Read in : English

Share the Article

இந்த 2022-இல் சென்னையும், தமிழ்நாட்டின் பிறபகுதிகளும் பருவகால மழைக்கு ஏங்குமா? 2021ஆம் ஆண்டு டிசம்பர் 30-31 தேதிகளில் நுங்கம்பாக்கத்தில் 201.2 மிமீ மழையைக் கொட்டி அந்த ஆண்டை முடித்து வைத்த பருவகாலத்தை, புத்தாண்டுக்கு முந்திய நாளின் சிம்மசொப்பனத்தை, அனுபவித்த சென்னை மாநகரவாசிகள் வெள்ளக்காடான நிலையிலிருந்து விடுபடவே விரும்புகிறார்கள்.

2021ஆம் ஆண்டு ஒரு மறுமலர்ச்சி ஆண்டாக இருக்கும் என்ற கனவும், வாக்குறுதியும் இறுதியில் தகர்ந்து போனது. மும்முரமான தடுப்பூசி முகாம்கள் கோவிட்-19 என்னும் வைரஸை தீர்த்துவிடும் என்ற கனவு பாழாய்ப் போனது; குறைக்கப்பட்ட சம்பளங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு பொருளாதாரம் குதிரைவேகத்தில் பாய்ந்து முன்னேறும் என்ற வாக்குறுதிகள் பொய்யாக போயின; இனிவரும் பருவகால மழை வேளாண்மை விளச்சலைப் பெருக்கி, நுகர்பொருள் விலைகளைக் குறைக்கும் அளவுக்கு விவசாயிகளுக்கும், நகரத்துவாசிகளுக்கும் செழிப்பை உண்டாக்கும் என்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் கணிப்புகளும் அர்த்தமற்றுப் போயின.

2021-ஆம் ஆண்டின் உட்சப்பட்ச மழைக்காலங்கள் சென்னை, கோயம்புத்தூர் போன்ற முக்கிய மாநகரங்களில் கடுமையான பாதிப்புகளையும், சிரமங்களையும் ஏற்படுத்தின. கலாச்சார உலகத்தில் சபாக்களிலிருந்து ஒலித்த மார்கழி கர்நாடக சங்கீத கச்சேரிகள் கொஞ்சம் இதயத்தை வருடி நிம்மதியைத் தந்தன. ஆனாலும் புத்தாண்டுத் தொடக்கத்திலே ஓமைக்ரான் அலை வந்து அதைக்கூட விட்டுவைக்காமல் அள்ளிக்கொண்டு சென்றுவிட்டது. என்றாலும் சிறிது மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களும் இருந்தன. சென்னையின் குடிநீர்த் தேக்கங்கள் நிரம்பிவழிந்து நிம்மதியைத் தந்தன. ஆனாலும் அந்த விஷயத்தில் அவர்கள் இன்னும் நன்றாகச் செயல்பட்டிருக்கலாம். அதைப்பற்றி பின்னர் பார்ப்போம்.

சென்னைச் செவிகளில் தேன்பாய்ச்சும் சேதி

இந்த ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி வீடுகளுக்கு வழங்குவதற்கான குடிநீரை வழங்கும் சென்னை மாநகரத்தின் பெரிய ஏரிகள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன, 2021-ஆம் ஆண்டின் ஆரம்பத்தைப் போலவே. சென்னையின் தாகம் தீர்க்கும் ஐந்து பெரிய ஏரிகளின் ஒட்டுமொத்தமான, அதிகாரப்பூர்வமான கொள்திறன் 11,757 மில்லியன் கனஅடி; நீர்த்தேக்க அளவு 10,842 மில்லியன் கன அடியைத் தொட்டது. கடந்த ஆண்டின் தேக்க அளவான 11,070 மில்லியன் கன அடியைவிட கொஞ்சம்தான் குறைவு.

கொசஸ்தலையாறு வந்து சேரும் பூண்டி நீர்த்தேக்கத்தைப் போல பலருக்கும் பரிச்சயமான சத்தியமூர்த்தி சாகர் ஏறத்தாழ நிரம்பியது; அதன் கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் 3,073 அடி நிரம்பியிருந்தது. மிகவும் சிறிய சோழவரம் தன்கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் 881 அளவுக்கு நீரைத் தேக்கிக் கொண்டது. சென்னைக்கு நீர்கொண்டுவரும் முக்கிய நீர்நிலையான செங்குன்றத்தின் கொள்ளளவு 3,300; அதில் 3,072 மில்லியன் கனஅடி நிரம்பிவிட்டது.

சென்னை நீர்த்தேக்கங்களின் கட்டமைப்பில் சமீபத்துச் சேர்க்கையான கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் 500 மில்லியன் கன அடி தண்ணீரும், அவசர காலத்துக்கு உதவும் செம்பரம்பாக்கம் ஏரியில் 3,315 கனஅடி நீரும் மழையின் உபயத்தில் பெருகியிருந்தது சென்னைக்கு மெத்த மகிழ்ச்சிதான். மற்ற நீர்த்தேக்கங்கள் வற்றிப் போனாலும், இந்த இரண்டு ஏரிகளின் நீர்வளங்கள் பலவாரங்களுக்குக் கைகொடுக்கும்.

நிச்சயமற்ற தன்மை

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் சிறந்த வானிலைத் தரவுச் சேகரிப்புக்காக அரசு வாங்கித் தந்திருக்கும் மூன்றாவது ’டாப்ளர் ராடார்’ சென்னைக்கு ஏற்பட்டிருக்கும் சமீபத்துப் பலம். குறுகிய கால, நீண்டகால வானிலைக் கணிப்புகள் செய்வதற்கு ஏதுவாக பருவகாலப் போக்குகளின் சீரான தன்மையைக் கண்டறிய அந்த இயந்திரத்தில் இன்னும் நிறைய மேம்பாடுகள் செய்ய வேண்டியிருக்கிறது.

நிலப்பரப்பில் திடீரெனக் குவிந்த ஈரப்பதத்தாலும், வங்காள விரிகுடாவிலிருந்து வீசிய கீழ்த்திசைக் காற்றாலும் உந்தப்பட்ட மேகங்களின் பொழிவில் டிசம்பர் 30ஆம் தேதி சென்னை மாநகரம் அளவுக்கு அதிகமாகத் தாக்கப்பட்டு திக்குமுக்காடியதெல்லாம் வானிலை கணிப்பு எல்லைக்கு அப்பாற்பட்டதாகவே விளங்கியது.

நிலப்பரப்பில் திடீரெனக் குவிந்த ஈரப்பதத்தாலும், வங்காள விரிகுடாவிலிருந்து வீசிய கீழ்த்திசைக் காற்றாலும் உந்தப்பட்ட மேகங்களின் பொழிவில் டிசம்பர் 30ஆம் தேதி சென்னை மாநகரம் அளவுக்கு அதிகமாகத் தாக்கப்பட்டு திக்குமுக்காடியதெல்லாம் வானிலை கணிப்பு எல்லைக்கு அப்பாற்பட்டதாகவே விளங்கியது.

’லா நின்யோ’ (இந்த ஸ்பானிஷ் வார்த்தைக்கு அசல் அர்த்தம் ‘சின்னப்பெண்’; பசிஃபிக் கடலில் நிகழும் குளிரான ஒரு வானிலை மாற்றத்தைக் குறிக்கும் சொல்) காலக்கட்டத்தின் விளைவாக நிகழ்ந்த பசிஃபிக் பெருங்கடலின் குளிர்காற்று ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுதான் சென்னையின் அதிக மழை. கடலின் மேற்பரப்பைக் குளிராக்கியது இந்த ‘லா நின்யோ.’ உலக வானிலை ஆய்வு நிறுவனம் சொன்னதுபோல, இந்தக் குளிரான இயற்கைநிகழ்வு தொடர்ந்து இரண்டாவது ஆண்டிலும் நிகழ்ந்திருக்கிறது.

சராசரி உலக வெப்பநிலை ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக, தொழில்புரட்சி யுகத்திற்கு முந்தைய சராசரி நிலையை விட, ஒரு டிகிரி செல்சியஸ் அதிகமாகவே இருக்கிறது என்பதையும் உலக வானிலை ஆய்வு நிறுவனம் சொல்லியிருக்கிறது.

அதனால் 2022 எப்படியிருக்கும்? இன்னும் சிலவாரங்கள் கழித்து இந்திய வானிலை ஆய்வுத்துறை இந்த ஆண்டுக்கான பருவகால கணிப்புகளைக் கொடுத்துவிடும்.

தற்போதிருக்கும் கணிப்புகள்படி, இந்தக் குளிரான ஃபசிபிக் போக்கு, அதாவது ‘லா நின்யோ’ தொடர்ச்சி, மே மாதம் வரை, வசந்தகாலம் வரை இருக்கும். அமெரிக்காவின் வானிலைக் கணிப்பு மையம், மேலும் குளிரான கடல் மேற்பரப்புச் சூழல்தான் நிலவப்போகிறது என்று கணித்திருக்கிறது.

ஆனால் வாயு மண்டலத்தை மேலும் வெப்பமயமாக்கும் மனித நடவடிக்கைகளால் அதிகமான உலகச் சராசரி வெப்பநிலை (2021இல் 1.1 டிகிரி செல்சியஸ் அதிகம்) ‘லா நின்யோ’ என்னும் இயற்கை நிகழ்வின் நன்மையான தாக்கத்தை அமுக்கிவிடும் என்று உலக வானிலை ஆய்வு நிறுவனம் சொல்கிறது. ஏற்கனவே சிக்கலாகிக் கிடக்கும் தென்னாசியா முழுமைக்குமான வானிலைப் பார்வையில் இந்த நிச்சயமற்ற தன்மை மேலும் சிக்கலை உருவாக்குகிறது.

இந்தியாவின் மத்திய, வடக்குப் பகுதிகளிலும், கேரளாவிலிருந்து கோவா வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் சிலவற்றிலும் பரவலான கடுமையான வானிலை நிகழ்வுகள், ஆய்வு செய்யப்பட்ட 1950-2015 காலக்கட்டத்தில் உயர்ந்துள்ளன என்று இந்திய வெப்பமண்டல வானிலையியல் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த வானிலை விஞ்ஞானி ரோக்ஸி மத்தேயூ கோல் ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறார். (https://www.climate.rocksea.org/research/widespread-extreme-rainfall-india).

தெலங்கானா, மத்தியபிரதேசம், குஜராத், மகாராஷ்டடிரம், ஜார்க்கண்ட், அஸ்ஸாம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை அடங்கிய நாட்டின் பெரும்பகுதியில் இந்த வானிலை நிகழ்வுகள் வெள்ளத்தை உருவாக்குகின்றன. அதே சமயம் பருவமழையின் நாள் விகிதம் நீண்டநாளாகச் சரிந்துகொண்டிருக்கிறது என்பது ஒரு நகைமுரண். டாக்டர் கோல் மற்றும் அவரின் சகபணியாளர்கள் சொல்வது போல, இந்த மாதிரியான வானிலை நிகழ்வுகளுக்கான அதிக ஈரப்பதம் அரபிக் கடலின் வடபாதி சூடாவதினால் நேர்ந்திருக்கலாம் என்று சொல்லலாம்.

மற்றுமொரு மழைவெள்ளப் பருவகாலம் ஒருசில மாதங்களில் வந்துவிடும். முன்பு கவனிக்கப்படாமல் விட்டிருந்த மாவட்ட நீர்த்தேக்கங்களின், குறிப்பாக சென்னையில் உள்ள ஐந்து நீர்த்தேக்கங்களின் சேமிப்பு அளவை அதிகமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டை, அதுவும் சென்னையைப் பொருத்தவரையில், தொடர்ச்சியான இந்தக் கடல் குளிர்காற்று 2022ஆம் ஆண்டு பருவமழைக்காலத்தில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் கவலை. இது போதாதென்று இந்தியப் பெருங்கடலின் இருமுனை (இண்டியன் ஓஷன் டைபோல்) என்னும் மற்றுமொரு வானிலை நிகழ்வின் தாக்கமும் ஏற்படக்கூடும்.

இதில் மேற்குவரையிலான இந்தியப் பெருங்கடலின் பகுதி ஆஃப்ரிக்காவிற்கு இப்பால் அரபிக்கடலுக்குள்ளும் இந்தியாவின் மேற்குக் கடலோரப்பகுதிக்குள்ளும் விரிந்து அந்த மண்டலம் சூடாகும்போது ஒருசேர வெப்பத்தையும் குளிரையும் ஏற்படுத்துகிறது. (ஓர் எதிர்மறையான ஆண்டில் இந்தோனேசியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் தலைகீழ் விளைவு உருவாகிறது).

சூடாகும் இந்த உலகத்தில் அரபிக்கடலிலிருந்து ஈரப்பதம் இந்தியாவின் சமதளப்பகுதிக்குள் வந்துசேரும்போது, தீபகற்பத்தின் குறுக்குவெட்டில் இருக்கும் பிரதானமான மாநகரங்களிலும், நகரங்களிலும் வெள்ள அபாயம் அதிகமாகலாம். அப்போது பெருத்த இழப்புகளும் விளையக்கூடும்.

மழையினால் தமிழ்நாட்டுக்கு லாபமா?

எல்லவிதமான நல்ல நீரும் நீலத்தங்கம்தான் என்பதில் சந்தேகமில்லை. மற்றுமொரு மழைவெள்ளப் பருவகாலம் ஒருசில மாதங்களில் வந்துவிடும். மு.க. ஸ்டாலினின் தலைமையிலான திமுக அரசு தனது பணிகளை முடுக்கிவிடுவதற்கு போதுமான கால அவகாசம் ஒன்றும் பெரிதாக இல்லை. முன்பு கவனிக்கப்படாமல் விட்டிருந்த மாவட்ட நீர்த்தேக்கங்களின், குறிப்பாக சென்னையில் உள்ள ஐந்து நீர்த்தேக்கங்களின் சேமிப்பு அளவை அதிகமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னைக்குப் பயன்படும் குடிநீர்த் தேக்கங்களின் கொள்திறன் என்பது வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கிறது என்று பல நீர் நிபுணர்கள் நினைக்கிறார்கள். அதனால் அவற்றை ஆழப்படுத்தும் வேலையை வேகமாகச் செய்யவேண்டும்.

சென்னை மாநகரத்திலே நீர்சேமிப்புச் சாத்தியங்கள் நிறைய உண்டு. ஆக்ரமிப்புகளும் குப்பைகளும் நிறைந்த ஆலயக் குளங்கள், விளிம்புநிலை ஏரிகள் ஆயிரமுண்டு மாநகரத்தில். அவற்றைத் தூர்வாரி சீர்படுத்தலாம்.

போன ஆண்டு மாநகர நீர்த்தேக்கங்களுக்கு முதல் மழைநீர்வரத்து ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் நிகழ்ந்தது. நவம்பருக்குள் ஏரிகள் நிரம்பிவழிந்தன; அதனால் நீர்மட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்த ஆண்டு ஏரிகளில் தேக்கி வைக்க முடியாமல் வேண்டாம் என்று தண்ணீரை திறந்து விட வேண்டுமா என்ன? இந்த அரசு செயல்பட இன்னும் ஐந்து மாதம் இருக்கிறது.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles