Read in : English

நடிகர் சூர்யா தயாரித்து ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 2 அன்று அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியானது. விமர்சனரீதியாகப் பெரிய வரவேற்பைப் பெற்ற படத்தின் சில காட்சிகள் ஜனவரி 18 அன்று ஆஸ்கரின் அதிகாரப்பூர்வத் தளத்தில் வெளியிடப்பட்டன. ஒரு தமிழ்ப் படத்தின் காட்சிகள் ஆஸ்கர் இணையதளத்தில் வெளிவருவது இதுவே முதன்முறை. இதைத் தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் ஜெய் பீம் ஆஸ்கரால் மதிக்கப்பட்டதை எண்ணிக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால், ஓரிரு நாள்களிலேயே ஆஸ்கருக்கு 5,000 அமெரிக்க டாலர், சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய், பணம் கட்டணம் கட்டியே ஜெய் பீம் திரைப்படக் காட்சிகளை யூடியூபில் வெளியிட்டிருந்த விவரம் தெரியவந்தது. ஆஸ்கர் ’சீன் அட் தி அகாடெமி’ என்ற பெயரில் இந்த வாய்ப்பை வழங்குகிறது. கட்டணம் செலுத்தியதன் பேரில்தான் இந்த வாய்ப்புக் கிடைத்தது என்பதைப் படக் குழுவினர் வெளிப்படையாகத் தெரிவிக்காததால் இது வியாபாரத் தந்திரமாகக் கருதப்பட்டது. இது தொடர்பாக ஆஸ்கர் இணையதள விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி இந்த வியாபாரத் தந்திரத்தை அம்பலப்படுத்தின சமூக வலைத்தளங்கள்.

பிபிசி தமிழ் இணையதளத்துக்கு இயக்குநர் ஞானவேல் அளித்திருந்த பேட்டியில்கூட “கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆஸ்கர் குழுவில் இருந்து படத்தின் சில காட்சிகளை இணைத்து என்னுடைய பேட்டியும் கேட்டிருந்தார்கள். இதற்கு முன்பு இப்படி எல்லாம் யாரிடமும் கேட்டிருப்பார்களா எனத் தெரியவில்லை என்றே கூறியிருக்கிறார். ஆஸ்கர் தளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் விதிமுறைகளின் படி, பணம் கட்டியே ஆஸ்கரின் யூடியூபில் ஜெய் பீம் படத்தின் காட்சிகளும் இயக்குநரது பேட்டியும் அடங்கிய வீடியோ பதிவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இது தொடர்பாக இயக்குநர் எதுவும் குறிப்பிடவில்லை.

ஆஸ்கர் விருதுகள் அதன் உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில்தாம் வழங்கப்படுகின்றன. அப்படி வாக்களிப்போருக்கு என்னென்ன படங்கள் உள்ளன என்பதை நினைவுபடுத்தவே ஆஸ்கர் விருதுக் குழுவால் தகுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டின் அதிகாரப்பூர்வத் தேர்வுப் பட்டியலில் ஜெய் பீம் படமும் இடம்பெற்றுள்ள தகவல் வந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 1 முதல் டிசம்பர் 31 வரை வெளியான படங்களிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட 276 படங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன. ஆஸ்கர் விருதுகள் அதன் உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில்தாம் வழங்கப்படுகின்றன. அப்படி வாக்களிப்போருக்கு என்னென்ன படங்கள் உள்ளன என்பதை நினைவுபடுத்தவே ஆஸ்கர் விருதுக் குழுவால் தகுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்தப் பட்டியலில் பிரியதர்ஷன் இயக்கிய மலையாளப் படமான மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம் என்னும் படமும் ஜெய் பீமும் இடம்பெற்றிருந்தது.

ஆஸ்கரின் தகுதிப் பட்டியலில் ஜெய் பீம் இடம்பெற்றிருக்கும் தகவல் வந்த கணம் முதல் பலருக்கும் ஒரு குழப்பம் இருக்கிறது. தமிழிலிருந்து ஆஸ்கருக்குச் சென்ற அதிகாரபூர்வப் படம் கூழாங்கல். இது தகுதிப் பட்டியலுக்குத் தேர்வாகவில்லை. ஜெய் பீம் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டதா என்பதே பரவலாக அறியப்படாத நிலையில், திடீரென ஜெய் பீம் திரைப்படம் எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதே அந்தக் குழப்பம். இதில் குழப்பமடையத் தேவையில்லை. ஃபிலிம் ஃபெடெரேசன் ஆஃப் இந்தியா என்னும் தன்னாட்சி பெற்ற அமைப்பு இந்தியப் படங்களிலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்பிய படம் கூழாங்கல். ஜெய் பீம் திரைப்படமோ ஆஸ்கர் விருதுக்காக சுமார்  9 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் (12,500 அமெரிக்க டாலர்) பணம் கட்டியே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட பிபிசி பேட்டியில் ஓபன் கேட்டகிரியில் ஆஸ்கர் விருதுக்குப் படத்தை அனுப்பத் தயாரிப்பு நிறுவனம்  முடிவுசெய்திருந்தது என்று இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். இப்படிப் பணம் கட்டி பெறும் வாய்ப்பையே அவர் ஓபன் கேட்டகிரி என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஒரு திரைப்படம் ஒரு நாட்டிலிருந்து அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் பணம் கட்டி அந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்காக அனுப்பிவைக்க இயலும். ஆஸ்கர் விருதுக் குழுவினர் அந்தப் படங்களையும் பார்த்து வாக்களிப்பார்கள். அப்படி அதிக வாக்கு பெற்றால் அந்தப் படம் விருதுபெறவும் சாத்தியமுண்டு. ஆஸ்கர் விருதுக் குழுவினர் பார்ப்பதற்கான அரங்கில் திரையிடவே இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உண்மையில் இப்படிப் பணம் கட்டி ஆஸ்கர் விருதுக்குப் படத்தைச் சமர்ப்பித்த பின்னரே ஆஸ்கர் யூடியூப்பில் படக் காட்சிகளை வெளியிடும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. படத்தின் உருவாக்கம், பின்னணித் தகவல்கள், சிறப்பு ஆகியவை பற்றித் தொழில்நுட்பக் கலைஞர்களது எண்ணம் ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டிய இந்த வீடியோ ஆஸ்கர் விருதுக் குழுவுக்கான ஒரு முன்னோட்டம் போல் அமைந்திருக்க வேண்டும். 15 நிமிட வீடியோ பரிந்துரைக்கப்பட்டாலும் 20 நிமிடங்கள் வரை ஆஸ்கர் அனுமதிக்கிறது. இது தொடர்பான விதிமுறைகள் ஆஸ்கர் தளத்தில் மிகத் தெளிவாக உள்ளன. இந்த உண்மைகள் தெரியாவிட்டால், ஜெய் பீம் படத்தின் சிறப்பை உணர்ந்த ஆஸ்கர் விருதுக் குழு அதைத் தங்கள் பட்டியலில் இணைத்துக்கொண்டதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும்.

அப்படியொரு தோற்றம் ஏற்கெனவே உருவாகிவிட்டது. இந்தத் தகவலைப் படக் குழுவினர் வெளிப்படையாகத் தெரிவித்திருக்காததாலேயே ஜெய் பீம் ஆஸ்கரில் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்துப் பலர் ஐயங்கொண்டனர். ஆஸ்கர் இப்படி ஒரு வாய்ப்பை வழங்கும்போது, அந்த வழியில் ஆஸ்கருக்கு அனுப்புவது ஒன்றும் பிழையன்று எனும்போது, படக் குழுவினர் ஏன் இதை வெளிப்படுத்தவில்லை? முன்னரே வெளிப்படுத்தியிருந்தால் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்த்திருக்கலாம். முறைப்படி இந்த விஷயம் வெளிவராததாலேயே ஒரு சந்தேகப் பார்வை விழுந்திருக்கிறது. இந்த நேரத்தில் 2020 ஆம் ஆண்டில் இப்படி வெளியான இறுதிப் பட்டியலில் சூரரைப் போற்று படம் இடம்பெற்றிருந்தது என்பதையும் அது இந்தியாவின் அதிகாரபூர்வத் தேர்வு அன்று என்பதையும் நினைவுபடுத்த வேண்டியதிருக்கிறது.

அடித்துப் பிடித்து, பொருள் செலவில் ஆஸ்கருக்குச் சென்றிருக்கும் ஜெய் பீம் ஆஸ்கர் விருதை வெல்லும் வாய்ப்பு இருக்கிறதா? 2020ஆம் ஆண்டில் ஆங்கிலம் அல்லாத பாராசைட் சிறந்த படம், சிறந்த சர்வதேசத் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர் என நான்கு விருதுகளைக் குவித்தது.  இந்தப் படம் அமெரிக்காவில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றபோதே, ஆஸ்கர் விருதுகளில் இது முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் படமாக இருக்கும் என்று ஊகிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்கர் விருது எந்தெந்தப் படங்களுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்னும் ஊகப் பட்டியலிலும் அது இடம்பெற்றிருந்தது.

ஆஸ்கர் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கும் ஜெய் பீம் காட்சிகளை லட்சக்கணக்கானோர் பார்த்திருக்கிறார்கள். இது மாத்திரமே இப்போதைக்கு நம்பிக்கை தரும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இதனாலே படம் ஆஸ்கர் விருதை வென்றிடும் என நம்புவது இயலாது.

ஆனால், ஜெய் பீம் திரைப்படத்தின் நிலை என்ன? ஆஸ்கர் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கும் ஜெய் பீம் காட்சிகளை லட்சக்கணக்கானோர் பார்த்திருக்கிறார்கள். இது மாத்திரமே இப்போதைக்கு நம்பிக்கை தரும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இதனாலே படம் ஆஸ்கர் விருதை வென்றிடும் என நம்புவது இயலாது. பலத்த போட்டிக்கு நடுவே விருதுக் குழு உறுப்பினர்கள் ஜெய் பீம் படத்தைப் பார்த்து அதிகப்படியான வாக்களித்தால் மட்டுமே ஜெய் பீம் திரைப்படத்துக்கு விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆஸ்கர் விருதுக் குழு உறுப்பினர்கள் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 1 வரை வாக்களிப்பார்கள். அதனடிப்படையில் பரிந்துரைப்பட்டியல் பிப்ரவரி 8இல் வெளியாகும். விருதுக்கான இறுதிக் கட்ட வாக்களிப்பு மார்ச் 17 அன்று தொடங்கி மார்ச் 22இல் நிறைவுறும். மார்ச் 27 அன்று டால்பி தியேட்டரில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என ஒரு  பழமொழி சொல்வார்கள். இப்போதைக்கு ஜெய் பீம் அத்தைதான். ஒருவேளை பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்து, ஆஸ்கரையும் வென்றால் அப்போது உண்மையிலேயே ஜெய் பீம் ஒரு சரித்திரம் படைத்துவிடும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival