Read in : English
பத்ம ஸ்ரீ மணி கிருஷ்ணசுவாமி தமிழகத்தின் புகழ் பெற்ற கர்நாடக பாடகி. கர்நாடக சங்கீத கலாநிதிகள் ஐவரால், மைசூர் வாசுதேவாச்சார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, முசிறி சுப்பிரமணிய ஐயர், டைகர் வரதாச்சாரியார் மற்றும் பாபநாசம் சிவனால், பயிற்றுவிக்கபட்டவர். மணி கிருஷ்ணசுவாமியின் இயற்பெயர் மணி பெருந்தேவி. கர்நாடக சங்கீதத்தில் அவர் அடைந்த உயரங்கள் அதிகம். முசிறி சுப்ரமணியஐயரின் பாடல்களை பிரபலமடைய வைத்ததில் அவருக்கு பெரும்பங்கு உண்டு. மணி கிருஷ்ணசுவாமி கடந்த 2002ம் ஆண்டில் மறைந்தார்.
தமிழகத்தை சேர்ந்த அவருடைய நினைவாக கர்நாடக மாநிலம் மங்களூரில் ஒவ்வொரு முதல் ஞாயிற்று கிழமையும் ஒரு கச்சேரி நடத்தப்படுகிறது. நடத்தப்படும் இடம்தான் கொஞ்சம் வித்தியாசமான ஒன்று. மங்களூரில் உள்ள சூரத்கல்லில் தேசிய நெடுஞ்சாலையில் (எண் 66) உள்ள மேம்பாலத்தின் கீழ் இந்தக் கச்சேரி நடக்கும். அதிகாலை ஆறு மணிக்குதே தொடங்கும் இந்தக் கச்சேரியின் பெயர் ‘உதய ராகா’. வளர்ந்து வரும் பல வித்துவான்கள் இந்த நிகழ்ச்சியில் பாடியுள்ளார்கள். சற்றேறக்குறைய இரண்டு மணி நேரம் நடக்கும் இசை நிகழ்ச்சியில் 50 முதல் 100 பேர் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்தை சேர்ந்த மணி கிருஷ்ணசுவாமி நினைவாக கர்நாடக மாநிலம் மங்களூரில் ஒவ்வொரு முதல் ஞாயிற்று கிழமையும் ஒரு கச்சேரி நடத்தப்படுகிறது. நடத்தப்படும் இடம்தான் கொஞ்சம் வித்தியாசமான ஒன்று.
தமிழக கர்நாடக கலைஞரின் நினைவாக எதற்காக மங்களூரில் நிகழ்ச்சி நடக்கவேண்டும், அதுவும் மேம்பாலத்தின் அடியில்? இந்த நிகழ்வை நடத்துவது மங்களூரில் உள்ள மணி கிருஷ்ணசுவாமி அகாடமி. மங்களூரை சேர்ந்த நித்யானந்த ராவ் அவர்கள் மணி கிருஷ்ணசுவாமி மறைந்த 2002 ஆண்டு இந்த அகாடமியை அவரது நினைவாக தொடங்கினார். “மணி கிருஷ்ணசுவாமி எனது மகளின் குரு. அவர் இறந்தபின் அவரது நினைவாக இந்த அகாடமியை தொடங்கினோம். பாரத பிரதமர் ஸ்வாச் பாரத் முயற்சியை தொடங்கியபோது, இங்குள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியை நாங்கள் எல்லோரும் சுத்தப்படுத்தினோம்.
அது சுத்தமாகவே இருக்கவேண்டும் என்றால் அங்கு ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்தால் நல்லது என்று இங்குள்ள ‘நகரிக சேவா சமிதி’ நினைத்தது. எனவே நாங்கள் அகாடமியில் இருந்து ஒவ்வொரு முதல் ஞாயிறும் இசை நிகழ்ச்சி நடத்த தொடங்கினோம்”, என்கிறார். 2018ம் ஆண்டில் தொடங்கிய நிகழ்ச்சி நான்கு ஆண்டுகளாக நடக்கிறது. இடையில் கோவிட் தொற்றுக்காக தடைபட்ட போதும், தொற்று குறைந்தபின் தொடர்ந்து நடக்கிறது என்கிறார் நித்யானந்த ராவ்.
“பாரத பிரதமர் ஸ்வாச் பாரத் முயற்சியை தொடங்கியபோது, இங்குள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியை நாங்கள் எல்லோரும் சுத்தப்படுத்தினோம். அது சுத்தமாகவே இருக்கவேண்டும் என்றால் அங்கு ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்தால் நல்லது என்று இங்குள்ள ‘நகரிக சேவா சமிதி’ நினைத்தது. எனவே நாங்கள் அகாடமியில் இருந்து ஒவ்வொரு முதல் ஞாயிறும் இசை நிகழ்ச்சி நடத்த தொடங்கினோம்,” மணி கிருஷ்ணசுவாமி அகாடமி நிறுவனர் நித்யானந்த ராவ்.
அவரது மகள், பிரார்த்தனா தன்னுடைய குருவை நினைவு கூர்கிறார். “அப்பொழுது நான் எட்டாவது படித்து கொண்டிருந்தேன். கர்நாடக சங்கீதத்தில் மிகவும் ஆர்வம். கச்சேரிகளும் செய்வேன். நல்ல குருவிடம் கற்கவேண்டும் என்ற ஆர்வத்தில் சாக்ஸபோன் வித்துவான் கதிரி கோபால்நாத் அவர்களை அணுகினோம். சென்னையில் வசித்த அவர் மங்களூரை சேர்ந்தவர். அவர் எனக்காக மணி கிருஷ்ணசுவாமி அவர்களிடம் பேசினார். இவ்வாறுதான் என்னுடைய ஆறு வருட பயிற்சி தொடங்கியது,” என்றார்.
மணி கிருஷ்ணசுவாமி வயதின் காரணமாக இசையில் இருந்து ஒதுங்கி இருந்த நேரம் அது. “சேர்ந்த அன்றே என்னுடைய அடிப்படை சரியில்லை என்று விட்டார். ஒரு பதிமூன்று வயது பெண்ணாக இருந்த எனக்கு அவர் கூறியது கொஞ்சம் கசப்பாக இருந்தது. அடுத்த நான்கு வருடங்கள் எனக்கு அடிப்படை மட்டுமே கற்று தந்தார். சில கீர்த்தனைகளை கொடுத்து பாட சொல்லிவிட்டு சென்றுவிடுவார்.
மூன்று அல்லது நான்கு மணிநேரம் தனியே பாடி கொண்டிருப்பேன். தாய் தந்தையரையும் பிறந்த ஊரையும் விட்டு வந்த எனக்கு அவ்வாறு பாடி கொண்டிருப்பது எப்படி இருக்கும் என ஊகித்துகொள்ளுங்கள். ஆனால் இப்பொழுது நினைத்து பார்க்கும் பொழுது அவர் கற்றுக்கொடுத்த அடிப்படை பாடங்கள் எவ்வளவு பெரிய சொத்து என்று எனக்கு தெரிகிறது”, என்று விவரிக்கிறார்.
மணி கிருஷ்ணசுவாமி இறந்து போகும் முன்பு அவரோடு இருந்த இரண்டு வருடங்கள் மறக்கமுடியாத ஒன்று எனும் பிரார்த்தனா சங்கீதம் கற்றுக்கொள்ளவே சென்னையில் தன்னுடைய கல்லூரி படிப்பை மேற்கொண்டார். தற்போது சென்னையில் வசிக்கிறார்.
“மணியம்மா என்று நாங்கள் அவரை அழைப்போம். அவரிடம் கற்றுக்கொண்ட அந்த அனுபவத்தை எப்படி விவரிக்கவென்றே எனக்கு தெரியவில்லை. ஒரு கடவுளோடு இருந்த ஒரு உணர்வு. அவருடைய மரணம் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு”, என்கிறார் பிரார்த்தனா.
இந்த மேம்பாலத்தின் கீழ் நடந்த இசை கச்சேரி தற்காலிகமா மங்களூரில் உள்ள பிரார்த்தனாவின் வீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. “சாலை வேலைகள் நடைபெற்று வருவதால் அங்கு தொடர்ந்து நடத்த முடியவில்லை. நகரிக சேவா சமிதியிடம் கலந்தாலோசித்த பிறகு இடத்தை மாற்றினோம். மீண்டும் மேம்பாலத்தின் அடியில் மாற்றுவதை குறித்து ஆலோசிக்க வேண்டும்,” என்கிறார் நித்யானந்தா ராவ்.
Read in : English