Read in : English
பாரம்பரிய கலைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பட்டதாரியான இளைஞர் ஒருவர், கிராமம்தோறும் சென்று அழிவில் இருக்கும் பாரம்பரிய கிராமியக் கலைகளை பள்ளி மாணவர்களுக்கு கற்று கொடுத்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் கப்பூர் கிராமத்தை சேர்ந்த அன்பரசன் எம்.ஏ. படித்து விட்டு எம்.எட் படித்து முடிக்க உள்ளார். ஆசிரியர் பணியில் சேருவதற்காகப் படித்து வரும் இவர் ஒரு கிராமியக் கலைஞர். அன்பரசனின் அப்பா விவசாய கூலித் தொழிலாளி. இரண்டு சகோதரர்கள் உள்ளனர். வறுமையில் வளர்ந்த அன்பரசன் பள்ளி தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார்.
அந்த சமயத்தில், கப்பூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் மெல்ல, மெல்ல அழிந்து வருவதும், மறக்கப்பட்டு வரும் தமிழர்களின் பாரம்பரிய கிராமியக் கலைகளான பறை, கரகம், கும்மியாட்டங்களை சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கற்று தர ஏற்பாடு செய்துள்ளார். வெளியூரில் இருந்து வந்த கலைஞர்கள் சிறிது காலம் கப்பூர் சிறுவர்களுக்கு இந்தக் கலைகளைக் கற்று கொடுத்துள்ளனர். பள்ளியில் இருந்தே நடனத்திலும், இசையிலும் ஆர்வம் மிகுந்த அன்பரசனும் இதில் கலந்து கொண்டு கிராமியக் கலைகளை கற்றார்.
கிராமியக் கலையின் மீதான ஆர்வத்தில் நேரடியாக தனக்கு நடனம் ஆட சொல்லிக் கொடுத்த கலைஞர்களைத் தேடி அன்பரசன் சென்றுள்ளார். புதுச்சேரி, விக்கிரவண்டி பகுதிகளில் இருந்த கிராமியக் கலைஞர்களை சந்தித்த அன்பரசன், தமிழர்களின் பாரம்பரிய கலைகளை அவர்களிடமிருந்து கற்றார். 2009ஆம் ஆண்டில் இருந்து கிராமியக் கலைஞர்களை தேடிச்சென்று கலை நுணுக்கங்களைக் கற்ற அன்பரசன் அவர்களுடன் சேர்ந்து திருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோயில் திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு பகுதிகளுக்கு சென்று கிராமியக் கலைகளை நிகழ்த்தியுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு மேலாக பகுதி நேரமாக கிராமியக் கலைகளை ஆடி வரும் அன்பரசன், கலை நிகழ்ச்சிகள் மூலம் கிடைத்த பணத்தில் எம்.எட். படித்து வருகிறார்.
10 ஆண்டுகளுக்கு மேலாக கிராமியக் கலைஞராக வலம் வந்த அன்பரசன், அன்பு கிராமிய கலை குழுவை நடத்தி வருகிறார். இந்த குழுவில் ஆண், பெண் என 30க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக பகுதி நேரமாக கிராமிய கலைகளை ஆடி வரும் அன்பரசன், கலை நிகழ்ச்சிகள் மூலம் கிடைத்த பணத்தில் எம்.எட். படித்து வருகிறார். வறுமையில் வாடிய தனக்கு நல்ல உடை, கல்வி, மரியாதை என அனைத்தையும் அளித்து கிராமியக் கலை வாழ வைப்பதாக அன்பரசன் பெருமையுடன் கூறுகிறார்.
ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதன் மொழியையும், பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் கலைகளை அழித்தால் போதுமானது. தமிழர்களின் பெருமையை எடுத்துரைக்கும் கிராமியக் கலைகள் மறக்கடிக்கப்படுவதை உணர்ந்த அன்பரசன், அதை அடுத்த தலைமுறைக்கு கற்று கொடுக்க வேண்டுமென நினைத்தார். இதற்கு வாய்ப்பாக கொரோனா ஊரங்கும் அமைந்தது. கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக வீடுகளில் சுற்றி திரிந்த பள்ளி மாணவர்களை கிராமம், கிராமமாகத் தேடி செல்லும் அன்பரசன் அவர்களுக்கு இலவசமாக பறை, ஒயில் ஆட்டம், கரகாட்டம், கும்மியாட்டம், கழியலாட்டம், செடி குச்சி ஆட்டம், பெரிய கோலாட்டம், மயில் ஆட்டம், மாடு ஆட்டம், மான் கொம்பாட்டம் உள்ளிட்ட கிராமியக் கலைகளை இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார். இதனால் தமிழர்களின் பெருமைமிக்க கிராமியக் கலைகளை உயிர்ப்புடன் இருக்க வைப்பதுடன் மாணவச் செல்வங்களை செல்போன் மோகத்தில் இருந்து மீட்கலாம் என அன்பரசன் உறுதியாக கூறுகிறார்.
கிராமியக் கலைத்துறையில் தனது 13 ஆண்டு கால அனுபவத்தில் 200க்கும் மேற்பட்ட கலைஞர்களை உருவாக்கியுள்ளார். தற்போது விழுப்புரத்தில் உள்ள அரசு கல்லூரியான டாக்டர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிராமியக் கலைகளை கற்று கொடுக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வரும் அன்பரசன், அனைத்து கிராமியக் கலைஞர்கள் சார்பாக தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
ஒவ்வொரு பள்ளியிலும் உடற்பயிற்சிக்கு என ஆசிரியர் இருப்பதை போல் கிராமியக் கலைகளை கற்று கொடுக்கும் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும்.
“தமிழர்களின் அடையாளத்தை பறைசாற்றும் கிராமியக் கலைஞர்கள் கொரோனா காலத்தில் கச்சேரிகள் கிடைக்காததால் சொல்ல முடியாத அளவுக்கு பொருளாதார சிக்கலில் தவித்ததால் கூலி வேலைக்கு சென்றனர். கிராமியக் கலைஞர்களை அரசு ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் வேலை வாய்ப்பு தர வேண்டுமென்ற கோரிக்கை பல காலமாக வைக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் உடற்பயிற்சிக்கு என ஆசிரியர் இருப்பதை போல் கிராமியக் கலைக்கலைகளை கற்று கொடுக்கும் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு கிராமியக் கலைஞருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். அதேநேரம் மாணவர்களும் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை கற்று கொள்ள முடியும். இதை அரசு நிறைவேற்றினால் கிராமியக் கலைகள் வளர்வதுடன், கலைஞர்களின் வாழ்வாதாரமும் மேம்படும்” என்கிறார் அன்பரசன்.
Read in : English