Read in : English

ஏழு ஆண்டுகள் கழித்து ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலைவழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உட்பட பத்து பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்திருக்கிறது. தமிழ்நாட்டை உலுக்கிய வழக்குகளில் ஒன்று கோகுல்ராஜ் கொலைவழக்கு. நூறு நாட்களுக்கு மேல் தலைமறைவாய் இருந்த யுவராஜ் வெளியிட்ட ஆடியோ செய்திகளும் விசாரணை அதிகாரி விஷ்ணு பிரியா தற்கொலை செய்துகொண்டதும் தமிழ் நாட்டு காவல்துறைக்கு பெரிய தலைவலியாக மாறியதுடன், யுவராஜை காப்பாற்ற அரசியல் சக்திகள் கொடுக்கும் அழுத்தம் பற்றியும் பல சர்ச்சைகள் எழுந்தன. ஒருவழியாக வழக்கு முடிவுக்கு வந்து நீதிமன்ற தீர்ப்பும் வெளிவந்திருக்கும் நிலையில் கோகுல்ராஜ் மரணம் கடைசியாக இருக்கும் வாய்ப்புகள் உண்டா?

ஜூன் 23, 2015 அன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தன்னுடைய கல்லூரி தோழியோடு பேசிக்கொண்டிருந்த கோகுல்ராஜ் அதற்கு கொடுத்த விலை மிக அதிகம். யுவராஜின் அடியாட்களால் அங்கிருந்து கடத்தப்பட்ட கோகுல்ராஜின் உடல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தண்டவாளம் அருகே தலை துண்டித்து கிடந்தது. காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு வீடியோவும் கடிதமும் காவல்துறைக்கு கிடைத்தது. இது நிச்சயம் ஆணவ கொலை என்ற குற்றச்சாட்டால் காவல்துறை விசாரிக்க தொடங்கியது.

ஈமு கோழி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு தன்னுடைய கவுண்டர் சமூகத்தில் ஒரு சாதி சங்க தலைவராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயன்று கொண்டிருந்த யுவராஜுக்கு பெருமாள் முருகனின் மாதொருபாகன் சர்ச்சை ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது. இவர்களது அழுத்தம் தாங்கமுடியாமல் பெருமாள் முருகன் தான் இறந்துவிட்டதாக எழுதி கொடுக்கும் கொடுமையும் நடந்தது. அடுத்து ஒரு நல்ல வாய்ப்பை எதிர்நோக்கி கொண்டிருந்த யுவராஜின் பார்வையில் கோகுல்ராஜ் விழுந்தது அவரது கெட்ட நேரம். யுவராஜின் ஆட்கள் எல்லா கல்லூரிகளிலும் இருக்கிறார்கள். கவுண்டர் இன பெண்கள் பட்டியல் இன பையன்களுடன் பேசுகிறார்களா அல்லது பழகுகிறார்களா என்பதை அவருக்கு தெரிவிப்பதே அவர்களது வேலை.

யுவராஜ் போன்ற ஆட்கள் பட்டியலின மக்களுக்கு மட்டுமல்ல தங்கள் சமூகத்துக்கே ஆபத்தானவர்கள் என்கிறார் மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தேசிய செயலாளர் பாலமுருகன் அவர்கள். பட்டியலின மக்களும் நிலஉடமையாளர்களான கவுண்டர்களும் நில உடமை சமூகத்தின் முக்கியமான அங்கங்கள். பட்டியலின மக்களில், தமிழ் நாட்டின் மேற்கு பகுதியை பொறுத்தவரை, அருந்ததியர் எண்ணிக்கை அதிகம். அதனை தொடர்ந்து பறையர் இனத்தவர். கோகுல்ராஜ் பறையர் இனத்தை சேர்ந்தவர். அடுத்த முக்கிய சமூகமான பள்ளர்களின் எண்ணிக்கை இந்த பகுதியில் குறைவு.

நிலஉடமையாளர்களான கவுண்டர்களுக்கும் அருந்ததியருக்கும் பல நூற்றாண்டு தொடர்புண்டு. மின் மோட்டார்கள் வரும்வரை நீர் இறைக்க உபயோகப்படும் கமலை செய்ய அருந்ததியர்களின் உதவி வேண்டும். உடலுழைப்புக்கும் பட்டியலினத்தவர் வேண்டும். பறையர் இனத்தவரும் இவ்வாறே எனினும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றியபின் பறையர் இனத்தவர்க்கு சமூகத்தில் முன்னேற கிடைத்த வாய்ப்புகளை அவர்கள் சரியாக உபயோகிக்க தொடங்கினார்கள். 1900 களில் உருவான அரசியல் விழிப்புணர்வும் பறையர் சமூகத்தை இந்த நிலவுடமை அடிமைத்தனத்திலிருந்து வெளியேற வைத்தது. ஆனால் அருந்ததியர், கல்வி விழிப்புணர்வு வரும்வரை, அப்படியே இருந்து விட்டார்கள்.

எப்பாடுபட்டாவது ஒரு அரசு வேலை என்று உழைக்கும் அவர்கள் நவீனத்துவத்தின் மாதிரிகளாக இருக்கிறார்கள். நிலவுடமை பெருமையில் உழலும் சமூக பையன்கள் இந்த நவீனத்துவத்தை ஏற்றுக்கொள்வதிலும் மாறுவதிலும் பின்தங்குகிறார்கள்

கோகுல்ராஜ் மரணத்தை தொடர்ந்து உண்மை அறியும் குழுவில் பங்குகொண்ட மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் உதவிப்பேராசிரியராக பணிபுரியும் ஜே பாலசுப்ரமணியம் கவுண்டர்கள் இந்த ஆணவ கொலைகளை நியாயப்படுத்த தொடங்கிவிட்டார்கள் என்பதை பதிவுசெய்கிறார். அந்த பயணத்தின் போது தான் சந்தித்த சாதாரண மக்களும் பட்டியலினத்தவருக்கு இது ஒரு நல்ல பாடம் என்று கோகுல்ராஜ் கொலையை நியாயப்படுத்தியதை கண்டு பதைத்து போனதை பகிர்ந்து கொள்கிறார். பட்டியலின பையன்கள் ஜீன்ஸ் கண்ணாடி போட்டு தங்களின பெண்களை மயக்குவதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் புலம்புவதின் பின்புலத்தையும் நமக்கு விளக்குகிறார். படித்தால் மட்டுமே வாழ்க்கை என்று உணரும் பட்டியலின பையன்கள் கடினமாக உழைக்கிறார்கள். கிடைக்கும் ஓவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துகிறார்கள். எப்பாடுபட்டாவது ஒரு அரசு வேலை என்று உழைக்கும் அவர்கள் நவீனத்துவத்தின் மாதிரிகளாக இருக்கிறார்கள். நிலவுடமை பெருமையில் உழலும் சமூக பையன்கள் இந்த நவீனத்துவத்தை ஏற்றுக்கொள்வதிலும் மாறுவதிலும் பின்தங்குகிறார்கள். “கடினமாக உழைத்து முன்னேறும் பட்டியலினத்தவரின் வளர்ச்சி ஆதிக்க சமூகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. அரசாங்கம் அவர்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாக தருவதாக இவர்கள் பொருமுகிறார்கள்,” என்கிறார் பாலசுப்ரமணியம்.

விவசாயிகளான கவுண்டர்களுக்கு வாழ்க்கை இப்போது பெரும்பாடு. விளைபொருட்களுக்கு சரியான விலை இல்லை, எரிவாயு குழாய் பாதிப்பு, நெடுஞ்சாலைகளுக்கென்று பறிபோகும் விவசாய நிலம் என்று எண்ணற்ற இன்னல்கள். ஆனால் இவை எவற்றுக்கும் யுவராஜ் போன்றவர்கள் ஒரு வினையும் ஆற்றமாட்டார்கள். இவை தெரிந்தும் ஆணவ கொலைகளில் ஆதிக்க சாதிகளின் பெரும்பான்மை மக்கள் சாதிக்கும் கள்ள மவுனம் யுவராஜ் போன்றவர்களுக்கு பெரிய பலம்

பட்டியலினத்தவரின் வளர்ச்சி அச்சுறுத்தலாக தோன்றும் பொழுது யுவராஜ் போன்ற தலைவர்கள் தங்கள் சாதிக்கு வாய்த்த ஆபத்பாந்தவர்கள் போன்று தெரிகிறார்கள். விவசாயிகளான கவுண்டர்களுக்கு வாழ்க்கை இப்போது பெரும்பாடு. விளைபொருட்களுக்கு சரியான விலை இல்லை, எரிவாயு குழாய் பாதிப்பு, நெடுஞ்சாலைகளுக்கென்று பறிபோகும் விவசாய நிலம் என்று எண்ணற்ற இன்னல்கள். ஆனால் இவை எவற்றுக்கும் யுவராஜ் போன்றவர்கள் ஒரு வினையும் ஆற்றமாட்டார்கள். இவை தெரிந்தும் ஆணவ கொலைகளில் ஆதிக்க சாதிகளின் பெரும்பான்மை மக்கள் சாதிக்கும் கள்ள மவுனம் யுவராஜ் போன்றவர்களுக்கு பெரிய பலம், என்கிறார் பாலமுருகன்.

சாதிமறுப்பு திருமணங்களையும் சாதி எதிர்ப்பையும் தன்னுடைய வாழ்நாள் முழுதும் கடைபிடித்த திராவிட இயக்கத்தின் வேரான பெரியார் தோன்றிய மண் கொங்கு மண்டலம். ஆனால் திராவிட கொள்கைகளை எந்த அளவுக்கு இந்த பகுதி மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. தொடக்கத்தில் காங்கிரசுக்கு இருந்த ஆதரவை தொழிற்சங்க அரசியல் மூலம் கம்யூனிஸ்டுகள் கைப்பற்ற முனைந்தார்கள். இறுதியில் கொங்குமண்டலம் அதிமுக பலம்கொண்ட பகுதியை மாறியது. திராவிட கட்சிதான் எனினும் திராவிட கொள்கைகள் பால் அதிமுகவுடைய தீவிரம் அவ்வளவு சொல்லிக்கொள்ளும்படியானதல்ல.

இருந்தாலும் அருந்ததியர்களும் கவுண்டர்களும் ஒரு நேர்கோட்டில் வரும் இடம் எதுவென்றால் அதிமுக மற்றும் எம்ஜியார். மீனவ மக்களுக்கு ஒரு படகோட்டி போல எம்ஜியார் நடித்த மதுரைவீரன் படம் அருந்ததியர்க்கு. ஆணவ கொலையென்ற பட்டியலில் சேர்க்கக்கூட யோசிக்க வைக்கும் அப்பாவியான கோகுல்ராஜின் மரணம் அந்த பட்டியலில் கடைசியாக இருக்கும் வாய்ப்புகள் மிகவும் அரிது என்றே சொல்கிறார்கள் சமூக செயல்பாட்டாளர்கள். சாதி என்னும் தீமை பல நூற்றாண்டு பழமையானது. அதை எதிர்க்க மிக தீவிரமான அணுகுமுறைகள் அரசிடமும் மக்களிடமும் வேண்டும். “அப்படி ஒரு தீவிரம் இருப்பதாக தெரியவில்லை,” என்கிறார் மக்கள் சிவில் உரிமை கழகத்தின் பாலமுருகன் அவர்கள்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival