Read in : English

தற்பொழுது நாம் காணும் பள்ளிவாசல்கள் இந்தோ-இஸ்லாமிய முறைப்படி கட்டப்பட்டிருக்கும். ஆனால் தொடக்கத்தில் தமிழகத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் தமிழக அல்லது திராவிட கட்டடக்கலையை சார்ந்து அமைந்தன. தென்னிந்தியாவில் இஸ்லாம் அமைதி வழியிலேயே பரவியது.

அரேபிய வணிகர்கள் தங்களுடைய மதத்தை மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளுக்கு கொண்டு வந்தார்கள். தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் முஸ்லிமாக ஆனவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே உள்ள மக்களோடு இணக்கமாக இருந்தவர்கள். பல இடங்களில் மரத்தச்சர், கல் தச்சர்களான ஆசாரிகள் இஸ்லாமியர்களாக ஆகியிருக்கிறார்கள். இவர்களில் பல பேர் தமிழ்நாட்டுக்கும் அரேபியாவுக்கும் நெருங்கிய தொடர்போடு இருந்து இருக்கிறார்கள்.

பாரம்பரியப் பெருமை கொண்ட கோயில்களும், பள்ளிவாசல்களும் அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த கட்டடக்கலையை பின்பற்றியே கட்டப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கீழக்கரை பழைய ஜும்மா மசூதியில் உள்ள தொழுகை மாடம்

தமிழர்களின் பாரம்பரிய கட்டடக்கலையை பின்பற்றிக் கட்டப்பட்டுள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் பற்றி ஆய்வு செய்துவரும் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இதுபற்றிக் கூறியதாவது,
ராமநாதபுரத்தின் அநேக கடற்கரை கிராமங்களில் இஸ்லாமியர் பெருமளவில் வாழ்கிறார்கள். கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் இப்பகுதிகளில் இஸ்லாம் பரவி உள்ளது. திருப்புல்லாணி கோயிலில் உள்ள கி.பி.1247-ம் ஆண்டைச் சேர்ந்த, இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு, கீழ்ச்செம்பி நாட்டு பவித்திரமாணிக்கப்பட்டினத்திலுள்ள பிழார் என்ற முஸ்லிம் பள்ளிவாசலுக்கு ஆம்பத்தூர், மருதூர் ஆகிய ஊர்கள் தானமாக வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.

தீர்த்தாண்டதானம் சிவன் கோயில் எதிரில் சிதைந்த நிலையில் இருந்த மண்டபத்தை கி.பி.1269-ல் அங்கு தங்கி இருந்த அஞ்சுவண்ணம் எனும் இஸ்லாமியர் உள்ளிட்ட வணிகக்குழுவினர் பழுதுபார்க்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
கீழக்கரை பள்ளிவாசலில் உள்ள ஒரு இஸ்லாமியப் பெண்மணியின் கி.பி.1300-ம் ஆண்டைச் சேர்ந்த கல்லறைக் கல்வெட்டு மூலம் இவ்வூரில் கி.பி.12-ம் நூற்றாண்டுகளிலேயே முஸ்லிம்கள் குடியிருந்ததையும் இஸ்லாமியப் பள்ளி இருந்ததையும் அறியமுடிகிறது. வட்டானம் மற்றும் வாலிநோக்கத்தில் கி.பி.15-ம் நூற்றாண்டுகளில் இஸ்லாமியப் பள்ளி இருந்ததை அங்குள்ள கல்லறைக் கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரைப் பாறைகளையே அதிக அளவில் கோயில்கள், பள்ளிவாசல்கள், தர்காக்கள் கட்டப் பயன்படுத்தியுள்ளனர். கீழக்கரை, வேதாளை, வாலிநோக்கம், நரிப்பையூர் உள்ளிட்ட பள்ளிவாசல்களும் கடற்கரைப் பகுதியில் வெட்டியெடுக்கப்பட்ட மணற்பாறைகளைக் கொண்டே கட்டப்பட்டுள்ளன. கோயில்கள் கட்ட பயன்படுத்திய பாரம்பரிய கட்டடக்கலையையே பள்ளிவாசல்கள் கட்டவும் பயன்படுத்தியுள்ளனர்.

கோயில்கள் கட்ட பயன்படுத்திய பாரம்பரிய கட்டடக்கலையையே பள்ளிவாசல்கள் கட்டவும் பயன்படுத்தியுள்ளனர்

பெரும்பாலான பழமையான பள்ளிவாசல்கள் தொழும் மாடம், மகாமண்டபம், முன்மண்டபம், தாழ்வாரம் என்ற அமைப்பில் காணப்படுகின்றன. இவற்றின் வெளிப்புறத்தில் அதிஷ்டானம், பாதசுவர், பிரஸ்தரம் ஆகிய அமைப்பு காணப்படுகிறது. தூண்களிலும், மேற்கூரையிலும் பலவிதமான பூக்களின் உருவங்கள் கோட்டுருவங்களாகவும் புடைப்புச் சிற்பங்களாகவும் வெட்டப்பட்டிருக்கும்.

கீழக்கரை, வேதாளை, நரிப்பையூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பழமையான பள்ளிவாசல்கள் தமிழர்களின் பாரம்பரிய கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளன.

கீழக்கரை ஜும்மா பள்ளிவாசலில் கல் வேலைப்பாடுகள்

கீழக்கரையின் சில பள்ளிவாசல்களில் உள்ள தூண்கள் வெட்டுப் போதிகை, தாமரைப்பூ, வாழைப்பூ போதிகைகளோடு கூட்டுத்தூண்களாக கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பிற்காலப் பாண்டியர், சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கல்லுப்பள்ளிகளும் உள்ளன. அவற்றின் தூண்கள், போதிகைகள், கொடுங்கைகள் மூலம் அவற்றின் கலைப்பாணியை அறிய முடிகிறது. அதே காலகட்டத்தில் கட்டப்பட்ட திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை கோயில் தூண்களும் இதுபோலவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகள் முழுவதும் இதுபோன்ற பள்ளிவாசல்கள் தான் உள்ளன. பழவேற்காடு, திருச்சி உறையூர், கீழக்கரை, காயல்பட்டினம், வட்டானம் , தொண்டி போன்ற பல கடற்கரை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் இந்த கட்டிடபாணியிலேயே அமைந்துள்ளன.

தமிழகத்தில் இஸ்லாமிய கட்டடக்கலை எனும் நூலை எழுதிய Dr ராஜா முஹம்மது அவர்கள் உள்ளூர் கட்டடக்கலையை பள்ளிவாசல்கள் கட்ட பயன்படுத்தியது பிற்காலங்களில் ஐரோப்பிய வரலாற்றாளர்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்கிறார்.

கோவில்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பள்ளிவாசல்கள் கட்டப்பட்டதாக ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது. என்னுடைய புத்தகம் அது தவறு என்று ஆதாரங்களோடு நிரூபிக்கிறது, என்கிறார் ராஜா முஹம்மது.

பிற்கால பள்ளிவாசல்கள் பண்டைய திராவிட கட்டடக்கலைக்கு மாறுபட்டு இந்தோ-இஸ்லாமிய கட்டடக்கலையின்படி கட்டப்பட்டன. இப்போதுள்ள சூழ்நிலையில் திறமையான கட்டிட கலைஞர்கள் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. இஸ்லாமிய வடிவங்களான டோம் அல்லது மினாரட் கட்டும் ஆட்கள் கிடைப்பதில்லை, என்கிறார் ராஜா முஹம்மது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival