Read in : English
“பருத்திப்பால் சாப்பிடுகிறாயா?,” வடிவேலுவின் நடிப்பில் உலக புகழ் பெற்ற இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தில் மன்னர் புலிகேசி ஒற்றன் வாதகோடாரியிடம் உபசரிப்பது நினைவில் இருக்கிறதா? மதுரை என்றாலே நினைவில் வருவது ஜிகர்தண்டா அடுத்து வருவது மதுரையின் பருத்திப்பால்.
மதுரை சேர்ந்த வடிவேலுவுக்கு இயல்பாகவே பருத்திப்பால் நினைவுக்கு வந்திருப்பது ஆச்சரியமான ஒன்றல்ல. புலிகேசி குடிக்கும் ராஜபானம் அல்ல மதுரை பருத்திப்பால் அது உண்மையில் ஏழைகளின் பானம். மாடுகளின் போசாக்குக்கு வேண்டி கொடுக்கப்படும் உணவு பருத்திக்கொட்டை. பருத்திக்கொட்டையை அரைத்து எடுக்கப்படும் பானமே பருத்திப்பால்.
பருத்திப்பாலை வீட்டில் கூட தயாரிக்கலாம். ஒரு வீட்டில் உள்ள நாலைந்து பேருக்கு தயாரிக்க 250 கிராம் பருத்திக்கொட்டை மற்றும் 100 கிராம் பச்சரிசி போதுமானது. இனிப்பு சுவைக்கு கருப்பட்டி அல்லது வெல்லம் 250 கிராம் போல வேண்டும், இவற்றில் கருப்பட்டிதான் மிகவும் உகந்தது. ஏலக்காய், மிளகு, சித்திரத்தை, அதிமதுரம் மற்றும் சுக்கு சிறிதளவை அரைத்து பொடியாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
பருத்திக்கொட்டையை குறைந்தது நான்குமணி நேரம் ஊறவைத்து பின்பு நன்கு அரைக்கவேண்டும். அரைத்த பருத்திக்கொட்டையை பிழிந்து பால் எடுக்கவேண்டும். பின்பு பாலை நன்கு காய்ச்சவேண்டும். பச்சரிசியையும் ஊறவைத்து அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். தோசைப்பதம் இல்லாமல் கொஞ்சம் அரைப்பதமாக அரைத்து வைத்த மாவை கொதிக்கும் பருத்திப்பாலில் ஊற்றி நன்கு கிளற வேண்டும். பருத்திப்பால் அடியும் பிடிக்காமல் பொங்கவும் விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். பின்பு கருப்பட்டி சேர்க்கவேண்டும். பொடியாக சேர்ப்பதை விட தண்ணீரில் கலந்து வடிகட்டி சேர்த்தால் பருத்திப்பாலில் கசடு சேர்வதை தடுக்கலாம்.
வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து கிளறிய பின்பு அரைத்து வைத்த ஏலக்காய் போன்றவற்றை சேர்க்கவேண்டும். துருவி வைத்த தேங்காய் பூவை சுவைக்கு சேர்த்துக்கொள்ளவேண்டும்.
செய்முறை எளிதாக தெரிந்தாலும் பருத்திப்பாலை பக்குவமாக காய்ச்சி இறக்குவது ஒரு கலை என்கிறார் செல்லூரை சேர்ந்த வீரய்யா. கடந்த 30 வருடங்களாக டவுன் ஹால் ரோடில் பருத்திப்பால் விற்றுவரும் வீரய்யா, வியாபாரம் முன்பு போல் இல்லை என்கிறார். வீதிக்கு வீதி பானி பூரி கடைகளும் துரித உணவு வண்டிகளும் வந்தபின்பு பருத்திப்பாலின் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது என்கிறார் அவர். தற்பொழுது 80 பேர் வரை பருத்திப்பாலை மதுரையில் விற்கிறார்கள்.
ஒரு காலத்தில் மதுரையில் மில்கள் அதிகம். உழைக்கும் மக்களுக்கு ஆற்றல் அளிக்கும் பானமாக இருந்தது பருத்திப்பால்.
ஒரு காலத்தில் மதுரையில் மில்கள் அதிகம். உழைக்கும் மக்களுக்கு ஆற்றல் அளிக்கும் பானமாக இருந்தது பருத்திப்பால். உடல் சூட்டை குறைக்கக்கூடியது. விலை 10 முதல் 15 ரூபாய் மட்டுமே. பருத்திப்பாலில் சேர்த்துள்ள ஆயுர்வேத பொருட்கள் நாள்பட்ட சளியையும் நீக்க கூடியது என்கிறார் கோவிந்தராஜன். மூன்று தலைமுறைகளாக இவர்களது குடும்பம் தினமணி திரையரங்கு முன்பு பருத்திப்பால் விற்கிறார்கள். திரையரங்கு இப்போது இல்லை ஆனால் பருத்திப்பால் கடை இன்றும் இந்த இடத்தின் ஒரு அடையாளம்.
சமூக வலைத்தளங்கள் பருத்திப்பாலின் மீதான ஆர்வத்தை மீண்டும் தூண்டியுள்ளன என்றே சொல்லலாம். யூடியூபில் மதுரை பருத்திப்பாலை பற்றி தெரிந்து கொண்டு கடையை தேடி வருபவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் கோவிந்தராஜன். ஓர் அராபியர் துபாய்க்கு பார்சல் கொண்டுசென்ற சம்பவம் எல்லாம் நடந்துள்ளது.
மதுரை தவிர்த்து முன்பெல்லாம் பருத்திப்பால் விற்பவர்களை காண்பது அரிது. ஆனால் இப்போது சென்னையிலும் சிலர் பருத்திப்பால் விற்கிறார்கள். மதுரையில் இருந்து சென்றவர்கள் கடை வைத்திருப்பதாக சொல்கிறார் வீரய்யா.
Read in : English