Read in : English
சிறுவனாக இருந்தபோது யாருமே மேற்பார்வை செய்யாத கடைகள் ரஷ்யாவில் இருப்பதை பற்றி சின்மயானந்தம் கேள்விப்பட்டிருக்கிறார். அதுபோன்ற ஒரு கடையை நடத்தினால் என்ன என்ற ஆர்வத்துக்கு இப்போது ஒரு வடிவம் கொடுத்திருக்கிறார். தொடங்கி இரண்டு வாரங்கள் கடந்திருக்கும் நிலையில் இந்த சின்ன கடை நன்றாக நடப்பதாக அவர் கூறுகிறார்.
இந்த நேர்மையாளர் கடை (Honesty Shop) மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ளது. இங்கு கடந்த 25 வருடங்களாக கறிக்கடை நடத்திவருபவர்தான் சின்மயானந்தம். கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். இவரது குடும்பம் மேற்கொண்டிருந்த கோழிப்பண்ணை தொழிலை பின்பற்றி கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
அண்ணா நகரில் இவரது கடை பிரபலம். யாருக்கும் பிளாஸ்டிக் பையில் கறி தரமாட்டார். வீட்டில் இருந்து பாத்திரம் கொண்டுவந்தால் ஒரு கிலோ கறிக்கு நான்கு முட்டைகள் தருவார். பாத்திரம் இல்லை என்றால் ஒரு சிறிய தொகையை வாங்கிக்கொண்டு பாத்திரம் தருவார். அதை அடுத்தமுறை வரும்போது கறி வாங்க கொண்டு வரவேண்டும்.
“பிளாஸ்டிக்கை ஒழிக்க என்னால் இயன்ற சிறு முயற்சி. 2000ம் ஆண்டு முதல் இவ்வாறுதான் செய்து வருகிறேன். இப்போது என்னுடைய கடைக்கு பாத்திரம் இல்லாமல் வருபவர்கள் மிகமிக குறைவு. கடந்த 20 வருடங்களில் என்னுடைய வாடிக்கையாளர்களிடம் ஒரு சிறிய மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறேன் என்ற நிறைவு இருக்கிறது. இந்த நேர்மையாளர் கடை அது போன்ற அடுத்த முயற்சி,” என்கிறார்.
இந்த சின்ன கடையில் சிக்கன் மசாலா பொடிகள், மளிகை சாமான்கள் மற்றும் முட்டை இருக்கின்றன. மதியம் இரண்டு மணிவரை சின்மயானந்தம் அருகே கறி விற்கிறார். இரண்டு மணிக்கு பிறகு யாருமே அருகில் இருப்பது இல்லை. பொருட்களின் விலை பட்டியலை பார்த்து பணத்தை அருகே உள்ள பெட்டியில் போட வேண்டியதுதான். “கறிக்கடையில் நான் இருக்கும்போது பணத்தை என்னிடம் நீட்டுவார்கள். அவர்களுக்கு நான் நேர்மையாளர் கடை என்றால் என்ன என்று விளக்குவேன். சிறிது சிறிதாக மக்களுக்கு இந்த கடையை பற்றி புரிய ஆரம்பிக்கிறது,” என்கிறார் சின்மயானந்தம்.
தொடங்கிய இரண்டு வாரங்களில் நட்டம் என்று எதுவும் வரவில்லை என்கிறார் இவர். “மதியம் நான் கறிக்கடையை அடைத்தபின்பு 100 முதல் 150 ரூபாய் வரை தினமும் வியாபாரம் நடக்கிறது. யாரும் இல்லை என்பதால் பணம் போடாமல் யாரும் பொருட்கள் எடுப்பதாக தெரியவில்லை,” எனும் சின்மயானந்தம் இந்த கடையை பெரிதுபடுத்தும் எண்ணம் இருப்பதாகவும் கூறுகிறார்.
வித்தியாசமாக இருந்தாலும் இந்த கடை தனக்கு பிடித்திருப்பதாக கூறுகிறார் சித்ரா. “இது ஒரு நல்ல முயற்சி. ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில் கறிக்கடையில் கூட்டம் அதிகம் இருக்கும். கறியோடு சேர்த்து மசாலா பொருட்களும் தேவைப்படும். இந்த கடை இருப்பதால் நேரம் மிச்சமாகிறது. இவற்றை வாங்க நான் தனியே நிற்கவேண்டாம் பாருங்கள்,” என்கிறார் அவர்.
இது போன்ற ஒரு முயற்சி மதுரைக்கு புதிதல்ல. மதுரை மாவட்டம் கருமாத்தூரில் உள்ள புனித கிளாரட் மேல்நிலை பள்ளி இதுபோன்ற நேர்மையாளர் கடையை 2004ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. மாணவர்களே நடத்தும் இந்த கடையில் நேர்மையை அளவிட ஒரு அளவுகோலை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். விற்ற பொருட்களின் அளவும் விலையும் அளவீடு செய்யப்பட்டு வித்தியாசம் குறித்து கொள்ளப்படுகிறது. வித்தியாசம் அதிகமா இருந்தால் நேர்மை அளவீடு குறையும். அதை பொறுத்து தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் மாணவர்களிடம் நேர்மையின் அவசியத்தை எடுத்துக் கூறுவார்கள்.
இந்த கடையை தொடங்கியபின், அந்த பள்ளியை பற்றி கேள்விப்பட்டதாக கூறுகிறார் சின்மயானந்தம். “அது போன்ற கடைகளை அனைத்து பள்ளிகளும் தொடங்க வேண்டும். நேர்மையை பற்றி நமது குழந்தைகளுக்கு சொல்லித்தருவது மிகவும் அவசியம்,” என்கிறார் சின்மயானந்தம்.
Read in : English