Read in : English

தமிழ்நாட்டில் உள்ள பிராணமல்லாதார் வேதாந்த மடங்கள்  தொடர்பான அபூர்வ பிரசுரங்கள், கோவில்பட்டி ஓவியர்  கொண்டையராஜு தொடர்பான ஓவியக் குறிப்புகள், வடகிழக்கு மாநிலங்களிலும் இமயமலைப் பகுதிகளிலும் உள்ள பழங்குடி மக்கள் தொடர்பான இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட புகைப்படங்கள், முக்கிய ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதிகள், அபூர்வ நேர்காணல்கள் கொண்ட ஒலிப்பேழைகள் போன்ற 20 ஆண்டுகளுக்கு மேலான ஏராளமான சேகரிப்புகளை  2015இல் சென்னையைச் சூழ்ந்த பெருவெள்ளம் காவு கொண்டுவிட்டது.

மேற்கு தாம்பரம் மூகாம்பிகை நகரில் வசிக்கும் ஆய்வாளர் ரெங்கையா முருகன் தான் சேகரித்த அந்த அபூர்வ பொக்கிஷங்கள் 2015 ஆண்டு பெருவெள்ளத்துக்கு இரையான சோகச் சம்பவம் அவரது மனதில் இன்றைக்கும் நீங்கா வடுவாக உள்ளது.

சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்ட்டீஸ் கல்வி நிறுவனத்தில் தற்போது நூலகராக இருக்கும் ரெங்கையா முருகன், அதற்கு முன் ஃபோக்லோர் சப்போர்ட் சென்டரிலும் பணிபுரிந்தவர். வட மாநிலங்•ளில் உள்ள பழங்குடிகளைப் பற்றிய அனுபவங்களின் நிழல் பாதை என்ற மானுடவியல் முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். வ.உ. சிதம்பரம் பிள்ளை குறித்த பெரிய நூலை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

2015ஆம் ஆண்டு சென்னைப் பெருவெள்ளம்  எப்படி தனது சேகரிப்புகளை புரட்டிப் போட்டுவிட்டது என்பதை இன்றைக்கும் கனத்த உள்ளத்துடன் விளக்குகிறார் ரெங்கையா முருகன்>:

“2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து எங்கள் பகுதியில் தண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. எங்கள் தெருவிலிருந்தவர்கள் தங்களது வீடுகளைப் பூட்டிவிட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். •தரைத்தளத்தில் இருந்த எனது வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்துவிட்டது. வீட்டில் இருந்த அபூர்வமான சேகரிப்புகளை லாப்டிலும் மற்ற புத்தகங்களை அலமாரியின் மேற்பகுதியிலும், மீதமுள்ள புத்தகங்களை கட்டிலிலும் வைத்தோம்.

தண்ணீர் வரத்து அதிகரித்து வந்ததை அடுத்து, வீட்டைப் பூட்டிவிட்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்று விட்டோம். தண்ணீர் வடிந்ததும் வீட்டுக்கு வந்து திறந்து பார்த்தால், வீட்டில் இருந்த புத்தகங்கள் வீட்டுக்குள்ளேயே சேறும் சகதியுமாகச் சிதறிக்கிடந்தன. கட்டில் சாய்ந்து கிடந்தது. எங்களது தெருவில் மீட்புப் படகு சென்றால், அலையடித்து அலமாரியிலும் லாப்டிலும் இருந்த புத்தகங்கள் தண்ணீரில் நனைந்து ஒன்றோடொன்று ஒட்டிக் கிடந்தன.

காயவைத்து பாதுகாக்கும் நிலையில் அந்தப் புத்தகங்கள் இல்லை. தண்ணீரில் ஊறி சிதிலமாகிவிட்ட அந்தப் புத்தகங்களை தூய்மைப் பணியாளர்கள் தங்கள் வண்டியில் ஏற்றிச் சென்றுவிட்டார்கள். மழை வெள்ளத்தில் தப்பிய 200 புத்தகங்களை மட்டுமே மீட்க முடிந்தது. என்னுடனே பல ஆண்டுகள் வாழ்ந்த 2000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வீட்டில் புகுந்த மழை வெள்ளத்தில் நாசமாகிவிட்டன. அந்தப் புத்தகங்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

வீட்டிலிருந்த பல பொருள்கள் சேதமாகிவிட்டன. அவற்றின் மதிப்பு ரூ.7 லட்சம். ஆனால் அவற்றையெல்லாம் பணம் கொடுத்து வாங்கிவிடலாம். ஆனால், தேனீ மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு இடங்களுக்குச் சென்று சேகரித்த எனது சேகரிப்பில் இருந்த 70 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த  அபூர்வ பிரசுரங்களையும் புத்தகங்களையும் வாங்குவது என்பது இயலாத காரியம். அந்தச் சம்பவம் நடந்து ஐந்தாறு ஆண்டுகள் ஆனாலும்கூட, இன்றைக்கும் நினைத்தால், மனம் கனக்கிறது” என்கிறார் ரெங்கையா முருகன்.

“எனது புத்தகங்களை டிஜிட்டல்மயமாக்கிப் பாதுகாப்பாக வைத்திருந்தால்,  காப்பாற்றி இருக்கலாமோ என்று எனது மனது நினைக்கிறது,” என்று கூறுகிறார் ரெங்கையா முருகன்

Rengiah Murugan

ரெங்கையா முருகன் வடகிழக்கு பழங்குடியினரை ஆய்வு செய்தபோது எடுத்த படம்

தமிழ்நாட்டில் உள்ள பிராணமல்லாதார் வேதாந்த மடங்கள் குறித்த புத்தகங்கள், சிறுசிறு துண்டுப்பிரசுரங்கள், மடாதிபதிகளின் வாழ்க்கை வரலாறுகள்,  19ஆம் நூற்றாண்டில் நடந்த சமய வாதத் தொகுப்புகள், வேதாந்த சாரம், பரமார்த்த தரிசனமென்னும் பகவத் கீதை, சோமசுந்தர நாயக்கரின் பிரம தத்துவ நிரூபணம், புத்தமத கண்டனம், வச்சிர தண்டமும் தாந்திரீக துண்ட கண்டன கண்டனமும், தர்க்க பரிபாஷை, தசகாரிய விளக்கம், சமரச ஞான சந்திரிகை, பரமார்த்த நியாய தீர்ப்பு, மோட்ச சாதன விளக்கம், பேத வாத திரஸ்காரம், திராவிட வேத விபரீதார்த்த திரஸ்கார கண்டனம், அத்வைதாந்த பிரகாசிகை எனும் சங்கர துவேசியர் வாய்ப்பூட்டு, அப்பைய தீட்சிதரின் நூல்கள்,  சிவபஸ்ம வைபவம், மருதூர் கணேச சாஸ்திரிகள் பதிப்புகள், ஆனந்தாஸ்ரம மூர்த்தி சுவாமிகளின் பதிப்புகள், கோ. வடிவேலு செட்டியார் பதிப்புகள், வேதாந்த, அத்வைத, சித்தாந்த புத்தகங்கள், ம.வீ. ராமானுஜாச்சாரியார் பதிப்பித்த மகாபாரதத்  தொகுப்புகள், தமிழ்நாட்டை ஆய்வு செய்த வெளிநாட்டு அறிஞர்களின் ஆய்வு நூல்களின் ஜெராக்ஸ் பிரதிகள், தமிழ்நாட்டில் காலண்டர் படங்களின் முன்னோடியுமான கொண்டையராஜு ஓவிய தகவல்க குறிப்புகள்…இப்படி மழை வெள்ளத்தில் அழிந்து போனவற்றை கூறிக்கொண்டே போகிறார்.

“எனது கணினியும் மழைத் தண்ணீரில் சேதமடைந்துவிட்டதால் அதிலிருந்த முக்கிய ஆவணங்களை மீட்க முடியவில்லை. எனது புத்தகங்களை டிஜிட்டல்மயமாக்கிப் பாதுகாப்பாக வைத்திருந்தால்,  காப்பாற்றி இருக்கலாமோ என்று எனது மனது நினைக்கிறது.

2015ஆம் பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக மாடியில் உள்ள வீட்டுக்கு மாறிவிட்டேன்” என்று கூறும் ரெங்கையா முருகன், தனது ஆய்வுப் பணிகளை விட்ட இடத்திலிருந்து நம்பிக்கையோடு தொடர்கிறார்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival