Read in : English
சிக்குன்குனியா காய்ச்சல் 2006இல் வந்தபோது, அலோபதி மருத்தவ சிகிச்சைகள் இருந்தபோதிலும்கூட, நிலவேம்பு குடிநீர் மக்களிடம் பிரபலமானது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வைரஸை கட்டுப்படுத்தும் தன்மை அதற்கு இருப்பதை உறுதி செய்த நிலையில், அரசே நிலவேம்பு குடிநீரைப் பரிந்துரை செய்தது. டெங்கு வந்தபோதும் நிலவேம்பு குடிநீர் பரிந்துரைக்கப்பட்டது.
கொரோனா தொற்று வந்தபோது, இதுவரை காணாத பதற்றம் மக்களிடம் தொற்றிக் கொண்டது. இதுவரை வரலாறு காணாத வகையில், கொரோனா தொற்று பரவியபோது அனைவரும் முகக்கவசம் அணிந்தார்கள். பொது வெளியில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றினார்கள். கபசுரக் குடிநீர் என்ற பெயர் அப்போதுதான் அறிமுகமானது. ஏற்கெனவே சித்த மருத்துவத்தில் பயன்பாட்டில் உள்ள அந்த மருந்து மக்களிடம் பிரபலமாகத் தொடங்கியது.
பல இடங்களில் கபசுரக்குடி நீரைத் தயாரித்து பொது மக்களுக்கு இலவசமாக வழங்கினார்கள். எங்கே இந்த மருந்து கிடைக்கும் என்று தேடி வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு இந்த மருந்தை தண்ணீரில் காய்ச்சி குடிக்கத் தொடங்கினார்கள். பல வீடுகளில் உள்ள மருந்துகளின் பட்டியலில் கபசுரக்குடிநீரும் புகுந்துவிட்டது.
இந்த நிலையில், தற்போதையப் பிரபலம் டோலோ 650 மாத்திரை. பொதுவாக காய்ச்சல், உடல்வலி ஏற்படும்போது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது பாரசிட்டமால். அதாவது டோலோ 650, குரோசின், கால்பால் போன்றவை. இதில் பெங்களூரில் உள்ள மைக்ரோ லேப்ஸ் நிறுவன தயாரிப்பான டோலோ 650, இதில் மிகவும் பிரபலம். கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து இந்த மாத்திரையின் விற்பனை அதிகரித்துவிட்டது. டாக்டர்கள் பரிந்துரை ஒருபுறம் இருந்தாலும்கூட, மற்றொரு புறம் மக்கள் தாங்களே முன்எச்சரிக்கையாக இந்த மாத்திரைகளை வாங்கி வீட்டில் இருப்பு வைத்துக் கொள்கின்றனர். முதலில் லேசாக காய்ச்சல் வந்தாலே இந்த மாத்திரையைச் சாப்பிடுகின்றனர். அதற்கு அடுத்த கட்டம்தான் டாக்டர்களைப் பார்ப்பது.
இதனால் கடந்த இரண்டுகளில் இதன் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு இந்தத் தொற்று அதிகரித்ததிலிருந்து, இதுவரை 350 கோடி அளவுக்கு டோலோ மாத்திரை விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அத்துடன், பாரசிட்டமால் மாத்திரை விற்பனையில் டோலோவுக்குத்தான் முதலிடம். இந்த ஒரு மாத்திரை மாத்திரம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை ரூ. 507 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.
கொரோனோ தொற்று காலத்தில் பலரது வாழ்க்கை முடங்கிப் போய்விட்டது. சுற்றுலா போன்ற பல துறைகள் நெருக்கடியைச் சந்தித்தன. ஆனால், இந்த பெருந்தொற்று காலத்தில் பார்மஸி நிறுவனங்கள் காட்டில் பெருமழைதான். மருந்துகள் விற்பனை பெருகி வருகின்றன.
சித்த, ஆயூர்வேத மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடிகள் உண்டு. அதில் ஒன்று, பித்த நாடி வெப்பத்தைக் குறிக்கும். எதைத் தின்றால் பித்தம் தீரும் என்ற சொல் வழக்கு உண்டு. நோய்த் தொற்று பரவும் காலங்களில் டோலோ போல சில மருந்துகள் மக்களிடம் பிரபலமாகிவிடுவது உண்டு. மருந்துகளைப் பயன்படுத்துவது அளவோடு இருக்க வேண்டும் என்பதையும், மருத்துவர்களின் பரிந்துரை முக்கியம் என்பதையும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
உணவே மருந்தாக முடியும். ஆனால், மருந்தே உணவாகிவிடக்கூடாது. விருந்தும் மருந்தும் மூன்று நாள்தான். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான் என்று வீட்டில் பெரியவர்கள் எப்போதோ சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
Read in : English