Read in : English

சென்னையில் உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான, வேல்ஸ் பல்கலைக்கழகம் நடிகர் சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப் போகிறது என்ற அறிவிப்பு வந்ததுதான் தாமதம் சமூக வலைத்தளங்களில் அந்தச் செய்தி தீப்போல் பரவித் தீவிரமான விவாதத்துக்கும் உள்ளானது. நடிகர் சிம்புவின் ரசிகர்கள் இந்தச் செய்தியை உற்சாகமாகக் கொண்டாடிவரும் அதே வேளையில் சிம்புவுக்கெல்லாம் டாக்டர் பட்டமா என்பதே சமூக வலைத்தளங்களில் பலர் எழுப்பியிருக்கும் கேள்வி.

கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் தரப்படுவது இது முதன்முறையன்று. எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விஜய்காந்த், விஜய் என நடிகர்கள் பலர் ஏற்கெனவே கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றுள்ளனர். எம்.ஜி.ஆருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முடிவெடுத்தபோது, திமுகவின் தற்போதைய பொதுச்செயலரும் அமைச்சருமான துரைமுருகன் சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக இருந்திருக்கிறார். சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் எதிர்த்தால்கூட டாக்டர் பட்டம் வழங்க இயலாது என்பது விதி. ஆகவே, துரைமுருகன் இதை எதிர்க்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கலைஞர் மு. கருணாநிதியின் அறிவுறுத்தலின் பேரில் துரைமுருகன் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அரசியல் ரீதியாகக் கருத்துவேறுபாடு இருந்தபோதும், கலைத்துறையில் அவரது சாதனைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் வழங்கப்படும் டாக்டர் பட்டத்தை எதிர்க்கக் கூடாது என்னும்ரீதியில் அப்போதைய திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி கருதியிருப்பது ஒரு வகையில் நாகரிகமான செயல்பாடு.

1984இல் ராஜேந்தர் இயக்கிய உறவைக்காத்த கிளி என்ற படத்தில் ஒரு சிசுவாக நடித்த சிலம்பரசன், தொடர்ந்து மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம் என ராஜேந்தரின் படங்களில் தொடர்ந்து நடித்தார்.

1984இல் ராஜேந்தர் இயக்கிய உறவைக்காத்த கிளி என்ற படத்தில் ஒரு சிசுவாக நடித்த சிலம்பரசன், தொடர்ந்து மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம் என ராஜேந்தரின் படங்களில் தொடர்ந்து நடித்தார். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தொடக்க காலத்தில் தன் மகனான நடிகர் விஜயை நாயகனாகவைத்து இயக்கியது போல் ராஜேந்தரும் சிம்பு ஒரு நடிகராகச் சொந்தமாகக் காலூன்றும்வரை அவரை இயக்கினார். சம்சார சங்கீதம் படத்தில் ஐ எம் எ லிட்டில் ஸ்டார் ஆவேன் நான் சூப்பர் ஸ்டார் என்ற பாடலுக்கு சிம்புவை நடனமாட வைத்த ராஜேந்தர் அவரை நாயகனாக்கி இயக்கிய படம் காதல் அழிவதில்லை (2002). அந்த ஒரு படத்துக்குப் பிறகு அவரை நாயகனாக வைத்து ராஜேந்தர் ஒரு படமும் இயக்கவில்லை.

சிலம்பரசன் தன் தாயார் உஷாவுடன் (ஆதாரம்: ட்விட்டர்)

2002இல் நாயகனான சிம்பு 2004இல் அவர் நடித்த மன்மதன் படத்துக்குத் திரைக்கதையை எழுதினார். இரண்டு ஆண்டுகளில் வல்லவன் என்னும் திரைப்படத்தை அவரே இயக்கினார். அந்த ஆண்டிலேயே அவருக்குக் கலைமாமணி விருதும் தமிழக அரசால் வழங்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் அளவுக்கு வளர்ந்துவிட்டபோதிலும் நடிகர் விஜய் எந்தப் படத்தையும் இயக்குமளவுக்குத் துணியவில்லை. சிம்பு அந்த முயற்சியையும் எடுத்துவிட்டார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டார்.

எம்.ஜி.ஆர். நாற்பது வயதில்தான் கதாநாயகனாக முடிந்தது; இவரோ இருபது வயதுக்குள் நாயகனாகிவிட்டார். ஒப்பீட்டளவில் எம்.ஜி.ஆர். செய்ய இயலாத சாதனைதான் அது. சிலம்பரசன் போல் தந்தையின் ஆதரவில் பெரிய நடிகராகியிருக்கும் இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கும் நடிகர் விஜய்க்கும் ஏற்கெனவே டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டிருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது, தந்தையின் இயக்கத்தில் நடிப்பைக் கற்றபோதும் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பின்னர் தனது சொந்த பலத்திலேயே நடிகராக வெற்றிபெற்றுள்ளார். இன்னும் சொல்லப்போனால், டி.ராஜேந்தர் திமுகவிலிருந்து விலகிய பின்னர் அவருடைய சம்சார சங்கீதம், சாந்தி எனது சாந்தி ஆகிய படங்கள் தொடர்ந்து தோல்விபெற்ற வேளையில் சிம்புவை வைத்து அவர் உருவாக்கிய எங்க வீட்டு வேலன் திரைப்படம் வசூலை வாரிக்குவித்து ராஜேந்தருக்கும் மறுவாழ்வளித்தது. நடிகர் எம்.ஜி.ஆருக்கோ, விஜய்க்கோ வேறு யாருக்குமோ கிடைத்திராத வாய்ப்பு இது. ஒரு தந்தையாக டி.ராஜேந்தர் சிம்புவுக்கு உதவியிருப்பதைப் போல் ஒரு மகனாக சிலம்பரசனும் தந்தைக்கும் உதவியிருக்கிறார். அவரது கலைத் துறைப் பயணத்தில் இது சாதனைதானே?

ஹரி, கே.எஸ்.ரவிகுமார், கௌதம் மேனன், பாண்டிராஜ், மணிரத்னம், சுசீந்திரன், வெங்கட் பிரபு என இந்த இருபது ஆண்டுகளில் புகழ்பெற்றிருக்கும் இயக்குநர்கள் பலரது படங்களில் எல்லாம் நடித்திருக்கிறார். ஒரு நடிகராக அவரது பயணத்தில் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார்; முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அண்மையில் சிம்பு நடித்து வெளியான மாநாடு படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதில் அவர் ஒரு கதாநாயகனாக ஏற்றிருந்த வேடம் சிறுபான்மை இஸ்லாமியச் சமூகத்தினரின் விருப்பத்துக்கு உகந்ததாக அமைந்திருந்தது. அப்படி ஒரு வேடத்தில் இதுவரை சமீபத்திய எந்தத் தமிழ்க் கதாநாயகனும் நடித்திருக்கவில்லை. இவையெல்லாம் ஒரு நடிகராக அவர் பெற்றிருக்கும் வெற்றிகள்; சாதனைகள் என்றால் மறுப்பதற்கில்லை.

சிம்பு தனது படங்களில் படப்பிடிப்புகளில் ஒழுங்காகக் கலந்துகொள்வதில்லை, தயாரிப்பாளர்களுக்குத் தொந்தரவு தரும் நடிகர் என்றெல்லாம் சொல்லப்படும் அவரது தனிப்பட்ட பண்பு நலன்களைக் கருத்தில் கொண்டு இந்தக் கௌரவ டாக்டர் பட்டம் விமர்சிக்கப்படுவது சரியன்று.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான ஐசரி கணேஷ் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நடிகர் சிலம்பரசனுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் கொடுப்பதில் தங்கள் நிறுவனம் பெரும் மகிழ்ச்சி அடைகிறது என்றும், இந்த விருதுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தனிக்குழு பல்வேறு துறைகளிலும் சாதனை செய்யும் பிரபலங்களைக் கவனமாக ஆய்வுசெய்து சிலம்பரசனைத் தேர்வு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வேளையில், கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார் என்பதும் இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார் என்பதும் இதையடுத்து அவரது தயாரிப்பில் மற்றொரு படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார் என்பதும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகின்றன.

இதுவரை நடிகர்கள் பலருக்கு வழங்கப்பட்ட ஒரு பட்டம் என்ற அடிப்படையில் யோசித்துப் பார்க்கும்போது, ஒரு நடிகராக சிம்புவுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் என்ன இருக்கிறது என்று கேள்வி எழலாம்.

கலைத் துறையின் சாதனை என்ற வகையில் ஒரு தனியார் பல்கலைக்கழகம் தங்களுக்கு விருப்பமான ஒருவரைத் தேர்வு செய்திருக்கிறது. தனியார் பல்கலைக்கழகங்களை நடத்துபவர்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில்தான் இதுபோன்ற தேர்வுகள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இதுவரை நடிகர்கள் பலருக்கு வழங்கப்பட்ட ஒரு பட்டம் என்ற அடிப்படையில் யோசித்துப் பார்க்கும்போது, ஒரு நடிகராக சிம்புவுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் என்ன இருக்கிறது என்று கேள்வி எழலாம்.

கௌரவ டாக்டர் பட்டங்கள் என்பது கொடுக்கும் அமைப்பின் தகுதியால் பெறுகிறவருக்கும் பெறுபவரின் தகுதியால் அந்தப் பட்டத்துக்கும் கௌரவம்சேர்க்கும். பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போட்டுத் தனது பெயரை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் சிம்பு போன்ற நடிகர்களுக்கு இல்லை. மொத்தத்தில் இந்த டாக்டர் பட்டம் சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகம், பட்டம் வழங்கிய பல்கலைக்கழகத்துக்கு விளம்பரம். மற்றபடி இதில் விவாதிக்க என்ன இருக்கிறது?

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival