Read in : English
இரண்டு வருடங்கள் முன்பு தன்னுடைய நான்காயிரம் புத்தகங்களை விற்றாக வேண்டிய கட்டாயம் மதுரையை சேர்ந்த சரவணகுமாருக்கு ஏற்பட்டபோது அவரது மனவருத்தத்தை ஒரு புத்தக விரும்பியாக விவரிப்பது கடினம். தன்னுடைய மகனின் மருத்துவ படிப்புக்காக அந்த தியாகத்தை செய்ய முயன்றபோதுதான் அரிய புத்தகங்களை தேடி கொண்டிருப்பவர்களை பற்றி அவர் அறிந்து கொண்டார்.
சரவணகுமார் இப்போது ஒரு முழு நேர அரிய புத்தக விற்பனையாளர். அவரது வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பெரும்பாலும் பேராசிரியர்கள், துறை தலைவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தான் இவரது வாடிக்கையாளர்கள்.
ஆராய்ச்சி மாணவர்கள் பெரும்பாலும் தமிழ் மொழி பற்றி உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி செய்பவர்கள். மலேசியா, சிங்கப்பூர், கனடாவில் வாழும் தமிழர்களும் இவரது புத்தகங்களை வாங்குகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் தன்னிடமுள்ள 50 அரிய வகை புத்தகங்களின் பெயர் பட்டியலை தன்னுடைய வாட்ஸ்அப் மற்றும் டெலிக்ராம் செயலிகளில் பதிவு செய்கிறார். அந்த புத்தகங்கள் தேவைப்படுவோர் சரவணகுமாரை தொடர்பு கொள்கிறார்கள்.
புத்தகத்தின் மதிப்போடு தபால் செலவையும் பெற்றுக்கொள்ளும் அவர் அந்த புத்தகங்களை அனுப்பிவைக்கிறார். ஆராய்ச்சி மாணவர்கள் பெரும்பாலும் தமிழ் மொழி பற்றி உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி செய்பவர்கள். மலேசியா, சிங்கப்பூர், கனடாவில் வாழும் தமிழர்களும் இவரது புத்தகங்களை வாங்குகிறார்கள்.
நூலகராக பத்து வருடங்கள் பணி செய்த அனுபவம் மற்றும் தமிழ் இலக்கிய அறிவு இவருக்கு பெரிதும் உறுதுணையாக உள்ளது. தென் தமிழகம் முழுவதும் 150 பழைய புத்தகங்கள் விற்பவர்களோடு தொடர்பில் இருக்கிறார். புத்தகங்களை தேடி பயணிக்கிறார்.
புத்தகங்களை உயிராக விரும்பி சேகரித்தவர்கள் யாராவது இறந்து போனால் அவரது வாரிசுகள் அந்த புத்தகங்கள் தேவைப்படாத கட்டத்தில் இவரை அழைக்கிறார்கள். அது ஒரு பெரிய சோகம் என்கிறார்
சரவணகுமார். “பல அரிய அச்சில் இல்லாத புத்தகங்கள் அங்கு கிடைக்கும். வெறும் புத்தகங்கள் மட்டுமே சேர்த்து வைத்திருக்கிறார் என்று வாரிசுகள் சொல்வார்கள். அவை எவ்வளவு விலை மதிப்பற்றவை என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. இல்லை என்றால் எடைக்கு போட்டுவிடுவார்கள். எத்தனை அரிய புத்தகங்கள் இப்படி எடைக்கு போட்டு அரவைக்கு சென்றன என்று தெரியவில்லை,” என்கிறார் அவர்.
சங்க இலக்கியங்களுக்கு 1950களுக்கு முன்பு வந்த உரைகள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
இந்த அரிய புத்தகங்கள் தமிழ் மாணவர்களின் ஆராய்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றன. உதாரணமாக நாடகத்துறையின் ஜாம்பவானான பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் டாக்கீஸ் என்று நடத்தி வந்த இதழ்களை தேடும் ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். சங்க இலக்கியங்களுக்கு 1950களுக்கு முன்பு வந்த உரைகள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
நாட்டின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் அவர்கள் நாட்டு பிரிவினையை பற்றி எழுதியுள்ள 1945ம் வருட புத்தகம் தமிழில் பதிப்பித்துள்ளார்கள். அதே போன்று அமெரிக்க தூதரகம் 1960 களில் அமெரிக்க வாழ்க்கை பற்றி படங்களுடன் புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள். “இவையெல்லாமே அச்சில்லில்லாத புத்தகங்கள். இவற்றைத்தான் ஆராய்ச்சிக்காக மாணவர்கள் தேடுகிறார்கள்,” என்கிறார் சரவணகுமார்.
குறிப்பிட்ட புத்தகங்கள் வேண்டும் என்று இவரை தொடர்பு கொள்ளும் மாணவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அப்படி புத்தகங்கள் கிடைப்பது அரிது. சிலசமயம் மாதக் கணக்காகும். கிடைத்தால் உடனடியாக அனுப்பி வைத்து விடுவதாக கூறுகிறார். “தொட்டால் பொடிப்பொடியாக உதிர்ந்து விடும். கரையான் அரித்த புத்தகங்கள் இருக்கும். ஆனால் இந்த புத்தகங்கள் விலை மதிப்பற்றவை. தொழிலை தாண்டி ஒரு புத்தக விரும்பியாக இந்த விலைமதிப்பில்லாத பொக்கிஷங்களை தேவைப்படும் கரங்களில் சேர்ப்பது எனக்கு சொல்லொண்ணா ஆனந்தம்,” என்கிறார் சரவணகுமார்.
Read in : English