Read in : English
டிசம்பர் 30 மாலையில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் நோக்கிச் சென்ற கார்கள், கண்ணாடிகளை ‘டொம் டொம்’ என்று சாத்திய கொட்டுமழையில், அண்ணா சாலை சைதாப்பேட்டையிலிருந்து மெல்ல மெல்ல ஊர்ந்துகொண்டிருந்தன. மழை வெள்ளத்தைப் பற்றி எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லை. கார்கள் வளைந்து நெளிந்து மந்தகதியிலே எல்ஐசி வரைக்கும் போய்ச் சேர்ந்தபின்பு எல்லா வாகனங்களும் வேகம் குறைந்து ஊர்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அண்ணா சிலை சந்திப்பு முற்றிலும் முடங்கியது.
இந்தத் தாறுமாறான, குழப்பமான சூழலை விட்டு கிடைக்கும் சந்துபொந்துகளில் ஒவ்வொருவரும் நுழைய ஆரம்பித்தனர். அப்போது நேரம் மாலை ஐந்துமணி.
5.30க்கு பெங்களூருக்குப் புறப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் லக்கேஜைப் பற்றிக்கொண்டு பல பேர் அந்த நேரத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு இருந்த ஒரேவழி: பல்லவன் சாலையில் இறங்கி கொட்டும் மழையில் நனைந்து சென்ட்ரலுக்கு ஓடிச் செல்வது. அல்லது ஆங்கிலப் புத்தாண்டுப் பயணத்தை கைவிடுவது.
ஸ்டான்லி மேம்பாலத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டதால், பலர் நடந்து செல்ல தீர்மானித்தனர். அந்தக் குழப்பமான சூழலிலும் ’பாடி’ முனீஸ்வரரிடம் புதிய கார்கள் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டிருந்தன. ரயிலுக்குத் தாமதமான பிரயாணிகள், பெண்கள், முதியோர்கள், கிராமத்து மனிதர்கள், மழையில் நனையாமல் இருக்க துண்டுகளைக் கொண்டு மூடிக்கொண்டு குழந்தைகளைச் சுமந்த பெண்கள் ஆகியோர், முந்திச் செல்லக் காத்திருந்து கோபத்தோடு பார்த்த அந்த ‘உலோக அரக்கன்களை’ப் பார்த்து குழப்பமானர்கள். பாதசாரிகள் நடைமேடைகளில் ஏறி கொட்டும் மழையில் வேகவேகமாக ஓடினார்கள்.
சதாப்தி எக்ஸ்பிரஸ் குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டிச் சரியாக ஏழு நிமிடம் காத்திருந்து தாமதமாகப் புறப்பட்டது. சென்ட்ரலுக்கு அருகே சரிவுப்பாதையில் காத்திருந்த பிரயாணிகளில் சிலர், கைப்பேசியில் ரயில் போக்குவரத்தைக் கண்காணிக்கும் செயலி ஆறு மணிக்குள் ரயில் ஆவடியைக் கடந்து செல்வதைக் காண்பித்ததைக் கவனித்தார்கள். அப்போது அவர்கள் போக்குவரத்து நெருக்கடியில் மாட்டிக்கொண்டிருந்தார்கள்.
ரயில் போய்விட்டது; அதைச் சரியான நேரத்தில் பிடிக்க முடியாதவாறு பிரயாணிகளை அவதிப்பட வைத்த வலியைப் பற்றி அது கவலைப்படவில்லை. சாலைப்போக்குவரத்து நெரிசலில் சும்மா நின்றுகொண்டிருக்கும் வாகனங்களின் எஞ்சின்களை அணைக்கும் முன்பு பல்லாயிர ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலும், டீசலும் வீணாகப் போய்விடுகின்றன. சென்ட்ரலுக்கு வெளியே ஒரு காவலர் ஈவிஆர் சாலைப் போக்குவரத்தை இலகுவாக்கும் பொருட்டு வழிதெரியாமல் மாட்டிக் கொண்ட வாகனங்களை எம்டிசி பஸ் நிறுத்தத்திற்குள் நுழையும்படி செய்தார்.
ஆனால் அது பயனளிக்கவில்லை. மாலை நேரம் மெல்ல மெல்ல தேய்ந்து கொண்டிருக்கும்போது ஓர் உயர்ந்த கட்டிடத்திலிருந்து யாரோ ஒருவர், அண்ணா சாலையில் ஆயிரக்கணக்கான கார்கள் எங்கேயும் போகமுடியாமல் ஆடாமல் அசையாமல் ஸ்தம்பித்து உறைந்துகிடக்கும் போக்குவரத்து நெரிசல் காட்சியை அலைபேசியில் படமாக்கிக் கொண்டிருந்தார். அது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
உள்ளார்ந்த பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த நவம்பர், 2021 காட்சிகளை மறுபடியும் பார்த்துக் கரைந்து கொண்டிருந்தது டிசம்பர் 30 இரவு. மேற்கு மாம்பலத்தில் உள்ள மேட்லி சுரங்கப்பாதையும், ரங்கராஜபுரம் இரு சக்கர வாகனங்களின் கீழ்ப்பாதையும் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டன. துரைசாமி சுரங்கப்பாதை பயன்படுத்துவதற்கு லாயக்கற்றது. புறநகர்ப் பகுதிகள் மற்றுமொரு வெள்ளத்தில் மிதந்தன. உணவையும், அத்தியாவசிய பொருட்களையும் படகுகளில் அனுப்புமாறு கேட்ட குடியிருப்புவாசிகளின் வேண்டுகோள்கள் சமூக வலைத்தளங்களில் எதிரொலித்தன. எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் நவம்பர் 27 மீண்டும் வந்தது.
(தமிழ்நாட்டில் பருவநிலையைக் கணிக்கும் மனிதர் என்று என்று பிரபலமாக அழைக்கப்படும்) பிரதீப் ஜான் தன்னைப் பின்தொடரும் ஏராளமானவர்ளுக்கு டிவீட் செய்திருக்கிறார்: “இந்த நிகழ்வைப் பற்றி உங்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யாமல் இருந்ததற்கு நான் உங்களிடம் மன்னிப்புக்கோர விரும்புகிறேன்.
உள்ளார்ந்த பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த நவம்பர், 2021 காட்சிகளை மறுபடியும் பார்த்துக் கரைந்து கொண்டிருந்தது டிசம்பர் 30 இரவு. மேற்கு மாம்பலத்தில் உள்ள மேட்லி சுரங்கப்பாதையும், ரங்கராஜபுரம் இரு சக்கர வாகனங்களின் கீழ்ப்பாதையும் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டன.
15 வருடங்களில் இப்படி நடந்தது இல்லை.” இந்திய வானிலைத் துறையின் மீது பலர் கோபப்பட்டார்கள், எந்தத் துப்பும் இல்லாமல் இருந்ததற்கு. ஓமிக்ரான் பயத்தில் அடக்கிவாசிக்கும் புத்தாணடுக் கொண்டாட்டத்திலிருந்து சென்னையின் கவனம் மிகவும் பரிச்சயமான தண்டனைக்கு, அதாவது மழை வெள்ளத்திற்குத் திரும்பியது.
விளையாட்டு எங்கே தோற்றுப்போனது
முந்தைய நாளில் நுங்கம்பாக்கத்தில் 201.2 மில்லிமீட்டர் என்றும், சென்னை விமானநிலையத்தில் 148.9 மில்லிமீட்டர் என்றும் மழை பதிவாகி்யிருக்கிறது என்ற வானிலை அளவுத் தரவுகளோடு டிசம்பர் 31 விடிந்தது. இவை ஆகப் பெரிய மழை அளவுகள் இல்லை என்றபோதிலும், அதிகமழை கொண்ட வருடங்களில் ஒன்றென 2021ஆம் ஆண்டு இடம்பெறும்போலத் தோன்றுகிறது. இந்தப் பருவத்தில் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையில் வழக்கமாகப் பெய்யும் மழையை விட, இந்த வருடம் 74 சதவீதம் அதிகமாகவே பெய்திருக்கிறது. அதாவது 1,370 மில்லிமீட்டர் மழை (இந்திய வானிலைத் துறை தந்த தரவு).
இந்தப் புத்தாண்டில் சென்னை தனது புவியியல் அமைப்பைப் மறுபார்வையிட வேண்டியிருக்கிறது. ஜார்ஜ் டவுன் போன்ற வரையறுக்கப்பட்ட தொழில் மாவட்டங்கள் இந்த மாநகரில் இனியில்லை. பணியிடங்கள், அலுவலகங்கள் பல மண்டலங்களில் பரந்துகிடக்கின்றன. ஆனால் அண்ணாசாலை, ஈவிஆர் பெரியார் சாலை (பூந்தமல்லி சாலை), காமராஜர் சாலை (கடற்கரை சாலை) ஆகியவை அமைத்திருக்கும் வடக்கு-தெற்கு அச்சு முறிந்தால் நிஜமாகவே எதுவும் இயங்க முடியாது. ஜவஹர்லால் நேரு சாலை (உள்வட்ட சாலை) தெற்கிலிருந்து (கத்திப்பாரா) வடமேற்காக (மாதவரம்) செல்லும் போக்குவரத்திற்கு இலகுவாக இருக்கும் என்று கட்டப்பட்டது. ஆனால் அதுவும் பலன்தரவில்லை. காரணம் சரியாகத் திட்டமிடாத காரிடர் அபிவிருத்தி. விளைவு அந்த சாலையும் வணிகரீதியான, ஜனசமுத்திரமான சாலையாக மாறியது.
மேலும் தெற்கு, மேற்குப் புறநகர்களில் வாழும் ஆயிரக்கணக்கானவர்கள் வேலைக்காக நகரத்திற்குப் பயணிக்கிறார்கள். சென்னை மெட்ரோ ரயில் இன்னும் எல்லா இடத்திற்கும் போவதில்லை. அதனால் இயல்பாகவே நிறைய பேர்களுக்கு இரு சக்கரவாகனமும், காரும்தான் போக்குவரத்து வாய்ப்புகளாக உள்ளன.
வியாழன் அன்று கிழக்கு, மேற்கை இணைக்கும் கிட்டத்தட்ட எல்லாச் சுரங்கப்பாதைகளும் மூச்சுமுட்டின. கெங்கு ரெட்டி, நெல்சன் மாணிக்கம், துரைசாமி, மேட்லி, அரங்கநாதன் ஆகிய சுரங்கப்பாதைகள் அவை. புத்தாண்டுக்கு முந்தைய இரவைக் கொண்டாட வந்தவர்கள் எச்சரிக்கை உணர்வின்றி வந்தார்கள்; கர்நாடக இசை ஆர்வலர்கள், புரவலர்கள் மற்றும் உள்ளூர் அலுவலக ஊழியர்கள் ஆகியோர் கச்சேரி கேட்க வெளியே வந்தனர். திடீரென்று மழை மாநகரத்தை முற்றுகையிட்டது. ஆயிரக்கணக்கான கார்கள், பல்லாயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் சாலையில் ஸ்தம்பித்து நிற்க, மழைவேறு போக்குவரத்திற்கு இடைஞ்சல் செய்ய, அங்கே மோட்டார் வாகனங்களின் ஒழுங்கு நிர்மூலமாகியது.
மாநகரப் போக்குவரத்து நெரிசலில் அடிக்கடி மாட்டிக் கொள்பவர்களுக்கு, வரிசையாய் வந்த அரசுகள், மழைச் சீரழிவு இல்லாமலே நிகழும் சாலை நெரிசல் பிரச்சினை பற்றி வெறும் உதட்டளவிலே பேசுவது வாடிக்கையான வேடிக்கையாகத்தான் தெரியும்.
அதை ‘கார்ப்போகலிப்ஸ்’ என்றழைக்கலாம்; பல மைல்கள் தூரம் அசையாமல் நிற்கும் கார்கள்; உறுமும் பேருந்துகள்; இடையில் வேன்கள்; மற்றும் உஸ் உஸ் என சத்தம்கொடுக்கும் இருசக்கர வாகனங்கள்.
மாநகரப் போக்குவரத்து நெரிசலில் அடிக்கடி மாட்டிக் கொள்பவர்களுக்கு, வரிசையாய் வந்த அரசுகள், மழைச் சீரழிவு இல்லாமலே நிகழும் சாலை நெரிசல் பிரச்சினை பற்றி வெறும் உதட்டளவிலே பேசுவது வாடிக்கையான வேடிக்கையாகத்தான் தெரியும். சுமார் பத்தாண்டுக்கு முன்பு, 2012 பிப்ரவரியில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சொன்னதாக இந்து ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தி இது: “அண்ணா சாலையில், ஜவஹர்லால் நேரு சாலையில், பூந்தமல்லி சாலையில் மீதியுள்ள நிலத்தைப் பெறுவது முதல் இருக்கும் இடத்தைப் பயன்படுத்துவது வரையிலான எல்லாப் பிரச்சினைகள் பற்றியும் விரிவான ஒரு திட்ட அறிக்கை இன்னும் ஒன்பது மாதங்களில் உருவாகும்.”ஒன்பது வருடங்கள் கடந்துவிட்டன. சிக்கல்களைத் தவிர்க்க உதவும் ’ஸ்மார்ட் கண்ட்ரோல் அறைகள் கொண்ட ’ஸ்மார்ட் சிட்டிஸ்’ பற்றி நிறைய பேசப்படுகின்றன.
போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பதற்கான நெறிமுறை
மாநகர நிர்வாகிகள் டிவி, பண்பலை, புது ஊடகம், சமூக ஊடகம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சில விஷயங்கள் செய்யலாம்.
ஒன்று: நிலைமை சரியில்லையென்றால், உடனே ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள். வெளியே வருவதற்கு உகந்தநாளாகக் குறிப்பிட்ட ஒருநாள் இல்லையென்றால், அரசு, குறிப்பாக காவல்துறை, மக்களுக்கு முன்னறிவிப்பு செய்துவிடலாம். மேற்கொண்டு அறிவிப்பு வரும்வரை வீட்டிலேயே இருக்குமாறு மக்களுக்குச் சொல்லுங்கள். அதேவேளை, நெரிசலைத் தவிர்க்க போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துங்கள். எங்கெங்கே நெரிசல் அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த இடங்களைப் பற்றி மக்கள் அந்த இடங்களுக்கு போகும் முன்பே தெரிவித்து விடுங்கள்.
இரண்டு: குறுஞ்செய்திகள் மூலம் மக்களுக்கு அந்த நேரத்தில் இருக்கும் சிறந்த தேர்வுகளைச் சொல்லுங்கள். மெட்ரோ அல்லது புறநகர் ரயிலில் எக்மோர், சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு அல்லது விமான நிலையத்திற்குச் செல்லுமாறு பிரயாணிகள் அறிவுறுத்தப்படலாம். இணைப்பு மோசமாக இருந்தாலும், செய்தி எளிதில் பிரயாணிகளைச் சென்றடையலாம். கைப்பேசி சேவையாளர்கள் அந்தச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து அனுப்பிவிடலாம்.
போக்குவரத்து மோசமான இடங்களைக் கண்டறிய ‘ட்ரோன்களை’ பயன்படுத்தி நெரிசல்களைத் தவிர்க்க போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வேறு பாதைகளில் திருப்பிவிடலாம். டிசம்பர் 30 அன்று அண்ணா சாலையில் உள்ள ஜெனரல் பாட்டர்சன் சாலைச் சந்திப்பு, அண்ணா சிலை, பல்லவன் சாலை மற்றும் சென்ட்ரல் ஆகிய இடங்களில் காவலர்கள் யாருமில்லாமல் போக்குவரத்து நெரிசலான காட்சியை இந்த எழுத்தாளர் கண்டார். நிலைமை கைமீறிப் போனபின்புதான் காவலர்கள் வந்தனர்.
முன்னே இருக்கும் தடைகள் பற்றி சாலைப் பயனாளிகளுக்கு எச்சரிக்கை செய்ய எல்ஈடி சமிக்ஞைப் பலகைகள் வைக்கலாம். அவர்களை மேற்கொண்டு போகவிடாமல் தடுக்கலாம் அல்லது மாற்றுப் பாதையில் பயணிக்க வைக்கலாம். அந்த மாதிரியான போர்டுகளை அரசியல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்தலாம் என்றால், சாலைப் பிரச்சினைகளைச் சமாளிக்க முக்கிய தகவல்களைக் கொடுக்க அவற்றை நன்றாகவே பயன்படுத்தலாமே!
போக்குவரத்து மோசமான இடங்களைக் கண்டறிய ‘ட்ரோன்களை’ பயன்படுத்தி நெரிசல்களைத் தவிர்க்க போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வேறு பாதைகளில் திருப்பிவிடலாம்.
சாலை விரிவுப்பகுதிகள் போன்ற வெள்ளம் நிறைந்த இடங்களில் டாங்கர்கள் உட்பட எல்லாக் கருவிகளையும் பயன்படுத்தி நீரை உறிஞ்சி எடுத்து அந்தப் பகுதியில் தண்ணீரை வெளியேற்றலாம். அதிமுக்கிய சாலைகளில் பேருந்துகளுக்கென்று தனியான இடத்தை உருவாக்கி பொதுப்போக்குவரத்தைத் துரிதமாக்கலாம். எல்லா நேரங்களிலும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். அதனால் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் வழக்கம் குறையும். இது பழைய ஆலோசனைதான். எனினும் இப்போது அது புதிதாகத் தெரிகிறது.
பாதுகாப்பான நடை என்பதை ஒவ்வொரு இடத்திலும் விதிவிலக்கு இல்லாமல் சாத்தியமாக்கலாம். இருசக்கர வாகனங்கள் இடிக்கும் என்ற அபாயம் இல்லாதவாறு, ஆபத்தான குழிகள் இல்லாதவாறு, நடைபாதைகள் அமைக்கப்பட்டிருந்தாலே ஏராளமான பேர் வாகனங்களில் வருவதை விட்டு நடைபாதைகளில் மழையில் கூட நடந்துபோவார்கள். கடைகளிலும் நிறுவனங்களிலும் தொழில் நடக்கும்.
மழை வெள்ளத்திற்குப் பின்பு சென்னை மாநகராட்சி, மெட்ரோவாட்டர், மின்சார வாரியம், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஆகிய அரசு அமைப்புகள் குடிமைச் சேவை இடைஞ்சல்கள் பற்றி, மின்தடைகள் பற்றி பொதுமக்கள் கொடுக்கும் புகார்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; வேகமான நிவாரணத்தைத் தரவேண்டும். வரிகள் கட்டாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்டோக்கள் மூலம் அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்க முடியும் என்றால், புகார்கள் வரவேற்கப்படுகின்றன என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர்கள் அறிவிக்கலாமே.
சென்னைக்கான ’காம்ப்ரிகென்சிவ் மொபிலிட்டி’ திட்டம் (2019), மூன்று முக்கிய சாலைகளிலும், ஜவஹர்லால் நேரு உள்வட்டச் சாலையிலும் இருக்கும் சந்திப்புகள் உட்பட 47 சந்திப்புகள் தாங்கமுடியாத போக்குவரத்து நெரிசல்களால் சீரழிந்துவிடும் என்று ஆருடம் சொல்லியிருக்கிறது. அந்த இடங்களை சரிசெய்ய என்ன செய்யப்பட்டிருக்கிறது என்பதை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அந்த இடங்களை முற்றிலும் சீர்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுங்கள்.
Read in : English