Read in : English

கொரோனா என்ற சொல்லை இரண்டு ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆம், பெருந்தொற்றுப் பரவலுக்கு இரண்டு வயதாகிவிட்டது. இந்தக் காலம் பல துறைகளையும் பாதித்தது போலவே சினிமா துறையையும் பாதித்தது. மனித வாழ்வில் முன்னெப்போதும் இல்லாத மனநிலையை உணரவைத்திருக்கும் பெருந்தொற்றுக்காலம் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. சினிமாவைப் புரட்டி எடுத்துவிட்டது வெள்ளித் திரை தூசு படிந்து மங்கலாகிவிட்டது.

பொதுமக்கள் எதிர்கொண்ட சிக்கல்களை எல்லாம் சினிமாத் துறையினரும் எதிர்கொண்டிருந்தார்கள். சினிமாவைத் தவிர எதுவுமே தெரியாத சினிமாக்காரர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கியதால் பலர் வாழ்விழந்தனர். அவர்களது தனிப்பட்ட வாழ்வில் பல சேதாரங்கள் ஏற்பட்டன. இன்னும் சினிமா தனது வழக்கமான பாதைக்குத் திரும்பவில்லை. திரும்பிவிடும் எனும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் திரைத்துறையினர். சினிமா உருவாக்கம் இந்தக் காலத்தில் மாறியிருக்கிறதா? பொது முடக்கம் காரணமாக  சினிமா எப்படியான பாதிப்பை அடைந்தது? சினிமா படைப்பில் ஏதாவது மாற்றம் உருவாகியிருக்கிறதா? ஒரு கதையை சினிமாவாக மாற்றும் அந்த நடைமுறையில் என்ன மாற்றம் தென்படுகிறது? மெல்ல அசைபோடுவோமா?

பெருந்தொற்றால் சினிமாத் துறைக்கு முதலில் விழுந்த பலத்த அடி திரையரங்க மூடலே. இவ்வளவு நீண்ட நாள்கள் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்படும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யாராவது சொல்லியிருந்தால் அவரது கூற்று எள்ளிநகையாடப்பட்டிருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் அப்படித் திரையரங்குகள் மூடப்பட்டன. சினிமாத் துறையினரும் ரசிகர்களும் கையைப் பிசைந்தபடி அந்த யதார்த்தத்துக்கு முகம் கொடுத்திருந்தனர். அடுத்ததாக, படப்பிடிப்புகளுக்குக் கிடுக்கிப் பிடி. பொது முடக்கம் காரணமாகப் படப்பிடிப்புகளுக்குத் தடையிருந்தன. படப்பிடிப்பு அனுமதி கிடைத்த நாள்களிலும் பெரிய அளவில் கூட்டம் கூட தடையிருந்தது. அதனால் ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார் வகையறா படங்களை உருவாக்கப் பெருந்தொற்றுக் காலம் அனுமதிக்கவில்லை. ஷூட்டிங்கின்போது, இத்தனை பேர்தான் கலந்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையையெல்லாம் சினிமாத் துறை இதற்கு முன் எதிர்கொண்டதேயில்லை.

ஒரு படத்துக்கான கதையை யோசிக்கும்போதே, இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்த பெருந்தொற்றுக் காலம் அனுமதிக்குமா என்பதையும் சேர்த்தே யோசிக்க வேண்டிய தேவை எழுந்தது. கதையை யோசிக்கும்போதே, ஒரு வரையறையுடன் யோசிக்க வேண்டிய தேவையைப் பெருந்தொற்றுக் காலம் உருவாக்கிவிட்டது. ஆகவே, பலரால் கதையை யோசிக்கவே முடியாமல் போய்விட்டது; பட உருவாக்கத்தின் தொடக்கப் பணி சுணக்கம் கண்டது. பொதுவாக, படத்தின் பட்ஜெட்டை யோசித்துதான் கதையையே தமிழின் வருங்கால இயக்குநர்கள் முடிவுசெய்வார்கள். படம் தொடர்பான பேச்சையே, மூணு கோடிக்கு ஒரு கதை இருக்கிறது, பத்து கோடி பட்ஜெட்டுக்கான கதை வைத்துள்ளேன் இப்படித்தான் தொடங்குவார்கள். ஆனால், இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலம் அப்படிப் பேச்சைத் தொடங்க அனுமதிக்கவில்லை. பல கதை விவாதங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன; பல படங்கள் முழுமையாகத் தயாராகியும் திரையரங்குக்கு வர இயலாமல் போனது. வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படமே அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஏனெனில், இத்தகைய படங்களின் மிகப் பெரிய வருமானம் திரையரங்க வசூலே. ஓடிடி வழியாக அதை ஈடு செய்யவே இயலாது.

மிகப் பெரிய நட்சத்திரங்கள்இயக்குநர்கள்தயாரிப்பாளர்கள் ஆகியோரைக் கிட்டத்தட்ட இந்த கொரோனா காலம் ஓரமாக அடங்கி ஒடுங்கி இருக்கச்செய்துவிட்டது. அதற்கு முக்கியக் காரணம் திரையரங்குகள் மூடிக் கிடந்ததே.

மிகப் பெரிய நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரைக் கிட்டத்தட்ட இந்த கொரோனா காலம் ஓரமாக அடங்கி ஒடுங்கி இருக்கச்செய்துவிட்டது. அதற்கு முக்கியக் காரணம் திரையரங்குகள் மூடிக் கிடந்ததே. பரவல் குறைந்த காலத்தில் ஐம்பது சதவீதப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். தியேட்டரில் நூறு சதவீதப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வெளியான பெரிய படங்கள் மாஸ்டர், அண்ணாத்த, டாக்டர் போன்றவையே. இவையும் கொரொனா தொடங்குவதற்கு முன்னரே உருவாக்கப்பட்டுவிட்ட படங்கள். கொரோனா காலத்துக்குப் பிறகு இப்படியான பெரிய பட்ஜெட் படங்களை உருவாக்கும் சூழல் வாய்க்கவேயில்லை.

பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாட்டுகளுக்குப் போய் பாடல் காட்சிகளைப் படமாக்கும் சூழல் உருவாகவில்லை. குத்துப் பாடல்களைப் படமாக்கப் பெருங்கூட்டம் தேவை. ஆனால், பொது முடக்கம் காரணமாக இதற்கு அனுமதி இல்லாததால் இந்தக் காலத்தில் பல படங்களின் பாடல்கள் மாண்டேஜ் காட்சிகளாகவே உருவாகியிருந்தன. கடந்த இரு ஆண்டுகளில் பெரிய பட்ஜெட் படமென எதுவுமே புதிதாக உருவாக்கப்படவில்லை. ஆனால் இந்தப் பொது முடக்கத்தால் பலனடைந்தவை என்று சிறிய படங்களைச் சொல்லலாம். சிறிய படங்கள் பல இந்த ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. சார்பட்டா பரம்பரை முதல் ரைட்டர் வரை உதாரணங்கள் உள்ளன. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் போன்ற முன்னெடுப்புகள் சாத்தியப்பட்டன. இவை ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர் மீது அக்கறை கொண்ட கதைகளைக் கொண்டிருந்தவை என்பதைக் கெட்ட  நேரத்திலும் நடந்த நல்ல விஷயமாகப் பார்க்க முடிகிறது.

பொது முடக்கம் தொடங்கியபோது, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெங்குயின், த்ரிஷா நடித்த பரம பதம் போன்ற பல படங்கள் ஓடிடி வழியே வெளியாகத் தொடங்கின. விருமாண்டி இயக்கிய க/பெ. ரணசிங்கம் படம் ஓடிடியில் வெளியானாலும் பலத்த வரவேற்பைப் பெற்றது.  பெரிய நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய இரண்டு படங்கள் ஓடிடி தளத்தில்தான் வெளியாயின. ஓடிடி என்பது பட வெளியீட்டுக்கான ஒரு பெரிய மாற்றாக மாறியது இந்தக் காலத்தில்தான். திரையரங்குக்கு வர வழியில்லாமல் முடங்கிய பல படங்கள் ஓடிடி வழியே ரசிகரைச் சந்தித்தன. அண்மையில் வெளியான விக்ரம் நடித்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மகான்வரை இதுதான் நிலைமை. பெருந்தொற்று திரையரங்குகளை முடக்கிப் போட்டிருக்காவிட்டால் தமிழில் ஓடிடி தளம் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற்றிருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

உள்ளடக்கம் ரீதியாகத் தமிழ்ப் படங்களில் பெரிய மாற்றம் நடந்த தடயம் எதுவும் இப்போது வரை தெரியவில்லை. இப்படியான தடயத்தை அருகிலுள்ள மாநிலமான கேரளத்தில் பார்க்க முடிந்தது.

