Read in : English
தற்போதைய பள்ளிக் கல்வி ஆணையர் கே. நந்தகுமார் ஐஏஎஸ் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சித் தலைவராக இருந்தபோது, அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட எலைட் ஸ்கூல் திட்டத்தின் கீழ் படித்து அரசுப் பள்ளியில் முதல் ரேங்கில் தேர்ச்சி பெற்று, ஜி. விஸ்வநாதனின் விஐடி பல்கலைக்கழகத்தின் ஸ்டார்ஸ் (STARS – Support the Advancement of Rural Students Scheme) திட்டத்தின் கீழ் அந்தப் பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்பை இலவசமாகப் படித்து, தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார் Ñஈழப் போர் காரணமாக புலம் பெயர்ந்து, மண்டபம் அகதி முகாமில் இருந்து வந்த ஈழத் தமிழ் மாணவர் எஸ். சாயீஈசன்(25).
அவர், தனது வாழ்க்கைக் கதையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்:
நான் பிறந்தது யாழ்ப்பாணம். எனது அம்மா புவனேஸ்வரி திரிகோணமலையில் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். Êஅங்குள்ள அரசுப் பள்ளியில், அதாவது தேசியப் பாடசாலையில் எட்டாவது வகுப்பு வரைப் படித்தேன். 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஈழப் போர் காரணமாக, அங்கு வாழ முடியாத சூழல் ஏற்பட்டது. உயிருக்குப் பயந்து, அங்குள்ள வீட்டையும் எங்களது நிலத்தையும் எங்களது உடைமைகளையும் அப்படியே விட்டுவிட்டு ராமேஸ்வரம் வந்தோம். எங்களிடம் இருந்தது, அம்மாவின் தோடும், பணம் பத்தாயிரம் ரூபாய் பணம் மட்டுமே. புலம் பெயர்ந்து வந்த நாங்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டோம். நாங்கள் சாப்பிடுவதற்கு அரசு சார்பில் ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படுகின்றன. அத்துடன் மாதம் 750 ரூபாயை உதவித் தொகையாக அரசு வழங்குகிறது. தற்போது ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்.
கடல் பாசி கம்பெனியில் ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பளத்தில் அம்மாவுக்கு வேலை கிடைத்தது. பின்னர் இறால் கம்பெனியில் வேலைக்குப் போனார். அப்புறம் கட்டட வேலைக்குப் போனார். பிறகு கருவாட்டு கம்பெனியில் வேலைக்குப் போனார்.
அம்மா டீச்சர் வேலை பார்த்த அனுபவம் இருந்தாலும், எங்களது வாழ்வாதாரத்துக்காக ஏதாவது வேலையைச் செய்தாக வேண்டிய கட்டாயம் அம்மாவுக்கு இருந்தது. அப்போது கடல் பாசி கம்பெனியில் ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. அங்கு சுமார் ஓராண்டு வரை அங்கு வேலை பார்த்த அம்மா, பின்னர் இறால் கம்பெனியில் வேலைக்குப் போனார். அப்புறம் கட்டட வேலைக்குப் போனார். பிறகு கருவாட்டு கம்பெனியில் வேலைக்குப் போனார். அங்கு கருவாட்டு மூட்டைகளைத் தூக்க வேண்டும். இப்படி கஷ்டமான வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து வந்தோம்.
Ñஇதற்கிடையே, மண்டபம் கேம்ப்பில் இருந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்தேன். பள்ளியில் நான் நன்றாகப் படித்தேன். பள்ளியில் சேர்ந்த பிறகு, முதலில் இரண்டாம் பருவத்தேர்வில் இரண்டாவது ரேங்க் பெற்றேன். பின்னர் அரையாண்டுத் தேர்வில முதல் ரேங்க். 2012இல் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதினேன். அந்தத் தேர்வில் 500க்கு 441 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் ரேங்க் பெற்றேன். அந்தப் பள்ளியில் படிக்கும் போது அந்தப் பள்ளி ஆசிரியர்கள் Ñமலைப்பாண்டி சார், கோகிலா டீச்சர் ஆறுமுகம் சார், சுவாமிநாதன் சார், விமலராணி டீச்சர், ஹெலன் டீச்சர் ஆகியோர் எனக்கு ஆதரவாக இருந்து நான் படிப்பதற்கு ஊக்கமளித்தார்கள் என்பதை நன்றியுடன் சொல்ல வேண்டும்.
நான் படித்த அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தேன். பதினோராம் வகுப்பு முடியும் தருவாயில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த நந்தகுமார் சார், அரசுப் பள்ளி மாணவர்களை பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்காக எலைட் ஸ்கூல் திட்டத்தைத் தொடங்கினார். அப்போது, ராமநாதபுரத்தில் உள்ள நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகளில் அந்த மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்றன. அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் ரேங்க் என்பதால் எனக்கு அந்தப் பள்ளியில் சேர இடம் கிடைத்தது. இந்தப் பள்ளியில் சேர, அரசுப் பள்ளி மாணவர்கள் 22 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கணித ஆசிரியர் நவநீதகிருஷ்ணன், விலங்கியல் ஆசிரியர் ஆறுமுகம், இயற்பியல் ஆசிரியர் {குமார், வேதியியல் ஆசிரியர் ஞானப்பிரகாசம், தமிழ் ஆசிரியை தமிழரசி, ஆங்கில ஆசிரியை ஜான்சி ராணி ஆகியோர் எங்களுக்கு பாடங்களை நன்றாகச் சொல்லித் தருவார்கள். தங்களது குழந்தைகளைப் போல நினைத்து எங்களது படிப்பில் தீவிர அக்கறை செலுத்தினார்கள். சில ஆசிரியர்கள் இரவு நேரம் என்று கூட பார்க்காமல் எங்களுக்குப் பாடம் நடத்துவார்கள். எங்களது சந்தேகங்களைப் போக்குவார்கள். வாரந்தோறும் நந்தகுமார் சார் எங்களது பள்ளிக்கு வந்து எங்களை நேரில் சந்தித்து தன்னம்பிக்கையூட்டுவார்.
பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காகத் தீவிரமாகப் படித்தேன். 2014இல் நடைபெற்ற ]]]பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1088 மதிப்பெண்கள் கிடைத்தது. ஆர்க்காவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலேயே முதல் ரேங்க் நான்தான். இயற்பியல், வேதியியல் பாடங்களில் தலா 196 மதிப்பெண்களும் கணிதத்தில் 195 மதிப்பெண்களும் உயிரியலில் 185 மதிப்பெண்களும் பெற்றேன். பொறியியல் படிப்பில் சேருவதற்கான எனது கட் ஆஃப் மதிப்பெண்கள் 195.75.
ராமநாதபுரம் நகராட்சிப் பள்ளி ஆசிரியை திலகவதி டீச்சரும் என் மீது அக்கறை கொண்டு, எனது படிப்பு குறித்து கேட்டு எனக்கு ஊக்கமளிப்பார். அரசுப் பள்ளியில் முதல் மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களுக்கு விஐடி பல்கலைக்கழகத்தின் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் Ðதேர்ந்தெடுத்து இலவசமாகப் பொறியியல் படிப்பை வழங்குகிறார்கள் என்ற தகவலையும் சொன்னார். அதையடுத்து அந்தப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தேன். எனக்கு பி.டெக். புரடக்ஷன் அண்ட் இன்டஸ்ட்ரியல் என்ஜினியரிங் படிப்பில் இடம் கிடைத்தது.
ஏழ்மைச் சூழ்நிலையில் இருந்தஎனக்கு இலவசமாகப் பி.டெக். படிக்கும் வாய்ப்பை வழங்கியது விஐடி பல்கலைக்கழகம். எலைட் ஸ்கூலில் படித்திருக்காவிட்டால் என்னால் இந்த அளவுக்கு மதிப்பெண் பெற்று, இலவசமாக பி.டெக். படிக்க வாய்ப்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.
புலம் பெயர்ந்து அகதியாக தமிழ்நாடு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் என்னைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு படிப்புதான் ஏணிப்படி. பிளஸ் டூ முடித்ததும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முடியாது. அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்பில் ஈழத் தமிழர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது. கலைக் கல்லூரியிலும் சேரலாம். ஆனால், படிப்பதற்கு பணம் என்பது முக்கியம். ஏழ்மைச் சூழ்நிலையில் இருந்தஎனக்கு இலவசமாகப் பி.டெக். படிக்கும் வாய்ப்பை வழங்கியது விஐடி பல்கலைக்கழகம். அதற்கு வாய்ப்பளித்த பல்கலைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டும். அவரால்தான் பி.டெக் படிப்பை இலவசமாகப் படித்து முடிக்க முடிந்தது.

வார விடுமுறையில் அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர்களிடம் தன்னம்பிக்கையூட்டும் தன்னார்வலராக சாயீஈசன்.
எலைட் ஸ்கூலில் படித்திருக்காவிட்டால் என்னால் இந்த அளவுக்கு மதிப்பெண் பெற்று, இலவசமாக பி.டெக். படிக்க வாய்ப்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. நந்தகுமார் சாருக்கும் எனக்கு ஊக்கமாக இருந்த ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரையும் எப்போதும் நன்றியுடன் மனதில் நினைத்துக் கொள்வேன்.
2014ஆம் ஆண்டில் விஐடி பல்கலைக்கழகத்தில் சேர்ந்த நான் 2018ஆம் ஆண்டு பி.டெக். படிப்பை முடித்தேன். கேம்பஸ் பிளேஸ்மெண்ட் மூலம டிசிஎஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை கிடைத்தது. 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் குஜராத்தில் பயிற்சி பெற்ற நான், அந்த ஆண்டு நவம்பரிலிருந்து சென்னையில் பணிபுரிந்து வருகிறேன். எனது அம்மா இன்னமும் மண்டபம் அகதிகள் முகாமில்தான் இருந்து வருகிறார்.
இதற்கிடையில், பள்ளிக் கல்வித் துறையின் மாதிரிப் பள்ளித் திட்டத்தில் தன்னார்வலராக இருந்து வருகிறேன். எங்களது வார விடுமுறை நாட்களில் இந்தப் பணியைச் செய்து வருகிறேன். இதற்கான வாய்ப்பை வழங்கியவர் நந்தகுமார் சார். எலைட் ஸ்கூல் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் நேரடியாகக் கலந்துரையாடுவோம். சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் படிப்பினால் உயர முடியும் என்றும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறி அவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டுவோம். எங்களுக்குப் படிப்பை வழங்கி எங்களைக் கைதூக்கி விட்ட அரசுப் பள்ளிகளுக்கு நாங்கள் செய்யும் சிறிய நன்றிக்கடன் இது என்று கூறும் சாயீஈசன், அடுத்த ஆண்டில் கனடாவில் வேலை செய்வதற்காக முயற்சி செய்து வருகிறேன் என்கிறார்.
Read in : English