Read in : English

Share the Article

அண்மையில் ஆன்லைன் சூதாட்ட நிகழ்ச்சியில் பணத்தைப் பறிகொடுத்துவிட்டு உயிரிழந்தவர்கள் பற்றிய  செய்திகள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அடுத்தடுத்து ஒளிபரப்பாயின. பணத்தாசையில் செய்வதறியாமல் படுகுழியில் விழுந்துவிட்ட அப்பாவிகள் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்தல் வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. ஏற்கெனவே தமிழகத்தில் கடந்த ஆட்சியின்போது ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் இயற்றப்பட்டன. ஆனால், நீதிமன்றம் சென்று சூதாட்ட நிறுவனங்கள் அந்தச் சட்டத்தைப் பயனிழக்கச்செய்தன. புதுச் சட்டம் இயற்றி ஆன்லைன் சூதாட்டத்தை முழுமையாகத் தடைசெய்தல் வேண்டும் என்பது தமிழ்நாட்டின் ஒருமித்த குரலாயிருக்கிறது. அப்படியொரு ஆன்லைன் சூதாட்ட நிறுவனமான Acetothree உபயத்தில் பிக் பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி உலகத் தமிழர்களை மகிழ்வித்துவருகிறது என்பது கசப்பான உண்மை.

கொரோனா பெருந்தொற்று ஆல்பா, பீட்டா, டெல்டா, ஒமைக்ரான் என விதவிதமாக மாறி மக்களைப் பதற்றத்தில் வைத்திருக்கும் சூழலில் ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு என்று சொல்வதைப் போல் ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் சீசன் 5 நிறைவுக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த வார இறுதி நாள்களில் நிறைவுபெறப்போகும் இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா, பாவனி, தாமரைச் செல்வி, நிரூப், ராஜு, அமீர் என ஆறு போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த முறை யார் வெல்வார் எனப் பார்வையாளர்களிடையே வழக்கம்போல் ஊகங்களும் விவாதங்களும் பெருந்தொற்றைவிடப் பெரிய அளவில் பரவியுள்ளன.

முழுக்க முழுக்கப் பொழுதுபோக்கு நிகழ்ச்சி எனச் சொல்லப்படும் இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ இதில் பங்கேற்பவர்களின் மன உறுதியைப் பலப்படுத்தி அவர்களது பலங்களையும் பலவீனங்களையும் அவர்களுக்கே வெளிப்படுத்தி அவர்களைப் புதிய மனிதர்களாக உருமாற்றி வெளியே அனுப்பும் வல்லமை கொண்டது என்பது போன்ற ஒரு பிம்பம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

முழுக்க முழுக்கப் பொழுதுபோக்கு நிகழ்ச்சி எனச் சொல்லப்படும் இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ இதில் பங்கேற்பவர்களின் மன உறுதியைப் பலப்படுத்தி அவர்களது பலங்களையும் பலவீனங்களையும் அவர்களுக்கே வெளிப்படுத்தி அவர்களைப் புதிய மனிதர்களாக உருமாற்றி வெளியே அனுப்பும் வல்லமை கொண்டது என்பது போன்ற ஒரு பிம்பம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இத்தகைய நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்களும் இப்படியான மனத்தெளிவைப் பெறுகிறார்கள் என்னும் பிம்பமும் மிகக் கவனமாகச் சுற்றுக்கு விடப்படுவது வாடிக்கை. இந்த சீசனும் அதற்கு விதிவிலக்கன்று. அப்படியான பிம்பத்துக்கு இந்நிகழ்ச்சி நியாயம்சேர்க்கிறதா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறும் சம்பவங்களிலிருந்து பார்வையாளர்கள் தங்களது வாழ்வில் எதிர்கொள்ளும் நெருக்கடியின்போது நடந்துகொள்வது எப்படி என்று கற்றுக்கொள்ளலாம் என்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவாக ஒரு சப்பைக்கட்டு சொல்லப்படுகிறது. நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்போர் சிலரும், தாங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதை நியாயப்படுத்த இந்தக் கூற்றைச் சொல்வதைக் கேட்க முடிகிறது. இது உண்மையாக இருந்தால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்தில் இடம்பெறும் பொறுப்புத் துறப்பு வாசகங்களுக்குப் பொருள் இல்லாமல் போய்விடும். பிக்பாஸ் ஷோவின் ஒவ்வொரு நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் திரையில் தென்படும் பொறுப்புத் துறப்பு வாசகங்களைக் கவனத்துடன் படித்திருக்கிறீர்களா? நீங்கள் வாசித்து முடிக்கும்வரை அந்த வாசகங்கள் பொறுமையாகக் காத்திருப்பதில்லை என்றாலும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.
// இந்த நிகழ்ச்சி முற்றிலும் பொழுதுபோக்கு நோக்கத்தை மட்டுமே கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோவாகும்… இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், விருந்தினர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்தும் கருத்துகளை இந்த அலைவரிசை மற்றும்/ அல்லது ஏஷியாநெட் ஸ்டார் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் பதிவுசெய்யவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை. இந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பார்வையாளர்(கள்) மற்றும் / அல்லது எந்த ஒரு மூன்றாம் தரப்பினர் எடுக்கும் எந்த ஒரு முடிவு மற்றும் / அல்லது அவர்களின் செயல்(கள்) முற்றிலும் அவரவர்களின் சுய விருப்புரிமை மற்றும் தன்னிச்சையானதாகும், மேலும் அதற்கும் அல்லது அதனால் எழக்கூடிய எந்த ஒரு பிரச்சனைக்கும் எந்த ஒரு விதத்திலும் இந்த அலைவரிசை மற்றும் / அல்லது ஏஷியாநெட் ஸ்டார் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கடமைப்பட்டுள்ளதாகவோ மற்றும் / அல்லது பொறுப்புள்ளதாகவோ இருக்காது… பார்வையாளர்கள் தக்க முன்ஜாக்கிரதையைக் கையாளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். // இந்த வாசகங்களை வாசித்துப் பார்த்தால் பிக் பாஸ் பார்ப்போர் தங்கள் நியாயப்படுத்துதலுக்கான காரணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியதிருக்கும் இல்லையா?

சட்டரீதியான பிரச்சினை எதிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்னும் முன் ஜாக்கிரதை உணர்வுடன் இவ்வளவு தெளிவாக நிகழ்ச்சியின் உள்ளடக்கம் சார்ந்து பொறுப்பு துறப்பு செய்திருக்கும் ஒரு நிகழ்ச்சியைப் பார்வையாளர் நலனுக்கான நிகழ்ச்சியாகவோ வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவோ எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? வெறும் பொழுதுபோக்குடன் இது முடிந்துபோகக் கூடிய விஷயமாக இருந்தால், ஏதோ நிகழ்ச்சியைப் பார்த்தோம்; சிரித்தோம் என அப்படியே விட்டுவிடலாம். ஆனால், இது பார்வையாளர்களின் உளவியலிலும் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணக்கூடியதாக உள்ளது. அதனால்தான் இப்படியான பொறுப்புத் துறப்பை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வழங்கும் நிறுவனம் முதலிலேயே வழங்குகிறது எனப் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.

சக்திமான் சிறுவர்கள் மனத்தில் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடியதாக இருந்தது என்றால், பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ வயது வந்தர்கள் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

தொலைக்காட்சியில் தொண்ணூறுகளில் சக்திமான் என ஒரு தொடர் வெளியானது. அந்தத் தொடரால் குழந்தைகள் பெரிய அளவில் தாக்கம் பெற்றுத் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்கள் அப்போது நாட்டையே உலுக்கின. தொண்ணுறுகளின் கிட்ஸுகளுக்கு மிகப் பரிச்சயமான இந்தப் பின்னணி சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த சக்திமான் சிறுவர்கள் மனத்தில் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடியதாக இருந்தது என்றால், பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ வயது வந்தர்கள் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. அப்படிப்பட்ட தாக்கம் பெற்ற யாரோ ஒருவர் ஏதோ ஒன்று செய்துகொள்ளப் போக அதனால் தங்களுக்கு நெருக்கடி வந்துவிடக் கூடாது என்னும் முன்னெச்செரிக்கை உணர்வாலேயே இந்தப் பொறுப்புத் துறப்பு தேவைப்படுகிறது.

இந்த வேளையில் பிக் பாஸ் சீசன் 5இன் முன்னோட்டத்தைச் சிறிது நினைவுபடுத்திப் பாருங்கள். ஒரு கல்யாண வீட்டில் ஏற்படும் கலாட்டாக்களையும் வம்புதும்பு பேச்சுக்களையும் காட்சிப்படுத்தியிருந்த அதில் கமல் ஹாசன் பேசிய வசனங்கள் உங்களுக்கு ஞாபகம் உள்ளதுதானே? ஆயிரம் பொருத்தம் பார்த்து நடத்துற கல்யாண வீட்டிலேயே இவ்வளவு கலாட்டா இருக்கத்தான் செய்யும் இங்கேயே இப்படின்னா… இங்க வீடும் பெருசு கலாட்டாவும் பெருசு எதிர்பாராததை எதிர்பாருங்கள் என ஆரம்பித்துத்தானே மக்களைப் பார்க்கத் தூண்டினார் உலக நாயகன். பிக் பாஸ் சீசன் 5 இல் இறுதி விருந்தினராக பிக் பாஸ் வீட்டுக்கு வந்த சரத்குமார் பரம்பரா வெப் சீரிஸ் முன்னோட்டத்தை ஒளிபரப்பி அதை பிக் பாஸ் வீட்டுடன் ஒப்பிட்டதையும் இணைத்துப் பாருங்கள். பிக் பாஸ் வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியன்று என்பதும் மிகத் தந்திரமாக அது செயல்பட்டுப் பார்வையாளரைக் கவர்ந்திழுப்பதும் புரியும்.

இந்தத் தந்திரத்துக்கும் ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுத் திறமையின் அடிப்படையிலானது எனச் சொல்லும் சூதாட்ட நிறுவனங்களின் தந்திரத்துக்கும் என்ன பெரிய வேறுபாடு? அதனால்தான் சிறிதும் குற்றவுணர்வின்றி சமூக அறம் பற்றி எந்த பிரக்ஞையுமின்றி ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தின் உபயத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடிகிறது. இந்த பிக்பாஸ் சீசன் 5இன் போது ஒரு முறை, தப்பு செஞ்சவனவிடத் தப்பு செய்யத் தூண்டுனவன் கெட்டவன் எனப் பங்கேற்பாளரான தாமரைச் செல்வி கூறும் ஒரு காட்சியைக் காண முடிந்தது. அந்த வசனம்தான் சமூகத்தின்பால் ஆர்வம் கொண்ட ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி முன்வைக்கும் கருத்தாக இருக்க முடியும்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles