Read in : English
காலம் காலமாக ஆண்கள் ஏதோ தங்களுக்கென்றே வார்க்கப்பட்டது என்று சொந்தம் கொண்டாடிய வாத்தியம் தான் நாகசுவரமும் அதனை வாசிக்கும் அரிய கலையும். இந்த நிலை மாறி இன்று பெண் கலைஞர்களும் நிறையத் தோன்றி, சிறிய வயது முதலே கற்றுத் தேறி, மெச்சத்தக்க முறையில் வாசித்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். கர்நாடக இசையில் கற்பனை மீது ஆதாரப்பட்டிருக்கும் ராக ஆலாபனைகளாகட்டும், கீர்த்தனைகளைக் கிரமமாக பாடம் பண்ணி வாசிப்பதிலாகட்டும், கணக்கு வழக்கு நிறைந்த ஸ்வரப்ரஸ்தாரங்களாகட்டும், நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்லர் என்று சூளுரைக்கும் வாசிப்பே இந்தப் பெண்டிரின் வாசிப்பாகப் பரிமளிக்கிறது.
சமீபத்தில் பரிவாதிநி நடத்திய நாகசுவரக் கச்சேரிகளில் வாசித்த பெண் கலைஞர்களின் பட்டியல் இதோ: ஆர் பிரபாவதி, பிரசன்னா சிவதாஸ், பி பாகேஸ்வரி, எஸ் சந்தானலக்ஷ்மி, டி வி சங்கரி, டி வி விஜயலக்ஷ்மி, டி கே மஹேஸ்வரி, எஸ் சாந்தி, கலிஷாபி மெஹபூப். இவர்களெல்லாம் அவர்களது கணவன்மார்களுடன் இணைந்து வாசித்துச் சிறப்பு செய்தனர்.
இது ஒரு புறம் இருக்க ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் உடல் உறுப்புகள் மாறுபட்டு இயங்குவதன் காரணத்தால் தான் நாகசுவரம் பெண் கலைஞர்களால் இதுகாறும் எடுத்தாளப் படாமல் விடப்பட்டதா? ஆணுக்கும் பெண்ணுக்குமே அடிப்படையில் இயற்கையாகவே உடல் ரீதியான மாற்றங்கள் மிகுதியாக காணப்பட்டு அதுவே தடையாக நிற்கின்றதா? மூச்சுக் காற்றை முனைந்து செலுத்தி லாவகமாக வாசிப்பதினாலேயே நாகசுவரத்திலிருந்து உன்னதமான நாதம் எழுகின்றது.
இங்கே இந்த மூச்சுக் காற்றை உபயோகிக்கும் முறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசத்தை அவரவர் உடல்வாகின் காரணமாக ஏற்படும் மாற்றங்களே ஏதேனும் ஒரு விதத்தில் தடையாக அமைகின்றதா?
நாகசுவரத்தைப் பொறுத்த மட்டில் செல்திசை, போக்கு எப்படி இருக்கிறதென்றால், மேலும் மேலும் பெண் கலைஞர்களை மேடையில் வித்வான்களாகளாகக் காண்கிறோம்.
இந்த மங்கல வாத்தியத்தின் மீது ஆர்வப்பட்டு, அந்த ஆர்வம் இந்தப் பெண் இனத்திற்கென்று உரித்தான திருமணம் – நமது சமூகத்தின் நடைமுறையில் திருமணத்திற்குப் பிறகு அவள் புகுந்த வீட்டுப் பெண்ணாகி விடுகிறாள் -, பிரசவம் மற்றும் மாதவிடாயினால் ஏற்படும் ரத்தப் போக்கு, போன்ற காரணங்களால் இந்த ஆர்வத்தையும், கிளர்ச்சியையும் குன்ற விடாமல் பார்த்துக் கொண்டு, மேடையில் ஆணுக்கு நிகராகக் கச்சேரி செய்யும் ஆற்றல் பெற்று விளங்குவதை நாம் கண்கூடாகப் பார்த்த வண்ணம் இருக்கிறோம்.
இனி எந்தவிதமான தடைகளை இவர்கள் உடல் அல்லது உடல் உறுப்புகள் ரீதியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று பார்ப்போம். பெண்களுக்குப் பொதுவாகவே நுரையீரல்(lungs) சிறிய அளவினதாகத் தான் இருக்கும். இது இயற்கையின் நியதி. இருப்பினும் செயல்படுதல் என்று பார்த்தால் ஒரே மாதிரித் தான் இருக்கும் என மருத்துவர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள். அதை உபயோகப்படுத்தும் முறையில் வித்தியாசங்கள் தென்படலாம்.
உதாரணத்திற்கு கால்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த பாகத்தைப் பொறுத்த மட்டில் வித்தியாசமே இல்லை அவரவர் உபயோகத்திற்குத் தக்கபடி அது வளர்ச்சி பெறுகிறது, வளைந்து கொடுக்கிறது. இது கண்கூடு. இதே போலத்தான் நுரையீரலின் வளர்ச்சியும் இருக்கும் என்று எதிர் பார்க்கலாம்.
இங்கே இன்னொரு விஷயம். வாசிக்க யத்தனிக்கும் பெண் கலைஞர்கள் யாவருமே தங்களது பதின்பருவத்திலிருந்தோ அல்லது அதற்கும் முந்தைய வயதிலிருந்தோ இந்த வாத்தியத்தைக் கையாளக் கற்றுக் கொண்டு விடுகிறார்கள். ஐந்திலேயே வளைய வைத்து விடுவதனால் இந்த நாதம் தேர்ந்த, உயர்ந்த ஒன்றாக ஒலிப்பதற்கு வேண்டிய உடல் உறுப்புகள் யாவும் பழக்கப்பட்டு, பதனப்பட்டு விடுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
மருத்துவ ரீதியாகப் பேசும் போது 120 ml/sec என்ற நிலையில் காற்று இரண்டு வழியிலும் (input and output – உள்ளிருந்து வெளி, வெளியிலிருந்து உள்) உபயோகப் படுத்தப் படுகிறது. இதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அதே போல் வாய்ப்பாட்டிற்கும் இந்த வாத்தியத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏனெனில் அதற்கான குரல் நாளங்கள் (vocal chords) நாகசுவரம் வாசிக்கும் போது செயலாற்றாது. உண்மையில் நாகசுவர வித்வான்களுக்கும் வித்வாம்சினிகளுக்கும் குரல் பிரசினைகள் வந்ததே இல்லை. மணிக்கணக்காகப் பேசுவார்கள்.
இனி முக்கியமாக ஒரு பெண் உரிய பருவத்தில் தாயாவது இயல்பு. மகப்பேறு என்பது பெண்டிருக்கே உரிய தனிச்சிறப்புரிமையாகும். நமது சமூகம் இதனைப் போற்றி, மகப்பேற்றின் ஆரம்ப காலத்தில் இருந்து, அவர் கர்ப்பமாக இருக்கும் போதும், மகவை ஈன்ற பிறகு சில காலத்திற்கும், பெண்ணிற்கு அன்பும் அரவணைப்பும் நல்குகிறது. இந்தக் காலங்களில் இந்த வித்வான்களின் நிலையைக் கேட்டறிந்தோம். முதல் மூன்று மாதங்களில் அதிக பிரசினை இருக்காது என்றும் அடுத்த இரண்டு மூன்று மாத அவகாசங்களில் அல்லல் ஏற்படலாம் என்றும் தெரிய வந்தது. ”தம்” கட்டி வாசிக்க முடியாதபடி இருந்தால் அந்த குறிப்பிட்ட காலத்திற்கு அப்பியாசத்தை நிறுத்திக் கொள்வதை விட வேறு மார்க்கம் இல்லை.
தற்காலங்களில் மருத்துவமும் தொழில்நுட்பமும் இணைவதனால் பிரசவத்திற்கு முன்னும் பின்னும் அடிவயிறானது (abdomen) நன்றாக விளங்கிச் செயல்படக் கூடிய உடற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குரல் வளத்தை மேம்படுத்துதல் குறித்த ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்ற ஒரு வல்லுனர் கீழுள்ளதை நமக்குச் சொன்னார்.
“வாய்ப்பாட்டுக்காரர்களுக்கு இயல்பான பிரசவம் ஏற்படாமல், பல சிக்கல்களுடன் அது நடக்குமானால், அவர்களின் குரல் பெரிதளவில் பாதிக்கபட்டு விடும். எனக்குத் தெரிந்து நாகசுவர வித்வான்களுக்கு இது போல நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.”
இதற்கிடையில் ஜேம்ஸ் பென்னெட் II எனும் ஆய்வாளர் தனது கட்டுரை ஒன்றில் மேற்கத்திய கலாச்சாரத்திலும் எவ்வாறு கால இடநிலை வேறுபாடில்லாமல், ஆடவர் வாத்தியம் பெண்கள் வாத்தியம் என்ற வேண்டத்தகாத ஒரு பாகுபாடு பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதை விவரித்திருக்கிறார். வாத்தியத்தில் இவ்வாறு ஆண் பெண் என்ற பால்-பாகுபாடு எவ்வாறு அர்த்தமற்றது, பொது அறிவிற்குப் புறம்பான ஒன்றாக இருப்பதைக் கண்டு அவர் வியந்திருக்கிறார்.
நூற்றாண்டுகளாக இது மக்கள் மனதில் ஊறிப் பழுத்திருக்கிறது என்கிறார் இவர். பெண்கள் மென்மையானவர்கள் ஆகையால்
அவர்கள் எப்படிப்பட்ட வாத்தியங்களைத் தொட முடியும் மற்றவற்றைத் தொடாமல் இருப்பது அவசியம் என்பதும்தான் அந்த சமுதாயச் சூழலிலும் எண்ண அலைகளாக இருந்திருக்கிறது.
தொடர்ந்து இந்தக் கட்டுரையில், சமூகப் படிவங்கள் ஆண் இனத்தின் தேர்வாக அமைந்து போயின. ட்ரம்பெட், ஹார்ன் எனப்படும் ஊதுகுழல் (horn), ட்ரம்ஸ் ஆண்பாலுக்குரிய நாட்டமுள்ளவை என்று கருதப்பட்டு வந்திருக்கின்றன. இவற்றிற்கான காரணங்களாக அவர் கூறுவது, ட்ரம்பெட் ராணுவத்தில் விளங்கும் ஒன்று. ஹார்ன் வேட்டையுடன் தன்னை இணைத்துக் கொள்ளும்.
இந்த இரண்டு நடவடிக்கைகளுமே பெண்டிருக்கு அப்பாற்பட்டவை. அடுத்து தாள வாத்தியமான ட்ரம்ஸ் ஓங்கி நல்ல சக்தியுடன் “அடித்து வாசிக்க” வேண்டிய இந்த வாத்தியம் ஆடவருக்கே உரித்தானது என்ற கருத்தே நிலவியிருக்கிறது.
இன்றியமையாது என்று கருதத்தக்க நுரையீரலின் செயலாற்றல் ஆணிலிருந்து பெண்களுக்கு மாறுபட்டிருப்பதில்லை. பெண்டிர் நிறைய வித்வன்களாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே, நேரடியாக இல்லாவிடினும் மறைமுகமாகவேனும் எந்தவித உடலியக்கம் சார்ந்த பிரசினையும் இவர்களுக்கு (பெண்டிருக்கு) இல்லை என்பதையே நிரூபணம் செய்கிறது. இதே கருத்தை முழுவதுமாக ஆமோதித்தார் முனைவர் பி எம் சுந்தரம். நாகசுவரத்தைப் பற்றி எந்த சந்தேகத்தையும் தீர்த்து வைக்கக்கூடிய இசை முறை ஆர்வப் பயிற்சி முறை வல்லுனர் (musicologist) இவர். ராமு பக்கிரி அம்மா தவில் நாகசுவரம் ஆகிய வாத்தியங்களை முதன் முதலில் வாசித்த பெண் இனத்தவர்கள் என்ற ஒரு தகவலையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
பெண்டிர் கர்ப்பமுற்றிருக்கும் போது இடையீட்டு சவ்வுத்திரையின் (diapraghm) நிலை மாறும் என்பதும் உண்மை இதனால் அவர்கள் “தம் பிடித்து” வாசிப்பதற்கு சிரமப்படலாம் என்பது உண்மை. ஆனால் இதுவும் ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு மாறியே இருக்கும். கர்ப்பமுற்றிருக்கும் வேளையிலும் பெண்டிர் பளு தூக்குகிறார்கள், நீச்சல் பழகுகிறார்கள். இந்த வகையில் உடலை தொய்வில்லாமல் வைத்திருக்கிறார்கள். அன்றாடம் வாசித்து வாசித்துப் பழகியவர்களுக்கு வாசிக்காமல் இருந்தால் எதையோ அபகரித்தது போலிருக்காதோ? என்கிறார் ஒரு நிபுணர். சிறிய வயதிலேயே இந்த ஒழுங்கு முறைக்குள் நுழைந்து விடுவதால் தசைகள் நன்றாகப் பழக்கப்பட்டு இருக்கின்றன. மூச்சு வாங்குவதும் வெளியிடுவதும் (breath control) நல்ல கட்டுப்பாட்டில் உள்ளது. நீண்ட தூர ஓட்டத்தை (marathon) இதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாமா என்ற கேள்விக்கு அது இதயம் (cardio) சம்பந்தப்பட்ட விஷயம். இது காற்று வெளிவருதல் உள்வாங்குதல் (breathing discipline) சம்பந்தப்பட்டது என்ற கருத்தை நம் முன் வைக்கிறார் ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஒரு மருத்துவர்.
இதற்கெல்லாம் பின் பலம் (support system) எவ்வண்ணம் இருக்கிறது என்பதே அத்தியாவசிய ஒன்றாக அமைந்து விடுகிறது எனும் இவர், மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை (surgeons) மேற்கொள்பவர்கள் (பெண்டிர்) அதிகமாக இல்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். 8 மணி நேர அறுவை சிகிச்சை என்பது அவர்களால் நடத்த இயலாததல்ல. இதை சிரமேற்கொண்டு நடத்தாததற்கு புறச்சார்பான காரணங்களையே நாம் சொல்ல வேண்டும் என்று நம்மிடம் பேசும் போது சொல்கிறார் இவர்.
செங்குத்தான மலையேறுதல் (Trekking) மற்றும் நெடுந்தூர ஓட்டம் (marathon) இவற்றிலெல்லாம் பெண்கள் அதிகமாகப் பங்கு கொள்ளாததற்குக் காரணம் பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. அவர்களுக்கு ஆஸ்துமா அல்லது வீசிங்க் பிரசினை (wheezing problem) இல்லையென்றால் தாராளமாகப் பங்கு கொள்வார்கள். நாகசுவரம் வாசிப்பதற்கும் இது போன்ற உடலை வருத்த வேண்டிய செய்கைகளையும் (trekking & marathon) ஒப்பிட்டுப் பார்க்கலாமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ஒரு பொதுநல மருத்துவர் இந்த அபிப்பிராயத்தைத் தெரிவித்தார்.
இக்கட்டுரையை நிறைவு செய்ய திருமதி பிரபாவதியுடன் நாம் பேசியதிலிருந்து வெளிப்பட்ட கருத்துக்களை இங்கே பகிர்தல் சரியாக இருக்கும். அவர் சமீபத்தில் அடைமழை போல வாசித்த கல்யாணி ராகத்தின் ஆலாபனையில் நனைந்துருகியதன் ஈரம் இன்னும் காயாதிருப்பதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பெரும்பாலும் தெலுங்கு மொழியில் பேசிய திருமதி பிரபாவதி, நாகசுவரம் என்றாலே, பூரண கவனம், அதி பூரண கவனத்தை அதில் செலுத்த வேண்டும். மற்ற வாய்ப்பாட்டோ வயலினோ ஒரு முறை இரண்டு முறை வாசித்து விட்டால் நாம் மனதில் நினைத்த சங்கதி எளிதில் அங்கு வந்து நின்றுவிடும். இந்த “அசுர வாத்தியம்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஒன்றில் அப்படியல்ல. அவர் கூறியதின் உட்கருத்து, பிரம்மப் பிரயத்தனம் தேவை என்பதே!
பேசும் பேச்சிலேயே ஒரு தைரியம் தொனிக்க, “பயம் என்பது ஒருகாலும் எந்நிலையிலும் நம்மை அண்ட விடக்கூடாது. நல்ல காத்திரமாக காற்றைக் கொடுத்தால் தான் (intense and strong blowing) தேவையான, எதிர்ப்பார்க்கும் நாதத்தைக் வரவழைக்க முடியும். அது பயம் இருந்தால் இயலாத ஒன்றாகி விடும். இந்தப் பெண் என்ன சாதித்து விடப் போகிறாள் என்ற பேச்சு ஆரம்ப காலத்தில் பேசப்படுவது இயல்பு.
இந்தப் பேச்சை எல்லாம் காதில் வாங்காமல் விடுவதற்குப் பழகிக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் முன்னேற முடியாது. எனக்கும் சப்போர்ட் சிஸ்டம் (support-system) மிக நன்றாக அமைந்து விட்டது. புகுந்த வீட்டில் எனது மாமனார் மாமியார் இவர்களிடத்தில் இருந்து எந்தவித பிக்கல் பிடுங்கலும் (bickering) இல்லை. முழுமுனைப்புடன் நான் அப்பியாசத்தில் இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். “வீட்டுப் பணிகளை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று என்னிடம் கண்டிப்பாகவும், ஏன் அன்பாகவும் சொல்வார்கள். இதை நான் பெற்ற பாக்கியமாக பெருமையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதில் எனது மாமனார் ஒரு தவில் வித்வான் வேறு! எனக்கு இன்னும் என்ன வேண்டும் என்று மிகுந்த நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
Read in : English