Read in : English

Share the Article

“நீங்க என்ன ஆளுங்க?” இந்த கேள்வி பொதுவாக ஒருவர் என்ன ஜாதி என்பதை தெரிந்துகொள்ள கேட்கும் கேள்வி. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முன்பு செவிலியர் இப்படி ஒரு கேள்வி கேட்டால் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால் மருத்துவ பணியாளர்கள் கேட்கும் அந்த கேள்விக்கு ஒரு முக்கியமான பின்னணி இருக்கிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேற்கொண்ட ஒரு ஆய்வு ஆரிய வைசிய செட்டி எனப்படும் கோமுட்டி செட்டியார்களுக்கு சுக்சாமெத்தோனியம் அல்லது பொதுவாக ஸ்கோலின் எனப்படும் மயக்கமருந்துக்கு உள்ள ஒவ்வாமை பற்றி கண்டறிந்தது. செட்டியார்களுக்குள்ள ஒரு மரபணு கோளாறு இப்படி ஒரு ஒவ்வாமையை உருவாக்குவது தெரிய வந்தது. சூயுடோகோலினெஸ்டரேஸ் குறைபாடு என்று சொல்லப்படும் இந்த மரபணு கோளாறின் காரணமாக செட்டியார்களுக்கு ஸ்கோலின் மயக்கமருந்தை செலுத்தினால் அவர்கள் அந்த மருந்தின் தீவிரத்திலிருந்து வெளிவர வெகுநேரம் பிடிக்கும். இந்த குறிப்பிட்ட மருந்தின் மீது செயலாற்றும் என்சைம்கள் அவர்களது உடலில் இருப்பது இல்லை. எனவே மயக்க மருந்தியல் நிபுணர்கள் வேறு மருந்துகளை அவர்களுக்கு செலுத்துவார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்த கேள்வி செட்டியார்கள் பெருமளவில் வசிக்கும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலும் முன்வைக்கப்படும் ஒன்று.

அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் நர்ஸ் அனஸ்தீசியாலஜி அமைப்பின் இதழில் வெளியான ஒரு ஆய்வு கட்டுரை, செட்டியார்களுக்குள்ள இந்த மரபணு குறைபாடு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வம்சாவளியில் வந்த வெள்ளையர்களுக்கு ஒரு இலட்சம் நோயாளிகளுக்கு ஒருவர் வீதம் ஏற்படுவதாக குறிப்பிடுகிறது. செட்டியார்கள் தங்களுடைய பூர்விகத்தை ஆரியர்களுடன் சம்பந்தப்படுத்துவதில் ஏதேனும் தொடர்புள்ளதா? ஜெர்மானிய அறிஞர் மாக்ஸ்முல்லர் 1853ம் வருடம் வெளியிட்ட ஆரியர் படையெடுப்பு எனும் கோட்பாடு உண்மைதானா?

மரபியலில் மனித குழுக்களின்  மரபணுவியல் (Population genetics) என்னும் ஒரு துறை உண்டு. மனித குழுக்களின்  மரபணுவியல் மக்கள்தொகையின் மரபணு கலவை பற்றி ஆய்வு செய்கிறது. காலப்போக்கில் மரபணு வடிவங்கள் மக்கள்தொகைகளுக்குள் எப்படி, ஏன் மாறுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்த துறை முயற்சிக்கிறது. இத்துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் வியப்பளிப்பனவாக உள்ளன. நாம் காலம்காலமாக நம்பிக்கொண்டிருக்கும் பலவற்றை ஆய்வின் முடிவுகள் கேள்விக்கு உட்படுத்துகின்றன.

மனித குழுக்களின்  மரபணுவியல் மேற்கத்திய நாடுகளில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் ஒன்று. உதாரணத்திற்கு திருமணத்திற்கு முன்பு ஒரு ஆண் மற்றும் பெண்ணின் மரபணுக்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவர்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு எந்தமாதிரியான மரபணு கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என தெரிவிக்கும் மரபணு ஆலோசனை அங்கு மிகவும் பிரபலம்.

ஒவ்வொரு இனத்திற்கும் சில மரபணு குறைபாடுகள் உண்டு. கறுப்பினத்தவர்க்கு இரத்த சிகப்பணுக்கங்களில் ஏற்படும் சிக்கில் செல் நோய் வரும் வாய்ப்புகள் மிக அதிகம். அதே போன்றுதான் குறிப்பிட்ட யூத குழுக்களுக்கு மரபணு சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டு. மற்றவர்க்கு வரும் வாய்ப்புகள் உண்டெனினும் இந்தவகை நோய்கள் குறிப்பிட்ட இன குழுக்களை அதிகம் தாக்குகின்றன. இது போன்ற குறைபாடுகளை கண்டறியதான் அவர்கள் மரபணு சோதனைகளை அதிகம் செய்கிறார்கள்.

தற்போது இந்தியாவிலும் மரபணு சோதனைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. முன்பு குறிப்பிட்டது போல ஆரிய – திராவிடர் வேறுபாடுகளை மனித குழுக்களின் மரபணுவியல் கேள்விகளுக்கு உட்படுத்துகிறது.

ஹைதராபாத்தில் உள்ள உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (Centre for Cellular and Molecular Biology, CCMB) டி. என். ஏ. கைரேகை மற்றும் ஆய்ந்தறிதல் மையம் (Centre for DNA Fingerprinting and Diagnostics) இயக்குனர் குமாரசாமி தங்கராஜ் ஆரியர் படையெடுப்பு எனும் கோட்பாடு உண்மையாயிருக்கும் வாய்ப்புகள் இல்லை என்கிறார். மரபணுவியலில் அதற்கான சான்றுகள் இல்லை. வரலாற்றுக்கு முன்பான இந்தியாவில் இரண்டு இனங்கள் இருந்தன. ஒன்று தென்னிந்திய மூதாதையர் மற்றது வடஇந்திய மூதாதையர். இந்தியாவில் உள்ள மக்கள் குழுக்கள் இவர்களுடைய கலவையே, என்கிறார்.

அமெரிக்கன் ஜர்னல் ஆஃ ஹியூமன் ஜெனெடிக்ஸ் என்னும் ஆராய்ச்சி இதழில் வெளியான ஆய்வு கட்டுரை ஒன்று இந்தியாவின் மக்கள் குழுக்கள் எப்படி இந்த இரண்டு இனங்களிலிருந்து தோன்றின என விவரிக்கிறது. கிட்டத்தட்ட 65,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மக்கள் குழு, மனித இனம் தோன்றிய ஆப்ரிக்காவிலிருந்து, தெற்கு கடற்கரை வழியாக இந்தியாவை அடைந்தது. அவர்கள் மேலும் முன்னேறி சென்று அந்தமான் தீவுகளை அடைந்தனர். ஆனால் அவர்களில் சிலர் தென்னிந்தியாவில் தங்கி விட்டனர். இவர்கள்தான் தென்னிந்திய மூதாதையர். சற்றேறக்குறைய 35,000 ஆண்டுகள் முன்பு மற்றொரு மக்கள் குழு ஆப்பிரிக்காவிலிருந்து வடக்கு நோக்கி இடம்பெயர்ந்தது. இதில் ஒரு பிரிவு மத்திய கிழக்கு நாடுகள் வழியே வட இந்தியாவை வந்தடைந்தது. இவர்கள்தான் வடஇந்திய மூதாதையர்.

இனங்களின் கலப்பு
கி மு 4000 முதல் கி மு 2000 வரை இந்த இரண்டு இனங்களுக்கு இடையே நடந்த கலப்பின் வழியே இந்தியாவின் எண்ணற்ற மக்கள் குழுக்கள் தோன்றின. உலகத்தின் வேறெந்த கண்டத்திலும் இல்லாத அளவு மக்கள் குழுக்கள் இந்தியாவில் தோன்றிய காலகட்டம் அது. கி மு 2000 வரை நடந்த இந்த கலப்பு சட்டென்று முடிவுக்கு வந்தது. குழுக்கள் அகமண முறையை பின்பற்ற தொடங்கின. குழுக்களின் இடையே மட்டும் திருமண உறவு அங்கீகரிக்கப்பட்டது. அதை மீறிய உறவு முறை தண்டிக்கப்பட்டது.

இந்த அகமண முறை நெருங்கிய சொந்தங்களுக்கிடையே நிகழும் மண உறவுகளுக்கு காரணமாக அமைந்தது. இந்த இரத்த சம்பந்தங்களுக்கிடையே நிகழ்ந்த உறவு நிலமும் சொத்தும் கைவிட்டு போவதை தவிர்த்ததே தவிர தீவிரமான மரபணு குறைபாடுகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

“அகமண உறவு என்பது ஜாதியைவிட பழமையானது,” என்கிறார் தங்கராஜ் அவர்கள். உண்மையில் ஜாதி ஏற்றத்தாழ்வுக்களுக்கு மரபணு சான்றுகள் கூறுவது கடினம் எனும் அவர் சமூகவியல் மற்றும் மானுடவியல் இதற்க்கு விளக்கம் தரக்கூடும் என்கிறார். கி மு 1500களில் இந்தியாவிற்கு வந்த ஆரியர்கள் (Steppe Pastoralists) மரபணுக்கள் இங்குள்ள பிராமணர்களுக்கு உள்ளதா என்ற விரிவான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. ஒரு சிலரிடம் இருக்கும் வாய்ப்புகள் உள்ளன ஆனால் எல்லா பிராமணர்களிடம் அந்த மரபணுக்கள் உள்ளதா என்பதற்கு விரிவான ஆய்வுகள் இல்லை, என்கிறார் தங்கராஜ்.

அகமண முறையின் விளைவுகள்
அகமண முறை ஜாதியுடன் கலந்த பின்பு மிகவும் இறுக்கமான ஒன்றாகி விட்டது. இந்த அகமண முறையினால் விளைந்த இரத்த சம்பந்த திருமணங்கள் மரபணு குறைபாடுகளுக்கு காரணமாக அமைந்ததை குறிப்பிட்டிருந்தோம். மரபணு குறைபாடுள்ள ஆணும் பெண்ணும் அகமண முறையில் ஒன்றிணையும் போது பிறக்கும் குழந்தைகள் மரபணு கோளாறுகளால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

அகமண முறையை பின்பற்றும் ஆரிய வைசிய செட்டிகள் மயக்கமருந்துக்கு ஏற்படும் ஒவ்வாமையை வேறு எங்கிருந்தும் பெற்றிருக்கும் வாய்ப்புகள் குறைவே. எனவே இந்தியாவில் மரபணு ஆலோசனை முறை ஊக்குவிக்க படவேண்டும். திருமணத்துக்கு முன்பு நடத்தப்படும் இவ்வகையான ஆலோசனைகள் வரும் தலைமுறைகளை காக்கும்.


Share the Article

Read in : English

Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles Green path to health: Have a different keerai every day