Read in : English
நடிகர் சூர்யா நடித்த, சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் கடந்த ஆண்டு வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது. ஆஸ்கர் கதவைத் தட்டித் திரும்பியது அந்தத் தமிழ்ப் படம். ஆனாலும் தமிழ்நாட்டு சூர்யா ரசிகர்களுக்கு தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வகையில் கேரளாவில் வாழும் சூர்யா ரசிகர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். அவர்கள் பெரிய திரையில் சூரரைப் போற்று படத்தை பார்த்திருக்கிறார்கள்.
கேரளத் தலைநகரம் திருவனந்தபுரத்தில் கலாபவன் திரையரங்கில் அந்தப் படம் டிசம்பர் 12 அன்று திரையிடப்பட்டது. சூர்யா ரசிகர்கள் தியேட்டரில் திரண்டு படத்தின் திரையீட்டைக் கொண்டாடிக்களித்துவிட்டார்கள். பொதுவாக, மலையாளிகள் அறிவுஜீவிகள் திரைப்பட நடிகர்களைப் பெரிய அளவில் கொண்டாட மாட்டார்கள் என்னும் அந்த எண்ணத்துக்கு இப்படியான கூட்டம் சம்மட்டி அடி கொடுக்கிறது. ரசிகர்களின் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்களும், துண்டு வீடியோக்களும் ட்விட்டரில் சூர்யா ரசிகர்கள் பக்கத்திலும் ரசிகர்களின் பக்கங்களிலும் பகிரப்பட்டு வைரலாகியுள்ளன. தொடர்ந்து திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய ஊர்களிலும் இந்தப் படம் திரையிடப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் மம்முட்டி, மோகன்லால் போன்ற நடிகர்கள் நடித்த படங்களுக்கு ஒரு வரவேற்பு இருந்தது. அதனாலேயே அவர்களை நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்க வைத்தார்கள். மம்முட்டி நடித்த தளபதி, அழகன், ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்கள் அவர் பெயர் சொல்லும் வகையில் அமைந்தன. மோகன்லாலும் இருவர், உன்னைப் போல் ஒருவன், ஜில்லா போன்ற படங்களில் நடித்தார். நிவின் பாலி நடித்த பிரேமம் மலையாளப் படம் கூட இங்கே வசூலை அள்ளியது. ஆனாலும் கேரளத்தில் தமிழ்ப் படங்கள் பெறும் வெற்றி திரைப்பட ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அருகருகே உள்ள மாநிலங்களாக இருந்தபோதும் திரைப்படங்களில் கேரளத்தின் பாதை தனித்துவமானது; யதார்த்தமானது, தமிழ்நாட்டில் ஜனரஞ்சகமான படங்களுக்கே வெற்றி கிட்டும் என்னும் எண்ணமே இன்னும் உள்ளது. அப்படியிருக்கும்போது, தமிழின் பொழுதுப்போக்குப் படங்களை ரசிக்கும் மனநிலை கேரள ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது
அருகருகே உள்ள மாநிலங்களாக இருந்தபோதும் திரைப்படங்களில் கேரளத்தின் பாதை தனித்துவமானது; யதார்த்தமானது, தமிழ்நாட்டில் ஜனரஞ்சகமான படங்களுக்கே வெற்றி கிட்டும் என்னும் எண்ணமே இன்னும் உள்ளது. அப்படியிருக்கும்போது, தமிழின் பொழுதுப்போக்குப் படங்களை ரசிக்கும் மனநிலை கேரள ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது தமிழ்த் திரையுலகினருக்கு உற்சாகத்தைத் தந்துள்ளது. சூர்யா நடித்த காப்பான், சிங்கம் 2 போன்ற படங்கள் ஏற்கெனவே கேரளத்தில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. என்றபோதும், கேரள இளைஞர்களிடையே முதன்முதலில் பெரிய வரவேற்பை பெற்ற நடிகராக விஜயே உள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று விஜய் நடித்த சுறா படம் கொல்லம் நகரில் ஜி மேக்ஸ் திரையரங்கில் மறு வெளியீடு செய்யப்பட்டது. அப்போதும் ரசிகர்கள் அந்தத் திரையீட்டைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இவ்வளவுக்கும் அந்தப் படம் 2010 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெற்றிராத சாதாரணப் படம். சூர்யா ரசிகர்களது கொண்டாட்டத்தைவிட இரு மடங்கு உற்சாகமான கொண்டாட்டம் அது என விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் எழுதி சந்தோஷம் காண்கிறார்கள்.
விஜய், சூர்யா, அஜித் போன்ற நடிகர்களின் படங்களைக் கேரள இளைஞர்கள் ஏன் கொண்டாட்ட மனநிலையுடன் பார்க்கிறார்கள்? பொதுவாக மலையாளத் திரைப்படங்கள் இன்னும் யதார்த்தவாதப் படங்களாகவே உள்ளன. ஆட்டம் போடவைக்கும் அட்டகாசமான குத்துப் பாடல்கள், கண்ணுக்குக் குளிர்ச்சியாகப் படமாக்கப்பட்ட வண்ணமயமான பாடல் காட்சிகள், நடைமுறை வாழ்க்கையில் நம்பவேயிலாத அதிரடியான சண்டைக் காட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பொழுதுபோக்குப் படங்களைப் பார்க்க கேரள இளைஞர்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கிறது. அவர்களது விருப்பத்தை மலையாளப் படங்களால் பூர்த்திசெய்ய முடியவில்லை. அப்படியான படங்களைப் பார்க்கும் வாய்ப்பை அவர்களுக்குத் தமிழ்ப் படங்கள் அளிக்கின்றன. எனவே, அவற்றுக்கு அவர்கள் ஆதரவை அள்ளித் தருகிறார்கள்.
இந்தி, தெலுங்குப் படங்களைவிடக் கேரளத் திரைப்பட ரசிகர்களுக்குத் தமிழ்ப் படங்கள் நெருக்கமானவையாக உள்ளன. ஏனெனில், தமிழை மலையாளிகள் எளிதில் புரிந்துகொள்கிறார்கள்.
இந்தி, தெலுங்குப் படங்களைவிடக் கேரளத் திரைப்பட ரசிகர்களுக்குத் தமிழ்ப் படங்கள் நெருக்கமானவையாக உள்ளன. ஏனெனில், தமிழை மலையாளிகள் எளிதில் புரிந்துகொள்கிறார்கள். ஆகவே, அவர்களுக்குத் தமிழ்ப் படங்களைப் பார்ப்பது வேறு மொழிப் படத்தைப் பார்ப்பது போல் இல்லை. நேரடியான தாய்மொழிப் படத்தைப் பார்ப்பதுபோல் பார்த்து மகிழ்கிறார்கள்.
தொடக்க காலம் முதலே எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்றவர்களுக்கு கேரளத்தில் வரவேற்பு இருந்தாலும், விஜய்தான் மலையாள இளைஞர்களைப் பெருவாரியாக ஈர்த்த தமிழ் நடிகராக மாறியிருக்கிறார். முதன்முதலில் கேரளத்தில் வசூலை அள்ளிய விஜய் நடித்த தமிழ்ப் படம் துள்ளாத மனமும் துள்ளும். இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை, இருபது கோடி நிலவுகள் கூடி, மேகமாய் வந்து போகிறேன் போன்ற இனிமையான பாடல்கள் இடம்பெற்ற அந்தப் படம் கொல்லத்தில் உள்ள பத்மா தியேட்டரில் நூறு நாள்கள் ஓடியிருக்கிறது. மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி எனப் பெரிய பெரிய உருவம் கொண்ட நடிகர்களைப் பார்த்துப் பார்த்து அலுத்த மலையாள இளைஞர்களுக்குப் பக்கத்துவீட்டு இளைஞன் போன்ற உருவம் கொண்ட விஜயை மிகவும் பிடித்து போய்விட்டது. விஜய் நடித்த சர்கார் பட வெளியீட்டின்போது, கொல்லத்தில் வைக்கப்பட்ட 175 அடி உயர கட் அவுட் கேரள விஜய் ரசிகர்களின் மகிமையை வெளியுலகுக்கு எடுத்துக்காட்டியது. இதே உயரத்தில் ஒரு கட் அவுட் திருநெல்வேலியிலும் வைக்கப்பட்டிருந்தது. தமிழ் ரசிகர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல மலையாள ரசிகர்கள் என்பது இதிலிருந்து தெளிவாகப் புலப்படும்.
விஜய் படங்களின் பாடல்களும், அவருடைய நளினமான நடனமும் மலையாளப் படங்களில் கிடைக்காத சுவையான விருந்தை மலையாள ரசிகர்களின் கண்களுக்கு அளிக்கின்றன போலும். மலையாளப் படங்களின் பட்ஜெட்டும் மிகக் குறைவு என்பதால் தமிழ்ப் படங்களில் படமாக்கப்படுவது போன்ற வண்ணமயமான பாடல் காட்சிகளை அவர்களால் உருவாக்க முடியவில்லை. அண்மையில்தான் அவர்கள் அப்படியான மலையாளப் படங்களை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பிரேமம், புலி முருகன், லூசிபர் போன்ற படங்களில் வெற்றி இதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான விஜய் நடித்த மாஸ்டர் படம் கேரளத்திலும் திரையிடப்பட்டது. ஜனவரி 13 அன்று மாஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து கேரளத்தில் தியேட்டர்களும் திறக்கப்பட்டன. சுமார் 11 மாதங்கள் கொரோனா பெருந்தொற்று காரணமாக அடைத்துவைக்கப்பட்டிருந்த திரையரங்கள் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை நம்பி திறக்கப்பட்டன. இந்தப் படம் கேரளத்தில் சுமார் 200 திரைகளில் வெளியாயின. ரசிகர்கள் பெருந்திரளாக வந்திருந்து படத்தைக் கண்டுகளித்தார்கள்.
ரஜினியின் எந்திரன், 2.0, கபாலி ஆகியவையும், விஜய்யின் துப்பாக்கி, பைரவா, கத்தி, தெறி, மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர் ஆகியவையும், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ, சூர்யா நடித்த 24 ஆகியவையும் கடந்த சில ஆண்டுகளில் கேரளத்தில் அதிக வசூலை வாரிக் குவித்த தமிழ் படங்கள் என ஐஎம்டிபி இணையதளம் பட்டியலிட்டுள்ளது. விஜய், சூர்யா, அஜித் போன்ற தமிழ் நடிகர்கள் நடித்த படங்கள் நூற்றுக்கணக்கான திரைகளில் திரையிடப்படுகின்றன. அந்தந்த சமயங்களில் வெளியான மலையாளப் படங்களில் போட்டி போடும் அளவுக்குத் தமிழ்ப் படங்களுக்கு வலுவான ரசிகர் படை கேரளத்தில் உள்ளது.
கேரளத்தில் உருவாக்கப்படும் பல படங்கள் பார்த்து ரசிப்பதற்கு உகந்தவையாக உள்ளன; அதே நேரத்தில் அவை கொண்டாட்டத்துக்கு உகந்தவையாக இல்லை எனக் கேரள இளைஞர்கள் நினைக்கலாம்.
தமிழ் ரசிகர்கள் மலையாளப் படங்களை அவற்றின் கலைத்தன்மைக்காகவும் யதார்த்தமான பாணிக்காகவுமே விரும்புகிறார்கள். ஆனால், இதற்கு நேர்மாறாக மலையாள ரசிகர்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. கேரளத்தில் உருவாக்கப்படும் பல படங்கள் பார்த்து ரசிப்பதற்கு உகந்தவையாக உள்ளன; அதே நேரத்தில் அவை கொண்டாட்டத்துக்கு உகந்தவையாக இல்லை எனக் கேரள இளைஞர்கள் நினைக்கலாம். ஒரு ஹீரோ பத்திருபது பேரை அடித்து துவம்சம் பண்ணுவது நடைமுறை சாத்தியமற்றதுதான் அதே நேரத்தில் அதில் ஒரு கற்பனைச் சுகம் இருக்கிறது. இப்படியான சுகம் வேண்டியே மலையாள ரசிகர்கள் விஜய் படங்களை விழுந்து விழுந்து பார்க்கிறார்கள். இதனால் மலையாளப் படங்களைவிட தமிழ்ப் படங்களைச் சிறப்பானதென மலையாளிகள் கருதுகிறார்கள் என்று பெருமைகொள்ள முடியாது. ஏனெனில், இன்று விஜய், சூரியா படங்கள் பெரிய வெற்றியைப் பெறுவது போல ஒரு காலத்தில் ஷகீலா நடித்த படங்கள் மோகன்லால், மம்முட்டி படங்களுக்குச் சவாலாக அமைந்தன என்பதையும் மறந்துவிட முடியாது. மேலும், இன்னுணர்வு தரும் படங்களை அவர்கள் பிறமொழியில் குறிப்பாகத் தமிழில் தேட வேண்டிய அவசியமில்லை. அவை மலையாளத்திலேயே அவர்களுக்குக் கிடைத்துவிடுகின்றன என்பதையும் நினைவில் வைத்திருந்தால் தமிழ்ப் படங்களுக்கு மலையாள ரசிகர்கள் கொடுத்திருக்கும் இடம் எதுவென்பது புரிந்துவிடும்.
Read in : English