உள்ளடக்கம் ரீதியாகத் தமிழ்ப் படங்களில் பெரிய மாற்றம் நடந்த தடயம் எதுவும் இப்போது வரை தெரியவில்லை. இப்படியான தடயத்தை அருகிலுள்ள மாநிலமான கேரளத்தில் பார்க்க முடிந்தது. மலையாளத்தில் ஆர்க்கரியாம் என்னும் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இதில் கதைக் களத்தில் கொரோனா பெருந்தொற்று இடம்பெற்றிருந்தது. படத்தின் கதை மாந்தர்கள் இருவர் பொது முடக்கம் காரணமாக  மும்பையிலிருந்து கேரளத்துக்கு காரிலேயே பயணப்படுவார்கள். இப்படி கொரோனாவை உடனடியாகத் திரைப்படத்தில் சித்தரித்திருந்தது மலையாளத் திரையுலகம். ஆனால், தமிழ் முழுநீளப் படத்தில் இன்னும் கொரோனா காலம் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. சில குறும்படங்கள்கூட வந்துள்ளன. உதாரணமாக நாதன் ஜி எழுதி இயக்கிய ஓப்செஸ்டு (ளிதீsமீssமீபீ) என்னும் குறும்படத்தைச் சொல்லலாம்.

இதில் கொரோனா பெருந்தொற்றாலான முடக்கத்தின்போது வீட்டுக்குள் மாட்டிக்கொண்ட ஒரு குடும்பத்தின் கதை படமாக்கப்பட்டிருந்தது. படத்தில் குடும்பத் தலைவர் வெளிப்படுத்திய பதற்றம் மிக யதார்த்தமாக வெளிப்பட்டிருந்தது. எல்லாவற்றுக்கும் பயம். எப்படி கொரோனா தொற்றும் என்பது தெரியாமல் எதையாவது வெற்றுக் கையால் தொட்டுவிட்டால்கூட பயந்து உடனே போய் கைகளை நன்கு கழுவும் அந்த நாள்களின் மனப்பதற்றமிகு சூழலை அச்சு அசலாகக் காட்சிப்படுத்தியிருந்தார் நாதன். இப்படியான முயற்சிகள் பெரிய திரையில் வந்ததுபோல் தெரியவில்லை.

கொரோனாவை மனிதர் எதிர்கொண்டவிதம் பற்றிய கதைகள் ஒருவேளை கோடம்பாக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கலாம். தமிழ் சினிமா கதை பேசிப் பேசியே உருவாகும் என்பதே வரலாறு. இந்த கொரோனா காரணமாகத் திரைக்கதை விவாதங்கள் தேக்கமடைந்துள்ளன. இதிலிருந்தெல்லாம் சினிமாத் துறை மீள வேண்டும். கொரோனா காரணமாக சினிமாவுக்கு ஏற்பட்ட பின்னடைவை வெப் சீரிஸ் போன்றவை பயன்படுத்திக்கொண்டன. திரையரங்குகள் திறந்தாலும் இப்போதைக்கு சினிமாவுக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலே இரண்டு ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே படம் பார்த்துப் பழகிய ரசிகர்களை மீண்டும் திரையரங்கத்துக்கு வரவழைப்பதுதான். தியேட்டரில் பார்த்தால் மட்டுமே ரசிக்க இயலும் என்பது போன்ற படங்களை உருவாக்கினால்தான் ரசிகர்களைக் கவர முடியும். அப்படித் தமிழ்ப் படங்கள் உருவாகுமா? திரையரங்கில் கூட்டம் திரளுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.*

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival