Read in : English

Share the Article

நவம்பர் 12ஆம் தேதியிலிருந்து சென்னையின் சில பகுதிகளில் சிறிய சாலைகளில் வழக்கத்துக்கு மாறாக மோட்டார் பம்புகள் பொருத்திய விவசாயத்துக்கான டிராக்டர்கள் வந்து போய்க் கொண்டிருந்தன.

குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை அகற்றுவதற்காக பல இடங்களில் மோட்டார் பம்புகள் இயங்கிக் கொண்டிருந்தன. அங்கிருந்து பெரிய குழாய்கள் மூலம் மழை நீர் கால்வாய்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும்போதுதான் மழை நீர் கால்வாய்கள் சரிவர இயங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.

அதனால் பம்ப்புகள் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீரை மழை நீர், கால்வாய்கள் மூலம் அகற்ற முடியாமல் ,அந்தத் தண்ணீர் மிகப் பெரிய கழிநீர் குழாய் இணைப்புகளில் விடப்படும் நிலை உருவாகியுள்ளது.

நகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள பல சாலைகள் இந்த மழை வெள்ளத்தால் குண்டும் குழியுமாக ஆகிவிட்டன. தண்ணீரை அகற்றுவதற்காக ஆங்காங்கே வெட்டப்பட்ட பள்ளங்களும் பழுதடைந்த சாலைகளும் வாகனங்களில் செல்பவர்களுக்கு பெரும் இடையூறாக இருக்கின்றன.

மழை நின்றதை அடுத்து, நவம்பர் 15ஆம் தேதி தெருக்களில் தேங்கிக் கிடந்த மழை நீர் அகற்றப்பட்டது. சாலையில் விழுந்து கிடந்த பெரிய மரங்களும் பெரிய கிளைகளும் சீக்கிரமே அகற்றப்பட்டுவிட்டன.

இன்னும் பல சாலைகளில் விழுந்து கிடந்த சிறிய மரங்களும் மரக்கிளைகளும் அகற்றப்படாமல் கிடப்பது போக்குவரத்துக்குத் தடையாக உள்ளது. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இவற்றை விரைவில் முழுவதுமாக அகற்றுவதற்காக அப்பகுதி மக்கள் காத்திருக்கிறார்கள்.

தி.நகர் பஸ் நிலையம் அருகே உள்ள மேட்லி சாலையில் உள்ள சுரங்கப் பாதையில் தேங்கிக்கிடந்த தண்ணீர் கடைசியாக அகற்றப்பட்டுவிட்டது.

நகரில் நிவாரணப் பணிகள் நடந்தாலும்கூட, நவம்பர் 17ஆம் தேதி தமிழ்நாட்டின் வட கடலோரப் பகுதிகளிலும் ஆந்திரப் பிரதேசத்தின் தென்பகுதிகளிலும் கனமழையோ அல்லது அதிகனமழையோ பெய்யக்கூடும் என்று இந்திய வானியல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நவம்பர் 18ஆம் தேதி பிற்பகலில் 91 சதவீத கனமழை பெய்யக்கூடும் என்று பிபிசி வானிலை அறிக்கை கூறுவது இதை உறுதி செய்வதாக இருக்கிறது.

கனமழை என்பது 64.5 மில்லி மீட்டரிலிருந்து 115.5 மில்லி மீட்டர் வரை பெய்யும் மழை. அதிகனமழை என்பதும் 115.6 மில்லி மீட்டரிலிருந்து 204.4 மில்லி மீட்டர் வரை பெய்யும் மழையைக் குறிப்பதாகும்.

அதனால், 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைப் போல அல்லாமல், நவம்பர் 7ஆம் தேதியிலிருந்து 11ஆம் தேதி வரை ஏற்பட்ட பிரளயம் போன்ற மழை சென்னையில் சில பகுதிகளில் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் மழை வெள்ள நீர் பாதிப்புக்கு ஆளான பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், வடகிழக்குப் பருவமழையின் இரண்டாவது கட்ட பாதிப்புகளை எதிர்கொள்ளத் தயாராக வேண்டியதிருக்கும்.

முதல் கட்டத்தில், மழை நீர் கால்வாய்களில் தேங்கிய தண்ணீரை அகற்ற பம்புகள் பயன்படுத்தப்பட்டன. அதன் மூலம் மேலும் வெள்ளம் வந்தால் அதனை அகற்றுவது எளிதாக இருக்கும் என்று கருதப்பட்டது.

ஆனால் மழைநீர் கால்வாய் இணைப்புகள் மோசமான பராமரிப்பு காரணமாக அவை முழுமையாகச் செயல்பட முடியாத நிலையில் உள்ளன. அதனால் வெள்ளம் ஏற்படும் காலங்களில் தெருக்களில் தேங்கியுள்ள தண்ணீரை பம்ப் செய்து கழிவுநீர் இணைப்புகள் மூலம் அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மழைநீர் கால்வாய் இணைப்புகள் மோசமான பராமரிப்பு காரணமாக அவை முழுமையாகச் செயல்பட முடியாத நிலையில் உள்ளன

இரண்டாவது பிரச்சினை மின்வெட்டு. மழை காலத்தில் வெள்ளச் சூழ்நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி, மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதுபோன்ற சூழ்நிலையில், வெள்ளநீர் வடிந்ததும் மீண்டும் மின்சார வசதியை விரைந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளச் சூழ்நிலையில் லஞ்சம் கொடுத்தால்தான் துரிதமாக வேலை நடக்கும் என்ற போக்கும் இருக்கிறது.

மழை காலத்தில் வெள்ளச் சூழ்நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி, மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதுபோன்ற சூழ்நிலையில், வெள்ளநீர் வடிந்ததும் மீண்டும் மின்சார வசதியை விரைந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

எடுத்துக்காட்டாக, மேற்கு மாம்பம் ஸ்டேஷன் ரோடு பகுதியில், மழை வெள்ளத்தினால் சேதமடைந்த கேபிள்களை மாற்றி, மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அப்பகுதி மக்களிடம் சில ஊழியர்கள் பணம் வசூலிப்பதாக தகவல்கள் வருகின்றன. மக்கள் கொடுக்கும் பணத்துக்கு ரசீது கிடைக்குமா என்று தெரியாது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் ரூ.2,549 கோடி மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது.

அதன்படி, 2004 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஹை டென்ஷன் கேபிள் இணைப்புகளையும் 33,307 கிலோ மீட்டர் தூரத்துக்கு லோ டென்ஷன் கேபிள் இணைப்புகளையும் அண்டர்கிரவுண்ட கேபிள் இணைப்புகளாக மாற்றுவதற்கான திட்டம் இது.

இதனால், மழை வெள்ள காலத்தில் ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்க முடியும். இந்தத் திட்டத்தை 2020-21ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ. திருப்புகழ் தலைமையிலான நிபுணர் குழு, இந்தப் பணி எந்த அளவுக்கு முடிந்துள்ளது, எந்த அளவுக்குசிறப்பாக செயல்படுகிறது என்பதை ஆராயும்.

பெருமழை நேரங்களில் வீடுகளில் உள்ள எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் சாதனங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பும் முக்கியப் பிரச்சினைதான். Ðபல வீடுகளில் சார்ஜர்கள், ரௌட்டர்கள், விலை அதிகம் உள்ள எலெக்ட்ரானிக் சாதனங்கள் மழை காலங்களில் மின்சார விநியோகத்தின் சீரற்ற தன்மையால் பழுதடைந்துவிட்டன.

இதுபோன்ற இழப்பீடுகளை ஈடு செய்யும் வகையில் மாநகராட்சி வசூலிக்கும் வரிகளில் சலுகை அளிக்கலாம். 2019இல் அதிமுக ஆட்சிக் காலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் கஜா புயல் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது. கொரோனா காலத்திலும் இதுபோன்ற ரொக்க நிவாரணத் தொகைகள் வழங்கப்பட்டன.

வரும் டிசம்பரில் நடத்த உத்தேசித்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் அரசு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரொக்க இழப்பீடு வழங்குவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்று தெரிகிறது.

இதுபோன்ற ரொக்க இழப்பீடுகளை அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் அரசுகளிடமிருந்தும் எதிர்பார்க்கும் போக்கு மக்களிடம் வளர்ந்து வருகிறது.

போதிய மழைநீர் கால்வாய்களைக் கட்டுதல், ஏற்கெனவே இருக்கும் கால்வாய்களைச் சீரமைத்துப் பராமரித்தல், கால்வாய் இணைப்புகளை கோயில் குளங்கள் உள்பட நீர்நிலைகளுடன் இணைத்தல், புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளைத் தூர்வாருதல் போன்ற பணிகளைச் செய்வதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களைத் தூர்வாருவதற்கான வாய்ப்பை நாம் இழந்து விட்டோம்.

இதற்கு முந்தைய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக் காலத்தில் தூர்வாரும் குளங்களிலிருந்து எடுக்கப்படும மம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது.

அதில் இந்த மாவட்டங்கள் விடுபட்டு விட்டன என்பதை 2018-2030 மாநில பேரிடர் நிர்வாக திட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


Share the Article

Read in : English

Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles Green path to health: Have a different keerai every day