Read in : English
கோவையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் என். தமிழ்செல்வன் (53), அரசு உதவி பெறும் பள்ளியிலும் அரசுப் பள்ளியிலும் பணிபுரியும்போது, அவரிடம் தமிழ் வழியில் கணிதப்பாடம் படித்த மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சியடைந்துதுள்ளனர். சிரமமான பாடம் என்று கருதப்படும் கணிதப் பாடத்தில் நூறு சதவீதத் தேர்ச்சி என்பது ஏதோ ஓராண்டில் மட்டுமல்ல. 15 ஆண்டுகள் என்பது அவரது சாதனை.
தற்போது கொரோனா காலத்தில் சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் தனது சொந்த செலவில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக வீடியோ எடுத்து யூடியூப்பில் இலவசமாக வழங்கி வருகிறார் அந்த ஆசிரியர்.
கோவை காளபட்டி அரசு மேலைநிலைப் பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி கணித ஆசிரியராகப் பணிபுரிபவர் என். தமிழ்ச்செல்வன். அவரது அப்பா எஸ்.எம். நஞ்சக்குட்டி மில் தொழிலாளி முதல் வகுப்பு வரை படித்திருக்கிறார். அம்மா ஜானகி பள்ளிப் படிப்பையே படிக்கவில்லை. அவரது அக்காக்கள் 9ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார்கள். தமிழ்ச்செல்வன்தான் அக்குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி.
அவர், சரவணம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், செயின் மைக்கேல் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். அப்புறம் பீளமேடு சர்வஜன மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன், பிளஸ் டூ படித்தார். அதன்பிறகு, பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சியும் கோவை அரசு கலைக் கல்லூரியில் எம்எஸ்சியும் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் பிஎட் படிப்பும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்எட் படிப்பும் படித்து விட்டு, பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்பில் படித்தவர்.
தமிழ்ச்செல்வன்தான் அக்குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி
1991ஆம் ஆண்டிலிருந்து 2004ஆம் ஆண்டு வரை சின்னவேடம்பட்டியில் தவத்திரு ராமானந்த அடிகளார் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக இருந்த அவர், 2004ஆம் ஆண்டிலிருந்து கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்து அந்தப் பள்ளியில் 14 ஆண்டுகள் பணிபுரிந்தார். ஜெம்பநாயக்கன் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்த அவர், தற்போது காளபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக உள்ளார்.
சின்னவேடம்பட்டியிலும் கண்ணம்பாளையத்திலும் பள்ளிகளில் அவர் பணிபுரிந்த காலத்தில் அந்தப் பள்ளிகளில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் 15 ஆண்டுகள் நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். “அவர்களில் கணிசமான மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். ஒரு சில ஆண்டுகளில் ஒன்றிரண்டு மாணவர்கள் கணிதப் பாடத்தில் தேர்ச்சி பெற முடியாமல் போய் இருக்கிறார்கள். அந்த மாணவர்கள் அவர்கள் கணிதத்தில் மட்டுமல்ல அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற முடியாதவர்களாக இருந்தார்கள்” என்கிறார் தமிழ்ச்செல்வன்.
“அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் வழியில் படிப்பவர்கள். சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்குப் புரியும் வகையில் கணித வகுப்புகளை நடத்துவேன். பாடப்புத்தகத்தில் உள்ள கணக்குகளை நன்கு சொல்லிக் கொடுப்பேன். அதிலிருந்து ஐந்து ஐந்து கணக்குகளாக அசைன்மெட் கொடுத்து, அந்தக் கணக்குகளைச் செய்து வரும்படி மாணவர்களிடம் சொல்வேன். பின்னர், அந்தக் கணக்குகளில் தேர்வு வைப்பேன். அனைத்துப் பாடங்களுக்கும் சேர்த்து பத்து செட் கேள்வித் தாள்களைத் தயாரித்து வைத்திருப்பேன். அதை வைத்துக் கொண்டு வாரம் ஒரு தேர்வை நடத்துவேன். மாணவர்கள் முதலில் தடுமாறினாலும் பின்னர் புரிந்து கொண்டு நன்கு கணக்குப் போடத் தொடங்கிவிடுவார்கள். வகுப்புகள் முடிந்தாலும்கூட, மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பேன். பள்ளியில் கணிதப் பாடத்தில் சராசரி தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்ததற்காக முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கிய பரிசு எனக்குக் கிடைத்தது” என்கிறார் அவர்.
ஒவ்வொரு வீடியோவும் சுமார் ஐந்து நிமிடங்கள் ஒரு கணக்கு குறித்ததாக இருக்கும். தமிழ் வழியில் படிப்பவர்கள் மட்டுமின்றி, ஆங்கில வழியில் படிப்பவர்களும் பயன் பெறும் வகையில் இருமொழிகளிலும் இருக்கும்படி கணிதப் பாடங்கள் இருக்கும்
“கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளியில் நேரடி வகுப்புகள் நடைபெறாத சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் சாமானிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் கணிதப் பாட வீடியோக்களை எனது சொந்த செலவில் தயாரித்து, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கலாம் என்று நினைத்து அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறேன். ஒவ்வொரு வீடியோவும் சுமார் ஐந்து நிமிடங்கள் ஒரு கணக்கு குறித்ததாக இருக்கும். ஒவ்வொரு வீடியோவும் சுமார் ஐந்து நிமிடங்கள் ஒரு கணக்கு குறித்ததாக இருக்கும். தமிழ் வழியில் படிப்பவர்கள் மட்டுமின்றி, ஆங்கில வழியில் படிப்பவர்களும் பயன் பெறும் வகையில் இருமொழிகளிலும் இருக்கும்படி கணிதப் பாடங்கள் இருக்கும். இதைத் தயாரித்து யூ டியூப்பில் ‘மேத் சிம்ளிபைடு தமிழ்’ (Maths Simplified தமிழ்) என்ற பெயரில் வெளியிட்டுள்ளேன். எங்கு இருக்கும் மாணவர்களும் இதை இலவசமாகப் பார்த்துப் படித்து பயன் பெறலாம். இதுவரை 10, 11, 12 வகுப்புகளுக்கான கணிதப் பாடத்தில் சுமார் 130 கிளப்பிங்ஸை யூடியூபில் வெளியிட்டுள்ளேன். விரைவில் இந்த எண்ணிக்கை 500 ஆக உயர்த்துவதற்கான பணிகளைச் செய்து வருகிறேன். இதையடுத்து, மேல்நிலை வகுப்பில் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் பாடம் படிக்கும் மாணவர்களுக்கும் அதைத் தொடர்ந்து 9, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வீடியோ பாடங்களைப் போடுவதற்கு உத்தேசித்துள்ளேன். கணிதப் பாடம் கஷ்மானதல்ல. புரிந்து படித்தால் போதும். அதை எளிமையாகச் சொல்லித்தருவதை எனது இலக்காக வைத்திருக்கிறேன். முயன்றால் யாரும் கணக்கில் புலிகளாகலாம் என்கிறார் தமிழ்ச்செல்வன்.
ஆசிரியர் தமிழ்ச்செல்வனின் மேத்ஸ் சிம்பிளிபைடு தமிழ் (Maths Simplified தமிழ்) என்ற யூ டியூப் சேனலில் மாதிரிக்கு ஒரு கணிதப் பாட வகுப்பு தமிழிலும் ஆங்கிலத்திலும்:
Read in : English