட்டர் தூரம் நடந்து போய், பள்ளி முடிந்ததும் திரும்பி வர வேண்டும்.

நரசிங்கக்கூட்டம் கிராமத்தில் சிவபெருமானின் வீடு

பள்ளியில் கணித ஆசிரியராக ஸ்டீபன் விஜய் சார் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து என்னை மிகவும் ஊக்குவிப்பார். கடலாடிப் பள்ளிக்கூடத்தில் உள்ள ஆசிரியர்கள் பலர் எனக்கு யாருக்கும் தெரியாமல் பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள். புத்தகம் வாங்கித் தந்திருக்கிறார்கள். பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 433 மதிப்பெண்கள் பெற்றேன். பள்ளியிலேயே நான்காவது ரேங்க். பிளஸ் ஒன் வகுப்பில் கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தேன். பிளஸ் ஒன் படித்து முடித்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்காகத் தொடங்கப்பட்ட எலைட் பள்ளியில் படிக்க ஆகஸ்ட் மாதத்தில் இடம் கிடைத்தது.

அதுவரை நான் படித்த கடலாடி பள்ளியில் பிளஸ் ஒன் வகுப்புக்கு கணிதப் பாடம் சொல்லித்தர சரிவர ஆசிரியர் இல்லாததால், எலைட் பள்ளிக்குப் போனதும் கணிதப் பாடத்தைப் புரிந்து கொள்ள சிரமப்பட்டேன். நல்ல மார்க் எடுக்க முடியவில்லை. “இப்படியே போனால் பாஸ் ஆவதுகூட கஷ்டம். முடிந்தால் பார், இல்லாவிட்டால் ஏற்கெனவே படித்த பள்ளிக்கூடத்துக்குப் போய் படித்து எப்படியாவது பாஸ் பண்ண முயற்சி செய்” என்று கூறிவிட்டார் ஒருங்கிணைப்பாளரான கணித ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் சார். பின்னர் அவரே என் மீது தனி கவனம் செலுத்தி கணிதப் பாடங்களைச் சொல்லித் தந்தார். கொஞ்சம் கொஞ்சமாக கணிதப் பாடத்தில் பிக் அப் செய்தேன். அத்துடன், வாரந்தோறும் நந்தகுமார் சார் பள்ளிக்கு வந்து எங்களுடன் பேசி எங்களுக்கு ஊக்கமளிப்பார். அதனால் நம்பிக்கையுடன் படிக்கத் தொடங்கினேன்.

இயற்பியல் ஆசிரியர் குமார் சார் இரவு 2 மணி வரைக்கும்கூட சளைக்காமல் எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார். விலங்கியல் ஆசிரியர் ஆறுமுகம் சாரும் ஆதரவாக இருந்தார். அந்தப் பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தால்தான் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1086 மதிப்பெண்கள் பெற்றேன். இயற்பியலில் 200க்கு 200 மதிப்பெண்கள். கணிதத்தில் 199, வேதியியலில் 198, உயிரியலில் 192 மதிப்பெண்கள். பொறியியல் படிப்பில் சேர எனது கட் ஆஃப் மதிப்பெண்கள் 199. எனக்குக் கவுன்சலிங் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் குரோம்பேட்டை எம்ஐடியில் பி.டெக். ஏரோநாட்டில் என்ஜினியரிங் படிப்பில் இடம் கிடைத்தது. நான் அதுவரையில் ரயிலில் போனதே இல்லை. கவுன்சலிங்கிற்காக என்னை ரயிலில் அழைத்துப் போனவர்கள் பர்ஸனல் கிளார்க்காக இருந்த கதிரவன் சாரும், கணித ஆசிரியர் நவநீத கிருஷ்ணன் சாரும்தான்.

கல்லூரியில் இடம் கிடைத்தாலும் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்கு எனது ஆசிரியர்களும் நல்ல இதயம் கொண்ட பலரும் உதவினார்கள். எனது ஆசிரியர் நவநீத கிருஷ்ணன் சார், கல்லூரிப் படிப்புக் காலம் முழுவதும் எனக்கு உதவியாக இருந்து எனக்கு வழிகாட்டியாக இருந்தார் என்பதையும் நன்றியுடன் நினைவுகூரவிரும்புகிறேன்.

கடலாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் போது சிவபெருமான்

சிறிய கிராமத்தில் பிறந்து படித்து, சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ந்ததும் எனக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல இருந்தது. மற்ற மாணவர்களிடம் பேசவே நான் பயப்படுவேன். பள்ளியில் தமிழ் வழியில் படித்து வந்ததால், ஆங்கிலத்தில் நடத்தப்படும் வகுப்புகளைப் புரிந்து கொள்ளவே கொஞ்ச நாள் ஆகியது. எனக்கு நண்பர்கள் உதவினார்கள். சென்னையில் படிக்கும்போது எனது நண்பரான கிரண் எபினேசர் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்து கவனித்துக் கொண்டனர். கல்லூரியில் படிக்கும்போதே ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டினேன். Collision Avoidance for Lighter Aircraft Using Arduino as a Flight Controller என்ற தலைப்பில் நண்பர்களுடன் சேர்ந்து நான் செய்த ஆராய்ச்சித் திட்டத்துக்குப் பல்கலைக்கழகத்தின் நிதி உதவி கிடைத்தது.

பிஇ படித்து முடித்ததும் எம்.டெக். படிக்க வேண்டும். அதிலும் மும்பை அல்லது கான்பூர் ஐஐடிக்களில் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதனால், கேம்பஸ் பிளேஸ்மெண்ட் மூலம் வேலை பெறுவதற்கு முயற்சிக்கவில்லை. எம்டெக் படிப்பில் சேருவதற்காக கேட் தேர்வுக்குத் தயாரானேன். கேட் தேர்வில் அகில இந்திய அளவில் 145 வது ரேங்க் பெற்றேன். எனக்கு கரக்பூர் ஐஐடியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பில் இடம் கிடைத்தது. ஆனால் சேரவில்லை. மீண்டும் கேட் தேர்வுக்குத் தயாரானேன்.

இந்த இடைக்காலத்தில் நான் சென்னையில் ஏர்வாக் என்ற பப்ளிஷிங் கம்பெனியில் வேலை பார்த்தேன். மியுப்ரோ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்தேன். மியுப்ரோ சிஸ்டம்ஸ் தலைமை செயல் அதிகாரி மோகன்ராஜ் எனக்கு லேப்டாப் வாங்கித் தந்தார். தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் அவர் உதவி அளித்தார். அந்த சமயத்தில் அவர் செய்தது பெரிய உதவி.

2019இல் எழுதிய கேட் தேர்வில் எனக்கு 178வது ரேங்க் கிடைத்தது. இந்த முறை, எனக்கு கான்பூர் ஐஐடியில் நான் விரும்பிய ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் பாடப்பிரிவில் இடம் கிடைத்தது. மாதந்தோறும் ரூ.12,400 ஸ்காலர்ஷிப் கிடைத்ததால், படிப்பதில் பிரச்சினை ஏற்படவில்லை. அங்கு பேராசிரியராக இருந்த மங்கல் கோத்தாரி, விண்வெளித்துறையில் எனது ஆர்வத்தைப் பார்த்து, எனது முயற்சிகளுக்கு ஊக்கமளித்து வந்தார்.

விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியத்துவம் பெற்ற அரிசோனா பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் பாடப்பிரிவில் பிஎச்டி படிக்க வேண்டும் என்பது என்து விருப்பம். நாஸா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆதரவுடன் இயங்கும் ஆய்வகம் அரிசோனா பல்கலைக்கழகத்தில் உள்ளது. எனவேநாஸாவிலும் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிடைக்கும்.

எம்டெக் படிக்கும்போதே ஆராய்ச்சிப் படிப்பில் சேர வேண்டுமானால் நல்ல வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி உற்சாகப்படுத்தியவர் நந்தகுமார் சார்தான். எம்.டெக். முடித்ததும், விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியத்துவம் பெற்ற அரிசோனா பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் பாடப்பிரிவில் பிஎச்டி படிக்க வேண்டும் என்பது என்து விருப்பம். நாஸா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆதரவுடன் இயங்கும் ஆய்வகம் அரிசோனா பல்கலைக்கழகத்தில் உள்ளது. எனவே, நாஸாவிலும் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிடைக்கும். எனது விண்ணப்பத்தை அரிசோனா பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டு, நான் பிஎச்டி படிக்க அட்மிஷன் வழங்கியது. அரிசோனா பல்கலைக்கழகப் பேராசிரியர் லெக்கன் தங்காவின் மேற்பார்வையில் ஆய்வு செய்ய வேண்டியதிருக்கும். ஸ்பேஸ் மெக்கானிக்ஸ் மற்றும் ரோபோட்டிக்ஸ் துறையில் எனது ஆய்வு இருக்கும். அதாவது, சிறுகோள்களைச் சுற்றி (ஆஸ்ட்ராய்ட்) செயற்கோள்களை எப்படி சிறப்பாக இயங்கச் செய்ய முடியும் என்பது குறித்த ஆய்வை மேற்கொள்ள இருக்கிறேன். பூமியில் மைனிங் செய்வது போல கிரங்கங்ளில் மைனிங் செய்வது குறித்தும் எனது ஆராய்ச்சி இருக்கும்.

அந்தப் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிக்க மாதம் 1700 டாலர் ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ளது. ஆனாலும், அமெரிக்கப் பயணச் செலவுக்கும், ஸ்காலர்ஷிப் வரும் வரை முதல் மாதம் தங்கி இருப்பதற்கும் சாப்பிடுவதற்கும் பணத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்திருந்த நேரத்தில் கிரவுட்பண்டிங் மூலம் தேவையான பணம் கிடைத்துவிட்டது. லட்சுமி ப்ரியா ஐஏஎஸ், நந்தகுமார் சார் மற்றும் நண்பர்கள் இந்த முயற்சியில் எனக்கு உதவினார்கள். தற்போது, அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி விட்டன. இங்கிருந்தே அதில் கலந்து கொண்டு வருகிறேன். விசா இந்த மாத இறுதியிலோ அடுத்த மாத முதல் வாரத்திலோ கிடைத்துவிட்டால் அமெரிக்கா செல்ல வேண்டியதுதான்.

இதற்கிடையே, என்னை இந்த அளவுக்கு கைதூக்கிவிட்ட அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். அதனால், மற்ற நேரங்களில் தமிழக அரசின் அரசு மாதிரிப் பள்ளித் திட்டத்தில் தன்னார்வலராகப் பணிபுரிந்து வருகிறேன். மனதார என்ன செய்ய விரும்புகிறாயோ, அதை சாதிக்க இந்த உலகம் உதவும் என்கிறார்கள். இந்த உலகம் இதுவரை என்னைக் கைதூக்கிவிட்டது. இனியும் ஆதரவாக இருக்கும் என்று நம்பிக்கையோடு பேசுகிறார் சிவபெருமான்.

காற்றிலேறி விண்ணையும் சாடுவோம் என்றார் மகாகவி பாரதியார். காற்றில் ஏறி விண்ணையும் சாடுவதற்கு அமெரிக்காவில் விண்வெளி ஆராய்ச்சிப் படிப்பைப் படிக்கத் தயாராகி வருகிறார் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர் சிவபெருமான்.


Share the Article

Read in : English

Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles Green path to health: Have a different keerai every day