Read in : English

கடலூர் அருகே ஒரு கிராமத்தில் விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு, தான் செய்யாத குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு காவல்  நிலையத்தில் மரணமடைந்தது தொடர்பான வழக்கில் அப்போது வழக்கறிஞராக இருந்த நீதிபதி கே. சந்துருவின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய வாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அந்த வழக்கில் மனிதநேயத்துடன் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் பி.எஸ். மிஸ்ரா, சிவராஜ் வி. பாட்டீல் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

28ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் இந்த வழக்கு குறித்த விவரங்கள் பொது வெளியில் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த வழக்கில் குற்றம்சாட்டவர்களுக்கு எதிராக வாதாடிய நீதிபதி சந்துருவின் பாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கிய நிஜ நீதிபதிகள் யார்?

நீதிபதி பிரபா சங்கர் மிஸ்ரா என்று அழைக்கப்படும் பி.எஸ். மிஸ்ரா 1936ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி பாட்னாவில் பிறந்தவர். 1960இல் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய அவர், 1982ஆம் ஆண்டில் பீகார் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

யாருக்கும் அஞ்சாத அறப்போராளியாகச் செயல்பட்ட நீதிபதி மிஸ்ரா, 1990ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். அவர் மாற்றப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, “சில நீதிபதிகள் பிகார் மாநிலத்திலிருந்து மாற்றப்படுவர்” என்று பிகார் மாநில முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்தார்.

இதனால், நீதிபதி பி.எஸ். மிஸ்ராவின் பணி இடமாறுதலுக்கு ஏராளமான வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து மனுவில் கையெழுத்திட்டனர்.

காவல் நிலைய லாக்அப்பில் ராஜாக்கண்ணு சித்திரவதை செய்யப்பட்டதை நேரில் பார்த்த இரண்டு பேரின் சாட்சியங்களைப் பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததும், அந்தப் பதிவுகளைப் படித்துப் பார்த்த நீதிபதி மிஸ்ரா, “இது தெளிவான கொலை வழக்கு” என்று குறிப்பிட்டதை. அப்போது பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் வாதாடிய சந்துரு நினைவுகூர்ந்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மிஸ்ரா நீதிபதியாக இருக்கும்போதுதான் அவரும், நீதிபதி சிவராஜ் வி. பாட்டீலும் இணைந்து 1994இல் ராஜாக்கண்ணு ஆட்கொண்டர்வு மனு குறித்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கித் தீர்ப்புக் கூறினர்.

1995ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மாற்றப்பட பி.எஸ். மிஸ்ரா, ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியானார். கணவனால் கடுமையாகக் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் இந்தக் கொடுமையிலிருந்து தன்னைக் காப்பாற்றும்படியும் ஒரு பெண்ணிடமிருந்து நீதிபதி மிஸ்ராவுக்குக் கடிதம் வந்தது. அதையே சட்டரீதியான மனுவாக எடுத்துக் கொண்டு, அந்தப் பெண்ணை நீதிமன்றத்துக்கு அழைக்காமலேயே, விசாரணை நடத்தி அவளது கணவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நீதித்துறைச் சீர்திருத்தம் குறித்து பேசியதுடன் அதற்கான முன்முயற்சிகளிலும் ஈடுபட்டவர் நீதிபதி மிஸ்ரா. ஆந்திர நீதிமன்றத்தில் அவர் தலைமை நீதிபதியாகப் பணிபுரிந்த காலத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இருந்தாலும், 1997இல் அவர் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். அங்கு அவர் பணிபுரிந்த காலத்தில், இவரைவிட ஜூனியராக இருந்த மூன்று நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்துக்கு எதிராக அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். புஞ்சிக்குக் கடிதங்கள் எழுதினார்.

அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொல்கத்தா தலைமை நீதிபதியாக இருந்த பி.எஸ். மிஸ்ரா, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அதன்பின்னர், உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்தார் அவர்.

அந்தக் கால கட்டத்தில் சாமானிய மக்களுக்கு இலவசச் சட்ட உதவிகள் செய்து வந்த அவர், 2012இல் தனது 76வது காலமானார்.

அவரது மரணத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் முழு ஆயமும் அவருக்கு அஞ்சலி (full court reference) செலுத்தி கௌரவித்தது

நான்கு மாநிலங்களில் நீதிபதியாக இருந்த அவர், உச்சநீதிமன்ற நீதிபதி ஆக முடியவில்லை. ஆனாலும் அவரது மரணத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் முழு ஆயமும் அவருக்கு அஞ்சலி (full court reference) செலுத்தி கௌரவித்தது.

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில் மட்கால் என்ற ஊரில் 12.1.1940இல் பிருந்த சிவராஜ் வி. பாட்டீல் பிறந்தார். சேத் சங்கர் லால் லகோட்டி சட்டக் கல்லூரியில் படித்த அவர், 1962இல் குல்பர்க்காவில் வழக்கறிஞராகப் பணிபுரியத் தொடங்கினார். சில ஆண்டுகள், தான் படித்த சட்டக் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராகவும், பின்னர் அக்கல்லூரியின் கௌரவ முதல்வராகவும் இருந்தார்.

1979ஆம் ஆண்டிலிருந்து பெங்களூரில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். 1980ஆம் ஆண்டில் யூகோஸ்லாவியாவில் பெல்கிரேட், மேற்கு ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டவர்.

1990ஆம் ஆண்டில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்ப்டடார். 1994ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். 28.12.1998லிருந்து 19.1.1999 வரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்தார். அதைத் தொடர்ந்து, அவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகக் பதவியேற்றார். 2000ஆவது ஆண்டு மார்ச் மாதத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார்.

குல்பர்கா பல்கலைக்கழகம், கர்நாடக மாநிலச் சட்டப் பல்கலைக்கழகம் ஆகியவை அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளன.
2005இல் உச்சநீதிமன்ற நீதிபதிப் பணியிலிருந்து அவர் ஓய்வு பெற்றதும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் செயல் தலைவராக இருந்தபோது, வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு ரூ.2.80 கோடி இழப்பீடு வழங்க ஆணையிட்டார்.

பீகாரில் ஹராரியா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நான்கு கை, கால்களுடன் பிறந்த லெட்சுமி என்ற இரண்டு வயதான சிறுமியின் நிலையைப் பற்றி அறிந்த நீதிபதி சிவராஜ் பாட்டீல், அந்தக் குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்காகத் தனது அறக்கட்டளை மூலம் ரூ.26 லட்சம் வழங்கியவர்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival