Read in : English
அண்மையில் தன்னறம் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் தேவிபாரதி, அமீர் இயக்கிய ராம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் வந்துசெல்வார். அவருக்கே இது நினைவிலிருக்குமா என்பது சந்தேகமே.
தமிழ்நாட்டில் திரைப்படங்களில் நடிப்பவருக்குப் பெரிய மதிப்பு உருவாகிவிடுகிறது. அந்த அளவுக்குத் திரைப்படங்களில் எழுதுபவருக்கு வெகுஜனங்களிடையே மதிப்பு இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்லிவிட முடியும்.
தன் தெருவில் வசிக்கும் பல்லாண்டுகளாக எழுதிவரும் எழுத்தாளர் ஒருவர் ஒரு படத்தில் நடித்துவிட்டால்போதும், அதன் பின்னர் அவருடைய அடையாளம் உள்ளூரிலேயே தெரிந்துவிடும். அவர் எழுதிய ஒரு வரியைக் கூட வாசித்திராதவர்கூட, ஓ அந்தப் படத்துல நடிச்ச நடிகர் நீங்கள் தானே எனக் கேட்பது வெகு சாதாரணம். உண்மையில் இந்தப் புகழ் வெளிச்சம் எழுத்தில் மட்டும் நம்பிக்கை வைத்திருக்கும் எழுத்தாளர்களைக் கூசவைக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை எழுத்துத்தான் எல்லாம். நடிப்பை அவர்கள் நாடுவதே இல்லை
உண்மையில் இந்தப் புகழ் வெளிச்சம் எழுத்தில் மட்டும் நம்பிக்கை வைத்திருக்கும் எழுத்தாளர்களைக் கூசவைக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை எழுத்துத்தான் எல்லாம். நடிப்பை அவர்கள் நாடுவதே இல்லை.
அப்படி ஒருவேளை வாய்ப்புக் கிடைத்தாலும் சும்மா வந்துவிட்டுப் போய்விடுகிறார்கள். அதனால்தான் நடிப்பையே தொழிலாகக் கொண்ட தொழில்முறை நடிகர்களைப் போல் அவர்கள் பிரமாதமாக நடிக்க முயல்வதில்லை; முடிவதில்லை. ஆனாலும், தொடர்ந்து எழுத்தாளர்கள் நடிகர்களாகத் திரையில் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
நாவல்களைத் திரைப்படங்களாக்குவது போல் இயக்குநர்கள் சிலர் எழுத்தாளர்களை நடிகர்களாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள். இது இன்று நேற்றல்ல நெடுங்காலமாகத் திரைத் துறையில் தென்படும் போக்குதான்.
தமிழ் சினிமா பேசிய காலத்திலேயே எழுத்தாளர் ஒருவர் திரையில் வாயசைக்கத் தொடங்கிவிட்டார். அவர் தில்லானா மோகனாம்பாள் கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்பு. அப்போதைய இயக்குநர் கே.சுப்ரமணியன் இயக்கிய பட்டினத்தார் படத்தில் சுப்பு நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். அந்தப் படம் 1934இல் வெளியாகியிருக்கிறது.
பிரபலக் கவிஞர் கண்ணதாசன் சினிமாவில் நடித்திருக்கிறார். ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாடலைக் கேட்ட மாத்திரத்தில், ரத்த திலகம் திரைப்படத்தில் அந்தப் பாடலுக்குத் திரையில் தோன்றிய கவிஞரின் உருவம் மனதில் மலரும். அதே போல் சூரிய காந்தி திரைப்படத்தில் பரமசிவன் கழுத்திலிருந்து பாடலிலும் கவிஞரே காட்சி தருவார். இது தவிர்த்து, கறுப்புப் பணம், அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.
அபூர்வ ராகங்கள் படத்தில் கண்ணதாசனாகவே வருவார். கண்ணதாசனின் மகள் விசாலி கண்ணதாசன் கே.பாலசந்தரின் வானமே எல்லை படத்தில் நடித்திருந்தார்.
கவிஞர் கண்ணதாசனைப் போலவே கவிஞர் வாலியும் பொய்க்கால் குதிரை, சத்யா, ஹேராம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். கவிஞர் விக்கிரமாதித்யன், வசுமித்ர வரை இந்தத் தொடர்ச்சி உள்ளது. இயக்குநர் பாலாவின் நான் கடவுள் படத்தில் உருப்படியாக அவர் நடித்திருந்தார்.
உலக சினிமா பாஸ்கரன் இயக்கிய இன்ஷா அல்லாஹ் என்னும் திரைப்படத்தில் தன் மனைவியுடன் நடித்துள்ளார். அநேகமாக தம்பதியாகவே நடித்த எழுத்தாளராக விக்கிரமாதித்யன்தான் இருப்பார். இவருடைய மகனான சந்தோஷ், செழியன் இயக்கிய டுலெட் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். இவர்கள் அனைவருமே சும்மா பொழுதுபோக்காக நடித்திருந்தார்களே தவிர தங்களைத் தீவிர நடிகர்களாகக் கருதியதில்லை.
பொதுவாக, தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதைத் தீவிர எழுத்தாளர்கள் விரும்பவில்லையோ என்னவோ அவர்கள் எழுத்துத்துறையில் பங்களித்தார்களே தவிர நடிப்பதில் பெரிதாக ஆர்வங்காட்டவில்லை. புதுமைப்பித்தன், விந்தன் தொடங்கி இப்போதைய ஜெயமோகன், ராமகிருஷ்ணன்வரை அப்படித்தான் இருக்கிறார்கள்.
நல்ல வெகுஜன எழுத்தாளர்களும் இதே போல் தான் இருக்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் திரைத்துறையில் செயல்படும் பட்டுக்கோட்டை பிரபாகரோ ராஜேஷ்குமாரோ திரையில் முகம் காட்டினார்களா?
இலக்கிய பரிச்சயம் கொண்ட இயக்குநர்கள் தாங்கள் வாசித்த எழுத்தாளர்களைத் தங்கள் படத்தில் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தால் அது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கும்போல. அப்படியொரு மகிழ்ச்சிக்காகவே எழுத்தாளர்களை நடிக்கவைக்க விரும்புகிறார்கள். மற்றபடி திரைப்படங்களில் நடித்த எழுத்தாளர்கள் நடிப்பில் ஈடுபட்டு புகழடைந்து எழுத்தையே கைவிட்டதற்குச் சரியான எடுத்துக்காட்டுகள் எவையுமில்லை.
அது சும்மா ஒரு ஃபேஷன் என்பது போல் நடித்துவைத்திருக்கிறார்கள். மேலும், ஒரு படத்தில் நடித்துவிட்டால் அந்த அறிமுகத்தில் சில படங்களில் அவர்கள் நடிக்கிறார்கள். தொடர்ந்து நடிப்பையே முழு நேரத் தொழிலாக அவர்கள் மேற்கொள்ள விரும்புவதில்லை.
சுஜாதா தைப்பொங்கல் என்னும் தமிழ்ப் படத்தில் ஒரு காட்சியில் சுஜாதாவாகவே வருவார். அந்தப் படத்தில் நடித்திருந்த நடிகை ராதிகா நீங்க எழுத்தாளர் சுஜாதா தானே என்று கேட்பார். எழுத்தாளர் பாலகுமாரனும் கேளடி கண்மணி, உல்லாசம், போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
கே. பாக்யராஜ் டைரக்ஷன் மேற்பார்வை செய்ய பாலகுமாரன் இயக்கிய இது நம்ம ஆளு திரைப்படத்தில் ஹோட்டல் கல்லாவில் ஜம்மென்று அமர்ந்திருப்பார். கே.பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைக்கதை விவாதத்தில் சில நாள்கள் பங்கேற்ற பாலகுமாரன் அங்கிருந்த வெளியேறிய கதையை எழுதியிருக்கிறார்.
அதன் பின்னர் பாலசந்தரிடம் சேர்ந்து இயக்குநராக விரும்பினார். ஆனாலும் எழுத்தாளராகப் பெயர் பெற்ற அளவுக்கு இயக்குநராகவோ நடிகராகவோ அவர் பெயர் பெற இயலவில்லை. காரணம் அவரது மனம் முழுவதையும் எழுத்தே ஆக்கிரமித்திருந்தது.
ஆனாலும் சிலர் எழுத்தைப் போல் நடிப்பிலும் முத்திரை பதிக்க விரும்புகிறார்கள். கிடைத்த வாய்ப்பில் தங்களை நிரூபிக்க விரும்புகிறார்கள். அப்படியானவர் என வேல ராமமூர்த்தியைச் சொல்லலாம். இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் மதயானைக் கூட்டம் படத்தில் இவர் ஏற்று நடித்த வீரத் தேவர் கதாபாத்திரம் இவரை நல்லதொரு நடிகராக அடையாளம் காட்டியது.
இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் வெளியான கிடாரி திரைப்படத்திலும் வேலராமமூர்த்தியின் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்திருந்தது. இதே கிடாரியில்தான் கவிஞர் வசுமித்ர நடித்திருந்தார். கிராமத்து அகங்காரம் செறிந்த மனிதராகத் தோற்றம் தரும் வேல ராமமூர்த்திக்கு நடிகராக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அவர் பல படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார் என்றாலும், நடிப்பில் பல வேறுபாடுகளைக் காட்டிவருகிறார் என்று சொல்வதற்கில்லை.
நாடகத் துறைச் செயல்பாட்டாளரான எழுத்தாளர் மு.ராமசாமியும் பல படங்களில் இப்படி ஓரிரு காட்சிகள் வந்து சென்றுள்ளார். ஆனால், கே.டி. (எ) கருப்பு துரை திரைப்படத்தில் படத்தின் முதன்மைக் கதாபாத்திரமாகவே நடித்திருந்தார்.
அடிப்படையில் நாடகத் துறையில் இருந்த ஈடுபாடு காரணமாக அவரால் நடிப்பின் மீது கவனம் செலுத்த முடிகிறது. என்றபோதும், அவரும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கவில்லை.
இப்படியான பல எழுத்தாளர்கள் பல சந்தர்ப்பங்களில் நடிகர்களாக அரிதாரம் பூசிய போதிலும் தனது நடிப்பால் பிற எழுத்தாளர்களை எல்லாம் ஓரம் கட்டியவர் என ஆடுகளம் படத்தில் நடித்த ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனைத்தான் சொல்ல முடிகிறது. குரு சிஷ்ய உறவைச் சொன்ன ஆடுகளத்தில் அவர் அனுபவம் பெற்ற நடிகர்களை எல்லாம் மிஞ்சிய வகையில் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பேட்டைக்காரன் என்ற அந்தக் கதாபாத்திரத்தை உயிரோட்டமாக மாற்றியிருந்ததில் அவருக்கு முக்கியப் பங்குண்டு.
பொழுதுபோக்குக்காக அவர் நடித்திருந்த போதிலும் விருதுக்கான தரத்தில் வெளிப்பட்ட அவரது நடிப்பின் தரத்தை உயர்த்த நடிகர் ராதாரவியின் குரலும் உதவியிருந்தது.
கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஓரிரு விதிவிலக்குகள் தவிர, நல்ல எழுத்தாளர்கள் நடிக்க விரும்பவதில்லை; நடிக்க விரும்புபவர்கள் நல்ல எழுத்தாளர்களாகப் பரிமளிப்பதில்லை.
Read in : English